வியக்க வைக்கும் இயற்க்கை [என்னை] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியக்க வைக்கும் இயற்க்கை [என்னை] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 ஜூன், 2013

அதிமேதாவிகள்

உலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் "உயர்ந்த" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும் வெளிப்படையாகவே காண முடிகிறது. மனிதனின் சுயநலம் எந்த அளவிற்கு தலைவிரித்தாடுகிறது என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம். மண்ணில் கிடைக்கின்ற அத்தனை பொருளுக்கும் {பொன், நிலக்கரி, கனிமங்கள், டீசல், மரங்கள், கனிகள் தானியங்கள் இன்னும் நிறைய} உரிமையை தானே தங்களுக்கென்று எடுத்துக்கொண்டு அதற்க்கு விலை நிர்ணயம் செய்து அதில் கிடைக்கின்ற லாபத்தை தனக்கே சொந்தமாக்கி ஏகபோக வாழ்க்கை வாழும் நாடுகளையும் தனிமனிதர்களையும் சுமக்கின்ற பூமி எத்தனை காலத்திற்கு  விட்டு கொடுத்து பொருமையாக காத்து கிடக்கும்?

இயற்க்கை கொடுக்கின்ற அடிநீர், மழை, காற்று, அனைத்தும் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று உரிமையாக்கி  மனிதர்கள் செய்து கொண்டிருக்கும் அநியாயம் அக்கிரமங்களின் உச்சத்தின் மீது நின்று நடமாடி கொண்டிருக்கும் மனிதர்களை எத்தனை காலம் பூமி தன் மீது சுமந்து கொண்டு நிற்கும்? உலகத்தில் விளைகின்ற அனைத்தையும் அனுபவிக்க மற்றும் உண்பதற்கு, குடிப்பதற்கு, சுதந்திரமாக வாழ்வதற்கு, உறங்குவதற்கு நிபந்தனை விதிக்க, தனது உடமையாக்கிகொள்ள மனிதனுக்கு உரிமை யார் கொடுத்தது. உலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதனுக்காக மட்டும் உற்பத்தியாகவில்லை என்பதை 20ம் நூற்றாண்டில் வாழும் மனிதர்கள் என்று கூறப்படும் சுயநல ஜந்துக்கள் உணரப்போவதில்லை என்பதை திட்டவட்டமாக அறிந்து கொண்ட இயற்க்கை இனி பொறுமை காக்கப்போவதில்லை.

சமுத்திரமும் அதில் கிடைக்கும் அனைத்தையும் தங்களுக்கென்று சுரண்டிக்கொண்டு பற்றாக்குறைக்கு  எல்லை  போராட்டம் செய்து ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டிருக்கும் சுயநலம் மிகுந்த மனித ஜென்மங்களுக்கு இறக்கம் காட்டியது போதும் என்று சலித்து விட்டது. இனி கடல் அமைதி காக்கப்போவதில்லை.

நீர், காற்று நெருப்பு மூன்று இயற்கையையும் ஒரு காலத்தில் மனிதன் கடவுளாக நினைத்து வணங்கி வந்தது அவை கோபமடைந்தால் மனிதர்களை துவம்சம் செய்யும் மாபெரும் சக்திகள் என்பதை கண்டும் கேட்டும் அறிந்திருந்த காரணமும் ஒன்று. ஆனால் தற்காலத்தில் வாழும் மனிதர்களுக்கு இவற்றைப்பற்றிய அக்கறை இல்லை, ஏனெனில் அறிவியல் வளர்ச்சி மூலம் பலவித கருவிகளை கண்டுபிடித்துவிட்டோம் என்று பேருஉவகை கொண்டு இருமாந்திருக்கின்றனர். கருவிகளைக்கொண்டு இயற்க்கை சீற்றங்களை ஓரளவிற்கு மட்டும் முன்னறிய இயலுமே தவிர அவற்றிலிருந்து தப்பிக்க இயலுமா என்பதையும் நினைவில் கொள்வதன் அவசியத்தை மறந்து விட்டனர். 

அவர்களுக்கு நினைவுபடுத்தவே சுனாமி, பூமியதிர்ச்சி, நிலச்சரிவு, பெருவெள்ளம், காட்டுத்தீ எல்லாம் ஆங்காங்கே அடிக்கடி ஏற்ப்படுகிறது. ஆனால் "அறிவியலை தெய்வமாக கொண்டிருக்கும் அறிவுஜீவிகள்" என்ன சொல்வார்கள் என்றால் இவைகள் எல்லாம் இயற்கையாக உருவாகின்றவைகள்தான், இதற்கும் மனித சுயநலத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பர். என்றைக்கு மனிதன் தன்னை "அதிமேதாவிகள்" என்று நம்ப ஆரம்பித்தார்களோ அன்றைக்கு துவங்கியது "சுயநலம்". அதன் முடிவு அழிவு ஒன்றே.

இயற்கையோடு மனிதனால் போராடி வெற்றிகொள்ள இயலுமா? பாவத்தை போக்கிக்கொள்ள நதியில் நீராடுவர், தீயில் யாகம் வளர்ப்பார், மண்மீது பூஜைகள் நடத்துவார். பாவம் என்கின்ற மனித தவறுகளை களைவதற்கு மண், நீர், தீ தேவை. காற்று இவற்றின் சூட்சும தேவன். மனிதனைவிட மிகப்பெரியது இயற்க்கை என்பதை அறிந்திருந்தும் "ஆசை" என்னும் வினோத நோயினால் வெந்துபோகிறது அவனது சிலகால வாழ்க்கை. சிலர் நூறாண்டுகளுக்கும் அதிகமாக வாழ்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் அளவற்ற உடமைகளை சேமிப்பதை காணும் இயற்க்கை அவனை கண்டு தன்னுள் பரிதாபம்கொள்கிறது. எத்தனை தலைமுறைகளுக்கு உடமைகளை சேமித்தாலும் அத்தனை தலைமுறையினரும் அவற்றை அனுபவித்தனரா என்றறிய சேமித்தவர் உயிருடன் திரும்பி வந்து காணப்போவதில்லை.

சேமித்து வைக்கும் உடமைகளால் தனது தலைமுறையினருக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்ப்பட்டது என்பதும் அவரறிய போவதில்லை. ஒருவன் தான் நட்டு சென்ற மரங்கள் வாழுகின்ற நீடித்த ஆயுசு நாட்களை கூட அவனால் வாழய இயலவில்லை. மனிதனுக்கு மனிதனாக பிறந்ததின் சிறப்பு என்ன (தானறிதல்) அதன் நோக்கம் அறிய முயலும் முயற்சி வென்றதா என்றால் இல்லை. அல்லது வாழுகின்ற நாளுக்கு போதுமான உணவு உடை இருப்பிடம் மட்டும் போதுமென்று வாழதல் தவறென்ற எண்ணம் எப்படி தோன்றுகிறது. உடமைகளை அதிகரிக்க விரும்பினால் அதற்கு களவும், சதிசெயல்களும் முதலீடு இல்லாமல் நேர்மையாக சத்தியமாக கோடிகளை உடைமையாக்கும் வழி உண்டா என்று ஆராய்ந்து எது சரி எது தவறு என்பதை உணர்ந்த பின்னரும் "ஆசை" விடாமல் ஆட்கொள்வது எதனால்?.

இவைகளை பூமியில் வாழுகின்ற வேறு எந்த உயிரினமும் செய்வதில்லையே, இயற்க்கைக்கு முரணாக செயல்படுபவன் 20ஆம் நூற்றாண்டில், அறிவியல் முன்னேற்றத்தில் வாழும் மனிதர்கள் என்று கூறிக்கொள்ளும் இனம் மட்டுமே செய்வது எதனால்? அறியாமையினாலா? கற்றறிந்த பேரறிவு கொண்ட மனிதர்கள் நிறைந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகின்ற இன்றைய உலகில் "அறியாமை" என்பது இன்னும் முற்றிலும் களையப்படவில்லையா? உடமைகளை அளவிற்கு அதிகமாக சேமிப்பவர்கள் அனைவரும் கற்றறியாத பேதைகளா? அல்லது அளவற்ற ஆசைகளுக்கு அடிமையானவர்களா? அவரவர் நெஞ்சை தொட்டு சோதிக்க தோன்றுவது இல்லையென்றால், அவனை எப்படி "கற்றறிந்த மனிதன்" என்று கூறிக்கொள்ள இயலும்?

இல்லை என்பது பதில் என்றால் எப்போது மனிதர்கள் இயற்கையுடன் ஒன்றி வாழப்போகின்றனர்? காடுகளை அழித்து அடுக்குமாடிகளை கட்டிக்கொண்டு, விலங்குகள் வாழும் காடுகளுக்குள் வாகனங்களை ஓட்டிச்சென்று, மரங்களை வெட்டி சாய்க்கும் ஒலி உயர்ந்த  உபகரணங்களுடன் நுழையும் மனிதர்களை "தாங்கள் வாழுகின்ற பகுதிகளுக்குள் நுழைந்து தங்களது வாழ்வை சீர்குலைக்காதீர்கள்" என்று விலங்குகள் யாரிடம் சென்று முறையிடும்? மனிதர்கள் வாழும் பகுதிக்குள் விலங்குகள் நுழைந்துவிட்டால் அவற்றை தாக்கி கொல்லும் மனித கூட்டத்தை யார் தட்டி கேட்பது? அவர்களை  யார் தண்டிக்கப்போவது? பூமி என்பது மனிதனுக்கு மட்டுமே சொந்தமானது என்ற உரிமையை இவர்களுக்கு கொடுத்தது யார்?

புதன், 14 டிசம்பர், 2011

இந்திய காதல்

காதல் என்ற வார்த்தைக்கு என்றுமே தனி இடம் உண்டு. மனித வாழ்க்கையில் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களையும் இந்த மந்திரச்சொல் யுக யுகமாக ஆட்கொண்டிருக்கிறது, இதன் புனிதம் என்பதை மனிதன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டாலும் காதலுக்கென்று, அன்புக்கென்று சிறப்பான இடம் இயற்க்கை கொடுத்த வரம். காதல் என்கின்ற அன்பு எங்கே எப்போது சீர்குலைகிறதோ அங்கே வன்மம் தழைத்தோங்குகிறது. காதல் என்கின்ற அன்பு இடத்திற்கிடம் நபருக்கு நபர் உறவுக்கு உறவு வெவ்வேறு நிலைகளில் உயிரினங்களை ஆண்டுக்கொண்டிருந்தாலும், சில உறவுகளுடன் மட்டும் இதன் ஆழம் அகலம் அதிகரித்து காணப்படுவது இயற்கையின் மற்றொரு ஆச்சரியம்.

ஒரு பெண்ணை பல ஆண்கள் காதலிப்பதாக இருந்தாலும், அத்தனை ஆண்களுமே அவளை தன் உயிரினும் மேலாக அன்பு கூர்வதை அப்பெண் அறிந்திருந்தாலும் அவர்களில் யாரேனும் ஒருவரை அல்லது முற்றிலும் புதிய நபரை அப்பெண்ணின் மனம் நாடுவது இயற்கையின் மற்றொரு விந்தை. ஒரு ஆண் தான் உயிரினும் மேலாக அன்பு கூர்ந்த பெண்ணைத் தவிர வேறு ஒரு பெண்ணை நினைத்து பார்க்ககூட இயலாது என்று கருதி இருக்கின்ற நிலையில் முற்றிலும் தனது எதிர்பார்ப்புகளுக்கு மாறான வேறு பெண்ணுடன் இணைத்துக்கொண்டு வாழ்நாளை கழிக்கின்றபோது தன்னால் எப்படி தன் விருப்பத்திற்கு எதிர்மாறான குணமும் தோற்றமும் கொண்ட பெண்ணுடன் வாழ முடிந்தது என்று தன்னைத்தானே அதிசயப்படுகின்ற விதத்தில் வாழுகின்ற இயற்கையின் விளையாட்டும் அதிசயம்தான்.

இப்படி பலவிதமான அன்பு அல்லது காதலை உள்ளடக்கிய இயற்கையின் விந்தைகளுள் மற்றுமொரு சுவாரசியமான செயல்பாடும் நாம் காண்பதுண்டு. ஒரு பெண் தான் காதலித்த அல்லது நேசித்த பலரில் ஒருவரை மட்டும் நேசித்தது உண்மையாக இருந்தபோது காலம் அவர்களை ஒன்றாக வாழவிடாமல் தவிர்த்து, பிரிந்து விட்ட காதலர்கள் வாழ்க்கையில் வெவ்வேறு திசைகளில் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர, பல ஆண்டுகள் கடந்த பின்னர் தன் மனதில் பழைய காதலின் சுவடே காணாமல் போனதென்று நினைத்து தன்னைத்தானே அதிசயித்துக் கொண்டிருக்கும்போது எதேச்சையாக இருவரும் சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்ப்பட்டு அவ்வாறு சந்தித்தபோது இருவரும் பேச மறந்து செயலிழந்து விடுவதும் இயற்கையே, ஏனெனில் அதுவரையில் தங்களது வாழ்நாளில் இனி ஒருமுறையேனும் இருவரும் மீண்டும் சந்திக்கின்ற வாய்ப்பே இல்லை என்று நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கின்ற நிலையில் அந்த சந்திப்பு சத்திய சோதனையாக அமைந்துவிடுவதும் உண்டு. அதுவரையில் அவ்வாறு ஒருமுறை சந்திக்க நேர்ந்தால் எவ்வாறெல்லாம் கேள்விக்கணைகளை தொடுக்க வேண்டும் என்று இருவரும் மனதில் பல ஆண்டுகளாக தேக்கி வைத்திருந்தார்களோ அத்தனை கேள்விகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் மாயம் இயற்கையின் மற்றொரு அதிசயம்.

"வாழ்ந்தால் உன்னுடன்தான் என்று நாம் இருந்தோமே விதி நம்மை பிரித்து விட்டது அதனால் வா நாமிருவரும் எஞ்சியுள்ள வாழ்நாளிலாவது ஒன்றாக வாழ்ந்துவிடுவோம்" என்று காதலன் தனது காதலிக்கு இறுதி வாய்ப்பை கொடுக்க முன்வரும்போது அப்பெண் அந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று ஏற்றுக்கொள்வாளா, தன்னைத்தானே பல கேள்விகளை கேட்டுக்கொள்வாள், அதுவரையில் தன்னுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் தன் கணவனின் நிலையை எண்ணி பார்ப்பாள், தன் கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சியாக தங்களுக்கு பிறந்திருக்கின்ற குழந்தைகளின் நிலையை எண்ணி பார்ப்பாள், தான் தனது பழைய காதலனை திடீரென்று சந்தித்ததுபோல தன் கணவன் அவனது காதலியை சந்தித்து இதுபோன்றதொரு விபரீத முடிவெடுத்து தன்னை குழந்தைகளுடன் விட்டுவிட்டு பிரிந்து சென்றால் தனது நிலையைப்பற்றி யோசித்து பார்ப்பாள், காதலா திருமணவாழ்க்கையா என்ற குழப்பம் ஏற்ப்படும்,

இளம் வயதில் மனதில் தோன்றிய காதலும் உறுதியுடன் இருவரும் எடுத்துக்கொண்ட முடிவுகளும் அப்போதைய சூழலுக்கு சரியானதாக தோன்றியது உண்மை, அக்காதல் திருமணத்தில் முடியாமல் மாறாத துயரை ஏற்ப்படுத்தியது என்பதற்காக காலம் கடந்த பின்னர் அக்காதலை தொடரும் வாய்ப்பு கிடைத்ததை நியாயப்படுத்த நினைப்பது சரியானதாக இருக்க முடியுமா. திருமண வாழ்க்கையில் என்னதான் குறை நிறைகள் இருந்தாலும் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தாகிவிட, தன்னை நம்பியிருக்கும் குழந்தைகள் மற்றொருபுறம். இந்நிலையில் மனதைவிட அறிவு மேலோங்கி செயல்பட்டு கேள்விக்கணைகளை அள்ளிவீசும், இங்கே காதல் தோற்றுப்போகும், உறவுகளின் மீதிருக்கும் அக்கறை மேலோங்கிவிடும், சுயநலம் காணாமல் போகும், "வாழ்ந்தால் தன் காதலனோடு வாழ்ந்துவிட வேண்டும்" என்கின்ற வீரியம் பொசுங்கிவிடும். பிடித்தோ பிடிக்காமலோ இதுவரையில் வாழ்ந்துவிட்ட வாழ்க்கை பழகிவிடும், நோக்கம் தனது காதலின் மீது இல்லாமல் தன் மூலம் இவ்வுலகிற்கு கொண்டுவரப்பட்ட உயிர்களின் நல்வாழ்க்கையின் மீது நிலைத்துவிடும் இதுவும் இயற்கையின் அதிசயம்.


..................oooooooo................

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

வாழையடி வாழையாக..



சுப காரியங்களுக்கு அடையாளமாக வாழை மரத்தை வாசலில் கட்டுவதும் தோரணங்களில் தென்னங்குருத்துகளை கட்டுவதும் மாவிலை தோரணங்கள் கட்டுவதும் ஏதோ சம்பிரதாயத்திற்கு மட்டும் அல்ல, வாழை மரம் எப்போதுமே தனது கன்றுகளை தனது வேரிலேயே விளைவிக்கிறது, தென்னை காலங்களை கடந்து ஓங்கி வளர்ந்து எல்லோரையும் குளிர்விக்கும் இளநீரையும் தேங்காயையும் தன் தலைமீது சுமந்து தருகிறது, மாவிலை என்பது முக்கனிகளில் ராஜக்கனியாக திகழ்கிறது, இவைகளைப்போல மணமக்கள் சீரும் சிறப்புமாக வாழவேண்டும் என்பதை எடுத்துச் சொல்வதும் இதன் உள்நோக்கம், இதுமட்டுமில்லாமல் இன்னும் பல காரணங்கள், அர்த்தங்கள் இவற்றிற்கு சொல்லிக் கொண்டே போகலாம்.

வாழைமரம் தனது கன்றுகளை தனது வேரிலேயே உற்பத்திசெய்து பின்னர் மரமாக வளர்ந்து முக்கனிகளில் ஒன்றாகிய வாழைக்குலையை நமக்கு அள்ளிக் கொடுத்து விட்டு பின்னர் அதன் ஒவ்வொரு உறுப்பும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பயனுற வாழ்ந்து மறைகிறது. அறிய பண்புகளை உள்ளடக்கிய இயற்க்கை நமக்கு செய்வதெல்லாம் நன்மையன்றி தீமை ஏதுமில்லை. மனிதர்களும் தாங்கள் வாழுகின்ற காலத்தில் மா போல இனிய கனிகளைக்கொடுத்து வாழைப்போல தன்னையே மற்றவர்களுக்கு அள்ளி வழங்கி, தென்னை போல ஓங்கி, உயர்ந்து நின்று உபகாரம் செய்வதே இவை நமக்குச் சொல்லும் பாடம்.



தனி மரமாக நின்றாலும் வேம்பூவும் அரச மரமும் கொடிய கோடையில் குளிர் நிழலை கொடுப்பதோடு பல மருத்துவக் குணங்களையும் உடையது என்பதை இக்காலத்தவர்கள் எத்தனை பேர் அறிந்துள்ளனர். இவ்வாறு இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் நன்மைகளை எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி செய்து வருவதோடு, காற்றில் கலந்திருக்கும் நச்சுக்காற்றை, மற்றும் கார்பன் டை ஆக்சைடை அகற்றி தூய ஆக்சிஜனை நமக்கு சுவாசிக்க கொடுப்பதற்கு ஒவ்வொரு நொடிபொழுதும் அயராமல் தங்கள் பணி செய்து வருகிறது.

மனிதர்கள் வாழையைப்போல் கூடி வாழ்ந்து நன்மைகளை ஓய்வின்றி செய்யவேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டாக வாழ்ந்து வரும் நமது கலைஞரும் அவரது தோளுக்கும் உயர்ந்த பிள்ளைச் செல்வங்களும், பேரன் பேத்திகளும் என்றால் அது மிகையாகுமா? ஆலமரம் போல் வளர்ந்திருக்கும் கலைஞரின் குடும்பத்தை பார்த்து, 'குடும்ப ஆட்சி' என்று சொல்லால் மட்டுமல்ல வேலிக்காத்தான் முள் குத்துவது போல உபயோகமற்ற முட்செடிகள் நச்சுக்காற்றை வெளியிடுவதை பார்க்க கேலிக் கூத்தாகவே தோன்றுகிறது. வேலிக்காத்தான் முட்செடி வளரும் நிலம் பாழ், வேலிக்காத்தானின் அருகிலே வேறு மரங்களோ செடிகொடிகளோ வளருவதில்லை, அதன் நச்சுத்தன்மை விலங்குகள் பறவைகள் முதலியவற்றிற்கு உபயோகமற்றதால் பறவைகள் அதில் கூடு கட்டுவது கிடையாது. அதன் நச்சுக்காற்றை சுவாசிப்பதனால் ஏற்ப்படுகின்ற தீமைகளை எவரேனும் அறிவாரா?


வாழ்ந்திடின் வாழைப்போல தென்னைபபோல, ஆலமரம் போல, கலைஞரைப்போல குடும்பத்துடன் வாழ்ந்து மற்றவர்க்கு நன்மையன்றி யாருக்கும் தீமை செய்யாமல் வாழ்தலே சிறப்பு என்பதை வாழையும் தென்னையும் ஆலமரமும் நமக்கு உணர்த்துவது போல கலைஞரின் குடும்பமும் வாழ்வாங்கு வாழ்வதை கண்டு பொறுக்க இயலாமல் வேலிக்காத்தான் முட்செடிகள் விஷ வாயுவை நச்சுக்காற்றை பூமியிலும் மக்களின் சுவாசத்திலும் கலக்கசெய்வதை மக்களால் புரிந்து தெளிந்துகொள்ள இயலாதா. வேலிகாத்தான் வேலிக்குகூட உபயோகமில்லை, ஏனெனில் அது வளரும் இடமெல்லாம் விஷத்தன்மை நச்சுத்தன்மையையே காற்றில் பரப்பும் என்பதை நாம் புரிந்துகொள்வது எப்போது, வெட்டித் தீயிலிட்டு கொன்றால் மட்டுமே அதன் விஷம் பரவாது என்பதை எத்துணை பேர் அறிவர். அதன் புகை நுரைஈரல்களுக்குச் சென்றால் புற்று நோய்க்கு உரம். நச்சு எது நன்மை எது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களை நாம் கைவிட்டால் அதன் துன்பங்களை மட்டுமே அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் பின்னர் யாராலும் காப்பாற்ற இயலாமல் காரியங்கள் சோகத்திலும் வேதனைகளிலும் தான் நடந்தேறும்.

வாழையடி வாழையாக கலைஞரின் குடும்பம் தமிழக மக்களுக்கு தொண்டாற்றப்போகிறது அந்த இன்பக்காற்றை நாம் சுவாசித்து சுகம் பெறப்போவதும் திண்ணம்.


><><><><><><><><><><

செவ்வாய், 9 நவம்பர், 2010

அடடா இது என்ன விந்தை .....!!

விவாதம் என்பது மனிதனுள் தினம் நடக்கும் போராட்டங்கள், அவற்றில் எது எதை மேற்கொள்ளுகிறது என்பதில் முடிவு கிடைக்கிறது அதன்படி செயல்படுகிறோம். மனமும் அறிவும் அதிகமாக மனிதனுக்குள் போராட்டம் செய்பவை என்பதை பலரும் அறிவர், ஆனால் நம் இதயமும் - மூளையும், நரம்புகளும் - மூளையும், எலும்புகளுடன் சதையும், ரத்த நாளங்களுடன் ரத்தமும், ரத்தத்தில் உள்ள வெள்ளை மற்றும் சிகப்பணுக்களும், உணவுடன் குடல்களும், உணவின்றி தவிக்கும்போது என்சைமுடன் குடல்களும் குடலினுள் உள்ள சிறு உறிஞ்சிகளும் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தினம் தினம் நிமிடம்தோறும் போராடி வெற்றிக் கொள்கின்றன.

இவற்றில் ஏதேனும் ஒன்று வலுவிழந்து அதன் போராட்டம் குறையும் போது நோய்வாய்படுவதுடன், வலுவிழந்து செயலிழந்தும் விடுகின்றது. தூக்கம் சமயத்திற்கு வராமல் கண்களும் அதன் சம்பந்தப்பட்ட உறுப்புகளும் நாளடைவில் அதன் செயலில் குறைபட்டு அதனால் நோய்கள் அந்த உறுப்புகளுக்கு ஏற்படுகிறது, தினம் தினம் டென்ஷன் எனப்படும் வேலைப்பழு குடும்பத்தில் அல்லது மற்ற பிரச்சினைகளால் ஏற்படுகின்ற அழுத்தம் ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயத்தின் செயல்பாட்டில் மிகவும் தீவிரமான குறைகளை ஏற்ப்படுத்தி செயலிழக்கச் செய்வதை நாம் அறிவோம், இதையே ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய்க்கு அடிப்படை காரணம் என்று மருத்துவம் கூறுகிறது. மனிதன் பிறந்தது முதல் அவனது உறுப்புகள் செயல்பட துவங்கிய காலம் முதல் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு தேவைக்காக போராடத்தான் வேண்டியுள்ளது.

இதில் சிறுவர் பெரியவர் என்ற பாகுபாடுகள் இல்லையென்றாலும் சில பிரச்சினைகள் குழந்தைப்பருவத்திலேயே உடலில் தோன்றிவிடுவதும் மிகவும் வருத்தமான விளைவே. இத்தகைய குறைகள் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படாமல் தடுக்கவே குழந்தை கர்பத்தில் இருக்கின்ற ஒவ்வொரு மாதமும் மருத்துவரிடம் சென்று தாயின் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த காலத்து இளம் பெண்கள் இவ்வித பொறுப்புகளை ஏற்க்க விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து திருமண பந்தத்திற்குள் நுழைவதற்கு தயக்கம் காட்டுவதால், வேறு பிரச்சினைகளை தானே தேடிக்கொள்ளுகின்றனர்.

ஒரு பெண் பூப்பெய்திய பின்னர் அவளது உடல் குழந்தையை உற்பத்தி செய்வதற்கு தயாராக்கப்படுகிறது, ஒரு குழந்தையாவது குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்றுக்கொள்ளாமல் உடலை பேணி காக்கும் பெண்டிருக்கு மார்பக புற்று நோய், கர்பபை புற்று நோய், போன்ற நோய்கள் உருவாக காரணமாகிறது என்று மருத்துவ செய்திகள் தெரிவிக்கின்றது. ஆணிற்கு இதை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது கிடையாது ஏனென்றால் குறிப்பிட்ட பருவம் வந்த பின்னர் உடலில் உண்டாக்கப்படும் விந்துக்கள் தானாகவே குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேற்றிவிடுகின்ற உடலமைப்பை ஆடவர்க்கு இயற்க்கை வரபிரசாதமாக வழங்கியுள்ளதே இதற்க்கு காரணம் என்கிறது மருத்துவம். பெண்கள் குறிப்பிட்ட வயதில் திருமணம் செய்யாமல் இருப்பதால் மனநிலை பாதிப்புகள் ஏற்ப்படும் வாய்புகள் உண்டென்கிறது மருத்துவம்.

போராட்டம் என்பது எல்லா உறுப்புகளிலும் ஏற்பட்டாலும் அடிக்கடி நம்மை குழப்பி நமக்கு அதன் ஆதிக்கத்தை வெளிகாட்டுவது மூளையும் அதன் நரம்புகளும்தான். இங்கிருந்தே மனம் என்கின்ற பேரரசன் தனது செங்கோலை நீட்டி தனது ஆட்சியை நிலைநாட்டுகிறான். இதனால் பிரச்சினை மற்ற உறுப்புகளுக்கு ஏற்படுவதை விட, மனிதனின் சமூகத்தோற்றத்தை வெளிப்படையாக காட்டவும் முடிகிறது. தனக்குத்தானே எதிரியாக இருக்கின்ற இரு வேறு நிலைகள் மனித உடலில் மனமும் சிந்தனைகளும் அதன் தொடர்ச்சியான செய்கைகளும். மனம் ஒன்றும் அறிவு ஒன்றும் சொல்லுவது பின்னர் வேறு செயல்களை செய்வதும் இவற்றின் காரணமே. இந்த இரு உறுப்புகள் மனித உடலில் பெரும் போராட்டத்தை நடத்தி வருவது மிகவும் வியப்பான ஒன்று. "நான்" என்கின்ற ஒற்றை வார்த்தைக்கு இரு வேறு பிரதிபலிப்புகளை உள்ளடக்கியது இந்த [மூளையும்] மனமும் செயல்களும், இது இயற்கையின் அபூர்வ அமைப்பென்றே சொல்லலாம். தோற்ற அமைப்பிற்கும் அல்லது உருவத்திற்கும் செய்கைக்கும் எதிர் மாறான காரியங்களை நம்முடலில் நடத்துவதும் இவைதான். என்ன விந்தை.



++++++++++++++++

வெள்ளி, 16 ஜூலை, 2010

என்னுள் மீண்டும் பிறக்கும் அவள் !!!!

மனித மனதிற்கு இல்லாத அல்லது கிடைக்காத எதையோ ஒன்றை நினைத்து ஏங்குவது வழக்கமுண்டு, சில ஏக்கங்கள் நியாயமானவை சில ஏக்கங்கள் அதர்மமானவை சில ஏக்கங்கள் அபரிமிதமானவை என்று எத்தனையோ வகைகளுண்டு, தன்கைக்கு எட்டும் தூரத்தில் கிடைத்துவிடகூடிய இடத்திலிருக்கும் ஒன்றின் மீது ஏனோ மனம் வயப்படுவது குறைவு, அதே ஒன்று இனி கைக்கு எட்டாமலே இருந்து விடும் நிலைக்கு சென்றுவிடும் போது இந்த பாழும் மனது கிடந்து தவியாய் தவிக்குதே, இந்த நிலை மனிதனுக்கு துயரை மட்டுமே தரக்கூடியதாகவும் பல சமயங்களில் இவற்றை மாற்றிக்கொள்வதற்கு பிரயத்தனங்களை உபயோகித்து போராட வேண்டிய தர்மசங்கடம் ஏற்ப்படுவதை தவிர்க்க இயலாது போகிறது.

பேரழகி என்றால் அது என் தாய்தான், எத்தனை அழகு,
இப்போதெல்லாம் அந்த பேரழகு தேவதைக்கு என்ன குறை இருந்தது என நான் பல முறை யோசிக்கிறேன், சுருண்டு அடர்ந்த(இந்த அடர்த்தியை நான் வேறெங்கும் பார்த்ததே கிடையாது) கூந்தலின் நீளம் பாதங்களை தொடவா என்று கேட்க்கும், பஞ்சாப் கோதுமையின் நிறம், மிதமான உயரம், அழகிய மெல்லிய விரல்கள் இப்படி அடுக்கிகொண்டே போகலாம், அழகு அதிகமிருக்கும் இடத்தில் குணமிருக்காது என்பார்கள், ஆனால் அவள் ஒரு தேவதை, அவளை வெறுத்தவர் யார் என்பது இதுவரை எனக்கு தெரிந்து இல்லை, போகட்டும், ஒரு நாளேனும் யாரையாவது வசை சொல்லாடி இருந்தாளா, இல்லவே இல்லை, அவளை யாரும் வசை சொற்களால் பேசிக்கூட கேட்டதே இல்லை.

தாய் வீட்டு சொத்துக்களை அவளுக்கு கொடுக்காத உறவினர்களைக் கூட அவள் தன் வாயால் மனத்தால் வசைபாடியது கிடையாது. அவளது தேவையெல்லாம், தினம் குளிக்க தேங்காய் எண்ணையும் நீரும், சவுக்காரமும் மட்டும்தான். சோறில்லாமல் கடும் பட்டினியில் நாட்கள் பல கடந்தாலும் பத்தினித்தாய் தன் கணவனை வசைபாடி ஒருபோதும் கேட்டதில்லை. வாயில்லா ஜீவன் என்று சொல்லுவார்களே அது இவளுக்கு மிக பொருந்தும். அவள் சௌந்தரியம் அவளுக்கு பல வேதனைகளை கொடுக்கத் தவறவில்லை, நாட்டியத்தில் வாய்பாட்டில் என்று கலைகள் அத்தனையும் அவள் கைக்குள் அடக்கம், மாமனார் மாமியாரின் முழு அன்புக்கு மட்டுமில்லை மனிதர்களின் ஒட்டுமொத்த அன்பையும் தனக்கே சொந்தமாக்கிக் கொண்டவள்,

தமிழை அவள் தன் பாலோடு கலந்து எனக்கு அமுதூட்டியவள், என் ஒவ்வொரு அசைவிலும் பூரிப்படைந்தவள், வேலைக்காரியைப்போல் வாழ தன் தகுதியை எனக்காக இழக்கத்தயாராக வாழ்ந்தவள், எழுதி தீர்க்கவியலாத
பள்ளிக்கூடப் பாடங்களை எழுதி, படிக்க உதவியவள். மென்மையே உருவாகக் கொண்டவள், மாடு போல் உழைப்பதில் அவளையொத்த ஒருத்தியை என் குடும்பம் இதுவரை காணவில்லை, பக்குவமாய் நேர்த்தியாய் சமைத்து மாமியாரின் கைபாகம் கற்றவள், மாமியார் இறந்த செய்தி கேட்டு மயக்கமுற்று விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாமியாரின் உயிரற்ற உடலை காண சகியாத அன்புள்ளம் கொண்டவள்,பெண்ணென்றால் இவளைப்போலல்லவா இருத்தல் வேண்டும் என்று அதிசயிக்கத்தக்க அற்ப்புதம் அவள்.

பேத்திகள்
கூட 'என் பாட்டியைப் போல் யாரிருக்க முடியும்' என்று போற்றும் விந்தைக்காரியவள். பத்துமாதம் சுமந்துப் பெற்ற மகவு எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாய் கல்லறைக்குள் போனதாலே மனம் நிலைகுலைய துடித்தவள், காலம் கடந்த பின் இனியொரு குழந்தையா என்று வேதனையில் தவிர்த்தவள், இந்த மங்கைக்கு வயது முப்பதேதான், அத்துடன் ஒருநாள் அதிகமாய் இவள் பூமியிலே வாழ்ந்தாலும் இனி நான் ஜாதகம் பார்ப்பதை விட்டுவிடுவேன் என்று மலையாள ஜோதிடம்
கணித்த காலக்கெடுவை மனதில் வைத்து, இனியொரு குழந்தை வேண்டாம், அப்படியே பிறந்தாலும் அதன் ஐந்து வயதுவரையில் கூட நான் வாழ இயலாதே என்று அசுயை கொண்டாளாம்.

நண்பர்கள் கூட்டமொன்று வருடம் தவறாமல் நாகைப்பட்டினத்தில் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று வருவதுண்டாம், அந்த கூட்டத்திலிருந்த என் தந்தையின் நண்பர் ஒருவர் இவ்வருடம் எங்கள் குழுவுடன் வேளாங்கண்ணிக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க என் அப்பாவும் அம்மாவும் என் அப்பாவின் அண்ணனும் அந்தக் குழுவுடன் வேளாங்கண்ணிக்கு பயணம் சென்றனர், என் அம்மா ஐதீக ஹிந்து குடும்பத்தைச் சார்ந்தவர், மனம் மாறி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர், பொதுவாக நாங்கள் சார்ந்திருக்கும் கிறிஸ்துவப்பிரிவில், இயேசுவின் அன்னையாகிய மேரியை தெய்வமாக வழிபடுவது கூடாது என்பதால் வேளாங்கண்ணி போன்ற திருத்தலங்களுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ளவோ விரும்பவோ மாட்டார்கள். அதனால் பக்தியாக அல்லாமல் சுற்றுலாவாக போகலாம் என்று முடிவு செய்தனர்.

அப்போதெல்லாம் நாகை வேளாங்கண்ணி ஆலயம் என்பது தற்போது இருக்கும் பொலிவில் இல்லை, மிகவும் சிறிய ஒற்றை அறையில் ஒரு சிலுவை மட்டுமிருந்ததாக சொன்னார்கள், நாகைப்பட்டினம் ரயில்நிலயத்திலிருந்து அங்கு செல்வதற்கு பேருந்துகளோ வேறு வாகன வசதிகளோ கிடையாது என்பதால் ரயிலை
விட்டிறங்கி அங்கிருந்து நடந்துதான் செல்வார்களாம். அப்படி இந்த கூட்டம் சென்று கொண்டிருந்தபோது சூரியன் அஸ்த்தமித்துவிட்டதால், போதிய வெளிச்சமின்றி ஏற்க்கனவே பல முறை அங்கு சென்றவர்களுடன் இணைந்து கடற்க்கரையோரமாக இருட்டில் நடந்து சென்றனராம், கடலின் அலைகள் மட்டும் இருட்டில் லேசான வெள்ளை நிறத்தில் தெரிந்தபோது புதிதாக போனவர்கள் மிகவும் பயந்தனராம்,

கடற்கரையோர மணலில் ஆங்காங்கே சில கட்டுமரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன, கோவிலின் விளக்கு வெளிச்சம் கண்ணுக்குத் தென்படாததால் தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தனர், அப்போது இருட்டில் ஒரு உருவம் வெள்ளை சீலை உடுத்தி பெண் குரலில் 'கோவிலுக்குத்தானே போறீங்க, ஒண்ணும் பயப்படாதீங்க, இன்னும் கொஞ்சம் நடந்தா கோவிலின் விளக்கு வெளிச்சம் தெரியும், அப்படியே நேராகவே போங்க' என்று சொல்லிவிட்டு கண் சிமிட்டும் நேரத்திற்குள் உடனே மாயமாய் மறைஞ்சு போச்சுதாம். அப்போதைக்கு யாரும் அந்த உருவத்தைப்பற்றியோ திடீரென்று கண்ணுக்குத் தெரிந்து விட்டு திடீரென்று மறைந்ததைப் பற்றி சிந்திக்கவே இல்லை, தொடர்ந்து நடந்து கொண்டே சென்ற பின் கோவிலில் இருந்த விளக்கு
வெளிச்சத்தை சற்று தூரத்தில் பார்த்தப் பின்னர்தான் பெண்ணொருவர் திடீரென்று கூட்டத்தின் முன் தோன்றி மறைந்த அதிசயத்தைப் பற்றி நினைவு வந்ததாம்.

அதேப் போன்று பலருடைய தேவைகளுக்கும் பெண்ணொருவர் திடீரென்று தோன்றி உதவி செய்ததாக பின்னர் செய்தி அறிந்துகொண்டனர். பெண்ணுருவில் வந்து உதவியவரை அந்த கோவிலில் இருக்கும் மாதா என்று நம்புகின்றனர். அடுத்தநாள் அந்த கோவிலில் தனக்கொரு குழந்தை வேண்டும் என்றும் ஜாதகத்தில் ஜோதிடர் குறித்ததுபோல முப்பதாவது வயதில் இறந்து போய் குழந்தை அனாதையாக்கப்படக் கூடாது' என்று என் அம்மா வேண்டிக் கொண்டதாகவும் வேண்டிக்கொண்ட அடுத்த ஆண்டு நான் பிறந்து என்னை நாற்ப்பத்தி இரண்டு வயதுவரை பாதுகாத்தார் அந்த தேவதை என்கிற அழகி. தாய் தந்தை என்பவர்களை நம்மால் தேர்ந்தெடுக்க முடிவதில்லை, கடவுள் மனிதர்களுக்கு பூமியில் கொடுக்கும் பல ஆசீர்வாதங்களில் முதன்மையானது பெற்றோர்தான். கண்கண்ட தெய்வம் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அழகி என்னை விட்டு பிரிந்த பின்னரே அவளது தீராத நினைவலைகள் என்னுள் எழுப்பும் அற்ப்புதம் அவளை மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்கிறது.

வியாழன், 25 மார்ச், 2010

அதிசயம் ஆனால் உண்மை !!

கனவுகள் இல்லாத மனிதனே இல்லை. கனவுகளில் பல வகைகள் உண்டு, இயற்கையாக மனிதனுக்கு உறக்கத்தில் ஏற்ப்படுவது, தனது சொந்த மன விருப்பங்கள், இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று விரும்புவது, இதை கனவில் காண இயலவில்லை என்றாலும் செயற்கையாக எண்ணிப் பார்ப்பது, இதையும் கனவென்றே சொல்வதுண்டு. சில கனவுகள் நாம் எதிர்பார்த்திராத சம்பவங்கள் நடப்பது போல் கனவு காண்பது, ஒரு சமயம் அந்த கனவில் கண்ட காட்சிகளும் நிகழ்வுகளும் நிஜ வாழ்க்கையில் நடப்பதற்கு சாத்தியக் கூறுகளே இல்லை என்றாலும் கூட அப்படி ஒருகால் நடக்குமென்றால் தான் பெருத்த அதிர்ஷ்டம் உள்ளவனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்குமளவிற்கு ஏற்பட்ட கனவுகள்.


இன்னொரு வகை கனவுகள் இப்படியெல்லாம் நடந்துவிடக்கூடாது என்று பயத்தை ஏற்ப்படுத்தும் கனவுகள், கனவுகளைப்பற்றிய ஆராய்ச்சிகள் பல மேலை நாடுகளில் நடந்து கொண்டிருந்தாலும் கனவுகள் என்பது இயற்கையில் மனிதனின் பல அதிசய சக்திகளின் வெளிப்பாட்டில் இதுவும் ஒன்றாகவே கருதப்படுகிறது.  மனித உடலின் செயல்பாடுகளும் அதிலுள்ள அங்கங்களும் உலகிலேயே மிக அதிசயமான படைப்பாகவும் கருதப்படுகிறது. மனிதனின் மூளை இதயம் நுரையீரல் கண்கள் மூக்கு காது பற்கள் நாக்கு எலும்புகள் தோல் நகம் முடி நரம்புகள் ரத்தக்குழாய்கள் இன்னும் பல நுண்ணிய செல்கள் ரத்தத்தில் காணப்படும் வெள்ளை மற்றும் சிவப்பணுக்கள் இன்னும் பலவகையான உருப்புக்களைப்பற்றி விவரமாக ஆராய்ந்து கவனித்தால் உலகிலேயே மனிதனின் உடல் அமைப்பும் அதன் அதிசய செயல்பாடுகளின் வடிவமைப்பும் மிகவும் அதிசயிக்க தக்கதொன்று என்பதை அறிந்து கொள்ள முடியும்

மனித மூளையின் முழு செயல்பாட்டையும் இதுவரை முழுமையாக கண்டறிய இயலவில்லை அத்தனை அதிசய உருவும் செயல்பாடுகளும் கொண்டதாக உள்ளது. க்ளோன் என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு மனிதனைப்போல இன்னொரு மனிதனை உருவாக்க முடியும் என்று அறிவியலில் கண்டு பிடித்திருந்தாலும், க்ளோன் மூலம் உருவாக்கிய மனிதன் அதனை உருவாக்க மூலமாக இருந்த மனிதனின் எல்லா குணங்களையும் பெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்பதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளது. ஒரு தாயின் கர்பத்திலிருந்து பிறக்கும் சில இரட்டை குழந்தைகள் மட்டுமே ஒரே மாதிரியான உடல் செயல்பாடுகளை கொண்டதாக உள்ளது என்பதும் இயற்கையின் மற்றொரு அதிசயம்.

மனிதனை இயற்க்கை உருவாக்கியதற்கு நிச்சயம் ஏதேனும் காரணம் இருந்திருக்க வேண்டும் ஆனால் அவற்றை அறியாத மனித வாழ்க்கை வீணாகி விடுகிறதோ என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்று. அறுபது ஆண்டுகள் உயிர் வாழும் ஒரு மனிதன் விழித்திருப்பதும் முழு வளர்ச்சியடைந்து செயல்படுவதும் இருபது ஆண்டுகள் தான். குறுகிய காலமே வாழக்கூடிய மனித உடலும் மூளையும் தான் வாழும் காலத்தில் எதை சிந்தித்தது எதை செயல்படுத்தியது என்பது பின்னர் வருகின்ற சந்ததியினருக்கு உதவிகரமானதாக அமைகிறது.

தற்போது உலகில் பிறந்து வாழ்ந்து வருகின்ற மனிதர்களை விட அதிகமானோர் பிறந்து இறந்துள்ளனர் என்பது நிஜம், ஆனால் இனி பிறக்க போகும் மனிதர்கள் ஏற்கனவே பிறந்து இறந்தவர்களைவிட அதிகமானோராக இருக்க முடியுமா என்பதும் அவர்களது உருவமும் சிந்தனைகளும் செயல்களும் முந்தினவர்களைப்போலவே இருக்குமா என்பதும் சந்தேகத்தை கொடுப்பதாவே உள்ளது. ஏனென்றால் உலகின் சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களால் ஆக்சீஜன் குறைந்து கார்பன் டை ஆக்ஸைட் அதிகரித்து வருவதும் மண்ணின் ஈரத்தன்மை குறைந்து வருவதால் மண்ணின் தன்மை  மாறுபட்டு வருவதையும் நாம் அறிவோம். மண்ணின் தன்மை சுற்றுப்புறச் சூழல் போன்றவை மாறி வருவதால் இனி பிறக்க போகும் மனித இனமும் அதற்கேற்றார் போலத்தான் அமையும்.

அப்போது சிந்தனைகளும் செயல்களும் மாறிப்போகும், அதனால் அவர்களின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் முந்தைய மனிதனிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளது. கனவுகளும் கற்பனைகளும் வரும் சந்ததியினரை மாற்றாது மாறாக வரப்போகின்ற சந்ததியினரின் கனவுகளும் கற்பனைகளும் செயல்படுகின்ற விதமும் முந்தைய மனிதகுலத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது.


செவ்வாய், 2 ஜூன், 2009

ப்ளம் பூக்கள்...


ப்ளம் பழத்தை பற்றி கேள்வி பட்டதோடு சரி, குப்பிகளில் அடைத்த அதன் சாற்றை குடித்து பார்த்த திருப்தி மட்டும் தான் உண்டு.

ப்ளம் மரங்கள் பூத்து குலுங்கும் கண் கொள்ளா காட்சி, மனதை கொள்ளை கொள்ளும், மரம் முழுவதும் வெண்ணிற ப்ளம் பூக்கள் .......

ப்ளம் மரங்கள் குளிர்ந்த தட்ப வெட்ப்பத்தில் வளருவதால் தமிழ் நாட்டில் அத்தகைய அழகிய காட்சியை கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைக்காது.

ப்ளம் பழத்தை ருசிப்பதை விட ப்ளம் பூக்கள் பூத்து குலுங்கும் காட்சி தான் மனதை கொள்ளை கொள்ளும், மழையும் ஈரப்பதமும் இவ்வகையான தாவர வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் என்பதால் இந்த மரங்களின் பின்னணி இயற்க்கை அழகு கொட்டி கிடக்கும் இடங்களாக இருப்பதனால் ப்ளம் மரங்கள் பூக்கும் காட்சி மனதை கொள்ளை கொள்ளுகிறது . என்னைப் போல இயற்க்கை விரும்பிகளை சுண்டி இழுக்கும் சக்தி இப்படி பூத்து குலுங்குவதை காணும் போது ......

'கண்ணோடு காண்பதெல்லாம்
கண்களுக்குச் சொந்தமில்லை ' என்பதை உணரும் போது மனது
லேசாக கனக்கிறது........

திங்கள், 1 ஜூன், 2009

மூங்கில் பூக்கள்..



இயற்க்கை நம்மை பல விதத்தில் வியக்க வைக்கிறது இயற்க்கை வியக்க வைத்த மூங்கில் பூக்கள் பற்றிய தகவல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. படித்து தெரிந்து கொண்ட பல தகவல்களில் சிலவற்றை இங்கே எழுத வேண்டுமென தோன்றியது.

இந்தியாவில் மூங்கில் அதிகமாக விளையக் கூடிய தட்ப வெட்ப்பமும் இயற்க்கை சூழலும் நாட்டின் கடைக் கோடியில் அமைந்திருக்கும் அழகிய குளிர்ந்த மிசோரம் மாநிலத்திற்கு உண்டு.

மூங்கில் பூக்கள் ஐம்பத்து வருடத்திற்கு ஒரு முறை தான் பூக்கும் என்று சொல்லப் படுகிறது, 120 வகையான மூங்கில்கள் இருப்பதாக சொல்லப் படுகிறது. அழகிய பிங்க் நிறத்தில் இந்த பூக்கள் உள்ளது. மூங்கில் வளர்ப்பது வீட்டிற்கு அதிஷ்டம் என்ற ஒரு மூட நம்பிக்கையும் புதிய வரவாக நம்ம ஊரில் தற்போது காணப்படுகிறது, இந்த புதிய வரவு எந்த நாட்டின் தாக்கத்தால் ஏறப்பட்டிருக்க கூடும் என்று யோசித்தால் அது சீன ஜப்பான் நாட்டிலிருந்தோ அல்லது சிங்கப்பூர் போன்ற ஆசியர்கள் வாழும் நாடுகளில் இருந்து வந்ததாக இருக்கலாம். [ சிரிக்கும் புத்தர் சிலை போல ].

இந்த மூங்கில் பூக்கள் பூக்கும் அதே சமயத்தில் எலிகளும் அதிக அளவில் உற்பத்தியாகிரதாம். இதற்க்கு காரணம் எலிகள் இந்த பூக்களை சாப்பிடும் போது எலிகளின் உற்பத்தி பெருகுவதால் பயிர் விளையும் நிலங்களில் எலிகள் அதிக அளவில் பயிர்களை நாசம் செய்து விடுகிறது, இதனால் அதிக அளவில் உணவு பொருட்களுக்கு பஞ்சம் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் 1957,1819 ஆண்டுகளில் பெரிய அளவில் நாட்டில் பஞ்சம் வாட்டி எடுத்தாக வரலாறு கூறுகிறது.

இதனால் மூங்கில் பூக்கள் பூத்தாலே அது பஞ்சத்தின் அறிகுறி என்ற [myth] மூட நம்பிக்கை இருந்து வருகிறது. மூங்கில் பூக்கள் பூக்க போகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு காட்டிலாகாவில் உள்ள முக்கிய பணியில் இருப்பவர்கள் முன் கூட்டியே அறிந்து எலிகள் உற்பத்தியாவதை அதற்குரிய மருந்து வகைகளை தெளித்து அல்லது வேறு எலி ஒழிப்பு முறைகளை கையாண்டு, எலிகள் உற்பத்தியாவதை தடுக்கலாம், அப்படி அவர்கள் தக்க சமயத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால் பயிர்கள் எலிகளால் நாசப்படுத்தப்படுவதுடன் உணவு பற்றாக்குறை ஏற்ப்பட வாய்ப்பு அதிகமாகி விடுகிறது. தற்காலத்தில் எலி ஒழிப்பிற்கு பல ரசாயன கலவைகள் உள்ளது, எலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் வேறு மிருகங்களும் அழிக்கப் பட்டு விட கூடாதல்லவா.

மூங்கில் பூக்களை அழிக்க முடியாது ஏனென்றால் அவற்றால் மூங்கில் விதைகள் உற்ப்பத்தியாகும் அந்த விதைகள் மூலம் மீண்டும் பல ஆயிரம் மூங்கில் மரங்கள் உற்ப்பத்தியாக வேண்டியது உள்ளது. பூக்கள் பூத்து முடித்த பின்னர் அந்த மூங்கில் புதர் தானாகவே பட்டு போய் விடுகிறது.