வியாழன், 22 ஏப்ரல், 2010

சுயநலவாதிகள்

கோடை காலத்தில் கடல் மீன்கள் சினைபிடித்து இன பெருக்கம் செய்வதை கடல்மீன் சாப்பிடுபவர்கள் நிச்சயம் அறிந்திருக்க கூடும், ஏனென்றால் கோடைகாலத்தில் சமைப்பதற்காக வாங்கும் மீன்களை சுத்தம் செய்யும் போது அதன்வயிற்றில் சினை முட்டைகள் இருப்பதை நிச்சயம் கவனிக்க முடியும், நானும் வருடம் தோறும் கவனிக்கத் தவறுவதே கிடையாது, சினைமுட்டைகளை காணும்போதெல்லாம் மனம் வேதனை அடைவதும் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருந்துவந்துள்ளது, இந்நிலையில் கடல் வாழ் உயிரினங்கள் பெரும்பாலும் அழிவின் எல்லையில் இருப்பதைப் பற்றி இணையதளத்தில் வெளி நாட்டினர் செய்த ஆய்வுகளை செய்திகளாக வைத்திருப்பதை படித்தேன், கடந்த வருடம் அதைபடித்ததின் விளைவாக ஒரு பதிவும் எழுதி இருந்தேன்.

இவ்வருடம் தமிழ் செய்தி ஒளிபரப்புகளில் இந்திய கடலோரப்பகுதிகளில் 45 நாட்களுக்கு கடலில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு அரசு தடை வித்தித்துள்ளது என்றும் இதனால் வருவாய் இழக்கும் மீனவர்களுக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றும் செய்தி வெளியானது ஆறுதலை தந்தது. ஆனால் அந்த ஆறுதல் ஒரு சில நாட்களிலேயே காணாமலும் போனது, காரணம் எங்கள் வீட்டிற்க்கு மீன் குழம்பு வைக்க வாங்கியிருந்த மீன்களின் வயிற்றில் சினைகளுடன் இருந்ததை காண வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானேன். மனதில் ஒருவித குற்ற உணர்வு ஏற்படத் தவறவில்லை.

இந்நிலைக்கு காரணம் வியாபாரிகளா, அரசு அதிகாரிகளின் உதாசீனமான போக்கா, யாரிடம் கேட்பது, நமது நாட்டின் அடிப்படை நிலைமையே இது தான், எந்த சட்டமாக இருந்தாலும் அதன் செயலாக்கத்தில் மனிதர்கள் செய்யும் துஷ்பிரயோகம், உதாசீனம், லஞ்சம் வாங்கிக்கொண்டு சட்டத்தை காற்றில் பறக்கவிடுவது போன்ற சமுதாய மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையின் பால் கொண்டுள்ள அக்கறை கடமையிலிருந்து தவறுதல், ஒழுக்கமற்ற பொறுப்பற்ற போக்கு தான் இந்நிலைக்கு காரணங்கள்.

குப்பைகளை வீதியில் கொட்டுவது, கழிப்பிடங்களை சரியானபடி உபயோகிக்காமல் அசுத்தப்படுத்துவது, பொது இடங்களை கழிவறையாக்குவது பொது குழாய்களில் நீரை உபயோகித்த பின்னர் குழாயை மூடுவது பற்றி சிறிதும் கவலைப்படுவது இல்லை, பணம் பெற்றுக்கொண்டு சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு ஆதரவு கொடுப்பது என எல்லா இடங்களிலும் பொறுப்பற்ற நிலை காணப்படுவது இந்திய தேசத்தில் மலிவாகிப்போன குற்றச்சாட்டுகள், சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவரின் பொறுப்பற்ற நிர்வாகம், நேர்மையற்ற போக்கு, கடமை உணர்வற்ற இயல்பு இவைகள் இந்தியாவை தாக்கி கொண்டிருக்கும் பரம்பரை வியாதிகள், இவற்றிலிருந்து யார் யாரை மீட்டெடுப்பது, கேள்விகள் என்றும் நிரந்தரமாகி போனது, அதற்கான விடைகள் கிடைக்க பல் ஆயிரம் நூற்றாண்டுகள் தேவைபடுமோ என்பது தெரியவில்லை.

அரசியல்வாதிகளை குற்றம் சுமத்தும் பலர் தங்கள் வாழ்க்கையில் எப்படி பொறுப்போடும் சுய சிந்தனையோடும் கடமை உணர்வோடும் கட்டுக்கோப்புடனும் வாழ்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்படுவது இல்லை, என் முதுகில் அழுக்கு இருந்தால் பரவாயில்லை அதை என்னால் பார்க்க முடியாது, அடுத்தவன் முதுகை என்னால் நன்கு பார்க்க முடிகிறது என்பதால் அவன் முதுகிலிருக்கும் அழுக்கைப் பற்றி அக்கறைகொள்வதும் குறை கூறும் கேவலமான போக்கு இருந்தால் நாடு உருப்படுவது எப்போது.

மனிதன் தான் உலக அழிவிற்கு அடிப்படை காரணமாக இருக்க முடியும், இயற்கையை பராமரிக்கத் தவறுவதன் விளைவுகளை சந்தித்தே தீர வேண்டிய நிர்பந்தத்தை ஏற்ப்படுத்தி வருவது மனித இனமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக