செவ்வாய், 24 நவம்பர், 2009

விளையும் பயிர்....

இளம் தலைமுறையினர் ஒவ்வொரு கால கட்டத்திலும் அவர்களுக்கு முந்திய தலை முறையினரைவிட முற்றிலும் வித்தியாசமானவர்களாக இருப்பது சகஜம். இதற்குப் பெயர் ஜெனரேஷன் காப் [ generation gap] என்று சொல்லப்படுகிறது.

'ஜெனரேஷன் காப்' என்ற வார்த்தை பிரயோகத்திற்கு முன் 'கலிகாலமிது' என்று சொல்லி வந்தனர். வார்த்தையை எப்படி பிரயோகித்தாலும், இதற்க்கு அர்த்தம் மட்டும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.

இதில் குறிப்பிடும்படியான மிகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால் அப்போதைக்கும் இப்போதைக்கும் கணிசமான அளவில் இதன் தொகை அதிகரித்துள்ளதும், violence என்று சொல்லப்படும் நிலை அதிகரிப்பதும் கவலை அளிப்பதாக உள்ளது.

ஆண்களும் பெண்களும் பருவம் அடையும் வயது மிகவும் குறைந்து வருவதும் கூட இதற்க்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

பெற்றோருக்கு கீழ்படியாத தலைமுறையினர் பெருகிவருவதும், சில பெற்றோருக்கு தங்களின் கடமை என்னவென்பதே தெரிந்திராதவர்களாக இருப்பதும் இந்நிலை உருவாக மிக முக்கிய காரணங்கள்.

குழந்தை பருவத்திலேயே தவறு செய்யும்போது கண்டித்து அடித்து திருத்துவதும் பெற்றோரின் மிக முக்கிய கடமைகளில் ஒன்று என்பது பலருக்கு தெரியாத ஒன்றாகவே உள்ளது, குழந்தைகள் எங்கே போகிறார்கள் என்ன செய்கிறார்கள் யாருடன் அதிக உறவு கொள்கிறார்கள் அந்த உறவிற்கு என்ன காரணம் இதெல்லாம் அறிந்து அதற்கேற்றார்போல அவர்களை திருத்தி வளர்ப்பது தங்களது கடமை என்பதை பலர் அறியாமலிருப்பதும், பிள்ளைகள் தவறு செய்யும்போது கண்டித்தால் தங்கள் பிள்ளைகள் வீட்டைவிட்டு ஓடி விடுவார்கள் அல்லது வேறே விபரீதங்கள் ஏற்பட்டுவிடும் என்பதும் காரணமாக கூறப்படுகிறது.

பைபிளில் ஒரு வசனம், "பிரம்பை கையாளாதவன் தன் மகனை [குழந்தையை] பகைக்கிறான்" என்கிறது. எப்போது அடித்து திருத்த வேண்டுமோ அப்போது அடித்து திருத்தவில்லை என்றால் குழந்தைகளின் எதிர்காலம் என்பது மிகவும் மோசமானதாகிவிடுவதை நம்மால் பார்க்க முடியும். பிறகு வருந்தி பயன் ஒன்றும் இராது என்பதை உணரவேண்டிய காலத்தில் உணர வேண்டும்.

சில வீடுகளில் குடும்பத்திலிருக்கும் ஒரு நபர் குழந்தையிடம் மிகவும் கண்டிப்புடன் இருப்பார், குழந்தைகள் தவறு செய்யும்போது அவர் கண்டிக்கும் சமயத்தில் குடும்பத்திலிருக்கும் நபர்கள் தலையீட்டினால் குழந்தைகளை தக்க சமயத்தில் திருத்தும் வாய்ப்பை தடுப்பதுண்டு, அல்லது கண்டிப்பான நபரின் குறைகளை குழந்தைகளின் எதிரில் சொல்லி காண்பித்து குழந்தைகளை கண்டிக்கவிடாமல் செய்யும் குடும்பத்தினரும் உண்டு, இதனால் குழந்தைகளின் தவறுகள் திருத்தபடாமல் போய்விடுவதுடன் கண்டிப்புடன் இருக்கும் நபரின் மீது மரியாதையும் மதிப்பும் போய்விடும், அந்த குழந்தையின் எதிர்காலம் பாதிப்பிற்க்குள்ளாவதுடன் கண்டிப்புடன் இருக்கும் நபருக்கும் குழந்தைகளுக்குமான உறவு துண்டிக்கப்பட்டு அவர் மீது வெறுப்புணர்ச்சி ஏற்ப்பட்டுவிடுகிறது.

சில பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பொருளோ பணமோ வீட்டிற்கு கொண்டு வரும்போது அவற்றை ஆர்வமுடன் வாங்கி ஒளித்து வைப்பது அல்லது அந்த பொருளை உபயோகிப்பது போன்ற பெற்றோரின் செய்கைகள் அந்த குழந்தைக்கு தான் செய்ததில் தவறு உள்ளது என்பதை அறியவிடாமல் அதற்க்கு மாறாக அவர்கள் செய்த தவறை ஊக்குவிப்பது போல உள்ளதால் அவர்கள் அச்செயல்களை தொடர்ந்து செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

பத்து வயதிலிருந்து பதினைந்து வயதிற்குள் உள்ள குழந்தைகளின் செய்கைகளையும் அவர்களது பேச்சுக்களையும் பார்க்கும் போது எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று வருந்த வைப்பதாகவே உள்ளது.

பருவநிலை மாற்றங்களால் மட்டுமல்ல மனிதர்களின் இயல்புகளின் மாற்றங்களாலும் வரும் காலங்கள் மோசமான மாற்றங்களை எதிர் நோக்கியுள்ளது.


திங்கள், 23 நவம்பர், 2009

வேதனை குரல்கள்

சுனாமி பேரலை வந்து ஓய்ந்தது ஒரு நாளில் அன்று துவங்கிய சோகமும் பிரச்சினைகளும் இன்னும் ஓயவே இல்லை.

இலங்கை ராணுவத்தினரால் மீனவர்கள் சுடப்படுவது, பிடித்த மீன்களுடன் மீனவர்களை கைது செய்து கூட்டி செல்வதும் அடிக்கடி கேட்க்கும் செய்தியாகி வருவதும் மிகவும் வருத்தம் தருவதாக உள்ளது.

கடலில் பனிரெண்டு கடலடி தூரம் வரை மீன் பிடிக்க கூடாதென்பது உலகளாவிய பொதுசட்டம், இச்சட்டம் ஒரு விதத்தில் நியாயமாக இருந்தாலும் மற்றொருபுறம் மீனவர்களின் ஏழ்மைநிலை கருதி இதை தவிர்க்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்துகின்றன.

கப்பல்களில் வேலைபார்க்கச் செல்லும் தமிழகத்தை சார்ந்தவர்கள் சோமாலிய கடற்கொள்ளையரால் பிணைக் கைதிகளாகி வேதனையுறும் செய்தி புதிதாக ஏற்பட்டிருக்கும் பிரச்சினை, மற்றொருபுறம் கடலரிப்பினால் மூழ்கும் ஊர்களும் அங்கு அல்லலுறும் மக்களின் வேதனைகள்,

இவ்வாறு கடலும் கடலைச் சார்ந்த மனிதர்கள், ஊர்கள், தொழில் என மனவேதனை அளிக்கும் செய்திகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதை காணமுடிகிறது.

சனி, 21 நவம்பர், 2009

அவதூறு செய்வதும் அரசியலா

ஒரு மனிதனை அல்லது மனுஷியை அவதூறு செய்வதில் சிக்கிக் கொள்ளுபவர்களில் முதலிடத்திலிருப்பவர்கள் (பிரபலங்கள்) - அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர் நடிகைகள், வேலைக்கு போகும் பெண்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர் என்று இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

மனிதனை மனிதன் தூற்றித்திரிவது என்பது மன நோயாகும், அடுத்தவரிடத்திலிருக்கும் நிறைகுறைகள் தன்னிடத்திலும் இருக்கிறது என்பதை மறந்த அல்லது ஏற்றுக்கொள்ள திராணியில்லாத கோழைத்தனம், முட்டாள்த்தனம் போன்றவற்றின் மொத்த வெளிப்பாடுதான் அவதூறு பேசுவதற்கு காரணம்.

குறை இல்லாத மனிதரை இறைவன் படைக்கவே இல்லை, குறைகள் இருப்பதனாலேயே ஒரு மனிதன் கடவுளை நினைக்க சந்தர்ப்பம் ஏற்ப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

பலருக்கு அடுத்தவரை குறைக்கூறி வாழ்வதே இன்பம், அதிலொரு திருப்தி.

மாணாக்கர்களில் கூட இதற்க்கு உதாரணம் சொல்லலாம், எத்தனை முயற்ச்சிகள் எடுத்தும் அதிகபட்ச மதிப்பெண்களை பெற இயலாமல் போகும் நிலையில் அதிக மதிப்பெண்களை எடுத்து சாதனைகள் பல செய்யும் மாணவ மாணவியர்கள் மீது ஏற்ப்படும் பொறாமை அல்லது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவர்களைப்பற்றி அவதூறு பேசி தங்கள் காழ்ப்புணர்ச்சிகளை தீர்த்து கொள்ளுதல், இது சாபக்கேடான நிலைமை.

சிலர் காரணம் ஏதும் இல்லாமல் கூட அடுத்தவரைப் பற்றி அவதூறு பேசி மகிழ்வதுண்டு.

இத்தகைய நிலைமை அரசியல் தலைவர்களைப்பற்றி அவதூறு பேசி வருபவர்களை காண நேரும்போதும் கேட்க்க நேரும் போதும் அவர்களது காழ்ப்புணர்ச்சியே அதற்க்கு காரணம் என்பது தெள்ள தெளிவாக காண முடிகிறது, இதுவும் மகா சாபக்கேடு தான்.

சொல்லுக்கும் செயலுக்குமான வித்தியாசங்கள் என்னவென்பது அவதூறு பேசுபவர்கள் அறிந்திருந்தாலும் கூட, குறைக் கூறுவது என்பது சிலரின் சாபக்கேடு, அதை மாற்றவும் இயலாது, பொருத்துக்கொள்ளவும் இயலாது.

இதற்காகவே திண்ணைகள் கட்டபட்டதுப்போல அந்தகாலத்திலிருந்தே திண்ணை பேச்சுக்கள் இருந்து வந்துள்ளது இதற்க்கு உதாரணம், இப்போதெல்லாம் பத்திரிகைகளும் ஊடகங்களும் அவதூறுகளை பிரசுரித்து பிரபலப்படுத்துவதாலோ என்னவோ திண்ணைகள் காணாமல் போய்விட்டது.

மாமியார் உடைத்தால் மண் சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டி !!!

ஒழுக்குப்பானையில் நீர் நிரப்ப முயலுபவரின் நிலைதான் இந்த அவதூறு பேசித்திரிபவர்களின் நிலைமையும்.

மோசமான அரசியல்

Friday 20 November 2009

வாழுகின்ற
கொஞ்ச நாளில் ஒரு மனிதனால் எத்தனை நல்ல விஷயங்களை செய்துவிட முடியும் என்பதில் அவனது வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கபடுவதாக நம்பும் மனிதர்களும் இந்த உலகில் தான் பிறந்து வாழ்ந்து பின்னர் இறந்தார்கள் என்பது சரித்திரம் நமக்கு கூறும் உண்மைகள்.

மகாத்மாகாந்தியடிகள் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற எத்தனை அறிய முயற்சிகளை மேற்கொண்டு சாதித்தார் அதற்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள் இன்றும் உலகத்தினரால் போற்றபட்டுக் கொண்டிருந்தாலும், ஒரு சாரர் எப்போதுமே ஏதாவது குறைகளை குற்றங்களை பேசி அவரது புகழை கேவலப்படுத்தி வாழும் மனிதர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த வகையை சேர்ந்தவர்தான் பால்தாக்ரே என்ற மனிதரும் என்று நினைக்கத்தோன்றுகிறது. அவரது பேச்சுக்களும் செய்கைகளும், மொழி ஜாதி மதம் என்ற வெறி எந்த அளவிற்கு கொடுமையானது என்பதற்கு அடையாளமாக தான் வாழ்ந்து கொண்டிருப்பதை வெளி உலகுக்கு வெளிப்படுத்துகிறது.

மனிதர்களுக்கு வயதாகி விடுவதாலேயே ஞானம் வந்துவிடுவதில்லை என்பதற்கு இவரது சமீபத்திய செய்திகள் சாட்சிகளாகி நம்மை வியப்புற செய்கிறது. மனிதர்களிடையே பிரிவினைகளை வித்திடும் அவரது பண்பற்ற நாகரீகமற்ற பேச்சு அவரது புகழை [notorious] அதிகரித்துள்ளது.

இத்தனை வருடங்களாக அவரை ஒரு இந்தியர் என்று நினைத்திருந்த பலருக்கு தான் உள்நாட்டிலே வாழும் ஒரு தீவிரவாதி என்பதை பறைசாட்டுகிறது. தீவிரவாதிகளை உருவாக்கும் அல்லது தீவிரவாதத்தை தூண்டும் அவரது பேச்சுக்கள் கண்டனத்திற்கு உரியது மட்டுமல்ல சட்டத்திற்கு புறம்பானதும் கூட.

மராட்டிய மொழி பேசுபவர்கள் தான் மராட்டிய நாட்டில் வாழ வேண்டும் என்று அவர் கூறுவது மக்களிடையே தீவிரவாதத்தை தூண்டுவதும், தண்டனைக்குறியதுமாகும். மக்களிடையே பிரிவினை எண்ணங்களை ஏற்ப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள் இல்லையில்லை, மனிதர் என்ற தகுதியை முற்றிலும் இழந்துவிட்டவராவர்.

இயலாமையின் முடிவுதான் தீவிரவாதம், இவரும் இயலாமையின் முடிவில்தான் இவ்வாறு பேசி தன் குறையை தீர்த்துக்கொண்டுவருகிறார்.

ஞாயிறு, 15 நவம்பர், 2009

wonderful Entertainers


நடிகர் மோகனின் உருவத்தை முதன் முதலில் பார்த்தபோது அவருக்கு நடிப்பில் இத்தனை சிறப்பான வகைகளை காண்பிக்க முடியும் என்பதை யூகிக்க முடியாமல் இருந்தது, ஆனால் பல திரைப்படங்களில் அவருக்கு கிடைத்த அருமையான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து அந்த காலகட்டத்தின் சிறந்த கதாநாயகனாக இருந்தார். பல வெற்றித் திரைபடங்களில் நடிகர் மோகனின் திறமை கண்டு ரசித்திருக்கிறேன். அவர் அதிஷ்டக்காரர் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது, ஏனென்றால் எல்லா முன்னணி திரைப்பட நடிகைகளுடனும் நடித்தது மட்டுமில்லாது அருமையான கதைகளும் அவருக்கு அமைந்தது. இன்றும் அந்த திரைப்படங்களை பார்க்கும்போது அதே எண்ணம் தான் தோன்றுகிறது.

சொந்தக்குரலில் வசனங்களை நடிகர் மோகன் பேசுவதில்லை என்பது தெரியவந்தபோது மிகவும் ஆச்சரியமான செய்தியாக இருந்தது, ஏனென்றால் அவருக்கு குரல் கொடுத்து வந்த பாடகரும் நடிகர் விஜயின் தாய் மாமாவுமான சுரேந்தரின் குரல் நடிகர் மோகனுக்கு அத்தனை பொருத்தமாக இருந்தது.




நடிகர் கவுண்டமணியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, அருமையான திறமைசாலி, குதுகலப்படுத்தும் நபர்களில் மிகவும் முக்கியபங்கு வகித்தவர் என்றால் மிகையாகாது, அவரது உருவத்தை பார்ப்பவர்களால் யூகிக்க இயலாத திறமைகளை உள்ளடக்கிய மாபெரும் கலைஞர். ஹாலிவுட் லாரென் & ஹார்டியை நினைவுபடுத்தும் கவுண்டமணி செந்தில் ஜோடிகள், சிறந்த entertainars.




திங்கள், 9 நவம்பர், 2009

வீடு என்பது

அமெரிக்காவில் வாழும் ஒரு அமெரிக்க குடும்பத்தில் இருபத்திரெண்டு வயது பெண்ணொருத்தி தன்னிடம் பேட்டி எடுத்த ஒரு பத்திரிகை நிருபரின் 'மிகவும் பாதுகாப்பான இடம் என்று நீங்கள் நினைக்கும் இடம் எது?' என்ற கேள்விக்கு 'டிஸ்கோ க்ளப்', அல்லது எங்காவது நடக்கும் இசைகச்சேரிகள் ' என்றாள்.

அதற்க்கு காரணம் கேட்ட பத்திரிகை நிருபரிடம் அந்த பெண் 'வீட்டிற்குச் சென்றால் என் அப்பா குடித்துகொண்டிருப்பார் அல்லது குடித்துவிட்டு இருப்பார், என் உடன்பிறப்புகள் என் அம்மா உட்பட யாரும் வீட்டில் இருக்கமாட்டார்கள், நான் சிறிது கவனக்குறைவாகவோ அல்லது என் அப்பாதானே என்று இருந்துவிட்டால் என்னை கற்ப்பழித்துவிடுவார் அல்லது வலுகட்டாயமாக என்னுடன் உடலுவுகொள்ளுவார், இதனால் எனக்கு அதிக பாதுகாப்பாக இருக்க கூட்டம் மிகுந்திருக்கும் இசை கச்சேரிகளுக்கோ டிஸ்கோ கிளபுகளுக்கோ நான் சென்றுவிடுவது வழக்கம்' என்றாளாம்.

அமெரிக்காவில் மிக சாதாரணமாகிவரும் இந்நிலை பெண்களை வீட்டிலிருந்து துரத்துவதாகவும் வீடு என்பது நரகம் என்றாகும் நிலையும் காணப்படுவது நாட்டின் சுதந்திரம் அல்லது முன்னேற்றம் எந்த அளவிற்கு பிரச்சினைகளை ஏற்ப்படுத்தும் என்பதற்கு இது போன்ற பல விஷயங்கள் மிகவும் முன்னேறிய சுதந்திர நாடான அமெரிக்காவை உதாரணம் காண்பிக்க உதவுகிறது.

இந்தியாவை பொறுத்தமட்டில் வீடு என்பது அப்பாக்களின் 'நிரந்தர விடுதி' என்ற நிலை பெரும்பாலும் காணப்படுகிறது, அலுவலகத்தைவிட்டு வீட்டிற்கு வரும் அப்பாக்கள் வீட்டு சாப்பாட்டிற்காக ஏங்கி திருமணம் செய்து கொண்டதாலோ என்னவோ சாப்பிடுவது உறங்குவது மற்ற சமயங்களில் தொலைக்காட்ச்சியில் செய்திகள் பார்ப்பது அல்லது பத்திரிகைகளில் மூழ்கிவிடுவது என்பதற்காகவே வீடு என்ற நிலைதான் உள்ளது.

வாரம் முழுதும் அலுவலகம் வார இறுதியில் தன்னை அசுவாசபடுத்திக்கொள்ளுதல் என்ற முறைதான் பெரும்பாலும் காணப்படுகிறது, வீட்டிலிருக்கும் நபர்களை பற்றிய நினைவுகள் அடியோடு மறந்துவிட்டவர் போல இருப்பதற்குத் பெயர்தான் "தான் உண்டு தன் வேலையுண்டு" என்றிருப்பதாகும்.

நமது நாட்டில் டிஸ்கோ க்ளப் இசைக்கச்சேரி என்று வெளியே சுற்றினால் தான் பிரச்சினைகளே ஏற்படுகிறது. நமது நாட்டைப் பொறுத்தவரையில் வீடுதான் சொர்க்கம். இதை புரிந்துகொண்ட கணவன் எனப்பட்டவர்கள் மனைவிகளையும் குழந்தைகளையும் வெளியே கூட்டிச்செல்லுவதே கிடையாது, வீடே கதியாக இருப்பதுதான் பெரும்பாலான பெண்களின் நிலை என்றுள்ளது.

தொலைக்காட்சி என்ற ஒன்று வந்திராவிட்டால் பெரும்பாலான பெண்கள் சினிமா அரங்கம், வெட்டிப் பேச்சு, தையல்வேலை, விதவிதமான கோலம் போடுதல், கொலுவைப்பது, வற்றல் வடாமிடுதல் என்கிற பொழுது போக்கைத்தான் நம்பி இருந்திருக்க வேண்டும்.

பெண்கள் சுய வேலை வாய்ப்பு , பெண் கல்வி, பெண்கள் கல்லூரி, மகளிருக்காக பேருந்து, ரயிலில் பெண்களுக்கான தனி இடம், கணினி படிப்பு, பட்டபடிப்பு, பட்ட மேல்படிப்பு என்று பெண்கள் உயர்ந்து கொண்டே இருக்கும் நிலை ஏற்பட்டிராவிட்டால் பெண் என்னும் நிரந்தர வேலைக்காரிகளைத் தான் காண நேர்ந்திருக்கும்.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று ஏளனம் செய்தவர் அழிந்தே போனார் என்று கும்மியடி!!

வீட்டுக்குள்ளே
பெண்ணை பூட்டி வைத்த விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்று கும்மியடி பெண்ணே!!

சனி, 7 நவம்பர், 2009

பிரிவு

நாம் வாழுகின்ற காலத்தில் குழந்தைப் பருவம் முதல் வாழ்வின் இறுதிவரையில் எத்தைனையோ மனிதர்களையும் இடங்களையும் ஊர்களையும் நாடுகளையும் ஜடப்பொருட்களையும் மிருகங்களையும் ஊர்வன பறப்பன என்று கோடிகணக்கானவற்றை சந்திக்கின்றோம். இவை அனைத்தையும் நம்மால் நினைவில் வைத்துக் கொள்வதற்காக மூளையின் ஒருபகுதி இயங்கிவருகிறது.

பலவற்றை நாம் சந்தித்தவுடன் சில நிமிடங்களிலேயே மறந்துவிடுகின்றோம், அதற்கு காரணம் நாம் அந்த பொருளையோ மனிதரையோ இடத்தையோ நினைவு வைத்துக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை நாம் உணர்கிறோம் இந்த உணர்வானது நரம்புகளின் வழியாக மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு எடுத்துச் சொல்லப்படுவதால் நாம் அவற்றை மறந்து விடுகின்றோம்.

சிலவற்றை நாம் நினைவில் வைத்துக்கொள்வது அவசியம் என்ற போதும் கூட மறந்துவிடும் சம்பவங்களும் உண்டாக காரணமாக இருப்பது நாம் வேறு பல நடப்பு காரியங்களில் மூழ்கி விடுகிறோம் என்பதால் தான். இதனால்தான் பலர் பல வேலைகளை நாட்குறிப்பிலோ செல்போன்களிலோ எழுதி பதிவு செய்து நினைவுபடுத்தி செயல்படுகின்றனர்.

ஒரு சாதாரண பேனாவோ பென்சிலோ அல்லது நாம் வைத்திருந்த மிகவும் பிடித்த அல்லது நம்முடனேயே இருக்கவேண்டும் என்று நாம் விரும்புபவற்றை தொலைத்துவிடும் போது மிகவும் வேதனையடைகிறோம், எப்படியாவது தேடி அது கிடைத்துவிடவேண்டும் என்று ஆவல் கொள்கிறோம். அப்படி கிடைத்து விட்டால் பெருமகிழ்ச்சியில் திளைத்துவிடுகிறோம், இழந்தது இழந்ததுதான் என்ற நிலையில் மனம் உடைந்து பெரும் வேதனையடைகிறோம், அந்த சம்பவத்தை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் மனம் கிடந்தது தவியாய் தவிப்பதை பார்க்கின்றோம்.

அவ்வாறு வேதனை அடையும் போது அந்த வேதனைகளை கட்டுக்குள் வைத்திருக்க நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் ரசாயனங்கள் உதவியுடன் நாம் பல நேரங்களில் முயன்று வெற்றி பெறுகிறோம், பல நேரங்களில் தோல்வி என்றாகி விடும் போது மனதின், மற்றும் நரம்புகளின் செயல்பாடுகள் அசாதாரண நிலையை அடைந்து கொஞ்சம் கொஞ்சமாக அதன் வலிமைகளை இழந்துவிட ஆரம்பிக்கின்றது, மூளையில் மற்றும் வயிற்றிலிருக்கும் சுரப்பிகளில் சுரக்கும் திரவம் அல்லது ரசாயனங்கள் நரம்புகளுக்கும் உடலுக்கும் தேவையான திரவம் அல்லது ரசாயனங்கள் சுரப்பது நிறுத்திவிடுகிறது, அல்லது குறைந்துவிடுகிறது. இயல்பு நிலையிலிருந்து உடல் மாற்றங்கள் அடைய நேருகிறது. இதனால் உடலில் பலவித நோய்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்ப்பட ஏதுவாகிறது.

சந்தித்ததில் மகிழ்ச்சியடையும் அல்லது தனக்கு கிடைத்தவற்றில் மகிழ்ச்சியுறும் மனது, அவற்றை இழந்து அல்லது பிரிந்து விடும் போது இழப்பை ஏற்க மறுக்கின்றது. காதல் தோல்வி, மரணம், பிரிவுகள் பலவும் நம் மனதை மிக ஆழமாக பாதிப்பிற்க்குள்ளாக்குகிறது. யாரோ ஒருவரின் மரணமாக இருந்தாலும் அத்துயரம் சம்பந்தப்படாதவரைக் கூட வேதனையடையச் செய்கிறது. யாரோ ஒருவரின் மரணத்திற்காக வருந்துவது குறைவாகவும் பின்னர் மறக்கப்பட்டும் விடக்கூடியது என்பதை நாம் உணர்வதால் அது நம்மை பாதிப்பதில்லை, குறிப்பிட்ட இழப்புகள் நாம் எதிர்பார்த்திராததாகவோ நமக்கு மிகவும் வேண்டியதாகவும் இருக்கின்ற காரணத்தால் சில பிரிவுகளும் மரணமும் மன உளைச்சல் உண்டாக்குகிறது. மன உளைச்சல் என்பது உடலில் ஏற்ப்படும் அசாதாரண ரசாயன மாற்றமாகும். மனஉளைச்சல் என்பதை மருத்துவ ரீதியாக மனநோய் என்று அழைக்கபடுவதால் இதை சரிசெய்ய சரியான விகிதத்தில் ஏற்ற மருந்துகள் உட்கொள்ளும் போது இந்நோய் சரிசெய்யப்பட்டு விடுகிறது,

சந்திப்பில் கிடைக்கும் ஆனந்தத்தைவிட பிரிவில் உண்டாகும் துயரம் மனதை பாதிப்படையச் செய்யும் வல்லமை மிகுந்து காணப்படுகிறது. சந்திப்பில் எல்லையற்ற மகிழ்ச்சி மனிதனின் மனதிற்கு தெம்பூட்டுவதாக அமைவதற்கு காரணம் மகிழ்ச்சியில் பல சுரப்பிகள் தேவையான திரவங்களை சுரந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளுக்கு வலிமையையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க உதவுகிறது.

மகிழ்ச்சியை விருந்து கேளிக்கை ( பலர் விஸ்கி பிராந்தி குடித்து கொண்டாடுவதும் உண்டு ) என்று கொண்டாடுவதும், துயரத்தை குடி போதை சிகரெட் போன்ற தீய பழக்கங்களால் போக்க நினைப்பதற்கும் மனிதனின் எண்ணங்களும் நினைவுகளும் காரணமாக இருக்கிறது,

துயரம் என்பது அதிகமாகி நீடிக்கும் போது சுரப்பிகளின் வேலை குறைந்து காணப்படுவதும், துயரம் என்பது மனிதனின் உடலிலும் மூளையிலும் நரம்புகளிலும் சந்தோஷத்தின் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது.

நாம் வெளிநாடுகளுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ சுற்றிபார்க்க போகும்போது புகைபடங்களை எடுத்துக்கொளுகிறோம், நாம் சந்திக்கும் மனிதர்கள் இயற்க்கை காட்ச்சிகள் என்று எதுவெல்லாம் நம்மை ஈர்க்கின்றதோ அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் புகைபடமாக்கிக் கொண்டு நாம் நிரந்தரமாக வாழும் இடத்தில் வைத்துக் கொள்கிறோம். அதற்க்கு காரணம் அந்த காட்ச்சிகளையோ மனிதர்களையோ இனி நம்மால் பார்க்க முடியாது என்பதை நமது மனமும் எண்ணங்களும் உணர்வதால் அவற்றை புகைப்படமாக்கி திரும்ப பார்த்து மகிழ்ச்சியுற நினைவுச் சின்னமாக வைத்துக் கொள்ளுகிறோம். ஆனால் நாம் நிரந்தரமாக இருக்கின்ற இடத்தையோ நபர்களையோ புகைப்படமாக்கி பார்த்துக் கொண்டிருக்க விரும்புவது கிடையாது, அப்படியொரு எண்ணமோ நினைவோ ஏற்ப்படுவதும் கிடையாது.

ஒருவர் மரணத்தை எதிர்கொள்ள போகிறார் என்று தெரிந்து விட்டால் அவருக்கு அதுநாள்வரையில் கொடுத்த பராமரிப்பு பாசம் போன்றவற்றை விட அதிகம் கொடுக்கப்படுவதற்குக் காரணம் மரணம் என்ற பிரிவிற்கு கொடுக்கப்படும் உபச்சாரம். நம்மோடிருக்கும் ஒருவருக்கு நாம் ஏன் அத்தனை அன்பும் கவனிப்பும் கொடுக்கத் தவறுகிறோம்? அவர் எப்போதும் நம்முடன் தானே இருக்கப் போகிறார் என்ற 'எண்ணம் அல்லது நமது நினைவு' தான் அதற்க்கு காரணமாக அமைகிறது.

மனிதருக்குள் ஏன் இந்த எதிர்மறையான எண்ணங்கள் நினைவுகள் ஏற்ப்படுகிறது? எந்த ஒன்றையும் தன்னிடம் நிரந்தரமாக இருக்கின்ற போது அதைபற்றிய அக்கறையும் கவனமும் இல்லாமலும் அதை பிரிந்திருக்கும் பட்சத்தில் அதிகமாகிவிடுவதும் மனிதனின் இயல்புகளில் ஒன்றாக காணப்படுவதே இதற்க்கு காரணம்.