பாய்காட் கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாய்காட் கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 பிப்ரவரி, 2010

என் அம்மா சொன்ன கதை

கதை - 4

அந்த
ஜமீனில் இரண்டு ஜமீந்தாரிணிகள், அக்காள், தங்கை, ஒரு தம்பி மூவரும் ஜமீனின் வாரிசு. [இவர்களுடைய தகப்பனார் சிற்றரசர் அல்லது குறுநில மன்னர், பட்டத்திலிருக்கும் ராஜாவிற்கு கப்பம் கட்டி வந்த சிற்றரசர்களுள் ஒருவர். இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பே பல அரசர்கள் இல்லாமல் போனதால் இவர்களின் பரம்பரைகளை ஜமீன்கள் என்று அழைத்தனர், இந்திராகாந்தியின் நில உச்சவரம்பு சட்டத்திற்கு பின்னர் ஜமீன்களும் இல்லாமல் போனது]. அக்காள் தங்கை இருவரும் வேறு ஊரின் ஜமீந்தார்களை திருமணம் செய்திருந்தாலும், தாங்கள் திருமணம் செய்த வீட்டிற்கு கணவருடன் போகவில்லை. தனது தகப்பனாரின் ஜமீனிலேயே தங்களது கணவனுடன் வாழ்ந்து வந்தனர், அவர்களது ஒரே தம்பி ..எஸ். படிக்க இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திற்கு சென்றுவிட்டார். [அப்போது இந்தியாவில் மேற்படிப்பு இல்லை]. இதனால் ஜமீனை இரு சகோதரிகளும் பாதுகாத்து பராமரித்து வந்தனர்.

இருவருக்கும் பெண்குழந்தைகளும் ஆண்குழந்தைகளும் இருந்தனர். ஒவ்வொரு குழத்தையை பராமரிப்பதற்கு என்று தனித்தனியே பணிப்பெண்கள் இருந்தனர். இரு சகோதரிகளின் குழந்தைகளும் பதினான்கு வயது ஆகும் சமயத்தில் திடீரென்று சித்த சுவாதீனம் இழந்து, ஊன் உறக்கமின்றி இறந்து விடுவது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும் சம்பவமாக இருந்தது.

ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியே அறை, கட்டில், பணிப்பெண் எல்லாம் இருந்தாலும் எல்லோரும் சாப்பிடுவது மட்டும் ஒரே இடத்தில் தான். குழந்தைகளுக்கு திடீரென்று சரியாக பதினான்காம் வயதில் எப்படி சித்த பிரம்மை ஏற்படுகிறது என்பதை கவனிக்க ஆரம்பித்தபோது, குழந்தைகள் தங்கள் அறையில் தனியே இருக்கும் ஏதோ ஒரு சமயத்தில் ஒரு பெரிய வண்டு ஒன்று அறைக்குள் வந்து அந்த குழந்தையை சுற்றி சுற்றி வருகிறது என்றும் அப்படி சுற்றி வரும் சமயத்தில் அந்த குழந்தையின் சித்தம் பேதலிக்கிறது என்பதும் அறிந்து கொள்ள முடிந்தது. சித்தம் பேதலித்த குழந்தை சாப்பிடாமல் உறங்காமல் சில வாரங்களிலோ மாதங்களிலோ இறந்து விடுகிறது.

ஜன்னல்களை வாசல்களை மூடி வைத்து குழந்தைகளை மிகவும் பாதுகாப்புடன் வைக்கத் துவங்கினார்கள். மாந்த்ரீகரை அழைத்து எதனால் தொடர்ந்து வண்டுகள் குழந்தைகள் தனியே இருக்கும் போது வட்டமிடுகிறது, என்பதை கண்டறிய எடுக்கப்பட்ட முயற்ச்சிகள் அத்தனையும் தோல்வியிலேயே முடிந்தது. எத்தனை பெரிய மாந்த்ரீகனாலும் யார் எதற்காக வண்டுகள் மூலம் குழந்தைகளை கொன்று வருகின்றனர் என்பதை கண்டு பிடிக்க இயலாமலே போனது.

இதனால் இரண்டு ஜமீந்தாரிணிகளின் குழந்தைகள் பத்துபேர் அடுத்தடுத்து இறந்துபோனது ஜமீனையே சோகத்தில் ஆழ்த்தியது. எஞ்சியிருந்த குழந்தைகள் விரல்விட்டு எண்ண கூடியவர்கள் மட்டும்தான். ஜமீனை அழிக்க யாரோ சதித்திட்டம் தீட்டியிருப்பது உர்ஜிதமானது.

திங்கள், 8 பிப்ரவரி, 2010

என் அம்மா சொன்ன கதை

கதை - 3

என் தாத்தா வீட்டிற்கு சற்று தூரத்திலிருந்த பரந்தவெளியில் வீட்டிற்குத் தேவையான நெல்லை கொட்டி வெயலில் உலர்த்திக்கொண்டிருந்த பணிப் பெண்கள் அங்கிருந்து சென்றுவிட்டப்பின் நெல்லை காலால் தள்ளி விட்டு புரட்டி விடுவது என் பாட்டிக்கு மிகவும் பிடிக்குமாம், மாலை அந்த நெல்லை ஓரமாக குவியலாக சேர்த்து வைத்து அதன் மீது கோணிப் பைகளை போட்டு மூடி வைத்து பின்னர் அடுத்தநாள் வெயலில் மறுபடியும் உலர வைத்து நெல் நன்றாக காய்ந்தப்பின் உரலில் குற்றி அரிசியாக்கி அதற்கென்று இருக்குமிடத்தில் சேமித்து வைப்பார்கள். பணிப்பெண்கள் அங்கிருந்து சென்றப் பின்னர் நெல்லை கால்களாலும் கைகளாலும் புரட்டிக்கொண்டிருந்த என் பாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த வைர அட்டியல் நெல்லில் விழுந்துவிட்டது,

இதை
கவனிக்காத பாட்டி வழக்கம்போல குளியலுக்கு முன் அணிந்திருக்கும் நகைகளை அவிழ்த்து வைத்து குளித்து முடித்த பின் அணிந்து கொள்ளும் வழக்கப்படி அவிழ்க்கும் போது அட்டியல் கழுத்தில் இல்லாததை அப்போது தான் கவனித்திருக்கிறார். அடுத்தநாள் பணிக்கு வந்த பெண்களிடம் வைர அட்டியல் காணாமல் போனது என்றும் அதை யாரேனும் எடுத்திருந்தால் திரும்ப கொடுத்துவிடும்படி என் தாத்தாவும் அவர்களிடம் கேட்டிருக்கிறார். ஒருமாத காலமாகியும் காணாமல் போன வைர அட்டியல் கிடைக்கவில்லை.

அப்போதைய வழக்கப்படி ஒரு மாந்த்ரீகனை வரவழைத்து ஒரு வெற்றிலையில் கருப்பு நிற மையை பூசி ஏழு வயதே நிரம்பிய என் அம்மாவின் தங்கையை அந்த மையில் என்னத் தெரிகிறது என்று கேட்கிறார்கள், அந்த வெற்றிலையில் பூசியிருக்கும் மையில் காய வைத்திருக்கும் நெல்லை பாட்டி கையால் புரட்டி விட்டு பின்னர் காலால் புரட்டும் போது கழுத்திலிருந்த அட்டியல் அவிழ்ந்து நெல்லில் விழுவதையும் அதன் பின்னர் மாலை நெல்லை ஒதுக்கி வைக்க அங்கு வந்த பெண் அந்த அட்டியலை எடுப்பதை பார்க்கிறாள், எடுத்த அட்டியலை எடுத்து தன் மடியில் கட்டி வைக்கிறாள், வேலை முடிந்து வீட்டிற்குச் சென்ற பின் தன் வீட்டின் பின் புறமிருக்கும் ஒரு மரத்தின் அடியில் சிறிய குழி தோண்டி அட்டியலை ஒரு துணியில் கட்டி வைத்து மண்ணை அதன் மீது மூடி வைக்கிறாள் என்று ஏழு வயது சிறுமி வெற்றிலையில் பூசியிருக்கும் கருநிற மையை பார்த்து சொல்லுகிறாள்.

அடுத்தநாள் வேலைக்கு அங்கு வந்த பெண்களில் குறிப்பிட்ட பெண்ணை கூப்பிட்டு அட்டியல் அவளிடமிருப்பது தெரியும் என்றும் திரும்ப கொடுக்கச்சொல்லி கேட்கிறார்கள், ஆனால் அந்த பெண் அட்டியலை திரும்ப கொடுக்கவில்லை, அன்றிலிருந்து வேலைக்கு வருவதும் நிறுத்திவிட்டாள். இதை கேள்விப்பட்ட அவளது கணவன் வீடு முழுக்கத் தேடி பார்க்கிறான், கிடைக்காததால், தன் மனைவி நிரபராதி என்று சொல்லுகிறான், இந்நிலையில் வேறு வழி என்னவென்று மாந்த்ரீகனிடம் கேட்கிறார் என் தாத்தா, அவன் ஒரு முழு சேனைக் கிழங்கை கொண்டு வரும்படி சொல்கிறான், சேனைகிழங்கில் நடுவில் சிறிய குழிபோல் கிழங்கை வெட்டி எடுத்துவிட்டு அந்த குழியில் ஏதோ வைத்து மறுபடியும் கிழங்கை மூடி மண்ணில் புதைத்து வைக்கிறான்.

சேனைகிழங்கு நிலத்தினுள் அழுக ஆரம்பிக்கும் போது திருடியவரின் உடலும் கொஞ்சம் கொஞ்சமாக அழுக ஆரம்பிக்கும் அப்போது தான் திடுடியதால் தனக்கு செய்வினை செய்யபட்டிருப்பதை உணர்ந்து எடுத்த பொருளை சம்பந்தப்பட்டவர் திரும்ப கொடுப்பார் என்று மாந்த்ரீகன் சொல்கிறான். அதே போல திருடிய பெண்ணின் கை கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழுக ஆரம்பிக்கிறது, வைத்தியரிடம் செல்கிறாள் அவளது கை கால்களை பார்த்த வைத்தியர் இதை மருந்தால் குணபடுத்த இயலாது என்றும் மாந்த்ரீகம் செய்யபட்டிருக்கிறது என்று சொல்லிவிடுகிறார். இதற்கிடையில் திருடிய பெண் அட்டியலை இருந்த இடத்திலிருந்து எடுத்து வேறு இடத்திற்கு மாற்றி வைக்கிறாள்.

மறுபடியும் மையிட்டு பார்க்கிறார்கள் வைர அட்டியலை இடம் மாற்றி வைத்திருப்பது தெரிகிறது, தனக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை உணர்ந்து அட்டியலை எடுத்து வந்து தானே திரும்பவும் கொடுத்து விடுவார், அப்படி அவர் திரும்ப கொடுக்கவில்லை என்றால் சேனை கிழங்கு முழுவதும் அழுகி அழிந்து விடும் போது அவரும் அதைப்போலவே அழுகி இறந்து விடுவார் என்று சொல்கிறார். அப்போது அந்த பெண்ணின் உடல் நிலை மிக மோசமாகி வந்தது, அட்டியலை திரும்ப கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தான் வந்துவிட்டோம் என்பது அவளுக்கு புரிந்துவிட்டது.

வேறு வழியின்றி அட்டியலை எடுத்துவந்து என் தாத்தாவின் முன்னிலையில் பாட்டியிடம் கொடுத்தார், அட்டியலை திரும்ப கொடுத்தப் பின்னர் சேனை கிழங்கை நிலத்திலிருந்து தோண்டி எடுத்த மாந்ரீகன் அதனுள் வைத்திருந்தவற்றை வெளியே எடுத்து விட்டார். அப்போது வைர அட்டியலை திருடிய பெண்ணிற்கு உடலிலிருந்த குணமாக்க முடியாத நோய் போன்றிருந்த பிரச்சினையும் நீங்கத்தொடங்கியது. அந்த பெண்ணும் அவர் குடும்பத்துடன் அந்த ஊரிலிருந்து வெளியேறி வேற்று ஊருக்கு குடி பெயர்ந்து சென்று விட்டார்.


[அந்த காலத்தில் செய்வினை மாந்த்ரீகமெல்லாம் முக்கிய காரண காரியங்களுக்கே உபயோக படுத்தப்பட்டது, அதை செய்பவர்களும் அதை நன்கு படித்து முதிர்ச்சியடைந்த பிறகே செய்தார்கள் அதனால் போலியாக அல்லது வயிற்று பிழைப்பிற்கு பொய் சொல்லி பணத்தை சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக செயல்படும் இந்த காலத்து மாந்த்ரீகர்களை போல அந்த காலத்தவர்கள் இருந்ததில்லை. வைத்தியர்களும் எது நோய் என்றும் எது மாந்த்ரீகம் அல்லது செய்வினையால் ஏற்பட்டது என்கின்ற வித்தியாசத்தை அறியக் கூடிய அளவிற்கு தேர்ச்சி பெற்றிருந்ததுடன், பணத்திற்காக ஏதேனும் ஒரு மருந்தை நோயாளிக்கு கொடுப்பது என்கின்ற இந்த காலத்து அயோக்கியத்தனம் அந்த காலத்தில் கிடையாது என்பதும் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது].

சனி, 30 ஜனவரி, 2010

அனுபவம் புதுமை -10

அடுத்தநாள் இரவு இந்தியாவிற்கு போவதற்கு விமான பயணசீட்டு என் கைக்கு வந்து சேர்ந்தது, அன்று மாலை என் எசமானி வங்கியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் அவரது காரை எடுத்துகொண்டு வெளியே போனவர் நான் அந்த வீட்டிலிருந்து கிளம்பும்வரை திரும்பவே இல்லை, அவரது கணவரும் வீட்டில் இல்லை, பிலிப்பைன் பெண்ணிடமும் இலங்கைப்பெண்ணிடமும் சொல்லிவிட்டு ஓட்டுனர் பழனியுடன் இரவு பத்துமணிக்கு வீட்டைவிட்டு எனது பெட்டி பொருட்களுடன் கிளம்பினேன்.

விமான நிலையம் நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது வழியில் காரை நிறுத்தி பழனி சாப்பிடுவதற்கு ஏதோ வாங்கி வந்தார், விமானத்தில் கொடுப்பார்கள் வேண்டாம் என்று சொல்லியும் சாப்பிடும்படி வற்ப்புருத்தினார், பிடித்தும் பிடிக்காமலும் சிறிது சாப்பிட்டுவிட்டு பழனிக்கு நன்றி சொன்னேன். சென்னைக்கு விடுமுறையில் வரும்போது என்னை வந்து சந்திப்பதாக சொல்லி விமான நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றார்.

விமான நிலையத்தினுள்ளே பயணிகள் உட்கார்ந்திருக்கும் நாற்காலிகளில் அதிக கூட்டம் இல்லை, வயதான முதியவரின் வீட்டில் பணிப்பெண்ணாக பார்த்த பெண் அங்கு உட்கார்ந்திருந்தார் அவரது முகம் முழுவதும் பலத்த காயங்கள், கைஎலும்பு முறிந்தவர் போல கையில் கட்டு போட்டு கழுத்துடன் இணைக்கபட்டிருந்தது. அவரின் அருகே என்னை டாக்ஸியில் ஏற்றிவிட்டு பணம் கொடுத்தவரும் நின்றிருந்தார். அவர்கள் இருவருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை, சில நிமிடங்களே
என்னை பார்த்திருந்தது ஒரு காரணம், நான் புடவை அணிந்திருந்தது இன்னொரு காரணம் அவர்கள் என்னை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை என்பது மற்றுமொரு காரணம்.

அவர்கள் அருகே சென்று என்னை யாரென்று சொன்னவுடன் நின்றிருந்த ஆள் புரிந்து கொண்டார், அந்த பெண்ணுக்கு காயங்கள் எதனால் ஏற்பட்டது என்று விசாரித்தேன், அவர்கள் பணிசெய்யும் வீட்டின்
எண்பது வயது மூதாட்டி தடித்த தடி மற்றும் ஆயுதங்களால் பணிப்பெண்களை பணி செய்ய சொல்லி தாக்குவது வழக்கமாம், அதனால் அந்த வீட்டில் பணிப்பெண்கள் யாரும் இருப்பதே கிடையாது என்று சொன்னதோடு, என்னையும் அங்கே வேலை செய்வதற்காக அழைத்ததாகவும் பின்னர் நான் இந்தியாவிற்கு திரும்புவதை அறிந்து அதை கைவிட்டதாகவும் சொன்னார்.

இரவு விமானத்திலேறி அடுத்தநாள் காலை சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கிய போது என் கணவர் என்னை கூட்டிச்செல்ல வந்திருந்தார், அவர் முகத்தில் காணப்பட்ட ரேகைகள் வேறு ஒரு கசப்பான அனுபவம் காத்திருப்பதை எனக்கு உணர்த்தியது.

முற்றும்

வெள்ளி, 29 ஜனவரி, 2010

அனுபவம் புதுமை - 9

மேலும் ஒரு மணிநேரம் அந்த பெட்ரோல் பங்கிலேயே நான் காத்திருந்தேன், பழனி வந்து என்னை காரில் கூட்டி செல்லும் போது சொன்னார், முதன் முதலில் உங்களது புகைப்படத்துடன் விசாவும் விமான பயணசீட்டையும் குறிப்பிட்ட நபரிடமிருந்து பெற்று வந்து எசமானின் கையில் கொடுத்த போது அதில் ஒரு நகல் எடுத்து என்னிடம் கொடுத்து நீங்கள் ஊரிலிருந்து வரும் போது உங்களை விமான நிலையத்திலிருந்து கூட்டிவரச் சொன்னார். அப்போது உங்கள் வீட்டு விலாசத்தை பார்த்த நான் சென்னையிலிருக்கும் என் தம்பிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்கள் விலாசத்தையும் உங்கள் வீட்டு தொலைபேசி எண்ணையும் கொடுத்து எனக்குத் தேவையான சில பொருட்களை வாங்கி உங்கள் வீட்டிற்கு சென்று நீங்கள் இங்கே வருவதற்கு முன்பு கொடுக்கச் சொல்லி இருந்தேன் உங்கள் வீட்டு விலாசத்தை கண்டு பிடித்து வாங்கிய சில பொருட்களை உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்த என் தம்பி வீட்டையும் வீடு இருந்த இடத்தையும் சுற்றியுள்ள வீடுகளையும் பார்த்துவிட்டு இந்த வீட்டிலிருந்து ஒரு பெண் வெளிநாட்டிலிருக்கும் வீட்டிற்கு வேலைகாரியாக செல்வதற்கு வாய்ப்பிருக்க முடியாது விலாசம் தவறி இருக்கலாம் என்று நினைத்து பழனியிடம் இதை தெரிவித்ததாக என்னிடம் பழனி சொன்னார். அப்போது நான் நடந்த தவறைப்பற்றி சொன்னேன்,

என்னை விமான நிலையத்திலிருந்து கூட்டி வருவதற்கு பழனி வராமல் வேறு ஒரு ஆள் வந்ததைப்பற்றி பழனியிடம் அப்போது சொன்னேன், பழனியின் விலாசமும் சென்னை, நானும் சென்னையில் வசிப்பதாலும், சில பொருட்களை வாங்கி அனுப்பும்படி தம்பியிடம் சொன்னதை பற்றி அங்கு வேலை செய்யும் இரு பெண்களிடம் வாய்தவறி தெரிவித்ததின் பலன், நான் வருகின்ற அந்த சமயத்தில் எசமானரும் எசமானியும் வேறு எங்கோ அனுப்பிவிட்டதாக என்னிடம் சொன்னார். இருவரும் வீடு வந்து சேர்ந்தோம்,

அங்கு தங்கியிருந்த ஒரு வாரத்தில் ஒரு நாள் கூட சாப்பாடு கிடைக்கவில்லை, மிகவும் களைத்திருந்தேன், வாழ்க்கையில் சாப்பாடு இல்லாமல் பள்ளி கூடம் சென்றதுண்டு, சமயலறையில் குடிநீரை சுத்தமாக்கும் இயந்திரத்திலிருந்து குப்பியில் பிடித்து வந்து என் அறையில் வைத்துகொள்வேன், இதை இரண்டு பெண்களும் பார்த்துக் கொண்டிருப்பார்கள், ஒருநாள் எனது அறையிலிருந்த குப்பி தண்ணீருடன் சில மாத்திரைகளை விழுங்கியதையும் இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர், எதற்காக மாத்திரைகளை சாப்பிடுகிறேன் என்று என்னிடம் விசாரித்தனர், நான் காரணத்தை சொன்னேன், அதை அந்த பெண்கள் இருவரும் கேட்டுக் கொண்டிருந்தனர், இந்த நிலை மிகவும் கேவலமானதாக எனக்கு தோன்றியது. என் குழந்தைகளின் நினைவு என்னை வேதனைப்படுத்தியது.

தங்கியிருந்த அறையின் குளியலறையின் மின்சாரம் நான் சென்ற இரு தினங்களில் துண்டிக்கபட்டுவிட்டதால் புதிய நீரில் குளித்தவுடன் லேசாக ஜலதோஷமும் காய்ச்சலும் வேறு சேர்ந்து கொண்டது. அன்றிரவு சுமார் மணி ஒன்பதிருக்கும் எசமானி நான் இருந்த அறைக்குள் திடீர் விஜயம் செய்தார். அங்கு தொங்கிகொண்டிருந்த எனது உடையை காண்பித்து அங்கிருந்து எடுக்க சொன்னார், நான் குப்பியில் வைத்திருந்த குடிநீரை பார்த்து இது எதற்கு என்று கேட்டார், நான் குடிப்பதற்கு என்று சொன்னேன், குடிப்பதற்கு தண்ணீர் தேவைப்படும்போது குளியலறை குழாயிலிருந்து பிடித்து குடிக்க சொன்னார்.

நான் பதிலேதும் பேசாமல் நின்றிருந்தேன், எனது அறையை பரிசோதித்த எசமானி நான் எதற்கு மாத்திரைகளை சாப்பிடுகிறேன் என்று என்னிடம் விசாரித்தாள், நான் மாத்திரை சாப்பிடுவது இவருக்கு பிலிப்பைன் பெண் சொல்லியிருப்பாள், இலங்கைப் பெண்ணுக்கு ஆங்கிலம் பேச வராது. காரணத்தை சொன்னேன், நாளை பழனியிடம் அந்த மாத்திரைகளை கொடுத்தனுப்பும்படி சொன்னாள் நான் எதற்கு என்று கேட்டேன், அவளுக்குத் தெரிந்த மருத்துவரிடம் கொடுத்து அந்த மாத்திரைகள் எதற்காக என்று விசாரிக்கபோவதாக சொன்னாள். எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை,

அடுத்தநாள் காலை தான் பம்பாயிலிருந்து சென்னை வந்தவுடன் விமான பயணச் சீட்டிற்கான ஏற்பாட்டை செய்துவிட்டதால் எனது விமான பயணசீட்டு அனுப்பபடுவதாக என் கணவர் தொலைபேசியில் தெரிவித்தார்.


தொடரும்....

வியாழன், 28 ஜனவரி, 2010

அனுபவம் புதுமை - 8

வேலைகாரப் பெண் என்னை பார்த்து லேசாக சிரித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். அந்த மூதாட்டி திரும்ப வரவே இல்லை, நான் அந்த வீட்டு வேலைக்கார பெண் வந்ததும் அவரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன், எந்தப்பக்கம் போக வேண்டும் என்று தெரியவில்லை, அங்கே கதவருகில் நின்றிருந்த ஆளை அங்கு காணோம், மறுபடியும் உள்ளே சென்றபோது அந்த வீட்டில் வேலை பார்க்கும் ஒரு ஆண் என் எதிரில் வந்தார் அவரிடம் எனக்கு தொலைபேசியில் பேச வேண்டும் என்று சொன்ன போது தொலைபேசி உள்ளே இருப்பதாகவும் எண் தெரிவித்தால் தானே போன் செய்து விவரம் சொல்லுவதாகவும் சொன்னார், நான் எசமானியின் வீட்டு எண்ணை சொல்லி கார் ஓட்டுனர் பழனியை அங்கு அனுப்புமாறு சொன்னேன் சிறிது நேரத்தில் அவர் திரும்பி வந்து ஓட்டுனர் பழனி எசமானியின் பெண்களை கூடிக்கொண்டு எங்கோ சென்றிருக்கிறார் என்றும் அவர் எப்போது திரும்புவார் என்று தெரியாது என்றும் பதில் சொல்லப்பட்டதாக என்னிடம் அந்த ஆள் வந்து சொன்னார்.

அந்த ஆளிடம் எனது எசமானியின் பெயரை சொல்லி அவர் வீட்டிற்கு நான் போகவேண்டும் என்று சொன்னபோது, அவர் கேட்டிற்கு வெளியே வந்தார், அந்த சமயத்தில் வீதியில் சென்றுகொண்டிருந்த ஆளில்லா டாக்ஸியை கூப்பிட்டு என்னை அதில் ஏற்றி விட்டு தனது பாக்கெட்டிலிருந்த பணத்தை எடுத்து டாக்ஸி ஓட்டுனரிடம் கொடுத்து என்னை இறக்கி விடவேண்டிய இடத்தை சொல்லிவிட்டு அவர் உள்ளே சென்று கதவை அடைத்துகொண்டார்.

டாக்ஸி அரைமணி நேரமாக ஓடியும் நான் போய் சேரும் இடம் வராததால் எனக்கு சந்தேகம் ஏற்ப்பட்டது,
பழனி என்னை கூட்டி வரும்போது ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை, ஆனால் டாக்ஸி அரைமணி நேரமாகியும் செல்லவேண்டிய இடம் வராததால் லேசாக பயத்தை ஏற்படுத்தியது, டாக்ஸி ஓட்டுனர் பெட்ரோல் போடுவதற்காக ஒரு பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தியவுடன், நான் டாக்ஸியை விட்டு இறங்கி பெட்ரோல் பங்கிற்கு உள்ளே சென்று அங்கு மேசையின் எதிரே உட்கார்ந்திருந்தவரிடம், எனக்கு அவசரமாக ஒரு தொலைபேசி அழைப்பு செய்யவேண்டும் என்று சொன்னவுடன் அவர் அருகிலிருந்த போனை காண்பித்து பேச சொன்னார்,

எசமானியின் வீட்டு தொலைபேசி எண்ணை அழுத்திய போது எசமானியின் கணவர் தொலைபேசியை எடுத்தார், அவரிடம் நான் வெளியே வந்த காரணத்தை சொல்லி தற்போது டாக்ஸி ஓட்டுனர் என்னை தவறான பாதையில் கொண்டு செல்வதை தெரிவித்தேன்,
நான் எங்கிருந்து அவருடன் பேசுகிறேன் என்று என்னை கேட்டார், நான் பெட்ரோல் பங்கில் டாக்ஸி ஓட்டுனர் பெட்ரோல் போடுவதற்கு இறங்கியதை பற்றி சொன்னேன், தொலைபேசியை அருகிலிருந்தவரிடம் கொடுக்கச் சொன்னார், அவரிடம் அந்த பெட்ரோல் பங்க் இருக்குமிடத்தை விசாரித்து விட்டு பழனியை அனுப்புவதாக சொல்லி என்னை அந்த பங்கின் அருகிலேயே நிற்க சொன்னார்.

தொடரும்......

புதன், 27 ஜனவரி, 2010

அனுபவம் புதுமை - 7

எசமானியின் பங்களாவை அடுத்திருக்கும் பெரிய பங்களா கட்டியது முதல் ஒருவரும் வந்தது இல்லை என்றும், அந்த பங்களாவின் பின்பகுதியை சுத்தப்படுத்தி வைத்திருப்பதாகவும் அங்கே நான் என்னுடமைகளுடன் தங்கி கொண்டால் அவர் எனக்குத் உணவு தருவார் என்றும், வேறு எங்காவது வேலைக்கு ஆள் தேவை என அவரது நாட்டை சேர்ந்த தோழிகள் மூலம் அறிந்தால் நான் அங்கே சென்று வேலை பார்க்கலாம் என்றும் இந்தியாவிற்கு திரும்பி போக வேண்டாம் என்றும் என்னிடம் சொன்னார் இலங்கைப்பெண், அந்தநாட்டில் எனக்கு எந்த வேலையும் செய்ய விருப்பம் கிடையாது என்று சொல்லிவிட்டு அவரிடம் மேற்கொண்டு ஏதும் பேசாமல் இருந்தேன்.

ஒவ்வொரு நாளை நகர்த்துவதற்க்குள் எனக்கு போதும் போதும் என்று இருந்தது, தொலைபேசியில் யாரோ என்னுடன் பேசுவதற்கு கூப்பிடுவதாக பிலிப்பைன் பெண் என்னிடம் சொன்னார், தொலைபேசியை எடுத்தபோது ஆணின் குரல், என்னுடன் மலையாளத்தில் பேசத்துவங்கினார், எனக்கு மலையாளம் தெரியாது என்று நான் ஆங்கிலத்தில் பதில் சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டு பிலிப்பைன் பெண்ணிடம் தொலைபேசியில் என்னை கூப்பிட்டது யார் என்று கேட்டேன், தன் சகோதரி வேலை பார்க்கும் வீட்டில் அவருடன் வேலை செய்பவர் என்று சொன்னார், நான் எதற்காக அவரிடம் பேச வேண்டும் என்று கோபமாக கேட்டேன், தான் வேலை செய்யும் வீட்டிற்கு புதிய பெண் வந்திருப்பதாக அவளது சகோதரியிடம் சொன்னாள் என்றும் அவள் தன்னுடன் வேலைபார்ப்பவரிடம் சொன்னாள், தென் இந்தியப் பெண் என்றவுடன் வந்திருப்பவர் மலையாளம் பேசுபவரா என்பதை தெரிந்துகொள்ள அந்த ஆள் தொலைபேசியில் அழைத்து என்னிடம் பேசவேண்டும் என்று கேட்டதாகவும் சொன்னாள் அந்த பிலிப்பைன் பெண். இது என்ன கூத்து.

மதியம் சாப்பிட வந்த ஓட்டுனர் பழனி எசமானி என்னை எங்கோ அழைத்து வரும்படி சொன்னார் என்று சொல்லி காரில் கூட்டி சென்றார், ஐந்து நிமிடத்திற்குப் பின் ஒரு பெரிய பங்களாவின் முன் காரை நிறுத்திவிட்டு இந்த வீட்டின் உள்ளே அவர் இருப்பதாகவும் என்னை கூட்டி வர சொன்ன இடம் அதுதான் என்று சொல்லி என்னை அந்த வீட்டின் கேட்டருகில் இறக்கி விட்டுவிட்டு அவர் காரிலே போய் விட்டார், அந்த வீட்டின் கதவருகே ஒரு ஆள் நின்றிருந்தார் அவரிடம் நான் ஆங்கிலத்தில் எனது எசமானியின் பெயரை சொன்னவுடன் அவர் கேட்டை திறந்து உள்ளே போகும்படி சொன்னார், உள்ளே சென்ற போது எழுபது வயதிற்கும் அதிகமான வயதுடைய அந்நாட்டு மூதாட்டி உட்கார்ந்திருந்தார், என் எசமானியை அங்கே காணவில்லை.

நான்
அவருக்கு வந்தனம் சொல்லிவிட்டு என் எசமானியின் பெயரை சொன்னேன், உடனே அவர் உனக்கு வீட்டு வேலை செய்வதற்கு பிடிக்கவில்லையா என்று கேட்டார், நான் சமையல் வேலை எனக்குத் தெரியாது என்று சொன்னேன், வேறு என்ன வேலை தெரியும் என்று கேட்டார், அப்போது அவரது வீட்டில் வேலை செய்யும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அங்கு வந்தனர், மூதாட்டிக்கு தொலைபேசியில் அழைப்பு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதும் அந்த மூதாட்டி எழுந்து வேறு அறைக்கு தொலைபேசியில் பேசுவதற்கு சென்றுவிட்டார்.

தொடரும்...