
தங்கம் எவ்வளவு விலை ஏறிக்கொண்டே போனாலும் ஆபரணதங்கம் வாங்குபவர்கள் மட்டும் குறையவே இல்லை. தீபாவளிக்கு சரியாக ஒருவாரத்திற்கு முன்னர் ஆபரண தங்கம் விற்கும் கடைகளில் பார்த்த போது கூட்டம் அலைமோதிக்கொண்டு நகைகளை வாங்கிக் கொண்டிருந்ததை காண முடிந்தது,
ஒரு சிறிய தங்கநகை வாங்குவதற்கு குறைந்தது மூன்று நான்கு பேர் என கடைகளுக்கு வருவதால் கடை கூட்ட நெரிசலாகி விடுகிறது, அங்கு வரும் ஒரு சிலரின் போக்கும் யாராவது அசந்தால் நகை வாங்க வைத்திருக்கும் பணத்தையோ கழுத்தில் அணிந்துகொண்டிருக்கும் தங்க நகைகளையோ சுருட்டிக்கொண்டு போவதற்கு தயாராக நின்றுகொண்டிருப்பதும் பார்க்க முடிகிறது. நாம் அவர்களை கவனிக்கிறோம் என்பதை அவர்கள் கவனித்து விட்டால் நைசாக அந்த இடத்தை விட்டு போய்விட்டு அவர்களது கூட்டத்தைச் சேர்ந்த வேறு திருடர்களை அந்த இடத்திற்கு அனுப்பி விடுகின்றனர்.
எது எப்படியோ மக்கள் சளைக்காமல் கட்டு கட்டாக பணத்தை எடுத்துவந்து தேவையான நகைகளை வாங்கி செல்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பணவீக்கம் அதிகரித்து உலக பொருளாதாரம் வீழ்ச்சியில் இருப்பதாக செய்திகள் வந்துக் கொண்டிருந்தாலும் மக்களிடம் பணப் புழக்கத்திற்கு குறைவு இருப்பதாக தெரியவில்லை.
அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில் பணவீக்கத்தினால் பல லட்சகணக்கானோர் வேலை இழந்து தவித்து வருவதால், ஆடம்பரமான செலவுகளில் மக்கள் ஈடுபடுவது மந்த நிலையில் இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் நம் இந்திய நாட்டில் திருமணங்களுக்கோ பண்டிகைகளுக்கோ செலவு செய்வதும் மற்ற வைபவங்களும் எப்போதும் போலவே தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் கடைகளில் வியாபாரமும் எப்போதும் போல நடந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
மாம்பலம் [தி.நகர்] பாண்டி பஜார் போன்ற இடங்களில் எப்போதும் போல கூட்டம் அலை மோதுவதும் இயல்பாகவே காணப்படுகிறது, மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் மாநகர காவல் மக்களின் நலன் கருதி தங்கள் பொருட்களை பத்திரமாக பாதுகாத்துக்கொள்வது எப்படி என்று அறிவித்தபடி இருந்தாலும் மக்கள் அந்த அறிவிப்பை பயன்படுத்திக்கொள்கிரார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
நாளுக்கு நாள் உஷ்ணம் அதிகரித்து வருவதைப்போலவே தங்கத்தின் விலையும் வீடு மனை போன்றவற்றின் விலையும் அசுர வேகத்தில் அதிகரித்த வண்ணம் இருப்பது சராசரி மக்களின் கனவுகள் கனவுகளாகவே இருந்துவிடும் நிலையில் தான் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக