வியாழன், 15 ஏப்ரல், 2010

கல்விமுறை

மார்ச் மாதம் துவங்கி விட்டாலே பெற்றோர்களுக்கு குழந்தைகளை பரீட்சைக்கு தயார் செய்யும் பணி தொடங்கிவிடும், அடுத்த வகுப்பிற்கான பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், பள்ளி கட்டணம், சீருடை, காலணி, என்று வரிசையாய் காத்திருக்கும் செலவினங்களை எதிர்கொள்ளவும் தயாராகி விடவேண்டும். புதிதாய் பள்ளி கல்லூரிகளில் சேர்ப்பவர்களுக்கு கட்டிட நிதி என்ற பெருந்தொகையுடன் கல்விக்கட்டணம் இத்தியாதிகள் என ஒரேடியாய் செலவினங்கள் காத்துக்கிடப்பது வாடிக்கையான விஷயமாகி போனது.

பெற்றோருக்கு இவையெல்லாம் சிம்மசொப்பனம் என்றால் மாணவ மாணவியருக்கு அடுக்கடுக்காய் வினாவிடைகள், அத்தனையையும் படித்து சிறிய மூளைக்குள் புகுத்தி திணித்து மறந்து போகாமல் காத்து பரீட்சையன்று விடைத்தாளில் படித்ததை அப்படியே அச்சு மாறாமல் எழுதி 100 மதிப்பெண்களுக்கு எப்படியாவது 95 மதிப்பெண்களை வாங்கிவிட வேண்டுமென்று சிவன் பிள்ளையார் முருகர் பெருமாள் அனுமார் என்று வகைவகையான தெய்வங்களிடம் தினம் தினம் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்து ரிசல்ட் என்று சொல்லப்பட்டும் தேர்வு முடிவிற்காக பதைபதைப்புடன் காத்துக் கிடந்து நினைத்தபடியே 95 மதிப்பெண்கள் பெற்று மருத்துவக்கல்லூரியிலோ பொறியியல் கல்லூரியிலோ சேர்ந்து மறுபடியும் அதே முறையில் பாடங்கள் அத்தனையையும் மனப்பாடம் செய்து, தேர்வு எழுதி, தேர்ச்சிப் பெற்று ஏதோ ஓர் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலைக் கிடைக்கப் பெற்று,

பணி செய்யும் காலத்தில் தான் பள்ளியிலோ கல்லூரியிலோ படித்து மனப்பாடம் செய்து தேர்வு எழுதியதில் பத்து சதவிகிதமாவது தனது வேலைக்கு சம்பந்தமுள்ளதாக இருக்கிறதா, என்றால் கிடையவே கிடையாது. அப்படியென்றால் இத்தனை வருடங்கள் மனப்பாடம் செய்து கற்ற அத்தனைக் கல்வியிலிருந்து மாணவனோ மாணவியோ என்னதான் அடைய முடிகிறது. படித்த படிப்பறிவைக் கொண்டு என்னதான் செய்கிறார்கள்?

எழுதவும் படிக்கவும் சரளமாக ஆங்கிலம் பேசவும் கற்றுக் கொண்டாலே போதுமானதாக இருக்குமென்றால் எதற்காக இத்தனை வருடங்கள் பள்ளி, கல்லூரிக்குச் சென்று அத்தனை பாடங்களை படித்து 100க்கு 95 மதிப்பெண்கள் பெறவேண்டும்? கற்கும் கல்விக்கும் பொது வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கிறதென்றால் அதைக்கொண்டு சமுதாயத்தில் படித்தவன் எதை சாதிக்க அல்லது செயல்படுத்த முடியும்? அல்லது செயல்படுத்திகொண்டிருக்கின்றனர்?

பாடத்திட்டங்களை மாற்றுவதனால் செயல்முறை கல்வி அல்லது தான் செய்யப்போகும் வேலைக்கு சம்பந்தமான கல்வி முறையை கற்பதனால் பயனடைய முடியாதா. தற்போது நடைமுறையில் இருந்து வரும் கல்விமுறையினால் மாணவர்களுக்கு வீண் சிரமாம் உள்ளது என்பதும் அதை எவ்வாறு மாற்றி அமைத்தால் தனி நபருக்கும் சமுதாயம் மற்றும் நாட்டிற்கும் பயனுள்ளதாக அமையும் என்று குழுக்கள் ஆலோசனைகள் செய்து முடிவிற்கு வர இயலவில்லையா அல்லது முடிவுகளை உடனுக்குடன் அமல் படுத்தி செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளதா.

தற்போதைய கல்விமுறையே போதுமானது என்று அரைத்த மாவையே இன்னும் எத்தனை காலங்கள் அரைத்துக்கொண்டிருப்பது இதனால் யாருக்கு பலன்? சமச்சீர் கல்வி என்பது மிகவும் அவசியமானது, இதில் பலனடைபவரைவிட கீழ்தட்டு மக்களின் பலதரப்பட்ட விழிப்புணர்வுக்கு அடிப்படைக் கல்வி என்பது இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.

தற்போது இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் கல்வித்திட்டம் நிச்சயம் மாற்றப்படவேண்டும், மாற்றம் என்பது தனி மனிதனுக்கும் சமுதாயம் மற்றும் நாட்டின் நலனுக்கும் எர்ப்புடையதாக இருக்க வேண்டும். மாணவர்களின் தற்போதைய மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறை நிச்சயம் மாறவேண்டும், மனப்பாடப்பகுதி என்பது தேவை ஆனால் எல்லா கேள்விகளுக்கும் மனப்பாடம் செய்து அதிகபட்ச மதிப்பெண்களை பெற்றால் தான் கல்லூரிகளில் இலவச அட்மிஷன் என்பதும் அதிகபட்ச்ச மதிப்பெண்கள் பெற்றவருக்கு முதலிடம் கொடுப்பது போன்ற அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்துவதனால் நிச்சயம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் படிப்புச்சுமை அறவே நீக்கப்படும், தகுதிகேற்ப அட்மிஷன் கொடுப்பதால் மாணவர்களின் திறமை வெளிக்கொணர வாய்ப்புகள் உருவாகும்.

ஜாதி அடிப்படையிலான சேர்க்கை நிச்சயம் தேவை அல்லது குறிப்பிட்ட சில வகுப்பினர் மட்டுமே எல்லாவகையிலும் நிரம்ப நேரிடும். பின்தங்கியவர் பின்தங்கியவராகவே இருந்துவிடும் அவலம் ஏற்ப்படும். எதிர்காலம் சிறக்க சிறந்த மாற்றங்கள் கல்விமுறையிலும் சேர்க்கை முறையிலும் நிச்சயம் தேவை.

திங்கள், 12 ஏப்ரல், 2010

மாவோயிஸ்டுகள் - கம்யூனிஸ தீவிரவாதிகளின் கும்பல்


இந்திய நாட்டை புற்றுநோய் தாக்கியிருப்பது போன்று அரித்துக்கொண்டிருக்கும் தீவிரவாதங்களில் பாக்கிஸ்தானின் 'எல்லை மீறிய' காஷ்மீர் தாக்குதல்கள், மும்பை தாக்குதல், இன்னொருபுறம் மாவோயிஸ்டுகள் என்று சொல்லப்படும் கம்யூனிஸ தீவிரவாதிகளின் தாக்குதல்கள், நக்சலைட்டுகளின் பிடியில் சிக்கி தவிக்கும் ஆந்திர பிரதேசம், மக்களுக்கு நன்மை செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு துப்பாக்கி ஏந்தி மக்களை அழித்து வரும் இந்த கும்பல்களை மத்திய அரசு முற்றிலுமாக ஒடுக்கவில்லையானால் நாட்டின் மற்ற பகுதிகளிலும் ஊடுருவி தங்களது மேதாவிதனத்திற்க்கு பொய் முலாம் பூசி சுதந்திரத்தை பறிக்கும் கொள்ளைநோயாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

திரு.ப. சிதம்பரத்தின் துணிவை இந்த இடத்தில் நாம் பாராட்டவில்லை என்றால் மனிதர்களாகவே இருக்க முடியாது, இந்திய பிரதமரும் திரு.ப.சிதம்பரமும் எதிர் கட்ச்சியின் ஒற்றுமையும் நிச்சயம் பாராட்டுக்குரியது. மாவோயிஸ்டுகள் அடிப்படையாக சீனாவில் உருவாக்கப்பட்ட மார்கிசமும் லெனினிசமும் கலந்த தீவிரவாத கும்பல், இதன் நிஜமுகம் என்பது துப்பாக்கியை காண்பித்து பொது மக்களை கொன்று, ஆட்ச்சியிலிருக்கும் அரசை கவிழ்த்து, பொதுமக்கள் மற்றும் பின் தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்கு போராடும் போராளிகள் என்று சொல்லிக்கொண்டு மக்களை வாழ விடாமல் துப்பாக்கி முனையில் வஞ்சம் தீர்க்கும் வெறி பிடித்த வெறியர்கள் இவர்கள், தாக்குதல்களை கண்டு பயந்து அடிபணிய வைக்க இவர்கள் கையாளும் வெறி தாக்குதல்களில் பிணக்குவியல்கள் தான் மிஞ்சும், ஆட்ச்சியிலிருக்கும் தலைவர்களை ஆட்டிப்பார்க்க இவர்கள் ஆடும் கொலைவெறிக்கு பலியாகும் அப்பாவிகளை காப்பாற்றியே தீரவேண்டும், கொலைவெறி தாக்குல்தல் மூலம் நாட்டை நாசப்படுத்துவது தான் இவர்களது முக்கிய பணி.

இந்த கும்பலின் வெறியாட்டத்திற்கு பலியாகிக்கொண்டிருக்கும் ஜார்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒரிசா போன்ற மாநிலங்களில் இதன் முகாம் பரவியுள்ளது, நாட்டின் இதர பகுதிகளையும் இந்த புற்றுநோய் தாக்காமல் பாதுகாக்க வேண்டுமெனில் நிச்சயம் அரசு இதன் மீது தீவிர கவனம் மேற்கொண்டு முற்றிலுமாக இந்த கும்பலை அழித்தொழிக்க வேண்டும். அரசாங்கத்தை துப்பாக்கி முனையில் பயமுருத்தி வரும் மாவோயிச்டுகளை வேருடன் அழித்துவிடுவது மட்டுமே மேற்கொண்டு செயல்பட இயலாமல் தடுக்க வழிவகுக்கும். இல்லையென்றால் தாங்கள்தான் வலிமை மிகுந்தவர்கள் என்ற எண்ணத்தில் மாறாக கோழைகளைப்போல் காடுகளில் ஒளிந்து கொண்டு தாக்குதல்களை நடத்துவது தொடரும் கதையாகி விடும்.

புதன், 7 ஏப்ரல், 2010

எச்சரிக்கை !!

எனக்கு விலங்குகள் பறவைகள் மீது அலாதியான பிரியம் எப்போதுமே உண்டு, மனிதர்களின் நலனை கவனித்துகொள்வதற்க்கு மனிதர்களால் இயலுவது போல வனவிலங்குகள் பறவை இனங்களின் நலனை அவைகளால் நிச்சயமாக கவனித்துக் கொள்வதற்கு இயலும், ஆனால் மனிதனால் விலங்குகளுக்கு அழிவு உள்ளது போன்று மிருகங்களாலும் பறைவைகளாலும் மனிதர்களுக்கு அழிவு இருப்பதில்லை. மிருகங்களையோ பறவைகளையோ வேட்டையாடி பல காரணங்களுக்காக அழிப்பது மனிதர்களால் மட்டுமே முடிந்த செயல். வனவிலங்குகள் தன்னை தற்காத்துக்கொள்வதற்க்கும் தனது உணவிற்காக மட்டுமே அடுத்த உயிரினத்தைக்கொல்லும். அரசு வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு தடை சட்டங்கள் விதித்திருந்தாலும் பெருமளவிலான வனவிலங்குகள் பறவைகள் அழிந்து விட்டது.

வன விலங்குகளையும் பறவை இனங்களையும் நேரடியாக வேட்டையாடி அழிக்கும் முயற்ச்சியில் தடைசட்டத்தினால் மனிதன் தோல்வி அடைந்திருந்தாலும் வனங்களை அழித்து அதன் மூலம் விலங்குகளின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவது குறையவில்லை. பெரிய மற்றும் புதிய தொழிற்ச்சாலைகளின் வரவு, காகித உற்பத்திக்காக ஏராளமான மரங்கள் வெட்டபடுதல், மற்றும் மனிதர்களின் பலவித தேவைகளுக்காக வனங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டது வனவிலங்குகள் வாழ இயலாமல் அழிய வழி செய்ததது.


காகித உற்பத்திக்காக தனியாக மரங்கள் நடப்பட்டு அவற்றை மட்டுமே காகித உற்பத்திக்கு வெட்டப்படுவதாக குறிப்புகளில் நாம் படித்தாலும் இந்திய காடுகளை பொருத்தமட்டில் பெரும்பாலான ஏக்கர் நிலங்களில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு புதிய சாலைகள் அமைக்கவும் புதிய நகரங்களின் விஸ்தரிப்பு, எரிபொருள் உபயோகம், வீடு கட்டுவதற்கு மரச்சாமான்கள் செய்வதற்கு என்று பல்வேறு வகையான மனித தேவைகளுக்கு வனங்களில் உள்ள மரங்கள் அழிக்கப்படுகிறது. வன விலங்குகள், பறவைகளின் உணவு மற்றும் இருப்பிடம் அழிக்கப்படுவதால் பெரும்பான்மையான இனங்கள் அழிந்து விட்டது.


காடுகள் அழிக்கப்படுவதால் மழை நாளுக்கு நாள் குறைந்து குடிநீருக்கு தட்டுபாடு என்கின்ற நிலைக்கு வந்துவிட்டது. விலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதாக செய்திகளில் பார்க்கும் போது அவற்றின் பரிதவிப்பை அறியாத பொதுமக்கள் மற்றும் நமது அரசாங்கத்தின் வனம் மற்றும் வனவிலங்குகள் பறவைகள் மீதான பாதுகாப்பு குறைகள் தான் நமக்கு நினைவிற்கு வருகிறது, ஆண்டு தோறும் புதிய மரக்கன்றுகளை பயிர் செய்வதோடு நில்லாமல் அவற்றை சரியாக பராமரித்து வளர்த்து அழிவிலிருக்கும் வனங்களை மீட்டெடுக்கும் பணி மிக அவசர தேவையான ஒன்று.

வன விலங்குகளையும் பறவை இனங்களையும் அழிவிலிருந்து மீட்டெடுக்கும் பணியில் முழு கவனம் செலுத்தப்படாவிட்டால் நமது அழிவை நாமே தேடிக்கொள்ளும் நிலைக்கு நாம் வந்துகொண்டிருக்கிறோம் என்பதை எச்சரிக்கையாக எண்ணி செயல்பட வேண்டும். நீரற்ற பூமியில் எந்த உயிரினமும் வாழ இயலாது என்பதை நாம் அறிந்திருந்தும் அவற்றிக்கான முழு முயற்சிகளை துரிதபடுத்தாமல் காலம் தாழ்த்துவது அபாயகரமான விளைவுகளை எதிர்கொள்ளச் செய்யும் என்பது உறுதி.

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

செய்திகள்

காலாவதியான மருந்துகளை விற்று கோடீஸ்வரனாகிய மீனாட்சியும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் சிலர் காலாவதியான மருந்துகளை உட்கொள்வதால் உட்கொளுபவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது ஆனால் அதன் வீரியம் குறைந்திருக்கும், பொதுவாக மருந்துகள் காலாவதியாகும் தேதியிலிருந்து ஆறு மாதங்கள் வரை மருந்துகள் காலாவதியாகாத விதத்தில் தயாரிக்கபடுகிறது என்பது போன்ற விவரங்களை பட்டியலிடுகின்றனர்.

அப்படியானால் மீனாச்சியும் அவருடன் சேர்ந்து இந்த சங்கிலியில் இடம்பெற்றிருக்கும் யாரும் குற்றவாளிகள் கிடையாது என்பதை தெரிவிக்க மேற்கண்ட குறிப்புகளை மீனாட்சிகுழுவினர் சாதகமாக பயன்படுத்தி குறைந்த பட்ச்ச தண்டனை பெற உதவி செய்வது நோக்கமா? மருந்துகள் உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் சட்டங்கள் உள்ளன, அதன் அடிப்படையில் குற்றம் சாட்டபட்டிருப்பவருக்கு அதிகபட்ச்ச தண்டனை கொடுப்பது இனி வரபோகும் குற்றங்களை குறைக்க அடிப்படையாக அமையும். அப்படி கடுமையான சட்டங்கள் இல்லையென்றால் சட்டத்திருத்தம் செய்யப்பட்டு வருகின்ற காலங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க வழி வகை செய்யப்பட வேண்டும்.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< சானியாவிற்கும் சொஹிபிற்க்கும் நடக்கவிருக்கும் திருமணத்திற்கு இத்தனை பெரிய செய்தியா, ஏற்கனவே சானியாவின் உடை பற்றிய விமர்சனம் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது, தற்போது பாகிஸ்தானிய கிரிகெட் ஆட்டக்காரருடனான சம்பந்தத்தில் இத்தனை பெரிய சலசலப்பிற்கு ஆளாகி இருக்கிறார். மாலிக்கிற்கு இரண்டு பிரச்சினைகள் முதல் திருமணம், இந்திய பெண் சானியாவை மணப்பதில் நாடுகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் விரோதத்தின் அடிப்படையில் சிக்கல்.

எந்த சிக்கலும் இவர்கள் திருமணத்தை நிருத்தபோவதில்லை என்ற முடிவுடன் பேசுகிறார்கள் மாலிக்+சானியா. இதற்கிடையே இன்றைய செய்தியில் பாகிஸ்தான் மாலிக்கை பாகிஸ்தானிற்கு அனுப்ப சொல்லுகிறது. சானியாவிற்கு எப்போதுமே பரப்பான அல்லது சூடான செய்திகளில் இடம்பெறுவது வழக்கமாகி போனது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஸ்டார்விஜய் தொலைகாட்ச்சியில் இன்று ஒளிபரப்பப்பட்ட கதையல்ல நிஜம் பகுதியில் வந்திருந்த பெண்கள். முதல் பெண்மணி முருகக்கடவுளை தான் திருமணம் செய்துகொண்டிருப்பதாக சொன்னது நிகழ்ச்சியை பார்க்க சிரத்தையை உண்டாக்கியது. அடுத்து வந்த பெண் தான் போகர் சித்தர் என்று கூறி ஆவேசமடைந்து பின்னர் கோபமடைந்து நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகை லட்சுமியை வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்ததை ஒளிபரப்பியது.

பிரச்சினைகளை பற்றி பேசும் போது மேலும் பிரச்சினைகள் உண்டானது, நிகழ்ச்சியை பார்ப்பவருக்கு வருத்தத்தை ஏற்ப்படுத்துவதாக இருந்தது. பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவருவதற்கு முன் நிகழ்ச்சியைப் பற்றிய விவரங்களை சொல்லி அழைத்து வந்தால் இப்படிப்பட்ட தவறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்று தோன்றுகிறது.
******************************************************************************************

அடிக்கடி செய்தியாகி வரும் விஷயம் யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது, ஊருக்குள் புகுந்து திரும்பி போகாமல் வனத்துறையினர் வந்து யானையை காட்டிற்குள் துரத்திய பின் மக்கள் நிம்மதியடைந்தனர், மான், சிறுத்தை, காட்டு எருமை போன்ற மிருகங்கள் தரைமட்டத்திலிருக்கும் கிணறுகளில் விழுந்து இறந்துவிடுவது அல்லது வனத்துறையினர் வந்து உயிரோடு மீட்டது போன்ற செய்திகள் அதிகம் இடம் பெறுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பு, பல காரணங்களுக்காக அழிக்கப்படும் காடுகள் என வன விலங்குகள் வாழும் இடங்களை மனிதர்கள் அபகரித்து வருவதால் இவை இடம் பெயருவதாக விலங்கியல் நிபுணர்கள் தங்கள் ஆய்வுகளில் கூறுகின்றனர்.

நீர் உணவு போன்றவற்றை தேடி வன விலங்குகள் நடமாடுகின்ற இடங்களில் மனிதர்கள் பயிர்களை பயிர் செய்வதும் வனங்களை ஒட்டியுள்ள பகுதியில் புதியவர்கள் குடி புகுந்து வாழ்வதும் வன விலங்குகளை பெருமளவில் பாதிப்படையசெய்வதுடன் பல இனங்கள் முற்றிலுமாக அழிந்தும் வருகின்றன. வனவிலங்குகளையும் காடுகளையும் அழிவிலிருந்து காப்பதும் நிச்சயம் மனிதனின் முக்கிய கடமை இதற்க்கு மாநில மற்றும் மதிய அரசின் பல சட்டங்கள் இருந்தும் அவற்றால் பெருமளவில் மாற்றங்கள் நடப்பதாக தெரியவில்லை.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திங்கள், 5 ஏப்ரல், 2010

அனாதைப் பிணங்கள்

அநாதை பிணங்கள் எங்கெல்லாம் கிடைக்குமோ அங்கே சென்று அந்த பிணத்தை வாங்கி அல்லது எடுத்து வந்து பிணத்தின் எலும்புகள் எரிந்துவிடாமல் தீ மூட்டி பின்னர் அடுத்தநாள் எரிந்த பிணத்தின் எலும்புகளை எடுத்து ஒரு சணல் கோணியில் சேமித்து எடுத்து வந்து ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு கிடங்கில் சேமித்து பின்னர் வண்டியிலேற்றி வியாபாரம் செய்து வந்தான் ஒருவன். எலும்பை வாங்கிச் செல்லுபவரால் அதிலிருந்து என்ன செய்ய முடியும் என்பது அதிக நாட்களாகவே எனக்குள் எழுந்துவந்த கேள்வியாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் என் வீட்டிலிருந்த எண்பத்துமூன்று வயதான தாயாரை விடாத ஜுரம் பிடித்து ஆட்டியது, மருத்துவரிடம் கூட்டிச் சென்றபோது பலவித பரிசோதனைகளை செய்து தாயாருக்கு வயது முதிர்ந்த நிலையால் புற்றுநோய் ஏற்ப்பட்டு அதன் கடைசி பகுதியில் அவர் தற்போது இருப்பதாகவும் மருத்துவம் செய்வதனால் பலன் ஒன்றும் இல்லை என்று மருத்துவர் தெரிவித்த போது அடைந்த துயருக்கு அளவே கிடையாது, தாயார் ஜுரத்தில் தவிப்பதை பார்க்க இயலாத நிலையில் மருத்துவம் பார்க்கும் வழியும் இன்றி என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தபோது அடுத்த வீட்டுகாரர் கொடுத்த தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது அது ஒரு சமூக சேவகியின் அலுவலகம் என்பது தெரிந்தது, அவரிடம் தாயாரின் நிலையை எடுத்து சொன்ன போது அவர் கொடுத்த மற்றொரு தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டபோது அது ஒரு இலவச புற்றுநோய் காப்பகம் என்றும் அங்கு நேரில் நோய் தாக்கியவரை கொண்டு சென்றால் அவரது நிலையை பார்த்து அங்கே அவரை சேர்த்துக்கொண்டு மருத்துவம் இலவசமாக வழங்கப்படும் என்பதும் தெரிந்துகொள்ள முடிந்தது.

தாயாரை அழைத்துக்கொண்டு அந்த புற்றுநோய் காப்பகத்திற்கு சென்ற போது அது ஊரின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருந்ததால் வெகுநேரம் பயணிக்க வேண்டியதாகியது, அங்கு சென்ற போது அமைதியான சூழல் நம்மை வரவேற்றது, நமக்கு லேசான ஆச்சரியம் ஏற்பட்டது, ஏனென்றால் அங்கு நிலவிய சுகாதாரமும் இலவச சிகிச்சையும்தான். வெள்ளை உடையணிந்த கன்யாஸ்த்ரீஒருவர் படிவம் ஒன்றை கொடுத்து அதில் கேட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து தருமாறு சொன்னார், நோயாளியின் விவரங்களை பூர்த்தி செய்தபோது அதில் இறுதியாக ஒரு கேள்வி இருந்தது, அங்கு நாம் நோயாளியை சேர்த்தால் அவர்கள் நோயாளிக்கு கொடுக்கும் மருந்துகளையும் நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுகிறோம் என்பதுதான்.

அவற்றை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு கொடுத்தபோது கட்டில் ஒன்றை நோயாளிக்கு ஏற்பாடு செய்து அதில் அவரை படுக்க வைத்து உணவு மருந்து கொடுத்து கவனித்துகொள்ளுகிரார்கள், வேண்டுமானால் நாமும் நோயாளியுடனிருந்து அவரை கவனித்துக் கொள்வதற்கு அனுமதி உண்டு. ஆனால் அங்கு சேர்க்கப்படும் நோயாளிகள் அத்தனை பேரும் புற்றுநோயின் எல்லையில் இருப்பவர்கள் என்பதால் உடனிருந்து கவனித்துக்கொள்வதற்க்கு பெரும்பாலும் யாரும் தங்குவதில்லை.

காலை மதியம் இரவு உணவு என்பது நோயாளிகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது, அங்கு அனுமதிக்கப்பட்டபின் தாயாருக்கு விடாமல் அடித்துக் கொண்டிருந்த ஜுரம் நின்று போனது, அவர்கள் என்ன மருந்து கொண்டுக்கின்றனர் என்பது தெரியவில்லை. புற்று நோயால் இறக்கும் ஒவ்வொரு நோயாளியும் தனது கடைசி நிமிடம் வரை துன்புறாமல் அமைதியாக இறக்கவேண்டும் என்பது காப்பகம் நடத்துவதன் நோக்கம் என்று சொல்லப்படுகிறது. அந்த காப்பகத்திற்கு கொண்டு வரப்படும் நோயாளிகள் அதிக பட்சம் ஒருமாதம் இரண்டு மாதம் உயிர் வாழ்ந்தால் அதிகம், சிலர் மூன்று மாதங்கள் ஆறுமாதங்கள் கூட நன்றாக சாப்பிட்டு உயிர் வாழ்ந்து இறந்து போவதுண்ட்ரென்று கேள்விப்பட்டோம்.

பெரும்பாலான நோயாளிகளின் இறுதிச் சடங்குகளை அவர்களே செய்வதால் காப்பகத்தின் பின் புறம் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடம் உள்ளது, காலையும் மாலையும் ஜெபம் பாட்டு [ரோமன் கத்தோலிக்க கிறிஸ்த்தவர்களின் முறைப்படி] தவறாமல் நடத்தப்படுகிறது. கன்யாஸ்திரீகள் மட்டுமே அங்கு உள்ளனர் பாதிரியார் வந்து போவதுண்டு, மருத்துவர் வாரம் இருமுறையோ தேவைப்படும்போதோ வந்து செல்வதாக கூறப்படுகிறது. சமூக சேவகிகள் அங்கு வருவதில்லையென்றாலும் அவர்கள் மூலம் அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் உண்டு.

தாயாரை அங்கு அனுமதித்தப் பின்பு நான் அங்கு சென்று அவர்களை பார்த்து வருவது வழக்கமாகியது, அப்போது அங்குள்ள மற்ற நோயாளிகளையும் பார்க்க நேரும் போது அவர்களைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் என்னுள் எழுவதுண்டு,
தாயார் படுத்திருந்த கட்டில் இருந்த அறையில் மொத்தம் நான்கு கட்டில்கள் அவற்றில் தாயாரின் படுக்கையின் அடுத்த கட்டிலில் இருந்த பெண்ணுக்கு சுமார் நாற்ப்பது வயதிருக்கும், நுரையீரலில் புற்றுநோய் அவர் சுவாசிக்க மிகவும் அவதியுற்றுவந்தார். அவரது வீட்டார் அடிக்கடி அவரை பார்ப்பதற்கு வந்து சென்றனர். தாலிக்கயிருகள் செய்வது அவர்களது குடும்பத்தொழிலாம், அதற்காக பெரிய பாத்திரங்களில் மஞ்சள் போன்ற பொடியை தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கொதிக்கும் நீரில் கொட்டி கயிறுகளை போட்டு ஊறவைப்பாராம், அந்த கெமிகல் துகள்கள் அவர் சுவாசிக்கும்போது நுரையீரலை தாக்கியிருக்ககூடும் என்று நான் என் மனதிற்குள் நினைத்துகொண்டேன்.

அவரை கவனித்துக்கொள்ளும் அவரது உறவினரின் மூலம் நான் அறிந்து கொண்ட தகவல்கள், யாராவது வேலைக்காரர்களை வைத்து ஏன் அந்த கலவையை உண்டாக்கியிருக்கக் கூடாது என்று நான் அந்த பெண்ணிடம் கேட்டேன் அதற்கு அந்த பெண்சொன்ன பதில் நமது நாட்டில் கலாச்சாரம் என்ற பெயரில் நடக்கும் அறியாமைகளை எண்ணி என்னை வேதனையடைய வைத்தது, சுமங்கலி பெண் அதிலும் அந்த குடும்பத்திற்கு வந்த லட்சுமிதான் அந்த கலவையை கலக்க வேண்டும் என்று சொன்னார்.

ஒரு வாரத்திற்குப் பின்னர் நான் அங்கு சென்ற போது அவரது கட்டில் காலியாகிவிட்டிருந்தது, அடுத்தவர் ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்த எண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டி, அவரது சொந்த ஊர் தென் தமிழகம் என்று சொன்னார், அவரிடம் அவரைப்பற்றி விசாரித்தபோது அவரது மகன் ஆஸ்த்ரேலியாவில் மனைவி பிள்ளைகளுடன் வசதியாக வாழ்வதாக சொன்னார், அவரது கணவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் சொத்துகள் நிறைய இருந்ததால் அவற்றின் மூலம் தனது மகனை நன்றாக படிக்கவைத்ததாகவும் ஒரு மகளை திருமணம் செய்த ஒருசில ஆண்டுகளில் அவரது மருமகன் சொத்துக்களை தன் பெயருக்கு எழுதி தரும்படி வற்புறுத்தி மகளை தொல்லை கொடுத்து வந்ததால் மகளும் அவளது இரண்டு பெண் குழந்தைகளுடன் தன்னுடன் வந்து தங்கிவிட்டதாகவும் சொன்னார்.

கர்பப்பையை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னார் ஆனால் அவரது உடன் படித்த மருத்துவர் சென்னையில் இருக்கிறார் அவரை போய் பார்க்கச் சொல்லி சென்னைக்கு அனுப்பிவிட்டார், சென்னையில் பெண்மருத்துவரை சந்தித்தபோது அவர் ஆபரேஷன் வேண்டாம் என்று சொல்லி புற்றுநோய் காப்பகத்திற்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டதாக சொன்னார். தனது மகளுடன் அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து ஒரு மாதம் இருக்கும் என்றும் தனது மகள் வந்து தன்னை பார்க்க இயலாது என்றும் சொன்னார்.

அடுத்தமுறை மருத்துவமனைக்கு சென்ற போது அந்த பாட்டியின் முகத்தில் மாறுதல் தெரிந்தது, அவரிடம் பேசுவதற்கு சென்ற போது அந்த பாட்டி சொன்னார், அவரது காதில் அணிந்திருந்த வைர தோடுகளை கன்யாஸ்திரீ அவிழ்த்து எடுத்துவிட்டார், எதற்கு அவிழ்த்து விட்டார் என்று நான் கேட்டேன், நான் உட்பட மற்றவர்கள் யாராவது அவரிடம் நெருங்கி பேசும்போது அதை அவிழ்த்து எடுத்துச் சென்றுவிடக் கூடும் என்று அந்த பாட்டியிடம் சொனார்களாம், அந்த பாட்டியை அங்கு சேர்த்த மருத்துவரோ மகளோ வந்தால் அவர்களிடம் அந்த தோடுகளை கொடுத்துவிடபோவதாக சொன்னார்கள் என்று என்னிடம் சொன்னார்.

ஏற்கனவே அப்படிப்பட்ட திருடர்கள் அங்கே வந்திருக்கக் கூடும் என்று அப்போதுதான் எனக்கு தோன்றியது. அடுத்ததாக படுத்திருந்த ஒரு எலும்புகூடு ஆணா பெண்ணா என்று கூட சொல்ல இயலாத அளவிற்கு இருந்த உருவம், விசாரித்த போது அந்த பெண் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த டாப் ராங்கர், படிப்பில் எப்போதுமே முதலிடமாம் கஞ்சி மருந்து போன்றவற்றை வேறு வழியாக குழாய் மூலம் ஊற்றுகின்றனர். அவரது பெற்றோருக்கு முதல் குழந்தை, கடந்த ஒரு வருடமாக அவரது உடல் நிலையில் பல இன்னல்கள் ஏற்பட்டு இறுதியில் அந்த நிலைக்கு வந்துவிட்டதாக கேள்விபட்டேன்.

தாயாரை அங்கு சேர்த்த இருபது நாட்களில் அவரது கண்கள் திறக்கவே இல்லை, நாம் அவரை பார்க்க போவது அவருக்கு தெரிகிறதா என்பதைக் கூட தெரிந்துகொள்ள இயலவில்லை. தாயார் பூமியில் வாழும் கடைசி நாட்கள் அவை என்பதும் மருத்துவர் குறித்துக்கொடுத்த தேதி நெருங்குவதும் நினைவில் இல்லாமல் போனது ஏனோ தெரியவில்லை, ஒரு நாள் வீட்டிற்க்கு செய்தி வந்தது அம்மா இறந்து போனார் என்று. அவரது உடலை எடுத்துவந்து நல்லடக்கம் செய்தாகியது.

புற்றுநோய் காப்பகத்தின் பின்புறமிருந்த சிறிய இடத்தில் எத்தனை பிணங்களை புதைக்க முடியும், கன்யாஸ்த்ரீகள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள், யாருக்கும் தமிழ் தெரியவில்லை, எனக்குத் தெரிந்த ஒரு ரோமன் கத்தோலிக்கர் என் தாயாரை பார்க்கச் சென்றிருந்த போது அவர்களது கத்தோலிக்கப் பிரிவைப் பற்றிய விவரங்களை விசாரித்திருக்கிறார், அவர்கள் கூறும் பிரிவு என்று ஒரு பிரிவு கத்தோலிக்கர்களில் கிடையவே கிடையாது என்று என்னிடம் சொன்னது எனக்கு நினைவிற்கு வந்தது. அப்படி என்றால் அவர்கள் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்களா, எதற்காக வேஷம் போட்டுக் கொண்டு காப்பகம் நடத்த வேண்டும், வெளிநாடு வாழ் இந்திய பணக்காரர்கள் பலர் நன்கொடை அளிப்பதாக அங்கிருக்கும் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாரிசுகள் இல்லாத சில வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது சொத்து அல்லது பணத்தை அந்த காப்பகம் நடத்துவதற்க்கென்று கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

யாரோ சிலருக்கு காப்பகத்தின் மூலம் வருமானம் கிடைக்கக்கூடும் என்ற சந்தேகம் தோன்றுகிறது, அது மட்டுமில்லாமல் நிராகரிக்கப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட சில புற்றுநோய்க்கான மருந்துகளை அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு கொடுக்கக் கூடும் என்ற சந்தேகமும் உள்ளது, புற்று நோய்க்கு கண்டு பிடிக்கப்படும் சில புதிய மருந்துகளை அங்கு வரும் நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை செய்யும் வாய்ப்புகளும் உண்டு. எலும்புகள் தேவைப்படும் வியாபாரிகளுக்கு விற்கவும் வாய்புகள் அதிகம் உண்டு. தாயாருக்கு தனது கடைசி சில நாட்கள் புகலிடம் கொடுத்த காப்பகத்தை குறை சொல்வது நியாயம் இல்லை ஆனால் வீட்டிலும் மருத்துவ மனையிலும் வைத்து கவனிக்க இயலாமல் போனதும் வேறு வழியின்றி காப்பகத்திற்கு கொண்டு செல்லும் நிலை ஏற்ப்பட்டது, தாயாருக்கு தேவைப்படும் போது குடிக்க தண்ணீர் கொடுப்பதற்கு அங்கே உதவிக்கு யாரும் இல்லாமல் 'தண்ணீ தண்ணீ ' என்று அவர்கள் தவித்துகொண்டிருந்த சமயம் சரியாக நான் அங்கு சென்றேன்,

இன்று நினைத்தாலும் மனம் உடையும் வேதனைகள் நீங்காத நினைவுகளாய் நின்று என் மரணம்வரை வேதனை செய்யும்.

சனி, 3 ஏப்ரல், 2010

நிலம் வாங்கினால் ....இலவசம்!!!

ஏப்ரல் மாதம் தொடங்கினாலே வெயல் கொளுத்த ஆரம்பித்து அக்டோபர் மாதம் வரை வறுத்து எடுத்து மனிதர்களையும் மரம் செடி புல் பூண்டு ஆறு குளம் ஏறி கிணறு எல்லாவற்றையும் இல்லாமல் செய்து விட்டு மனிதர்களின் ஏகோபித்த 'தண்ணீர் பற்றாக்குறைக்கு' திரைகதை வசனம், எழுதி அரங்கேற்றிவிட்டு வேடிக்கை பார்க்கும். தங்கம் விலையும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதை விட நிலத்தின் விலை அசுர வேகத்தில் ஏறி இருப்பது கூட வெயலின் கொடுமை போலத்தான் சுட்டெரித்து வருகிறது.

சில தனியார் தொலைகாட்சிகளில் மனை ஒன்று வாங்கினால் ஏகப்பட்ட பரிசு பொருட்களை தருவதாகவும், தங்க காசு தருவதாகவும், இலவசமாக பத்திரம் பதிவு செய்து தருவதாகவும் விளம்பரங்கள் வருவது வாடிக்கையாகி உள்ளது. குறைந்த விலைக்கு மனைகளை விற்பனை செய்பவரால் எப்படி இத்தனை இலவச பொருட்களை கொடுக்க இயலும் என்பதும் இலவசமாக பத்திர பதிவு செய்யப்படும் என்பதையும் பார்க்கும் போது யோசிக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்வதாகவே உள்ளது.

காணி நிலம் வேண்டும் பராசக்தி என்று பாரதி சொன்னது போல காணி நிலம் என்பது தற்காலத்தில் கையளவு நிலம் என்னும் நிலையில் சுருங்கிவிட்டது. கனவு இல்லம் என்ற ஒன்று இருந்துவிட்டாலே கனவு நிறைவேறுவதற்கு முயற்சி செய்வதைவிட இருப்பதை கவனமுடன் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் மிகுந்து வருகிறது. விளம்பரத்தை பார்க்கும் ஒருவர் நிச்சயம் அவர்கள் விரிக்கும் வலையில் சிக்கிவிடக்கூடிய அபாயம் நிறைந்தே காணப்படுகிறது, சற்று இளகும் மனதுடையவராக இருந்தால் தொல்லைதான் மிஞ்சும்.

நாட்டில் நடக்கும் தில்லு முல்லுகள் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பதால் ஒருவர் ஏமாற்றிய அதே பாணியில் அடுத்தவர் ஏமாற்றுவதற்கு திட்டம் வகுப்பதில்லை, இதனால் மக்கள் எத்தனைதான் விழிப்போடு செயல் பட்டாலும் முற்றிலும் புதிய பாணியை உருவாக்கி ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்துவிடுகின்றனர். கொள்ளை அடித்துவிட்டு தப்பித்த பின்னர்தான் அவர் கொள்ளையடித்த கதை செய்தியாகி வெளிவருகிறது.

கொள்ளையடிப்பவர்கள் அவர்களது அறிவை உழைத்து சம்பாதிப்பதற்கு பயன்படுத்துவதை காட்டிலும் கொள்ளையடிக்கவும் கொலை செய்யவும் மோசம் போக்கவுமே சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.

வியாழன், 1 ஏப்ரல், 2010

முட்டாள்கள் தினம்

இன்று ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினம், ஏனைய பல புதிய 'தின' வரவுகளில் மிகவும் பழமை வாய்ந்தது இந்த முட்டாள்கள் தினம். இதற்க்கு காரணம் என்ன, நாம் முட்டாள்களை கண்டு ஆனந்தம் அடைவதாலேயா அல்லது மற்றவர்களை முட்டாள்களாக்கி பார்க்க நமக்குள் இருக்கும் மிருகம் நம்மை தூண்டுவதாலேயா. முட்டாள்கள் தினம் எனக்கு கருத்து தெரிந்த வயதிலிருந்தே மிகவும் பிரசித்தமடைந்திருந்தது, முட்டாள்கள் தினம் என்றொரு தினம் தனியாக நமக்கு தேவை இருப்பதில்லை, தற்போதெல்லாம் பலவகைகளில் மக்களை முட்டாள்களாக்கி வேடிக்கை பார்க்கும் கூட்டம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெருகி வருகிறது. இதன் வளர்ச்சியும் நவீனமடைந்து வருவது இதன் சிறப்பு.

அரசியல்வாதிகள் ஒருபுறம் மக்களை முட்டாள்களாக்கி வருகின்றனர், ஒரு புறம் கல்வி என்ற பெயரில் மாணவர் சேர்க்கை மூலம் பணத்தை கொள்ளையடித்து முட்டாளாக்கும் கூட்டம், காலாவதியான மருந்துகளை நாடு முழுவதும் விற்பனை செய்து முட்டாளாக்கிய கூட்டம், திரைப்படங்களில் பல பாவனைகளை செய்து 'பன்ச்' டைலாக் பேசி முட்டாள்களாக்கும் கூட்டம், வறுமையை பல விதத்தில் பயன்படுத்தி மக்களை மோசம்போக்கி முட்டாள்களாக்கும் கூட்டம். சாமியார் வேடமிட்டு மக்களை முட்டாள்களாக்கும் கும்பல், சீட்டு கம்பனிகள் மூலம் முட்டாளாக்கும் கும்பல், இரவு பகல் பாராமல் கொள்ளை கொலை என்று கும்மாளமடிக்கும் திருட்டு கும்பல், எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்கி, வாங்கும் சம்பளத்திற்கு உழைக்காத கும்பல், இப்படி தினம் தினம் ஏதோ ஒரு வகையில் மக்கள் முட்டாள்களாகி ஏமாந்து கொண்டிருப்பதும் வழக்கமான ஒன்றாகி போனது.

இதில் ஒரு சொற்றொடர் 'ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுபவரும் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்'. நமது நாட்டில் தொலைக்காட்சி இல்லாத காலத்தில் நாடகம் திரைப்படம் என்று இருந்த மக்கள் கூட்டம் இன்று சின்னத்திரையில் வரும் தொடர்களில் ஒன்றி போவதே வாழ்க்கையின் மிக முக்கிய நிகழ்வு என்று வாழ்ந்து வருவதால் அன்றாட செய்திகள் ஒளிபரப்பாகும் சமயங்களில் சமயலறையில் மீதமிருக்கும் வேலைகளை மும்முரமாக கவனிக்கச் சென்றுவிடும் புத்திசாலிகள் நிறைந்திருக்கும் நமது ஊரில் தகவல்களை அறிந்து கொள்ளவதில் ஆர்வமில்லாத மக்கள், தகவல் என்றாலே வீட்டு வேலைக்காரி கொண்டுவரும் அடுத்த வீட்டு விவகாரம் என்ற அளவில் தங்களது அன்றாட வாழ்வை நகர்த்தி கொண்டு இருக்கும் பெண்களுக்கு கொளையடிப்பவன், கொலைகாரன், சீட்டு கம்பெனிகாரன், மோசடி சாமியார், காலாவதியான மருந்து வியாபாரி, வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி பணம் அபகரித்த மோசடி, இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்கு எப்படி முடியும்?

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடரில் அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதும் எது நடக்ககூடாது என்பதற்கும் தன் முழு கவனத்தை செலுத்தும் முட்டாள்களின் ஒட்டு மொத்த ஏமாற்றமும் போலி சாமியார்களிடமும், சீட்டு கம்பனிகளில் பணத்தை அதிக வட்டிக்கும் குறைவான விலையில் மனை வாங்குவதற்கும் செலுத்திவிட்டு ஏமாந்து போலீசாரிடமும் மற்றவர்களிடமும் முறையிட்டுக் கொண்டிருப்பதில் என்ன லாபம்? நம் நாட்டில் முட்டாள்கள் இல்லையென்றால் சின்னத்திரையில் இத்தனை வெற்றிவிழாக்களை தொடர்கதைகள் கண்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே.

நம் ஊரில் முட்டாள்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை அறிந்துதானோ என்னவோ முட்டாள்கள் தினம் மற்ற எல்லாவகையான தினங்களைவிட மிகவும் பழமையானதும் பாரம்பரியம் உடையதுமாக கருதப்படுகிறது. காதல் முட்டாள்கள் இணையதள முட்டாள்கள் என்று முட்டாள்களின் வட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமிருப்பது இதன் வளர்ச்சியை காட்டுவதாவே உள்ளது.