அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 செப்டம்பர், 2013

என் ஆசிரிய பெருமக்கள் !!




ஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிருஷ்ணன் பிறந்ததினம் என்பது பலருக்கு தெரிவது கூட இல்லை அவரும் ஒரு சிறந்த ஆசிரியர். ஆசிரியர்கள் அல்லது ஆசான் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பழைய காலத்தில் வாழ்ந்த பலர் இதற்க்கு முழுதகுதி படைத்தவராக இருந்தனர் என்பது யாவரும் அறிந்த உண்மை. அவ்வாறு ஆசிரிய கடலினுள் முத்துக்களாக வாழ்ந்து அதை குறித்து பிறர் அறியவேண்டும் என்ற எண்ணமின்றி வாழ்ந்து மறைந்த ஒட்டு மொத்த ஆசிரியரையும் நினைவுகூறுதல் என்பது திரு ராதாகிருஷ்ணன் அவர்களின் அறிய பண்புகளில் ஒன்று. கல்விக்கண் திறக்க உதவும் ஆசிரியரை கடவுள் என்று வணங்கிய காலங்கள் உண்டு. அவாறான காலங்கள் இருந்தது என்று நினைவுறுத்தும் வகையில், தனது மேன்மையை இன்னும் இழக்காமல் தக்க வைத்திருக்க மட்டுமே இன்று ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுவதாக உணருகிறேன். "எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டே" என்று வேதனை குரலாகவும் ஆசிரியர் தினம் இன்றைக்கு வழக்கத்தில் அல்லது புழக்கத்தில் பேசப்படுகிறது.


எனது முதல் ஆசிரியர் என் தாய் அவர்தான் எனக்கு தமிழ் எழுத படிக்க கற்று கொடுத்தார். பாலூட்டிய போதெல்லாம் தேன் தமிழால் கதைகள் பல கற்று கொடுத்தார். பிற்காலத்தில் தமிழில் செய்யுள் முதல் வினாவிடை வரை ஒப்பிப்பதற்கும் பிழையின்றி பேச எழுத கற்றுதந்தார், கணக்கு பாடத்தை விளங்கும் வகையில் பொறுமையாய் பல முறை சொல்லித்தருவார், வரலாறு புவியியல் பாடங்களை எழுதி முடிக்க இயலாத போதெல்லாம் அயராமல் எழுதிதருவார், ஆங்கிலத்திற்கு முதல் ஆசான் என் தந்தை, எழுத்து கூட்டி படிப்பதற்கும் ஏனைய ஏற்ற இறக்கங்களை அருமையாய் எடுத்து சொல்வார். அவர் எனது கை பிடித்து வீதியிலே செல்லும்போது தென்படுகின்ற ஆங்கில வாசகங்களை எல்லாம் படித்து சொல்வேன், அதை கண்டு அவருக்கு அளவில்லா மகிழ்ச்சி எழும். ஆகையால் என் முதல் ஆசான் என் பெற்றோருக்கு ஆயுள் உள்ளவரை நன்றி. அதன் பிறகு எஸ்.எஸ்.எல்.சி. என்று கூறப்படும் பழைய பள்ளியிறுதி ஆண்டில் வேணுகோபால் என்ற தமிழாசிரியர், அவர் தமிழை கையாண்ட விதம், மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கின்ற நேர்த்தி தமிழ் என் நெஞ்சினிலே நீங்கா இடம் பிடிக்க முக்கிய காரணகர்த்தா, அவரை என் சிரம் தாழ்த்தி என்றும் வணங்குகின்றேன்.


ஆசிரியர்கள் என்றாலே பிரம்பையும் கண்டிப்பின் உச்சத்தையும் உடையவர்கள் என்ற அடிப்படை எண்ணத்தை சிதைக்க செய்த என் பள்ளி தலைமை ஆசிரியர் திரு சி. சுப்பிரமணியம் அவர்களுக்கு நான் நன்றி கடன் பட்டவள். நான் எஸ்.எஸ்.எல்.சி என்கின்ற பள்ளியிறுதி ஆண்டில் படித்துகொண்டிருந்தேன், அவ்வாண்டு பள்ளியிறுதி தேர்வு எழுதுவதற்கு ரூபாய் 17 கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாணவர்களிடம் கூறப்பட்டது. ரூபாய் 17 என்பது எங்களுக்கு அப்போது பெரிய தொகை, அத்தனை கொடிய வறுமை. என் பெற்றோரிடம் தெரிவித்தேன், குறிப்பிட்ட தேதி இறுதிநாள் என்று கூறப்பட்டது, எங்களிடம் பணம் என்பது காண கிடைக்காத ஒன்றாக இருந்தது. அடுத்த நாள் காலை பள்ளியில் தினமும் நடைபெறுகின்ற காலை வணக்கத்துடன் துவங்கியது, அதன் இறுதியில் எங்கள் தலைமை ஆசிரியர் ஒலிபெருக்கியில் 5000 மாணவ மாணவியர் நிறைந்திருந்த வளாகத்தில் அறிவிப்பு ஒன்றை படித்தார் அதில் அவர் குறிப்பிட்ட செய்தி லைன்'ஸ் கிளாப் வருடம் தோறும் வசதியற்ற மாணவ மாணவியர் இருவருக்கு பரீட்சை எழுத உதவித்தொகை ரூபாய் 17 வழங்கி வருவதாகவும் இம்முறை அவ்வுதவித்தொகை தனது பள்ளிக்கு கிடைத்துள்ளது என்று கூறினார் , அதை தொடர்ந்து ஒரு மாணவனின் பெயரும் மாணவியர் பெயரில் எனது பெயரையும் வாசித்துவிட்டு முதல் முறையாக அவ்வருடம் அந்த பள்ளிக்கு இவ்வித சலுகை கிடைக்க தான் எடுத்த முயற்சிகளை பற்றி கூறினார் முயன்று கிடைத்தது என்பதால் பரீட்சையில் வெற்றி பெறுமாறு வாழ்த்தினார்.


அத்துடன் நின்றுவிடாமல் தினமும் மாலையில் ஒருமணி நேரம் (பள்ளி நேரத்திற்கு பின்னர்) ஆங்கில பாடத்தில் குறிப்பாக இரண்டாம் தாள் என்கின்ற ஆங்கில இலக்கண பாடத்தில் அதுவரையில் தொடர்ந்து குறைவாக மதிப்பெண்கள் வாங்கிய மாணவ மாணவியரை அமர்த்தி அருமையாய் ஆங்கில இலக்கணம் சொல்லி கொடுத்தார். அதுவரையில் வகுப்பில் கடைசி தரத்தில் இருந்த மாணவியர் அனைவரும் அவ்வாண்டு இறுதி தேர்வில் வெற்றி அடைய முழுதும் உதவினார். அப்படிப்பட்ட ஆசிரியர்களும் இதே பூமியில்தான் வாழ்ந்தனர் என்பதை சொல்லாமல் இருந்தால் அதுவே எனக்கு சாபமும் பாவமுமாக இருந்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு இங்கே குறிப்பிடுகிறேன்.






திங்கள், 2 செப்டம்பர், 2013

மறதி மட்டும் இல்லையென்றால் ?




வருமானம் என்பது மனிதனுக்கு அடிப்படை தேவை என்றாகிவிட்டது வருமானமின்றி மனிதனால் வாழ இயலாது, "வறு"மை நீக்கப்படுவதற்கு "மான"த்தை தக்கவைத்து கொள்வதற்கு தேவையானது "வருமானம்". அதனால் தான் இதற்க்கு பெயர் வருமானம் என்றாகியதோ? அதாவது வறுமை+மானம் = வருமானம். இதனை "வரும்படி" என்று கூறுவதும் உண்டு, அக்காலத்தில் நிலத்தை உழுது பயிரிட்டு அதைகொண்டு வாழ்க்கை நடத்தினர், பணம் என்பது இல்லாதிருந்த காலத்தில் நெல் அல்லது அரிசி போன்ற தானியங்களை அளந்து வேலையாட்களுக்கு கூலியாக கொடுப்பது வழக்கமாக இருந்தது, கிலோ, லிட்டர் என்பது பிற்காலத்தில் ஏற்ப்பட்ட அளவு முறைகள் முற்கால வழக்கப்படி ஒரு படி இரண்டு படி என்று படி கணக்கு புழக்கத்தில் இருந்தது. அதனால் அத்தகைய முறையில் தனக்கு கிடைக்கின்ற தானியத்தை வருகின்ற+படி= வரும்படி என்று கூறினர். காலத்திற்கேற்ப சொற்களின் புழக்கமும் அதற்கொப்ப இருந்தது. உழைத்து சம்பாதிக்கின்ற "வருமானம்" அல்லது "வரும்படி" உள்ள ஒருவருக்கே திருமணம் செய்ய இயலும், பிறக்கின்ற குழந்தைகளையும் மனைவியையும் பராமரிக்க வருமானம் என்பது அவசியமாகிறது. அவ்வாறு வறுமை என்னும் பிணியும் மானம் என்கின்ற தன்மானமும் ஒருவரது உழைப்பின் ஊதியத்தால் நிர்வகிக்கப்படுவதே குடும்பம். அத்தகைய வருமானத்தின் பெரும் பகுதியை தினமும் மது அருந்த செல்விட்டு அவ்வாறு வீதியில் செல்லும்போது காண்போரிடம் "தன் மான" த்தை விட்டு, தான் தனது மானத்தை இழந்து விடுவதால் மனைவி மக்களை வறுமை என்னும் பாழும் கிணற்றினுள் தள்ளப்பட்டு தன்மானமிழந்து அல்லலுறுகின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருப்பது இன்றைய மிகப்பெரிய கொடுமைகளுள் ஒன்று என்றால் அது மிகையாகாது.

கல்விக்கண் திறக்க உதவி செய்யும் பள்ளிகூடங்கள் பாழாகி புனரமைக்க ஆளின்றி பல கிராமங்களில் வீணே செயலற்று கிடக்கின்றது. படித்தவர்கள் பலர் சீரும் சிறப்புமாய் பவனி வருவதை காணும் பாமரன் தனது வாரிசுகளும் அவ்வாறே பல நிறத்து வண்டியில் அமர்ந்து கொண்டு கைபேசியில் ஆங்கிலம் பேசி கைநிறைய சம்பாதித்து (தற்போது "சம்பாதி"ப்பது என்றாகி விட்டது) மேலை நாடுகள் சென்று அங்கேயும் கை நிறைய சம்பாதித்து பகட்டாக வாழ வேண்டும் என்ற கனவில் இராப்பகலாய் கண் விழித்து வேலை பார்த்து அதிக பணம் செலுத்தினால்தான் பிள்ளை எளிதில் ஆங்கிலம் பேசும் என்ற அடங்கா அவாவில் தன் சக்திக்கு மிஞ்சிய பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து பட்டம் வாங்க அதை விட இன்னும் அதிக பணம் ("கடனோ" கிரடிட் கார்டோ) செலவழித்து படிக்க வைத்து நல்லதொரு வேலை கிடைத்த பின் (அவன் அல்லது அவள்) அவர்களுக்கேற்ற பெண்ணை அல்லது ஆணை தேடிபிடித்து திருமணம் செய்வித்து பெண் வீட்டார்  சீதனமாய் கொடுத்த காரோ மாதம் வட்டியுடன் செலுத்தி வாங்கிய காரிலோ  உட்கார்ந்து பிள்ளைகள் உலாவருகின்ற காட்சியை காணுகின்ற பெற்றவர்கள் சாகும் முன்பே சொர்கத்தை பூமியிலே காணுகின்ற சந்தோசம் அடைத்து விட்டோம் என்றிருந்த சமயத்தில் இன்னொரு கனவும் நிஜமாகும் வகையில் பிள்ளைகள் வெளிநாட்டிற்கு சென்று இன்னும் அதிக சம்பாதனை வசதிகளுடன் வாழும் வாய்ப்பு கிடைத்து விட வாழ்க்கை என்பது இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று அடுத்த பாமர கூடமொன்று அதே வழியை ஏக்கம் கொண்டு பின் தொடரும். இது ஒரு தொடர் கதை.

இரவென்றும் பகலென்றும் பாராமல் உழைத்தவர் தன் நலனில் சிறிதும் கவலையின்றி சரியான உணவு உண்ணவும் உறங்கவும் பலவருடம் மறந்து விட்ட பாமர மக்கள் கூட்டம் நீரிழிவு, இரத்த கொதிப்பு என்று நவீன மருத்துவம் கூறும் அத்தனையும் உடலை குத்தகை எடுத்து வந்து சேர்ந்து, சிலருக்கோ நரம்பு வியாதியினால் மறதி நோயும், வித வித நோயெல்லாம் படையெடுத்து ஒவ்வொரு பரிசாக இறுதி யாத்திரைக்கு அவரை வெகு விரைவில் தயாராக்கும். இந்நிலையில் அதுவரையில் யாருக்காக உழைத்தாரோ அவரைக் காண மனம் எங்கும், "அவரை கடைசியாக ஒருமுறையாவது கண்டுவிட்ட பின்னர் என்னுயிர் போனால் நிம்மதி" என்று உள்மனம் கிடந்து தவிக்கும், துடிக்கும், வெளிநாட்டில் வேலை என்றால் மாதமொருமுறை பெற்றோரை வந்து பார்த்துவிட்டு போக இயலுமா, எப்படியோ உடல் நலக்குறைவு பற்றி செய்தி அறிந்தாலும் மருமகனோ மருமகளோ "நீங்கள் சென்று பார்த்தால் மட்டும் போற உயிர் தாமதமாக போகப்போகிறதா என்ன" என்ற கேள்விகளுக்கு பதிலாக  "என்னை படிக்க வைக்க எவ்வளவு கஷ்ட பட்டார்கள் என்று உனக்கு தெரியுமா" என்று கூறிவிட எத்தனை பேருக்கு "தன்மானம்" தடுக்கிறது என்பது எனக்கு தெரியாது, அப்படி தான் பதில் சொன்னால் தங்களுடைய கஷ்ட காலங்களை பற்றி சொல்லியாக வேண்டுமே என்கின்ற குற்ற உணர்வு எத்தனை பேருக்கு உள்ளது என்பது எனக்கு தெரியாது. ஒன்று மட்டும் எனக்கு தெரியும், பெற்றோர் தங்களது எதிர்காலமே பிள்ளைகள் என்று நம்பினார்கள் அதற்காக தங்களது "வருமான"த்தையே முதலீடாக செலுத்தினார்கள். இப்போது அடுத்த தலைமுறை தற்போது  "தன்மானம்" அல்லது "வருமானம்" இரண்டில் எதை பிரதானமாக தங்கள் வாழ்க்கையில் முன்வைத்து செயல்பட போகிறது. பார்க்கலாம்.

"சம்+பாதியம்"  சம் என்றால் சம்சாரம் அல்லது சம்(திங்), சம் என்பதை ஆங்கிலத்தில் sum- money என்ற பொருளும் உண்டு, thing அல்லது think, திங் என்றால் நாம் அறிந்தபடி எல்லாவித பொருட்களை அல்லது உடைமைகளை அவ்வாறு ஆங்கிலத்தில் கூறுவார், தங்கள் சம்சாரத்திற்கு தேவையான பொருட்களை (உடைமைகளை) வாங்குவதற்கு ஈட்டுகின்ற பணம் என்ற பொருளாகிறது. இதில் "திங்க்" எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். சிலர் தங்கள் பணத்தை வைத்து அல்லது ஈட்டுவதற்கு பலவித யோசனைகளை கையாள்கின்றனர் அதனால் "திங்க்" என்பதற்கும் இங்கே அவசியம் உள்ளது. அதே "திங்க்" மூளைதிறனை செயல்படுத்தவும் செயலை தவிர்த்து உறக்கம் கொள்ளவும் "சம்" இல் "பாதி"யும் செலவழித்து, சிலர் தங்களது "ஊதி"யம் என்பதே "ஊத்தி" கொள்ள மற்றும் "ஊதி" (புகைத்து) தள்ளுவதற்கு என்றும் நம்புகின்றனர். இவற்றில் ஏதேனும் ஒன்றை பற்றிக்கொண்டு தங்கள் சுய நினைவை இழந்து மிக சிறந்த "குடிமகனாக" வாழும் வாழ்க்கை மட்டுமே நிரந்தர நிஜமாகிறது.

இதில் இருதரப்பினரும் தங்களது சுய நினைவை இழக்க நேருவதுதான் கொடுமை, அல்லும் பகலும் அயராமல் உழைத்து தன் மக்களை உயர்த்தி பார்க்க நினைத்தவரும் நோயால் மறதிக்குள் உறைந்து போனார், அவ்வாறு உயர்ந்த நிலைக்கு வந்தவர் பின்னர் தன் சுய நினைவை இழந்து கிடக்க மதுவே கதியென்று நம்புகின்றார். "மறதி" என்பது மனிதனுக்கு தேவைப்படுகின்ற சமயங்களும் உண்டு, ஒரு குறிப்பிட்ட வயதில் மறதியை குறைப்பதற்கு  மருத்துவரின் ஆலோசனை பெற்று நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டியவை மிகுந்திருந்தது. தான் அல்லது தனது பெற்றோர் நினைத்த இடத்தை வந்து அடைந்த பின்னர் அல்லது (சிலர்) அடைய இயலாமல் போன பின்னர் மறதியின் அவசியம் வந்துவிடுகிறது. இந்த "மறதி" என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்தால் மனிதன் என்னவாகி இருப்பான்? தெரியவில்லை.





சனி, 1 ஜூன், 2013

அகத்தின் அழகு முகத்தில் தெரியுமா

இரவு பத்து மணிக்கு மேல் பேருந்து கிளம்பும் என்று சொல்லப்பட்டது, இரவு பயணிகள் உறங்கும்போது உபயோகிகின்ற ஐந்து வாட்ஸ் விளக்கு போடப்பட்டிருந்தது, பயணிகள் ஒருவரின் முகத்தையும் காண இயலவில்லை, பேருந்து கிளம்புவதற்கு சில நிமிடங்களே இருந்ததால் அவசரமாக அதில் அமர்ந்துகொண்டு இருக்கையில் நமக்கு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருப்பவர் யார் என்பதை பார்கைகூட முடியவில்லை, இரவு பயணம் என்பதால் எல்லோரும் இருக்கையிலேயே உறங்கிய நிலையில் இருந்தனர், எனக்கு பேருந்து பயணம் முற்றிலும் புதிது, அதிலும் பேருந்தில் ஊர் பிரயாணம் நான் அறிந்திராத ஒன்று. உறக்கத்தை வருந்தி அழைத்தாலும் வருவதாக இல்லை. அங்கேயே குடியிருக்கும் கொசுக்களுக்கு உணவாக ரத்த தானம் கொடுக்கவேண்டிய கட்டாயமிருந்தது. குளிர் சாதனம் பொருத்தப்பட்டிருப்பதாக நம்மிடம் சொல்லி அதிக பணம் வசூல் செய்து விடுவதால் இயற்க்கை தருகின்ற காற்றை உள்ளே நுழைய விடாமல் சன்னல்கள் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன. உள்ளே சுவாசிக்கின்ற காற்றைத்தவிர வேறு காற்று புகுவதற்கு வழி இருக்குமோ என்னவோ தெரியவில்லை.

பேருந்து வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது திடீரென்று பயணிகளில் ஒருவர் 'வண்டிய நிருந்துங்க' என்று சத்தம் போடுகிறார், உறங்கியவர்களில் சிலர் விழித்துக்கொண்டனர், நடத்துனர் வந்தார் 'யாரப்பா அது'... என்று கேட்டுக்கொண்டு 'என் அப்பாவுக்கு நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாரு பையிலிருந்த புட்டியிலிருந்து தண்ணீர் கொடுத்தேன் ஆனால் அவர் மயங்கி விழுந்துவிட்டார்' என்றார். பேருந்து நிறுத்தப்பட்டது, நிறுத்தப்பட்ட இடம் எங்கு என்பது தெரியவில்லை. கடைகளோ ஆள் நடமாட்டமோ அங்கு காணவில்லை. இன்னும் ஒரு மணி நேரம் போனால் ஒரு ஊர் வரும் ஆனால் அங்கு மருத்துவமனைகள் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை என்றார் கூட்டத்தில் ஒருவர். வேறு வழியின்றி பேருந்து பயணம் மீண்டும் தொடர்ந்தது. ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் ஒரு நகரமோ அல்லது மருத்துவமனையோ வரவில்லை என்பதால் பயணம் மீண்டும் தொடர்ந்தபோது ஒரு குறிப்பிட்ட இடத்தை பேருந்து கடந்து கொண்டிருக்க 'இங்கே நிறுத்தினால் தாங்கள் அங்கேயே இறங்கி கொள்வதாக உடல் நலமில்லாதவருடன் வந்தவர்  கூற அவ்வாறே பேருந்து நிறுத்தப்பட்டது பேருந்திலிருந்து அவர்கள் அங்கே இறங்கிக்கொண்டனர்.

காலை பொழுது விடிந்து மணி ஆறானது, வெளியில் வெளிச்சம், பேருந்தின் கடைசி நிறுத்தம், இருக்கைகைகளில் சில இருக்கைகள் ஆளில்லாமல் இருந்தது, அதுவரையில் நிம்மதியாக உறங்கிக்கொண்டு வந்த ஒருவர் 'அய்யய்யோ இங்க வச்சிருந்த என் பைய காணோமே' என்று கூவத்தொடங்கினார். அனைவரும் அவரை பார்த்தனர், நடத்துனர் வந்தார், 'என்னப்பா என்ன ஆச்சு' என்றார். 'இங்கேதான் என் பைய வச்சிருந்தேன் பையில என் மகள் கல்யாணத்திற்கு என் வீட்டு பத்திரத்த அடகு வச்சு கடன் வாங்கிய ரொக்கப்பணம் ரெண்டு லட்சம் வச்சிருந்தேன். பையை காணலையே' என்றார் பரிதாபமாக. பக்கத்துல உட்கார்ந்து இருந்தவங்களையும் காணோமே அவங்க என்கிட்டே  கடைசி நிருத்தத்துலதான் இறங்க போறோம்ன்னு சொன்னாங்க......' என்றார் பரிதாபமாக.


வியாழன், 30 மே, 2013

இரவல்

சொந்தக்காரர் ஒருவரின் திருமணத்திற்கு செல்வதற்காக அடுத்த வீட்டுக்கார பெண்ணிடம் ஆறு பவுன் இரட்டைவட சங்கிலியை வாங்கி கழுத்தில் அணிந்து சென்ற ஒரு அம்மா, அன்றிரவு திருமண வீட்டில் தங்கி விட்டு மறுதினம் வீடு திரும்பிய பின்னரும் இரட்டைவடம் சங்கிலியை அதன் சொந்தக்காரரிடம் திருப்பிக் கொடுக்கவில்லை, எப்படி கேட்பது என்று தயங்கிய அடுத்த வீட்டு அம்மா அதை மெதுவாக தனது கணவனிடம் தெரிவிக்க கணவனுக்கு வந்ததே கோபம், தன்னை கேட்காமல் கொடுத்ததால் அந்த பிரச்சினை பற்றி தன்னிடம் எதையும் சொல்லவேண்டாம் என்றார். ஒருவழியாக நான்காவது நாள் நகையை கேட்க அடுத்த வீட்டுக்கு சென்றால் கதவு பூட்டி கிடந்தது ஆச்சரியமாக இருந்தது. காரணம் எங்கு செல்வதென்றாலும் தன்னிடம் தெரிவிக்காமல் அடுத்தவீட்டு அம்மா செல்வதில்லை என்பதால். எங்கே சென்றுவிட முடியும் அந்த ஊரும் வீடும் அவர்களது பூர்வீகம் தானே என்ற தைரியத்தில் நகை கொடுத்தவர் காத்திருந்தார். நாட்கள் மாதங்களாகியும் வீட்டை திறப்பதற்கு யாரும் வரவில்லை.

நகையை வாங்கி சென்ற அம்மா சென்னையில் வசித்துக்கொண்டிருந்த தனது மூத்த மகளிடத்திற்கு வந்து தங்கிவிட்டார். மூத்த மகளை திருமணம் செய்து இருப்பது அவருடைய இரண்டாவது தம்பி என்பதால் அங்கு வந்து தங்கிய இரண்டாவது வாரத்தில் தான் அடுத்த வீட்டுகார அம்மாவிடம் நகையை வாங்கிகொண்டு திருமணத்திற்கு சென்று அங்கேயே இரவு தங்கி விட்டு மறுநாள் வீடு திரும்பிய பிறகுதான் இரட்டைவட சங்கிலி தனது கழுத்தில் காணவில்லை என்று தான் அறிந்ததாக தனது தம்பியிடமும் மகளிடமும் தெரிவிக்கிறார். கணவனை சிறுவயதிலேயே பறி கொடுத்துவிட்டு தனியாக நின்று குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்த தனது மூத்த சகோதரிக்கு உபகாரம் செய்ய நினைத்த அவரது தாயும் தம்பியும் எவ்வித சீரும் இல்லாமலேயே அவரது ஒரே மகளை திருமணம் செய்தத்துடன் இரண்டாவதாக வளர்ந்திருந்த மகனையும் தனது தொழிலுக்கு உதவியாக தன்னுடனேயே வைத்து கொண்டிருப்பதுடன் தற்போது அடுத்த வீட்டுக்காரரின் நகை பிரச்சினையை எடுத்து வந்திருக்கும் தமக்கை மீது கோபம் கொப்பளித்தது தம்பிக்கு.

உண்மையாகவே சங்கிலி தொலைந்து விட்டதா அல்லது ஏதாவது ஏடாகோடம் [கோல்மால்] செய்துவிட்டு பொய் சொல்கிறாளா என்பது பற்றி விவரம் அறிந்த எவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. வேறு வழி தெரியாத தம்பி ஊர் சென்று ஆறு பவுன் இரட்டைவட சங்கிலி வாங்கி அடுத்த வீட்டுகார அம்மாவிடம் கொடுத்துவிட்டு வருவதற்காக சென்றபோது அவர்கள் வீடு போர்களம் போல கிடப்பதை கண்டு சற்றே தயங்கி, அவர்களை அழைத்தபோது வீட்டுகார அம்மாவின் கணவர் வெளியே வந்தார், அவரிடம் தவறுதலுக்கு மன்னிக்க சொல்லி, உத்திரவாதத்திற்கு ஊர் பெரியவர்களை அழைத்து சங்கிலியை திரும்ப கொடுத்தார். அதற்குள் அந்த வீட்டுகார அம்மா அதாவது தங்க சங்கிலியின் சொந்தக்காரர் கணவனுக்கு தெரியாமல் தான் சங்கிலி கொடுத்ததால் வீட்டில் ஏற்ப்பட்ட சண்டையில் தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.

அடுத்தவீட்டுக்காரரிடம் தங்க சங்கிலி இரவல் வாங்கி அணிந்துகொண்டு திருமணத்திற்கு போனால்தான் தன்னை அங்கு வந்திருக்கும் மற்றவர்கள் மதிப்பார்கள் என்று நினைத்த பெண் என்ன ஆனார், மகள் வீட்டில் இருந்த அவர் ஒருநாள் மொட்டை மாடியில் வடம் உலர்த்த சென்றவர் தவறி விழுந்து இரண்டு கால்களும் மண்டையும் உடைந்தது. உயிர் போகவில்லை பலமான அடி பல ஆயிரம் செலவு செய்தும் திரும்பவும் இயல்புநிலைக்கு திரும்பாத உடல்நிலையுடன் பலகால போராட்டம்.


புதன், 29 மே, 2013

காஞ்ஜிவரத்தம்மா

நெற்றியில் ஒரு ரூபாய் நாணயத்தை விட பெரிய குங்குமப்பொட்டு, தலையில் கொண்டய் மீது நிறைய பூ, உயர்ந்த உருவம், அடுத்த வீட்டு ஆண்கள் கூட நிமிர்த்து பார்க்க யோசிக்க வைக்கும் தைரியம், அவரது பெயர் என்னவென்று அங்குள்ள ஒருவருக்கும் தெரியாது ஆனால் அப்பகுதியில் 'காஞ்ஜிவரத்தம்மா' என்ற பெயர் பிரபலம். குடிசைகள் நிறைந்த அப்பகுதி நகரத்தை விட்டு குறைந்தது 35 அல்லது 40 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. 1960களில் "மதமாற்று தடைச்சட்டம்" இல்லாத காலம், வெள்ளை உடை அணிந்துகொண்டு பைபிள் [விவிலியம்] பற்றி செய்திகளை தெருக்களில் சத்தம் போட்டு சொல்லி வந்த காலகட்டம். அப்பகுதியில் வாழ்ந்த பெரும்பான்மையினர் படிப்பறிவு அற்ற சமுதாயம் என்பதால் துண்டு பிரசுரங்களை கொடுத்து அல்லது இலவச பைபிள் கொடுத்து படிக்க சொல்ல இயலாது, வீதி வீதியாகவும் வீடு வீடாக சென்றும் உபதேசங்கள் வழங்கப்பட்டது. அவ்வாறு வீடு வீடாக சென்று பைபிளில் உள்ள சில முக்கிய விஷயங்களை எளிய முறையில் எடுத்து சொல்லியவற்றுள் காஞ்ஜிவரத்தம்மாளுக்கு ஏதோ ஒன்று மூளைக்குள் புகுந்துவிட்டு அவரை கனவிலும் நிஜத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்தியது. வெள்ளை உடையணிந்து உபதேசம் சொல்பவர்களை வருந்தி அழைத்து இன்னும் பலவற்றை கேட்டு அறிந்தார்.

நாளடைவில் காஞ்ஜிவரத்தம்மாவும் அவர்களைப்போலவே வெள்ளை உடைக்கு மாறியதுடன் தவறாமல் உபதேசங்களை கேட்க்கும் ஆர்வத்தில்  அவர்கள் கோவிலுக்கு சென்று வந்தார். அவரது குடும்பத்தினர் அனைவரும் குடும்பத்தலைவியின் வழியே சிறந்ததாக கருதி பின்தொடர்ந்தனர். அதுவரையில் அவரையும் அவரது குடும்பத்தினரையும் பார்த்து வந்த சுற்றுபுரத்தாருக்கு அந்த அம்மாவின் இத்தகைய மாற்றம் பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது, அவரது உடை மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த நடத்தையும் முற்றிலுமாக மாற்றப்பட்டதுதான் அவர்களது ஆச்சரியத்திற்கு மிகவும் முக்கிய காரணம். பைபிள் வாசித்து இன்னும் அறிந்துகொள்ள தனக்கு படிப்பு இல்லையே என்பது அந்த அம்மாவின் மிகப்பெரிய வருத்தம்.

அந்த அம்மாவின் மூத்த மகனுக்கு திருமணம் நடந்தது. மருமகள் வேற்று சாதி [உயர்சாதி] பெண், அவரும் இவரைப் போன்று சூழ்நிலையால் மதம் மாறியவர்கள் என்பதால் சாதியை பற்றி பெரிதுபடுத்தாதவர்கள். திருமணமாகிய பின்னர் மருமகளுக்கு முதல் பிரசவம், வீட்டில் பிரசவமான ஒரு வாரத்தில் மருமகளுக்கு கர்ப்பை புண்ணாகி உடல்நிலை மிகவும் மோசமாகியது.  அடுத்த வீட்டில் வசித்துவந்தவர் அந்த பெண்ணின் நிலையை அறிந்து உடனே மருத்துவமனைக்கு எடுத்து செல்லுமாறு வற்புறுத்தினார். அவரது மகன் தனது மனைவியை மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோது மருத்துவர் அந்த மோசமான நிலைக்கு வருவரைக்கும் வீட்டில் மருமகளை வைத்திருந்ததற்காக திட்டினார். எனினும் அவர் மிகுந்த போராட்டத்திற்குப் பின்னர் உடல்நலம் பெற்று வீடு திரும்பினார்.

காஞ்ஜிவரத்தம்மாவிடம் இதைப்பற்றி விசாரித்தபோது, அவர் கூறியது வியப்பை மட்டுமல்லாது படிப்பறிவு எந்த அளவிற்கு மனிதர்களுக்கு அவசியம் என்பதை உணர்த்தியது. அவர் கூறிய பதில் " நாங்கள் எந்த நோய் வந்தாலும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மாட்டோம், தானாகவே குணமாகிவிடும்" என்றார்கள். உடல் நலமில்லாமல் போனால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, அதற்காக ஜெபம் மட்டும் செய்வோம் என்றார். மருந்து சாப்பிடகூடாது மருத்துவரிடம் எடுத்து செல்லக் கூடாது என்று உங்களுக்கு யார் கூறியது என்று கேட்டால், அப்படித்தான் அவர்கள் கோவிலில் உள்ளவர்கள் செய்வது வழக்கம் என்றார்.

அவர் கூறிய இந்த கருத்தின் அடிப்படை என்பது "கடவுளின் மீது அப்பாரத்தை வைப்பது" என்பதை குறிக்கிறது என்றாலும் அதற்க்கான வழி அல்லது முறையில்தான் தவறு உள்ளது என்பது விளங்கியது. நோயாளி குணமாகவில்லை என்றால் அது அவரது விதி என்று சொல்ல முடியாது, மாறாக "கடவுள் மீது நம்பிக்கை" வைக்கின்ற நபர்கள் அதன் அடிப்படை விதிகளையும் கடைபிடிப்பது அவசியம். அடிப்படை விதிகளை [கடவுள் நம்பிக்கை] நோயாளியும் நோயாளிக்காக வேண்டுதல் செய்யும் நபர்களும் முற்றிலுமாக முழுமனதுடன் ஏற்றுகொள்வதும் நம்புவதும் அவசியம். நோய்வாய் இருக்கின்ற காலத்தில் தினமும் நோய் தீரும் வரையிலாவது விடாமல் தினமும் ஜெபம் செய்தல் அவசியம், குடும்பத்தார் மட்டும் இதை கடை பிடிக்காமல், அதற்கான முக்கிய நபரை அழைத்து ஜெபம் செய்வது என்பதும் மிகவும் அவசியம்.

வெறும் மருத்துவமும் சிகிச்சையும் கூட பலரின் வாழ்வை காப்பாற்ற இயலாத சூழல் பெரும்பான்மையாக காண முடிகிறது. கடவுள் நம்பிக்கையுடனான மருத்துவம் எப்போதுமே முழு பலனை அளிக்கும். பலர் "கடவுள் நம்பிக்கை" என்பதை அவசியத்திற்கு மட்டும் உபயோகப்படுத்துவதை பார்க்கலாம். "கடவுள்" நம்பிக்கை என்பது திருடுவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் தீய வழிகளில் நடப்பவர்களுக்கும் எதிர்மாறானது. கொள்ளையடித்த மற்றும் லஞ்சம் வாங்கிய தொகையை கொண்டு கோவில் கட்டுவதோ, கடவுள் சம்பந்தப்பட்ட காரியங்களை செய்வதோ கடவுளுக்கு எப்படி ஏற்ப்புடையதாகும். பணத்தால் எதையும் செய்துவிட முடியும் என்ற நினைப்பில் வாழ்க்கை முழுதும் வாழ்ந்துவிட்டு, பணத்தால் நடக்காது என்று தெரிந்த பின்னர் "கடவுளை" பற்றிகொள்வதற்கு முன்பு பாவ பணத்தை தூக்கி எரிந்துவிடுதல் ஓரளவு "கடவுள் நம்பிக்கைக்கு" அஸ்திபாரம் போடுவதாக இருக்கும். அப்படி யாரேனும் தவறான முறையில் சேர்த்து வைத்த சொத்துக்களை வேண்டாம் என்ற முழு மனதுடன் செயல்படுவாரா என்பது கேள்வி.

இங்கு நான் சொல்ல நினைத்தது, "கடவுள் நம்பிக்கையை தொடர்புடைய காரியங்களை செய்யும்போது அது முழுப் பலனை கொடுக்கவில்லை என்றால் அதற்க்கு காரணம் மதம் அல்லது கடவுள் அல்ல, உபதேசத்தை கேட்டு அதன்படி நடந்தவர் அதை முறையாக கைகொள்வதில்லை என்பதே". ஒருசமயம் காஞ்ஜிவரத்தம்மா படிப்பறிவு உடையவராக இருந்திருந்தால் விவேகியாக இருந்திருக்க கூடும், கடிதம் படித்து சொல்வதற்கு படிக்க தெரிந்த யாரை வேண்டுமானாலும் அணுகலாம் ஆனால் உயில் எழுதுவதற்கும் எழுதிய உயிலை படித்தறியவும் அதற்க்கான பயிற்சி பெற்ற வக்கீலை அணுகவேண்டும் என்பதுதானே முறை. அதைபோன்றுதான் மதமும் அதைப்பற்றிய முழு விவரங்களை அறிந்து தேர்ந்தவரிடம் கற்றுகொள்வதும் அதன் பின்னர் அதை பின்பற்றுவதும் மட்டுமே சிறந்தது. மழை பெய்த பின் நிலத்தில் திடீரென்று பல காளான்கள் முளைத்தாலும் எல்லா காளான்களும் உணவாக உட்கொள்வதற்கு சிறந்தது அல்ல. எத்தனையோ தாவரங்கள் உலகில் இருந்தாலும் எல்லா தாவரமும் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உணவாவதில்லை. அதை தேடி அறியாமல் உட்கொண்டு மாண்டவர்கள் கதைகளும் உண்டு. அதுபோன்றதுதான் கடவுள் நம்பிக்கையும் மதமும்.



திங்கள், 27 மே, 2013

பசுமரத்தாணி


என் தகப்பனாருக்கு நிறைய பால்ய நண்பர்கள் உண்டு, ஐந்து ஆறு வயதில் இருந்து நண்பராக இருந்தவர்களுள் கண்ணன் அங்கிள் எனக்கு மிகவும் பிடித்தவர். என் அப்பாவை அவர் எப்போதும் வாடா போடா என்று உரிமையுடன் பேசுவதை நான் எனது சிறு வயது முதல் பார்த்து ரசித்து வந்திருக்கிறேன். என் அப்பாவின் வாழ்க்கையில் ஒன்றரக் கலந்தவர் கண்ணன் அங்கிள். எனக்கு கருத்து தெரிய ஆரம்பித்த போது  என் அப்பாவிடம் அவர்கள் நடப்பு துவங்கியதை பற்றி மிகவும் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டேன். வறுமையின் கொடுமையில் வாழ்ந்த ஒரு விறகு வெட்டியின் ஒரே மகன் கண்ணன், சோறு என்பதை பார்ப்பதே அரிது, கிராமத்தில் விளையும் கேழ்வரகு  கிடைத்தால் அதை கொண்டு கூழ் செய்து சாப்பிடுவதும்  பல சமயம் பட்டினியுடன் இருந்தவர் கண்ணன், தான் பட்டினியாக இருப்பதை ஒருபோதும் வெளியே காண்பித்து கொள்வது கிடையாது, கால்பந்து மைதானத்தில் அப்போதைய முக்கிய கால்பந்தாடக்காரர்கள் விளையாடுவதை [பயிற்சி] பார்க்க நண்பர்கள் அனைவரும் செல்வதுண்டு. அங்கே விளையாடும் புகழ் பெற்ற வீரர்கள் பயிற்சியில் இறங்கும் முன்னர் கழட்டி கொடுக்கின்ற கைகடியாரம் மற்றும் ஷர்ட் போன்ற உடைகளை பாதுகாப்பாக வேடிக்கை பார்க்க சென்றிருக்கும் என் அப்பா அல்லது எனது பெரியப்பாவிடம் கொடுத்துவிட்டு செல்வார்கள். ஆனால் கண்ணன் அங்கிள் பந்து விளையாடுகின்ற மைதானத்தை விட்டு வெளியேறி விட்டால் ஓடிச்சென்று அதை எடுத்து வருவதை விரும்பி செய்வார்.

பிறகு நாளடைவில் கால்பந்தாட்டம் கற்றுக்கொண்டு இவர்கள் ஜூனியர் டீம் அமைத்து விளையாடும்போது கண்ணன் அதிகம் சோர்வடைந்து உட்கார்ந்து விடுவார், பல நாட்கள் விளையாடுவதை தவிர்த்து தவறி வெளியே வீசப்படும் பந்தை எடுத்து கொடுக்கும் உதவியை மட்டும் செய்து விட்டு சோர்வடைந்து உட்கார்ந்து கொள்வார். அவரது இந்த சோர்விற்கு அர்த்தம் விளங்காமல் என் அப்பா கண்ணனிடம் உண்மையை சொல்லுமாறு வர்ப்புருத்தினார்.  உண்மையை கண்ணன் அங்கிள் சொல்லவில்லை, ஆனால் அவரது குடிசைக்கு சென்று விளையாட கூப்பிடும்போது அவரது தாயார் கூறிய பதில் அவரது உண்மை நிலையை உணர்த்தியது. அன்று முதல் வீட்டில் கண்ணனும் ஒரு உறுப்பினராக ஆக்கப்பட்டார். பல சமயங்களில் வீட்டில் சாப்பிட வெட்கம் கொண்டு அதையும் தவிர்த்து வந்தார், ஆனால் அவரது வீட்டிற்கு தேவையான சாப்பாட்டை எடுத்து சென்று அவரது அம்மாவிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுவார்களாம் என் அப்பாவும் எனது பெரியப்பாவும்.

கண்ணன் அங்கிள் பற்றி சொல்வதென்றால் அவர் ஒரு அன்பு கடல், பிறரிடம் அன்பு செலுத்துவதை தவிர அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது. திருமண வாழ்க்கை துவங்கிய போது நிலைமை மாறவில்லை, மாறாக என் தாயாரும் நட்ப்பை புரிந்து கொண்டவர்களாகவே இருந்தனர் கண்ணன் ஆன்டியை பற்றி அதிகம் தெரியவில்லை, என் பெற்றோரின் வாழ்வில் பல இடுக்கண்கள் ஏற்பட்ட தருணங்களில் கண்ணன் அங்கிள் மட்டுமே உதவிகரம் நீட்டினார். என் தாயார் கண்ணன் அங்கிளை "மனிதருள் மாணிக்கம்" என்றே கூறுவார். இன்று நினைத்தாலும் கண்ணன் அங்கிள் மீது ஏற்பட்ட அந்த பாசம் எனக்கு இன்றளவும் குறையவே இல்லை. எனது பெற்றோர் என்னிடம் அவர்களது நட்பையும் மீறி பல சந்தர்ப்பங்களில் அவரது அன்பும் அரவணைப்பும் ஏனைய உறவுகளைவிட அதிகமாகவும் அவசியமானதாகவும்  இருந்தது பற்றி சொன்னதுதான் அதற்க்கு காரணம். அவர்கள் சொன்னது போலவே கண்ணன் அங்கிளும் அன்பின் அவதாரமாகவே இருந்தார் என்பதை என் கண்கூடாகவே கண்டிருந்தேன்.

கண்ணன் அங்கிளுக்கு இரண்டு ஆண்கள் ஒரு பெண் இருந்தனர், அவர்கள் அனைவரும் என்னைவிட குறைந்தது பத்து வயது அதிகம் உடையவர்களாக இருந்ததால் அவர்களை நான் 'அண்ணன் அக்கா' என்றே அழைப்பேன். நான் பிறப்பதற்கு முன்பே அவர்கள் பிறந்திருந்ததால் நடந்த சம்பவங்களை கேட்டு எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது, கண்ணன் அங்கிள் வீட்டிற்கு எனது பெற்றோர் அடிக்கடி சென்று தங்குவது  பிடிக்காமல் என் அப்பாவிடம் [கண்ணன் அங்கிள் வீட்டில் இல்லாத சமயத்தில்] அண்ணனும் அக்காவும் வீண் வார்த்தைகளை சொல்லி வீட்டிற்கு வராமல் தடை செய்வதுமாக இருந்தனர். அண்ணனுக்கும் அக்காவிற்கும் தங்கள் தகப்பன் எங்களது [பெற்றோரின்] உபசரிப்பிற்க்கு செலவு செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் போனது. அதனால் என் பெற்றோரை வெறுத்து ஒதுக்கி வந்தனர். நான் என் தகப்பனாரிடம் கேட்டு தெரிந்து கொண்டதைப்போல எனது தகப்பனாருடன் கண்ணன் அங்கிளின் நட்ப்பைபற்றிய விவரங்களை அவர்கள் தங்கள் தகப்பனிடம் கேட்டு அறிந்து கொள்ளவில்லை என்பது எனக்கு விளங்கியதுடன் அவர்கள் சுபாவம் கண்ணன் அங்கிளுக்கு நேர்மாறாக இருந்ததும் இன்னொரு காரணம்.

சில நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் பெற்றோரிடம் கொண்டுள்ள உறவின் நிலை என்னவென்று நாம் அறிந்திருந்தாலும் அறிந்திராவிட்டாலும் வீடு தேடி வருகின்றவர்களை ஏளனமாக நினைப்பது மற்றும் தகாத வார்த்தைகளை கூறி வருத்தப்படுத்தி திருப்பி அனுப்புவது மிகவும் கொடுமையான பாமரச் செயல். "அடிக்கடி வீட்டிற்கு வந்து உபத்ரவம் செய்யாதே" என்று சொல்வது நாகரீகமற்ற செயல். மதுபானம் குடிப்பதற்கு பணம் கேட்டு நமது வீட்டை தேடி வந்து தொல்லை கொடுத்தால் தவிர்க்க வேண்டியதுதான். நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருப்பவர் சோம்பேறியாக இருந்து கொண்டு அடிக்கடி உதவி கேட்டு வீடு தேடி வந்தால் முடிந்தால் உதவலாம், அல்லது நமக்கே பற்றாக்குறை இருப்பின் அதை பக்குவமாக எடுத்துக் கூறினால் அவர் மனம் புண்படுவதை நாம் தவிர்க்கலாம். பொதுவாக இளம் தலைமுறையினருக்கு சிறுவயது முதலே தங்கள் குடும்ப நண்பர்கள் உறவினர்களைப்பற்றிய விவரங்களை சொல்லி கொடுத்து வளர்ப்பது இது போன்ற "தலைமுறை இடைவெளி"யை தவிர்க்க உதவும் என்று நான் நம்புகிறேன்.

வீடு தேடி வருகின்ற நண்பர்கள் மற்றும் உறவினர்களை சிலர் தங்கள் குழந்தைகளின் கவனத்தை கவரும் வண்ணமாக முணு முணுப்பது வசைபாடுவது போன்ற செய்கைகளை பார்த்து வளருகின்ற குழந்தைகளின் மனதில் அதே போன்ற செய்கைகள் வேரூன்ற காரணமாகி விடுகிறது.  உறவினர்கள் மற்றும்  நண்பர்கள் மீது நமக்கிருக்கின்ற பகமை உணர்வுகளை குழந்தைகளுக்கு ஊட்டி விடுவது பகையுணர்வை உண்டாக்கும் வழிகள். பொதுவாக பெண்கள் தங்கள் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் சிநேகமாக இருப்பதை போன்று கணவனின் உறவினர்களிடம் நண்பர்களிடம் சிநேகமாக இருப்பது கிடையாது. அதையே பார்த்து வளர்க்கப்படுகின்ற குழந்தைகளும் அதே வழியை பின்பற்றுபவர்களாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மனிதநேயம் என்பதை வளர்க்கின்ற அல்லது துவக்குகின்ற முதல் ஆசான் பெற்றோர்தான், குழந்தைகளின் சிறுவயதில் எதையெல்லாம் பார்த்து கேட்டு வளருகின்றார்களோ அதையே அவர்களும் பின்பற்றுவது இயற்க்கைதானே. குடும்பத்திற்குள்ளே கற்று கொடுக்கப்படுகின்ற பாடம் தான் குழந்தைகளின் முதல் கல்வி என்பதை பெரியவர்கள் முதலில் உணர்ந்து செயல்படுதல் அவசியம்.


வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

சில துர்தேவதைகள்

கெட்டவர்கள் நிறைந்த உலகம் அநியாயத்திற்கு நல்லவர்களையும் இந்த உலகம் உள்ளடக்கி துன்புறுத்துகிறது , அந்த நல்ல மனிதர்களை காணும் வாய்ப்பை பெறுகின்ற போது, அதனை நமது மனம் மறக்க இயலாத ஒன்றாக பதிவு செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கிறது. எனது அனுபவத்தில் நான் பார்த்த அத்தகைய மனிதர்களுள் சிலரைப்பற்றி எழுதுவதென்று தீர்மானித்தேன், இவர்களை நான் வெறும் மனிதர்களாக எண்ணுவதே கிடையாது கடவுளின் படைப்பில் எத்தனையோ அபூர்வங்களில் இவர்களும் சிலர் என்றே எண்ணுகிறேன். முதலில் என் எழுத்திற்குள் வருகின்ற நபர் என் உறவினர் என்பதால் என் குழந்தைப்பருவம் முதலே அவரை கவனிக்க முடிந்தது. இவருக்கு குறிப்பிட்ட வயதில் திருமணம் முடிக்க இவரது பெற்றோர் இல்லை என்கின்ற காரணத்தால் இளமை முழுவதும் என்னுடன் கழித்தார், அவரை பிரிந்தால் எனக்கு காய்ச்சல் வந்துவிடும் அளவிற்கு எனக்கு அவர் மீது எல்லையற்ற பாசம், அப்போது எனக்கு ஐந்து வயதிருக்கும் ஒரு முறை அவருக்கு அம்மை போட்டு உடல் முழுவதும் கொப்புளங்கள் நிறைந்திருந்தது, அவருடன் இணைந்து ஒரே படுக்கையில் உறங்க கூடாது என்று எனது அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் என் பெற்றோரிடம் தவறாமல் சொல்லி வந்தனர், ஆனால் நானோ அவரை இறுக கட்டிபிடித்துக்கொண்டு உறங்குவதையே தொடர்ந்து செய்து வந்தேன் . அவரிடமிருந்து வலுகட்டாயமாக என்னை பிரித்தால் எனக்கு கடும் காய்ச்சல் வந்துவிடும் என்பதால் என் பெற்றோரும் என்னை அவரிடமிருந்து பிரிக்க முயற்ச்சிக்கவில்லை, எல்லோரும் பயந்ததைப்போல எனக்கு அம்மை போடவில்லை.

எனக்கு பத்து வயதிருக்கும் அப்போது அவருக்கு நாற்பது வயது அவரது சித்தப்பாவும் சித்தியும் திருச்சியில் பெண் பார்த்து திருச்சியிலேயே அவருக்கு திருமணம் முடித்தனர், மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்தபோது மணப்பெண்ணை முதலில் அருந்த சொன்னார், பிறகு அவர் சிறிது அருந்திவிட்டு மீதம் எனக்கு கொடுத்து அருந்த வைத்தார். அதை கண்ட மணப்பெண் என்ன நினைத்திருப்பார் என்பதை இப்போது என்னால் சிந்திக்க முடிகிறது. அவர்கள் இருவரும் சென்னையில் தனி வீட்டில் குடித்தனம் நடத்த துவங்கியபோது தினமும் தனது புது மனைவியுடன் மாலையில் என்னை வந்து பாரத்துவிட்டு செல்வார். அப்போதே என்னிடமிருந்து அவர் பிரியத்துவங்கிவிட்டார். ஆனால் எனக்கு பத்து வயது என்பதால் நிலைமையை முழுவதுமாக விளங்கிக்கொள்ள இயலவில்லை என்றாலும் அவரது பிரிவு எனக்கு காய்ச்சலை ஏற்ப்படுத்தவில்லை.

அவருக்கு முதல் பெண் குழந்தை பிறந்து இறந்துவிட, இரண்டாவது பெண் குழந்தையை அவரது மனைவி அவருக்கு பெற்று கொடுத்தார், இதற்கிடையிலே அவர் எங்கள் வீட்டிற்கு வந்து போவது முழுவதுமாக நின்றுவிட்டிருந்தது. ஆனால் எனது பெற்றோருடன் அவரது குழந்தையை நான் பாரத்துவிட்டு வருவதற்காக அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன், அவரை அதிக நாட்கள் கழித்து பார்த்ததில் எனக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி, நேராக சென்று அவரது கழுத்தை கட்டி பிடித்துக்கொண்டு முத்தமழை பொழிந்தேன், அவர் தனது மகிழ்ச்சியை அப்போது வெளிகாட்டிக் கொள்ளாமல் இருந்தார் என்பதை நான் அறியவில்லை, ஆனால் அவரது மாற்றம் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது என்பது உண்மை. அதை கவனித்த என் பெற்றோருக்கு சொல்லொண்ணா மன வருத்தம் [பின்னொரு நாளில் அறிந்தேன்]. நாட்கள் மாதமாகி மாதங்கள் வருடங்களாகியது.

அவர் எப்போதும் எங்கள் வீட்டுக்கருகிலேயே வசித்து வந்தார் என்பதால் நான் அவர் வீட்டிற்கு சென்று அவர்களை பாரத்துவிட்டு வருவேன், அவரோ அவரது மனைவியோ மகளோ எங்களை பார்க்க வருவதே கிடையாது. ஆனால் தினமும் எங்களது வீட்டை கடந்துதான் அவர் வேலைக்குச் சென்று வரவேண்டும் என்பதால் அவர் எங்கள் வீட்டை கடந்து செல்லும்போது எதிர்பாராமல் பார்க்க நேர்ந்தால் 'அவசரமாக சென்று கொண்டிருக்கிறேன்' என்று சொல்லிக்கொண்டே நிற்காமல் சென்றுவிடுவார். ஞாயிற்றுகிழமை அல்லது விடுமுறை நாட்களில் எப்போதாவது அவரது வீட்டிற்கு நான் போவதுண்டு, அவரது மனைவி என்னுடன் பேசுவதே கிடையாது, அவர் மகளையும் என்னுடன் பேச விடுவதில்லை, ஈசி சேர் [Easy Chair] ஒன்று அவரது வீட்டின் முன்னால் போடபட்டிருக்கும் அதில் உட்கார்ந்துகொள்வேன், முதன் முதலாக அதில் நான் உட்கார்ந்தபோது அவரது மனைவி அவருடன் சண்டை போட ஆரம்பித்துவிட்டார், அப்போது அவர் மனைவி சத்தமாக கூறிய வார்த்தைகள் என் காதுகளில் விழுந்தது, 'முதலில் அந்த சேரை(Chair) எடுத்து மடித்து பரணையில போடு', அதற்க்கு அவர் 'அவள் கொஞ்ச நேரம் அதில உட்கார்ந்து விட்டு போயிடுவா பிறகு மடிச்சு வைக்கலாம்; சத்தமா சொல்லாத அவ காதில கேட்க போகுது' என்றார் அதற்க்கு அவர் மனைவி, 'கேட்கட்டும் அது என் அம்மா வீட்டிலிருந்து நான் எடுத்து வந்தது' என்றார். அதன் பிறகு அந்த இடத்தில் அந்த இருக்கையை நான் பார்க்கவே இல்லை. இந்நிலையில் நான் அவர்களது வீட்டிற்கு அழையா விருந்தாளியைப்போல சென்று வருவதுண்டு. அவரை பார்ப்பதற்காக.

அவ்வாறு அவர் வீட்டிற்கு நான் செல்லும்போதெல்லாம் அவர் அடுத்த வீட்டின் கிணற்றிலிருந்து நீரை எடுத்துவந்து அவரது வீட்டில் இருந்த பெரிய தொட்டிகளில் நிரப்பிக்கொண்டிருப்பார், அல்லது கடைக்குச் சென்று அடுப்பெரிப்பதற்க்கு [அப்போதெல்லாம் சமையல் எரிவாயு எல்லா இடங்களிலும் கிடைக்காது] விறகுகளை கடையில் வாங்கி சுமப்பதற்கு கடையில் கூலியாள் கிடப்பது அரிது என்பதால் அவரே சுமந்து கொண்டு வருவார். அல்லது மளிகை சாமான்கள் வாங்கிக்கொண்டுவர சென்றுவிடுவார். இவற்றையெல்லாம் அவர் செய்வது என்னிடம் பேசாமல் தவிர்ப்பதற்காக என்று நான் நினைத்ததே இல்லை, ஏனென்றால் அது அவரது வேலையாக இருந்ததென்பது எனக்குத் தெரியும். சில நாட்கள் கணவன் மனைவிக்கு வாக்குவாதம் பெருத்து சண்டை நடந்துகொண்டிருக்கும், அவ்வாறு சண்டையின் போதெல்லாம் அவரது மனைவி திரும்ப திரும்ப சொல்லும் ஒரே கோரிக்கை 'என் அம்மா வீட்டில் எனக்கு போட்ட புலிநக தோடும், ஒரு மோதிரமும் வட்டி கடையிலிருந்து எடுத்து கொடு' என்பதுதான். இவை இரண்டு மட்டுமே அவருக்கு அவரது அம்மா வீட்டில் திருமணத்திற்கு கொடுத்ததாம்.

அவர் தென்னிந்திய தொடர்வண்டி அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வந்ததால் நினைத்தபோதெல்லாம் திருச்சிக்கு பயணப்படுவார்கள், அவ்வாறு பயணப்படுகின்ற போதெல்லாம், அவருடைய மனைவியின் மூன்று சகோதரிகளுக்கு தேவையான பொருட்கள், மற்றும் அங்கே அதிகம் கிடைக்காத கடல் மீன்கள் வறுவல், இறால் வறுவல், பெண்கள் அணியும் உள்ளாடைகள், உப்பிட்ட காய்ந்த மீன்கள் இன்னும் என்னவெல்லாம் அவர்கள் கடிதத்தில் வாங்கி வரும்படி கேட்டு எழுதியிருந்தார்களோ அவையனைத்தையும் வாங்கிகொண்டு பயணம் தொடரும். இவ்வாறு வருடத்திற்கு பலமுறை நடக்கும். இதனால் ஏற்ப்படும் அதிகப்படியான செலவை சமாளிக்க கடன் வாங்கும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது, கடன் சுமையை சமாளிக்க இயலாமல் மேலும் கடன் வாங்கினார், ஆனால் எங்கள் குடும்பத்திற்கு கொடுப்பதற்காக அவரது திருமணத்திற்கு முன்பே வாங்கிய கடனால்தான் தங்கள் குடும்பம் கடன் சுமையால் அவதிப்படுகிறது என்று எங்களிடமும் மற்றவர்களிடமும் அவரது மனைவி கூறி வந்தார், உண்மையில் அவருக்கு விடுதியில் சாப்பிடுவதால் வயிற்று பிரச்சினை அதிகமானதன் காரணம் என்பது எல்லோரும் அறிந்தது, அதுமட்டுமில்லாமல் நாற்பது வயதிற்கு மேலாகிய பின்னரும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டதன் காரணமும் அவரது வயிற்று பிரச்சினை, விடுதி உணவு என்பதை எல்லோரும் நன்கு அறிந்திருந்தனர். அவரும் பணியிலிருந்து ஓய்வு பெற்றார், மகளின் திருமணத்திற்காக இருந்த வீட்டை விற்கவேண்டும் என்று மனைவி சொல்ல வீட்டையும் விற்று பணத்தை எடுத்துக்கொண்டு மனைவியின் விருப்பபடி திருச்சி சென்று 'செட்டில்' ஆகி விட்டனர், கையிலிருந்த பணமுழுவதையும் தனது அண்ணனிடம் கொடுத்து தனது மகளின் திருமணத்தை நடத்திவைக்க சொல்லும்படி அவரது மனைவி வற்புறுத்தவே இவர் தன்னிடமிருந்த பணம் முழுவதையும் மனைவியின் அண்ணனிடம் கொடுத்துவிட்டு காத்திருந்தார் சில மாதங்களில் ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணமும் முடிந்துவிட்டது. ஆனால் அவர் கொடுத்த பணத்திற்கு ஏற்ற செலவினங்கள் இல்லாமல் வெறும் தாலி கட்டிய திருமணமாக நடந்தேறியது. கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்டபோது மனைவியின் அண்ணனிடம் கடுமையான விரோதம் ஏற்ப்பட்டது மட்டும்தான் மிச்சம், பணம் முழுவதும் அபகரிக்கப்பட்டதை பற்றிய அவரது கவலை அதிகமாகியது ஏற்க்கனவே இருந்த கடன் தொல்லை வேறு, சென்னைக்கு வருகின்ற போதெல்லாம் எங்கள் வீட்டில் தங்குவார் அப்போது என் அப்பாவிடம் தான் ஏமாற்றப்பட்டதை சொல்லி வருத்தமடைவார்.

அவரது மகளின் திருமணத்திற்கு முன்னர் திருமண பத்திரிகையுடன் என் வீட்டிற்கு வந்திருந்தார் , ஆனால் எங்களிடம் அவர் முன் வைத்த கோரிக்கை சற்று வித்தியாசமாக இருந்ததை இங்கு நான் குறிப்பிட்டே ஆக வேண்டும், ஏனென்றால் திருமண அழைப்பிதழுடன் ஒருவரை அழைக்க வருபவர்கள் அழைப்பிதழை கொடுத்துவிட்டு 'மறக்காமல் குடும்பத்துடன் வந்துடுங்க' என்று சொல்வது வழக்கம் ஆனால் இவரோ 'திருமணத்திற்கு நீங்கள் திருச்சிக்கு வருவதானால் செலவு அதிகம் என்பதைவிட உங்களை வரவேற்று தங்க வைப்பதற்கு போதுமான வசதி அங்கில்லை என்பதால் நீங்கள் மணமகளுக்கு கொடுக்க நினைக்கின்ற பரிசை பணமாக என்னிடமே கொடுத்துவிட்டால் நல்லது' என்றார். அவர் விருப்பப்படியே அவரது கையிலேயே ஒரு தொகையை கொடுத்துவிட்டோம். சில மாதங்கள் கழித்து என் வீட்டிற்கு வந்த அவர், சென்னையில் இன்னும் சில கொடுக்கல் வாங்கல்கள் இருக்கிறது அத்துடன் மிகவும் முக்கியமான வேலை எனக்கு பின்னர் மாதாமாதம் எனது பென்ஷன் தொகையை பெறுவதற்கு பெயரை பதிவு செய்யும் பணிக்காக வரவேண்டியுள்ளது என்றார். அந்த வேலையெல்லாம் ஓய்வு பெறுவதற்கு முன்பே முடிந்துவிடுமே என்றேன் நான், அது மனைவிக்குத்தானே கொடுக்கும் வழக்கம் என்றேன் சந்தேகத்துடன்.

இன்னமும் சில மாதங்கள் கழித்து ஒருநாள் எனது வீட்டின் கதவை தட்டிய அவர் திருச்சியில் ஒருவருக்கு கொடுப்பதற்கு அவசரமாக பணம் வேண்டும், உடனே தரும்படி வற்ப்புருத்தினார், எனக்கு எரிச்சல் உண்டானது உன் மனைவி மனைவியின் சொந்த பந்தங்கள் எல்லாரும் திருச்சியில் இருக்கும் போது எங்களை எதற்கு தொந்தரவு கொடுக்கிறார் என்று கோபத்தில் திட்டினேன், ஏனென்றால் பல முறை அவருக்கு பெரும் தொகைகளை கொடுத்து என் கணவர் உதவினார். அதற்க்கு அவர், 'நான் என் மனைவி மகளுடன் இல்லை அவர்கள் என்னை வீட்டை விட்டு விரட்டியதோடு நில்லாமல் எனக்கு வருகின்ற மாத பென்ஷன் புத்தகத்தையும் என்னிடமிருந்து பிடுங்கி கொண்டனர்' என்றார். 'உன் அப்பா சொன்ன உபதேசங்கள் ஒன்றையுமே நான் அப்போது பெரிசா நினைக்கல, அவர் எப்பவுமே என்கிட்டே சொல்லுவார் உனக்கு வேண்டப்பட்டவர்கள் நாலுபேர் உன்னை சுற்றி வசிக்கின்ற ஊரிலேயே நீ வாழாமல் வேறு ஊருக்கு மொத்தமாக செல்வது எந்த விதத்திலும் சிறந்ததல்ல என்பார், அதைவிட மிகப்பெரிய ரகசியம் இத்தனை வருடங்களாக உன் பெற்றோரிடம் கூறாமல் நான் மறைக்க வேண்டியிருந்த ஒன்றை இன்றைக்கு உன்னிடம் சொல்லுகிறேன், அவர்கள் ஆத்மா இந்த வார்த்தைகளை உன்னிடம் நான் சொன்ன பிறகாவது என்னை மன்னிக்குமா அல்லது சாந்தி அடையுமா தெரியவில்லை'. என்றார்.

நான் பேசாமல் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன் முழுவதுமாய் நரைத்து இளைத்து கருத்து போயிருந்த அவரை உற்று பார்த்தேன் அவரில்லாமல் நான் காய்ச்சலால் கிடந்த ஞாபகம் என்னை சித்திரவதை செய்தது, என்னை கை பிடித்து தினமும் கடைக்கு கூட்டிச்சென்று எனக்கு பிடித்த தின்பண்டங்களை வாங்கி கொடுத்தது நான் ஆசையாய் அவரது கழுத்தை கட்டி பிடித்துக்கொள்ளும் போது அவரும் நானும் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தது ஒவ்வொன்றாய் என் நினைவில் வந்தது, ஒரு நிமிடம் என் கண்முன் தோன்றி மறைந்த அந்த பழைய ஞாபகங்கள்..... இப்போது எனது பெற்றோர் இல்லை, ஒருசமயம் அவர்கள் இதை கேட்டுக்கொண்டிருந்தால் அவர் சொன்னது போல அவர்கள் மனம் சாந்தியடைந்திருக்காது மாறாக வேதனை அடைந்திருக்கும், அவர் தொடர்ந்து அந்த பல வருட ரகசியத்தை சொல்ல தொடங்கினார், 'உன் மீதும் உன் அப்பா அம்மா மீதும் எனக்கிருந்த பாசத்தை முற்றிலுமாக துண்டிக்க என் மனைவி என்னிடம் பல விதங்களில் சொல்லி பார்த்தாள், ஆனால் என்னால் அத்தனை சீக்கிரத்தில் அந்த பாசத்தை துண்டிக்க இயலாது என்று நான் சொன்ன போதெல்லாம் அவள் எனக்கு ஏதாவதொரு விதத்தில் தண்டனை கொடுத்து வந்தாள், அந்த தண்டனைகளை பற்றி உன் பெற்றோரிடம் சொன்னால் நீயோ உன் பெற்றோரோ தாங்கிக்கொள்வது கடினம். அவர்களை வேதனைபடுத்த நான் விரும்பவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்கிறேன் என்று என் மனைவியிடம் சொல்லுவேன் ஆனால் அவளோ பிடிவாதமாக சத்தியம் செய்து தரும்படி என்னை வற்ப்புருத்துவாள் சத்தியமும் செய்து கொடுத்தேன்

அவ்வாறு எனக்கு அவள் கொடுக்கின்ற எத்தனையோ விதமான தண்டனைகளை தாங்கிக்கொண்ட எனக்கு ஒருநாள் கொடுத்த தண்டனை வெகுவாக காயப்படுத்தி நிலைக்குலைய செய்தது, உன் அம்மாவுடன் என்னை இணைத்து பேசினாள், என் தாயைப்போல் நான் மதிக்கும் உன் தாயைப்பற்றி அவள் தரம் கெட்ட முறையில் சித்தரித்தபோது என்னால் கோபத்தை அடக்க இயலாமல் என் மனைவியை கண் மூடித்தனமாக அடித்தேன், அவ்வாறு அவள் தரம் கெட்ட முறையில் என்னை பேசினாலாவது உங்கள் குடும்பத்துடன் நான் பழகாமல் நிறுத்தி விடுவேன் என்பது அவளது குறிக்கோளாய் இருந்ததால் தொடர்ந்து அவ்வாறே பேசினாள், நானும் அவள் அவ்வாறு பேசுகின்ற போதெல்லாம் கண்மூடித்தனமாக அடிப்பேன், இந்நிலையில் இவளும் எனது மூத்த அண்ணனின் மனைவியும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியிருப்பதை நான் அப்போது அறியவில்லை, எப்போதும்போல என் மனைவியின் வீட்டிற்கு நாங்கள் சென்றிருந்த போது என் மனைவியின் அம்மா உடல் நலமில்லாமல் படுக்கையாக இருந்ததை சரியான தருணமாக உபயோகித்த என் மனைவி அவளது சதியை செயல் படுத்திக்கொண்டாள், அவளது அம்மாவிடம் சொல்லி அவர் கேட்பதற்கு கையடித்து சத்தியம் வாங்க சொல்லி முதல் கட்டளையாக ஓய்வு பெற்று வருகின்ற பணம், ஓய்வு ஊதியம் முதலியவற்றை மனைவியின் கையில் முழுவதுமாக கொடுத்து மனைவியின் விருப்பத்தின் பேரில் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும், அடுத்ததாக என் பெற்றோரிடமும் என்னிடமும் எக்காரணம் கொண்டும் இனி ஒருபோதும் பேசவோ உறவு வைத்துக்கொள்ளவோ கூடாது என்பதுதான் அவர்கள் கேட்ட சத்தியத்திற்க்கான கட்டளைகள். வேறு வழியின்றி மரண படுக்கையில் இருக்கும் மாமியாருக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டார். அதனால் வேறு வழியின்றி என்னையும் எனது பெற்றோரையும் நிரந்தரமாக தன்னிடமிருந்து பிரிந்துவிட்டார். அப்படியாவது அவரது வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்பட்டதா

ஒரு வருடத்திற்கு பின்னர் விபத்தில் மரண அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு கிடந்தவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு அவரது மனைவியோ மகளோ தயாராக இல்லை என்பதால் ஒருநாள் முழுவதும் உயிர் உடலை விட்டு பிரிய இயலாமல் தவித்துக்கொண்டிருந்துவிட்டு பின்னர் அவர் இறந்ததாகவும் செய்தி கேட்டேன். அவருக்கு அப்போது வயது 82. மனம் தாங்கொண்ணா துக்கத்தால் நிறைந்தது. தற்போது அவர் மனைவி நடுவன் அரசின் கணிசமான ஓய்வூதியம் பெற்று நலமுடன் தனது விருப்பபடி வாழ்ந்து வருவதாக அவரது சகோதரிகள் பொறாமையுடன் புலம்புகின்றனர். அவர் ஆன்மா சாந்தியடைந்திருக்குமா, மரணத்திற்கு பின்னும் வேதனையா.

..

புதன், 11 ஜனவரி, 2012

கனவுகள்

பட்டப்பகலில்
நிதானமாய் நடக்கிறேன்
கருமிருட்டில்
யாரும் துரத்தாமலேயே
மூச்சிரைக்க ஓடுகிறேன்

கல்லும் முள்ளும்
கால்களுக்கடியில்
இடறவில்லை குத்தவில்லை
அதிக தூரம் ஓடினேன்
மூச்சிரைக்கவில்லை
வியர்வையில் நனையவில்லை

ஒட்டு கந்தை
உடலிலில்லை
வெட்கம்
உயிர் சாவதுபோல்
விம்மி விம்மி
அழுகின்றேன்
கன்னத்தில் துளியேனும்
கண்ணீரில்லை

ஒற்றை சக்கர
மிதிவண்டி
வேகமாய் ஓட்டி
வானில் பறக்கின்றேன்
பள்ளிச்செல்லும்
அவசரமும்
பரீட்சை எழுதும்
பரிதவிப்பும்
விடாது என்னை
பற்றிக்கொள்ள

சிங்கம் யானை
மிருகமெல்லாம்
என்னை துரத்த
பயத்தாலெந்தன்
உடல் முழுதும்
நடுக்கத்துடன்
நான் ஓடி
ஏதோ ஓர்
வீட்டின் மீது
ஏறிச் சென்று
நிற்கின்றேன்

திரைப்படமும்
பார்ப்பதில்லை
எந்த நடிகருக்கும்
நான் விசிறியில்லை
கமலஹாசன்
பல சமயம்
சரத்குமார்
சில சமயம்
இப்போதெல்லாம்
சத்யராஜ் என்று
இவரையெல்லாம்
இலவசமாய்
காண்கின்றேன்

இன்னும் இன்னும்
எத்தனையோ
வியக்கவைக்கும்
காட்சியெல்லாம்
கண்டு மனம்
ரசித்ததுண்டு
லயித்ததுண்டு
காமம் மட்டும்
இடைமறித்ததில்லை
கண்விழித்த பின்னும்
சில நேரம்
நினைவினிலே அவை
தொடர்வதுண்டு
மறக்கவே கூடாதென்று
எண்ணியவை பலவுண்டு
ஆனால்
தான்னாலே
மறந்த போது
மனம்
தவியாய் தவிப்பதுண்டு






திங்கள், 9 ஜனவரி, 2012

நாலு பேர்

ஊர் சுற்றி பார்க்கச் சென்றவர் விமானம் இயந்திர கோளாறு காரணமாக நடுவானில் வெடித்து சிதறியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர் என்ற செய்தி அவர்கள் வீட்டை நிலை குலைய செய்தது, அடிக்கடி உள்ளூர் பயணம் செய்யும்போதெல்லாம் அவரது மனைவிக்கு தினமும் செய்திகளில் வருகின்ற விபத்துக்கள் நினைவில் வரும், ஆனால் அவரது கணவருக்கு விபத்தைப் பற்றிய நினைப்பே இருக்காது, பிரயாணம் செய்கின்ற போது கூட அங்கு சென்று தான் தங்கவேண்டிய விடுதி சந்திக்க வேண்டிய நபர்கள் அவர்களிடம் பேச வேண்டிய விஷயங்கள் என ஒன்றன் பின் ஒன்றாக நினைவில் வந்து பிரயாணத்தை மறக்க செய்துவிடும். ஏகப்பட்ட உறவினர்கள் நண்பர்கள் என அவரை சுற்றியுள்ள கூட்டமும் பெரிது. அவர் சாதாரண காய்ச்சலால் மருத்துவமனையில் இரண்டு நாள் படுத்தாலே உறவினர்களும் நண்பர்களும் பார்வையாளர்களாக குவிந்துவிடுவர். பெரிய கூட்டத்தின் நடுவிலேயே எப்போதும் இருப்பதில் அவர் மனைவிக்கு சிரமம் உண்டு. அதைப் பற்றி அவரிடம் அவர் மனைவி சொல்லும்போதெல்லாம் 'நாலு பேர் நமக்கு வேணும்' என்பார்.

உடல்களை கண்டெடுக்க இயலாமல் விமானத்தின் பாகங்கள் சில கரிந்து சிதறிக்கிடந்தது. ஈமக்கடன் செய்வதற்கு கூட சாம்பல் கிடைக்கவில்லை, ' நாலு பே'ருக்கு வேலையின்றி போனது. 'அந்த நாலு பேர்' என்பவர்கள் எங்கு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 'அந்த நாலு பேர்' நாம் நன்கு பழகியவர்களாக இருக்க வேண்டும் என்றில்லை.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

பாசபறவைகள்

உடன் படித்த அல்லது பணி செய்கின்ற பெண்ணையோ ஆணையோ காதலித்து திருமணம் செய்துகொள்வது என்பது மிகவும் சாதாரணமாகிப் போனாலும் இன்னும் பல குடும்பங்களில் காதலுக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும் மதம் ஜாதி மற்றும் அந்தஸ்த்து போன்றவற்றை கருத்தில் கொண்டு அல்லது முக்கியத்துவமாக கருதி அப்படிப்பட்ட திருமணங்களுக்கு சம்மதம் தெரிவிப்பது இல்லை. சமுதாயத்தில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அடிப்படையில் பல குடும்பச் சூழல் இன்னும் பழமையான கருத்துக்களை பாதுகாக்கின்ற சமுதாயமாகத்தான் உள்ளது. என்னதான் காதல் வலிமை படைத்தது என்றாலும், காதலுக்காக பெற்றவர்கள் உறவுகள் எல்லாவற்றையும் எடுத்தெறிந்துவிட்டு தாங்கள் விரும்பியப்படியே திருமணம் செய்பவர்களும் சமூகத்தில் காணப்படுவதும் புதிதல்ல.

அவ்வாறு பெற்றோர் மற்றும் உறவினர்களின் பாசத்தை எல்லாம் மறக்கச் செய்து காதலை மட்டுமே கருத்தில் கொண்டு திருமணம் செய்து கொண்டாலும் சில காலம் சென்ற பின்னர் தங்களது உறவினர்களையும் பெற்றோரையும் காண வேண்டும் என்கின்ற தூண்டுதலை ஏற்ப்படுத்துவது தான் பாசம். எல்லாவித பாசங்களிலும் தாய்க்கும் மகளுக்குமான பாசம் என்பது மிகவும் விசாலமும் ஆழமுமானது. இதை ஒவ்வொரு பெண்ணும் தான் தாய்மை அடைகின்ற காலத்தில் உணருகிறாள். அதே போன்று ஒவ்வொரு ஆணும் ஒரு குழந்தைக்கு தகப்பனாகின்ற போது தனது பெற்றோரின் பாசத்தை முழுவதுமாய் விளங்கிக் கொள்ள முடிகிறது.

என்னதான் காதல் கண்ணை மறைத்தாலும் பெற்றோர் உறவினர்களின் பாசத்தை உதாசீனப்படுத்திவிட்டு காதலனுடனோ காதலியுடனோ முழு மன நிறைவோடு வாழ முடியுமா என்றால் நிச்சயம் முடியாது, 'ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் ' என்று சும்மாவா சொன்னார்கள். எனக்குத் தெரிந்த பெண் சுமார் இருபத்து ஐந்து வயதிருக்கும், அவளது தகப்பனார் அவள் சிறுமியாக இருந்த போது இறந்து விட்டார், அவளது தாய் அவளை வளர்த்து படிக்க வைத்தார், நன்றாக படித்து முடித்து வேலை வாய்ப்பும் கிடைத்தது, மூன்று அல்லது நான்கு வருடம் வேலை செய்தாள், அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார் அவளது தாயார். அவளுடன் கல்லூரியில் படித்து வந்த ஒரு ஆணுடன் அவள் அடிக்கடி கைபேசியில் பேசுவதுண்டு, அவனை தனது கல்லூரி நண்பர்களில் ஒருவன் என்று தனது தாய்க்கு ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தாள்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் துவங்கவிருந்த சமயத்தில் குறிப்பிட்ட பையனை திருமணம் செய்து கொள்ள தான் விரும்புவதாக தன் தாயிடம் தெரிவிக்க, அதை முழு மனதுடன் தன் தாய் ஏற்றுக்கொள்ளாதிருந்ததை மகள் அறிந்தும் தனது திருமண ஏற்பாடுகளை தானே செய்வதற்கு ஆரம்பித்துவிட்டாள். திருமணத்திற்கு ஒருவாரம் இருந்த சமயம் மாப்பிள்ளை வீட்டார் வட மாநிலத்திலிருந்து சென்னை வந்து வேறு இடத்தில் தங்கியிருந்தனர். திருமணத்திற்கு முந்தின இரவு சாப்பாடு சாப்பிடுவதற்காக மாடியிலிருந்த தங்களது அறையிலிருந்து வீட்டின் கீழே இருக்கும் சமயலறையிலிருந்த உணவை எடுத்து உண்பதற்காக மாடிப்படிகளில் இறங்கிக்கொண்டிருந்த மணமகளின் தாயார் கால் தவறி மாடிப்படிகளில் விழ அவரது மண்டையின் உள்ளே படுகாயம் ஏற்ப்பட்டு காதுகளின் வழியே ரத்த வெள்ளத்தில் அங்கேயே பிணமானார்.

அவர்
மாடி படியில் விழுந்து கிடந்த
தை அங்கிருந்த ஒருவரும் கவனிக்கவில்லை, சிறிது நேரம் சென்ற பின்னர் அதே மாடிப்படிகளில் இரவு உணவை உண்பதற்காக இறங்கி வந்த மணமகள் தன் அம்மா கீழே விழுந்து கிடப்பதை பார்த்தபோது அவர் கண்கள் மூடி கிடக்க காதுகளிலிருந்து வழிகின்ற ரத்தம் மட்டும் நிற்கவே இல்லை என்பதை அறிந்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது அவர் இறந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டிருந்த தகவல் சொல்லப்பட்டது. காதுகளிலிருந்து வழிந்த இரத்தத்தை நிறுத்த மருத்துவர்கள் மருத்துவம் செய்து உடல் அன்றிரவே அடக்கம் செய்யப்பட்டது.

ஏற்பாடுகள் செய்தபடி
அடுத்த நாள் திருமணம் நடந்தது, மணமகளும் மணமகனும் எப்போதும் போல மிகவும் சந்தோஷத்துடன் மேடையில் வந்த விருந்தினர்களிடம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சம்பவத்தை பார்த்த என்னால் இன்றுவரையில் மறக்க இயலவில்லை. இத்தனை பெரிய அதிர்ச்சியை மறந்து இயல்பான சந்தோஷத்துடன் இந்த பெண்ணால் எப்படி அடுத்தநாள் மணவறையில் இருக்க முடிந்தது என்பதும் நான் கண்டது எல்லாம் நாடகமா அல்லது ஏதோ சினிமாவிற்காக பதிவு செய்யப்படும் காட்ச்சிகளா என்று சந்தேகமாக இருந்தது. நடந்த சம்பவத்திற்காக அழுது கொண்டே இருக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் சொல்லேன். ஏற்கனவே செய்திருந்த திருமண ஏற்பாடுகளை நிறுத்துவதால் ஏகப்பட்ட பணம் வீணாகும் என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் இயற்கையான வருத்தம் என்பதை, தன்னை வளர்த்து ஆளாக்கி (தனது தகப்பனில்லாமலேயே) தனது திருமணத்தை காண இயலாமல் திடீரென்று இறந்து போன தனது தாயின் நினைவு இல்லாமல் ஒரு பெண்ணால் இருக்க இயலுமா என்பதை என்னால் இன்றுவரையில் நினைத்து பார்க்க இயலவில்லை.

இன்றைய சமுதாயம் பாசம் அன்பு உறவு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காத சூழ்நிலை பெருகிவருகிறது. என்னதான் தனது திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத தாயாக இருப்பினும் திடீர் மரணம் என்பது மனதை வருந்த வைக்காதா என்ற கேள்வி என்னை துளைத்தெடுத்தது. என்னை மட்டுமல்ல அந்த பெண்ணின் ஏனைய உறவினர்களையும் நண்பர்களையும் கூடத்தான் ஆச்சரியப்பட வைத்தது.


^^^^^^

திங்கள், 5 செப்டம்பர், 2011

மறக்க முடியுமா

மனித மூளைக்கு நல்லது கெட்டது என்பதை பிரித்து அறியும் சக்தி இருந்தாலும் தனது நினைவில் பதித்துக்கொள்வதற்க்கு அவற்றில் எதையும் பாரபட்சம் காட்டுவதே கிடையாது, 'மனமே நல்லவைகளையும் மகிழ்ச்சி தரும் நினைவுகளை மட்டுமே வைத்துக் கொள்' என்று அறிவு சொல்லிக்கொண்டே இருந்தாலும் அவற்றை மனம் கேட்பதே கிடையாது. இதனால் பலராலும் மன்னிப்பு என்பதை மனதிலிருந்து கூற இயலாத நிலை ஏற்படுகின்றது. மறந்தால் தானே மன்னித்ததாக அர்த்தம். வாய் ஒன்றை கூற மனம் வேறு ஒன்று கூறும் நிலையால் மனிதன் படுகின்ற வேதனைகளுக்கு அளவே கிடையாது. மனமும் அறிவும் ஒன்று சேருகின்ற பல நிகழ்வுகளும் உண்டு. அவை எல்லாமே மனிதர்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடக்க இயலாத சில சம்பவங்களாகி நினைவுகளை சுமந்து காலம் காலமாக இன்பம் துன்பம் இரண்டையும் மாறி மாறி நினைவுபடுத்துவதாக அமைந்து விடுகின்ற.



ஆசிரியர் தினம் என்பது மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் என்பது யாவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சந்தித்த ஆசிரியர்களின் நினைவுகளை பற்றிய மறக்க இயலாத அனுபவங்களை சிந்திக்க வைப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்களது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றபோது 'தன்னை பெற்றெடுக்க தன் தாய் அந்த சமயத்தில் எத்தனை துன்பங்களை அனுபவித்திருக்க கூடும்' என்று சிந்திப்பதில்லை என்றாலும் கடுமையான துன்பத்திற்கு பிறகு தான் பெற்ற குழந்தையை காணுகின்றபோது தான் பட்ட துன்பங்கள் அத்தனையையும் மறந்து ஏற்படுகின்ற இன்பமே அவளுக்கு போதுமானதாக இருப்பது போல நம்மை துன்புருத்திய ஆசிரியர்களைப் பற்றிய நினைவுகள் மிகவும் கொடூரமானதாக இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து வந்து தன்னை பற்றிய கவுகளை சுமந்து கொண்டிருக்கும் தனது பெற்றோருக்கும் தனது லட்சிய பாதைக்கும் தொய்வு வராமல் மனம் தளராமல் இலக்கை நோக்கி பயணித்த அனுபவங்கள் என்றும் மறக்க இயலாத அனுபவங்களாகி மனதை விட்டு மறையாமல் இருக்கும்.



அவ்வை கூறியது போன்று 'இளமையில் வறுமை கொடியது', கொடிய வறுமை ஒருபுறம் மறுபுறம் வறுமையை விட கொடுமையான உறவினர்களின் சதித்திட்டங்களும் அவற்றை அவர்கள் செயல்படுத்துகின்ற விதமும், இவற்றையெல்லாம் வென்றுவிடுவதற்க்கு 'பிச்சை புகினும் கற்கை' என்று அரசாங்க பள்ளியாக இருந்தால் என்ன, எங்கிருந்து படித்தாலும் 'எமது லட்ச்சியம் வறுமையை வெல்வது' என்கின்ற நோக்கில் 'பட்டினி கிடந்தாலும் படிப்பது ஒன்றே' என்று படித்துக் கொண்டிருந்த போது, அப்போதெல்லாம் எஸ் எஸ் எல் சி தான் பள்ளி கல்விக்கு இறுதி, பதினோராம் வகுப்பு. எனது விருப்ப பாடமான உயிரியல் வகுப்பாசிரியர் பெயர் சாந்தி சாந்தினி, திருமணமாகாத கிறிஸ்துவ ஆசிரியர். ரெகார்ட் நோட் ஒன்றை வாங்கி அதில் படங்களும் அதனைப்பற்றிய விரிவுரைகளையும் எழுதி வரச் சொன்னார், வகுப்புகள் துவங்கிய ஒரு மாதத்திற்குள் என்பதால் அதிக விலை கொடுத்து அந்த நோட்டு புத்தகத்தை வாங்கிவருகின்ற அளவிற்கு எங்கள் வீட்டில் பொருளாதாரம் இல்லை.



இரண்டாவது மாதம் எப்படியோ அந்த நோட்டு புத்தகத்தை வாங்கி கொடுத்தார் என் தந்தை, அந்த நோட்டு புத்தகம் வாங்குவதற்கு எந்த விதமான சிரமம் இருந்தது என்பதை விவரிக்க இயலாது, அத்தனை கொடுமையான நிலைமை. வாங்கியவுடன் இரண்டு மாதங்களாக விடுபட்டு போனவற்றைஎல்லாம் வரைந்து விரிவுரைகளை எழுதி (பள்ளியிலேயே வரைவதில் முதலிடம் எனக்கு) அடுத்தநாள் நோட்டு புத்தகத்தை அந்த ஆசிரியர் வருவதற்கு முன்பு மேசையில் வைத்துவிட்டேன், ஏற்கனவே மேசையின் மீது இரண்டு நோட்டு புத்தகங்கள் இருந்தன அவற்றின் மீது என்னுடைய நோட்டு புத்தகம் வைக்கபட்டிருந்தது, ஆசிரியர் வழக்கம் போல வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் பாடம் நடத்தி முடித்து பின்னர் மேசையின் மீது வைக்கப்படிருந்த நோட்டு புத்தகங்களை பார்வையிட்டார், மற்ற இரண்டு நோட்டு புத்தகங்களை அங்கேயே வைத்துவிட்டு என்னுடைய நோட்டு புத்தகத்தை கையில் எடுத்து கோபத்துடன் அதை அறைக்கு வெளியே வேகமாக வீசி எறிந்தார், அந்த புத்தகம் அங்கிருந்த சகதியில் விழுந்தது, என்னை எழுந்து அறைக்கு வெளியே நிற்கும்படி கூறினார், அன்றைக்கு மட்டுமல்ல அந்த ஆண்டு முடியும் வரையில், இன்றுவரையில் அந்த ஆசிரியரின் செய்கைக்கும் கோபத்திற்க்குமான காரணம் எனக்கு விளங்கவேயில்லை, ஏனென்றால் எனது வகுப்பில் பலர் நோட்டு புத்தகம் வாங்கியிருந்தும் அவர் கூறுவதற்கிணங்க வரைந்து விரிவுரை எழுதிக்கொண்டு வருவதே கிடையாது. ஆனால் சில வருடங்களுக்குப் பின்னர் எனது உறவினர் ஒருவர் என் குடும்பத்தை பழி வாங்குவதற்காக மற்றொரு ஆசிரியையின் உதவியுடன் அவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறப்பட்டது, எந்த அளவிற்கு இந்த யுகம் உண்மை என்பது எனக்கு தெரியாது. ஆனால் அந்த ஆசிரியை வகுப்பிலிருந்த 60 மாணவிகளின் எதிரில் என்னை அவமானப்படுத்தியதை இன்றுவரை மறக்க இயலாது.



எனது பள்ளியில் மொத்தம் 5000 மாணவ மாணவிகள் அப்போது படித்து வந்தனர் மாநிலத்திலேயே இரண்டாவது அதிக மாணவ மாணவிகளை கொண்ட அரசு பள்ளியாக எங்கள் பள்ளி அப்போது இருந்தது. சில வருடங்களுக்குப் பின்னர் சென்னையில் தனியார் நிறுவனமொன்றில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது தினமும் தொடர்வண்டியில் பயணம் செய்வது வழக்கம், அப்போது ஒருநாள் எங்கள் பள்ளியில் பணியாற்றி வந்த வேறு ஒரு ஆசிரியை சந்திக்க நேர்ந்தது, அவர் என்னிடம் பேசிக்கொண்டு வந்த போது எனது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதை அவரிடம் தெரிவித்தேன், எனது கைப்பையிலிருந்த எனது கணவரின் முழு புகைப்படத்தை அவரிடம் காண்பித்தேன், அப்போது அந்த ஆசிரியை என்னிடம் கூறிய வார்த்தைகளை இன்றும் என்னால் மறக்க இயலாது, 'நீ பட்ட கஷ்டத்திற்கு நிச்சயம் நீ நல்லா இருப்ப' என்றார்.



நாங்கள் பட்ட கஷ்டம் அந்த ஆசிரியைக்கு எப்படி தெரிந்தது என்பதற்கு வேறு சில சம்பவங்களும் உண்டு, ஆனாலும் அப்படியும் ஆசியர்களும் உண்டு. மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பதற்கு உரிமை உண்டு என்கின்ற காலமாக அக்காலம் இருந்தாலும் இளம் நெஞ்சில் மாறாத வடுக்களை உண்டாக்குகிறோம் என்கின்ற நினைப்பே இல்லாமல் செயல்படுகின்ற ஆசிரியர்களை நான் எப்போதுமே மன்னிக்கத்தயாராக இல்லை. நல்லாசிரியர் விருது வாங்குகின்ற அத்துணை ஆசிரியர்களும் அவர்களிடம் படித்த எல்லா மாணவ மாணவியருக்கும் முழு மனசாட்சியுடன் நேர்மையாக தங்கள் பணியை செய்திருப்பார்களா, மனித நேயம் என்பது காணக்கிடைக்காத அரும்பொருளாக மாறி வந்திருக்கும் இந்த காலகட்டத்தில் ஆசிரியர்தினம் கொண்டாடப்படுவது என்பது டாக்டர் ராதாகிருஷ்ணனை நினைவு கூறுவதாகவும் இல்லை நல்ல ஆசிரியர்களை உருவாக்குவதும் இல்லை. டாக்டர் ராதா கிருஷ்ணனையும் மறந்துவிட்டோம், மன சாட்சி, நேர்மை, நாணயம், மனிதநேயம் போன்றவற்றையும் மறந்துவிட்டோம், ஆனால் குழந்தைகள் தினம், ஆசிரியர்தினம் என்று தலைவர்களது பிறந்தநாளை மட்டும் 'பெயர்சூட்டி' சொல்லிக்கொள்கிறோம்.





செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

காலக் குதிரை











கடிகாரம் தனது வேலையை சீராகத்தான் செய்கிறது, இப்போதெல்லாம் கடிகாரத்தை பார்க்கும் போது மனதில் வெறுமை மிஞ்சுகிறது, 'நேரமாகிவிட்டது' என்று காலையில் அரக்க பறக்க எழுந்த காலங்களை நினைக்கும் போது 'அது ஒரு காலம்' என்று நம்மையும் அறியாமல் மனதை ஏக்கம் நிரப்புகிறது. 'அந்த ஒரு காலத்தில்' காலையில் வசரமாக கண் விழிக்கும் சமயங்களில், 'இன்னும் கொஞ்சம் நேரம் படுக்கையில் விருப்பம் போல உறங்க முடியாதா' என்று மனம் ஏங்கியது நினைவிற்கு வரும். காலமும் நேரமும் யாருக்கும் காத்திருப்பது இல்லை. நேற்றைக்குத்தான் நடந்தது போல இருக்கும் பல சம்பவங்களை நினைத்துப் பார்க்கையில் 'அதற்குள் இருபத்து ஐந்து வருடங்கள் கழிந்து விட்டதா' என்று ஒரு கணம் அசர வைக்கிறது. ஆனால் அன்றோ, 'எப்போதுதான் இந்த அவசரகதியான இயக்கத்திலிருந்து ஓய்வு கிடைக்குமோ' என்று ஏங்க வைத்த நினைவுகள் வரும், இன்று நினைத்தாலும் காலம் செய்யும் மாற்றங்களையும் அது ஓடி மறைந்த அவசரங்களையும் வார்த்தைகளில் அடக்கிவிட இயலாது.



அன்று இருந்தவர் யாரும் இன்றில்லை, அவ்வாறே இன்றிருக்கும் நானும் நாளை இருக்கப்போவதில்லை, அதற்குள்ளாகவா இத்தனை மாற்றங்கள், அன்றைக்கு இருந்தவர்களும் என்னைப் போன்றே நினைத்திருக்க கூடும் அதனால்தானோ என்னவோ அவர்களின் முகங்களில் ஏதோ ஒரு ஏக்கமும் வேதனையும் அப்போது காண முடிந்தது. அந்த ஏக்கமும் வேதனைகளும் என்னவென்பதை அப்போது என்னால் விளங்கிக் கொள்ள இயலாமல் போனது. இன்றைக்கு என் முகத்தில் இருக்கும் வேதனைகளும் ஏக்கமும் என்னவென்பதை [இளம் வயதினர் என்னுடன் வாழ்வோரும்] என்னை சுற்றியுள்ளவர்களாலும் புரிந்து கொள்வதற்கு இயலாதது. எது மரணத்தின் முதற் படி?, நினைவுகளா, வயதா, நோயா.







எதுவென்று நாம் அறிந்தால் அதை நிறுத்திவிடும் வழி அறிய முயலுவோமா, மரணத்தை ஒத்திப் போடும் வழி வகை நாம் அறிந்து இருக்கிறோமா. காலம் என்பது முன்னோக்கி ஓடும் ஓட்டக்குதிரையல்லவா, ஒவ்வொருவர் வாழ்விலும் அந்த குதிரை முன்னோக்கி மட்டும் நம்மை இழுத்துச் செல்லுமே தவிர பின்னோக்கி இழுப்பதில்லை. எங்கே, எதுவரை ஓடும் என்கின்ற அளவை குதிரை எப்படி அறிந்திருக்க முடியும், ஆனால் எங்கோ ஒருநாள் அந்த குதிரை நம்மை விட்டுவிடும் என்பது நிச்சயம் அல்லவா. இந்த ஓட்டத்தில் அதிக வேகம் ஓடும் குதிரைகளும் உண்டு ஆனால் மிக குறைந்த வேகத்தில் ஓடுகின்ற குதிரை என்பதே கிடையாது.



பல சமயங்களில், எல்லோரையும் இழுத்துச் செல்கின்ற குதிரைகள் வெவேறு வழிகளில் ஓடினாலும் அவைகள் கொண்டு போய் சேர்க்கின்ற இடம் (மரணம்) ஒன்றாகவே இருக்கின்றதல்லவா. பணக்காரன் ஏழை, உயர்ந்தோன் தாழ்ந்தோன், என்கின்ற பேதங்கள் இன்றி எல்லோரையும் ஒரே விதமாகவே இழுத்துச் சென்று சேர்க்குமிடம் நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும் 'காலம்' என்கின்ற குதிரையின் பிடியிலிருந்து விடுபடும் ஞானம் மனிதனாக பிறந்த எவர்க்கேனும் உள்ளதா. எல்லாவற்றிற்கும் மரணம் மட்டுமே முடிவாக்கப்படவில்லை என்றால் மனிதன் மமதை கொண்டவனாக இருந்திருப்பானோ என்னவோ. வாழ்க்கைக்கு முடிவு என்று ஒன்று இல்லாதிருந்தால் வாழ்க்கை என்பதே போராட்டமாகவும் போர்களமாகவும் இருந்திருக்குமோ, நினைத்துப் பார்க்கவே இயலாத உணர்வுகளை கொண்டவனாக மனித இனம் உலகில் வாழ்ந்திருக்குமோ.







மரணம் என்பது இருந்திருந்தும் அதனைப் பற்றிய மறதிமட்டுமே மனிதனின் எல்லாவித செயல்பாடுகளுக்கும் போராட்டங்களுக்கும் காரணமாகி விட்டதோ, மரண பயம் என்பது மரணம் தன்னை நெருங்கி வருகின்ற வரையில் ஏற்ப்படுவதே இல்லை, எந்த ஒரு மனிதனும் தான் இறக்கின்ற கடைசி நிமிடத்திலாவது (நினைவு இருந்தால்) அதை கண்டு அஞ்சாமல் இறப்பதில்லை. எத்தனை பெரிய வீரனாக அஞ்சா நெஞ்சனாக இருந்தாலும் கூட மரணம் தன் எதிரில் நிற்கும் போது அதை கண்டு அஞ்சுவது என்பது இயற்க்கையானதொன்று. வயது முதிர்வடைகின்ற முதியவர்களும் கொடிய நோய்களின் பிடியில் நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவர்களும் மரண திகில் சூழ ஒவ்வொரு நொடிப் பொழுதையும் கழிக்கின்ற வேதனைகளில் வாழ்வதும் தவிர்க்க இயலாத அனுபவம். ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் முடிவாக இருந்த போதிலும் அதனை பற்றிய மறதி அதைவிட அதிகமாக இருப்பதே வாழ்க்கையின் அதிசயம்.









புதன், 13 ஏப்ரல், 2011

கடி தாங்க முடியல




ஆறு மணிக்கு மேல் வீட்டிற்கு வருகிற விருந்தாளிகள் பொதுவாக திரும்பவும் உடனே போக மாட்டார்கள், அதனால் பல வீடுகளில் அவர்களை அழையா விருந்தாளி என்று கூட சொல்வதுண்டு. வீட்டினுள் படுக்கையறை முதல் எல்லா இடங்களையும் ஒன்று விடாமல் நுழைந்து சுற்றி விட்டு, கடைசியாகத்தான் படுக்கையறைபக்கம் நுழைவது இவர்கள் வேலை. வீட்டில் அனைவரும் எப்போது உறங்குவார்கள் எப்போது விளக்குகளை அணைப்பார்கள் என்று ஒதுங்கி இருந்து கவனித்துவிட்டு பின்னர் ஒவ்வொருவரையும் சத்தம் போடாமல் தொல்லை கொடுப்பது, இரவு நேரங்களில் செந்நீர் குடிக்கும் அரக்க கூட்டம்.

கடினப்பட்டு சேமித்து வைத்த சிவப்புயிரை இலவசமாய் வன்முறையில் பிடுங்கிக் கொள்ளும் அசாதாரணமான அரக்கன் இவன், அரக்கர்கள் ஒன்று கூடி ஒரு பெரிய முடிவெடுத்தனர், இனி தங்களுக்கு பெரிய வலுவான உடலமைப்பு வேண்டாம், சிறிய உடலமைப்பு போதும் மானுடப்பிறவிகளை ஒரு வழி செய்து விடுவோம் என்பதுதான் அவர்கள் எடுத்துக்கொண்ட மிக புத்திசாலியான முடிவு. இத்துனூண்டு ஜன்மம் எடுத்துக்கொண்டாலும் அவர்கள் அரக்கர்கள் என்பதால் செந்நீர் அருந்தவே அதிகப்பிரியம். வெறும் செந்நீரை மட்டும் அருந்தி விட்டு போனால் போதாது என்று தங்களை விட மிகச் சிறிய, மனித கண்களுக்கு புலப்படாத, மனிதர்களை துன்புறுத்தும் மற்ற கிருமிகளையும் துணைக்கழைத்து கொள்வது என ஓர் உடன்பாடும் ஏற்படுத்தி கொண்டது அந்த மனித செந்நீர் பருகும் அரக்க கூட்டம்,

மனிதர்கள் எத்தனையோ வகையில் அவைகளுடன் போராடி கோடி கணக்கில் அவைகளை தினம் தினம் அழித்தாலும் அவை மீண்டும் மீண்டும் கோடிக் கணக்கில் உற்பத்தியாகும் வரம் வாங்கி கொண்டனவாம். முன் பிறவிகளில் அரசியல்வாதிகளாய் வாழ்ந்து தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை வெளிபடுத்த இயலாமல் போன பல மனிதர்களும், உணவில் கலப்படம், பாலில் தண்ணீர் கலந்து பணம் ஈட்டி பின்னர் உயிர் நீத்த மனிதர்களும், பணம் வாங்கிக்கொண்டு மனிதர்களின் கை கால் கழுத்து வயிறு போன்றவற்றை வெட்டி பின்னர் காவல்துறையால் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்ட சமூக விரோதிகளும், ஆறு மணியாகிவிட்டால் குடிக்காமல் வாழ இயலாமல் இறந்து போனவர்களும், இப்படிப்பலரும் செந்நீர் குடிக்க இந்த அரக்க கூட்டத்தில் அரக்கர்களுடன் இணைந்து செயலாற்றி வருவதாகவும் அறிய முடிந்தது.

எவரது வீட்டுக்குள் நுழைவதற்கும் விருந்தாளியாக, அல்லது சொந்தகாரராக இருக்க வேண்டிய அவசியமே இல்லை என நினைக்கும் இந்த அரக்க கும்பலுக்கு, மாளிகை குடிசை என்கின்ற பாகுபாடெல்லாம் கிடையாது, செந்நீர் மட்டும் அருந்தியே ஆகவேண்டும், இந்த பாழைப்போன கொசு இருக்கிறதே இவைகளைத்தான் சொன்னேன். அரசியல்வாதியின் 'கடி'யாவது தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் தெரியும்வரை தான், ஆனால் இந்த பாழாய்ப்போன கொசுக்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது. அப்பப்பா என்ன கடி என்ன கடி.


()()()()()()()()()()()()()()()()()()

வியாழன், 7 ஏப்ரல், 2011

உள்ளது உள்ளபடி




காலையில் படுக்கையை விட்டு எழுந்து முதல் வேலையாக செய்தித்தாள் படித்தால்தான் வேறு பணிகளில் மனது முழுவதுமாக ஈடுபட முடியும் என்ற பழக்கம் பலருக்கு உண்டு, என் தந்தையாரும் அவரது அண்ணன் எனது பெரியப்பாவும் அந்த வகையைச் சேர்ந்தவர்கள், அவர்கள் இருவருமே எனது முதல் குருக்கள், என் பெரியப்பா முரசொலியை வாங்கி அதில் கலைஞர் எழுதும் கடிதத்தை படிப்பது முதல் வேலை, ஆனால் என் அப்பா முரசொலி வாங்கும் அளவிற்கு வருமானமில்லாமல் வறுமையில் வாழ்ந்ததினால், காலையில் எழுந்து அருகே இருக்கும் தேநீர் கடைகளில் கிடைக்கும் தினத்தந்தியை படிப்பார், பின்னர் அங்கு தினமும் கூடுகின்ற வாடிக்கைகாரர்களிடம் அன்றைய செய்திகளைப்பற்றிய அலசல் நடக்கும், என் பெரியப்பாவும் என் தகப்பனாரும் மெட்ராஸ் டெலிபோன்ஸில் [அக்காலத்தில் நடுவன் அரசுப்பணி] பணி செய்துவந்தனர், என் அப்பாவிற்கு திரையுலகில் பெரியதாக எதையோ சாதித்துவிடவேண்டும் என்கின்ற வெறி பிடித்துக்கொண்டு ஆட்டிப்படைத்ததால் அதைபோன்ற பல நல்ல பணிகளை உதறித்தள்ளிவிட்டு திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான நண்பர் கிருஷ்ணன்[பஞ்சு]விடம் நினைக்கும்போதெல்லாம் சென்றுவிடுவதுடன் 'அவர் வந்து பார்க்கச்சொன்னார்' என்று வேலைகளை சற்றும் மதிக்காமல் சென்றுவிடுவார்.

என் பெரியப்பா அங்கேயே பணி செய்து ஓய்வும் பெற்றார், எப்போதாவது அருகில் இருந்த என் பெரியப்பாவின் வீட்டிற்க்குச் சென்றால் என் பெரியப்பாவும் எனது அப்பாவும் முரசொலியில் வந்த செய்திகளைப்பற்றியும் கலைஞரின் சொல் விளையாட்டுக்களையும் அவரது திறைமைகளையும் அதிகமாக பேசுவதுண்டு என்னையும் உடன் அழைத்து போகும்போதெல்லாம் அவர்களது உரையாடல்களை நான் உற்று கவனிக்கத் தவறியதில்லை. எங்களது குடும்பத்தார் அனைவரும் [ஒரு சிலர் விதிவிலக்கு, காங்கிரசுக்குத்தான் ஒட்டு போடுவார்கள்] தி.மு.க. உருவாகி தேர்தல்களில் போட்டியிடத்துவங்கிய காலம் முதல் அவர்களது இறுதி ஓட்டுவரையில் தி.மு.காவிற்க்கே போடுவது வழக்கம். கலைஞருடன் பழகிய நாட்கள் பற்றி என் அப்பாவிடம் நான் கேட்டு அறிந்ததும் உண்டு, சில சம்பவங்களில் அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது பற்றி என் அப்பா என்னிடம் கூறியதும் உண்டு.

நான் ஓட்டுப்போட ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரையில் எனக்கு தற்போது வயது 54, இதுவரையில் எனது ஓட்டுக்கள் அனைத்தும் தி.மு.கவிற்கே ஆனால் இம்முறை தி.மு.க கட்சியின் கூட்டணியான காங்கிரசுக்கு எங்கள் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் முதல் முறையாக காங்கிரஸ் கட்சிக்கு எனது முதல் வாக்கு பதிவு செய்யவிருக்கிறேன். கலைஞருடன் நெருங்கி பழகி கழகத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு கலைஞர் மற்றும் அண்ணா போன்றவர்களின் எழுத்து மற்றும் திறமைகளால் வியந்து அக்கட்ச்சியின் மீது அதிகமாக ஆர்வம் இருந்தாலும் எங்கள் குடும்பத்தில் எவரும் தி. மு. கவில் உருப்பினராகியது கிடையாது.

நாட்டில் பலர் தாங்கள் எந்த கட்சிக்கு ஒட்டு போடப்போகிறோம் என்பதை வெளியே உள்ள நபர்களிடம் சொல்வதற்கு தயங்கி, 'எந்த கட்சிக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்' என்கின்ற கேள்வியையே எவரும் எவரிடமும் கேட்பது வழக்கத்தில் இல்லாத ஒன்றாகியதன் விந்தைதான் என்னவோ புரியவில்லை. பரிச்சயமே இல்லாத நபரிடம் பதில் சொல்வதற்கு தயங்கினால் கூட நியாயமான காரணம் ஏதேனும் இருக்கலாம் என்று நம்பலாம், ஆனால் தெரிந்தவர்களிடம் கூட சொல்லத்தயங்கும் அதிசயம் நமது நாட்டில் மிகவும் அதிகம். வயதை குறைத்து சொல்வதில் கூட பலரும் இத்தகைய நிலையிலேயே உள்ளனர், நடிப்புத் தொழிலை உடையவர்கள் உண்மை வயதை மறைத்தாலாவது அதில் நியாயம் உண்டு, எல்லோருமே எல்லோரிடமும் உண்மை வயதை மறைப்பதற்கு என்ன காரணம் என்பதும் விந்தைதான்.
எனக்குத்தெரிந்த மிகவும் வயதான முதியவர் ஏறக்குறைய 98 வயதிருக்கும் அவர் தனது பிறந்தநாளை இறுதிவரையில் கொண்டாடிவந்தார் அவரிடம் உங்களுக்கு என்ன வயது என்று பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கேட்டேன், எனக்கு வயது 89 என்றார். நான் அறிந்துகொண்டவரையில், இதில் ஒவ்வொரு தனி நபருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருப்பதாக அறிந்து கொள்ளமுடிந்தது. எல்லோருமே தங்களது வயதை குறைத்து சொன்னாலும் அதற்க்கு சொல்லப்படும் பல காரணங்கள் ஏற்ப்புடையதாக இருப்பதில்லை. அதே நிலைமைதான் 'இம்முறை எந்த கட்சிக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்' என்று கேட்டால் பதில் சொல்வதன் தயக்கத்திற்கும் காரணமாக கூறுகின்றனர். உள்ளதை உள்ளபடி பேச வேண்டிய இடங்களில் பேசினால் என்ன குறைந்துவிடப்போகிறது என்பது விளங்காத ஒன்று.


&&&&&&&&&&&&&&

வெள்ளி, 15 அக்டோபர், 2010

சிக்கனம்

சிக்கனம் என்பதற்கு முழுமையான விளக்கமளித்து வாழ்ந்துகாட்டுவதில் முதலிடம் வகிப்பவர்கள் பெரும்பாலும் பெண்கள். ஆண்களில் சிக்கனக்காரர்களே இல்லை என்று சொன்னால் அது என் அறியாமையை காண்பிக்கும், ஆண்களிலும் சிக்கனக்காரர்கள் உண்டு, ஆனால் ஆண்களில் சிக்கனக்காரர்கள் தங்களது சொந்த தேவைகளுக்கும் அனாவசியத்திற்க்கும் கணக்கு வழக்கின்றி தாங்களே செலவழித்து விட்டு வீட்டில் உள்ள பெண்களிடம் சிக்கனமாக இருக்கத் தெரியவில்லை என்ற புகாரை கூறி அடிக்கடி குடும்பத்தில் சண்டையிடும் சிக்கனக்காரர்கள் உண்டு. சிக்கனம் என்றாலே நமது கண் முன் தெரிவது பொருளாதாரம் மட்டுமே. ஆனால் சிக்கனம் என்பது மனிதனுக்கு எல்லா விதத்திலும் அத்தியாவசியமானது என்பதை பலரும் அறிவது இல்லை.

பூமியில் சீதோஷ்ண நிலையில் ஏற்ப்பட்டிருக்கும் அதிக வெப்பத்தின் காரணமாக பூமியில் இருக்கும் நீரின் அளவு கணிசமாகவே குறைந்து வருவதை எல்லோரும் அறிந்திருந்தாலும் காவிரி நீர் திறக்கவில்லை என்று கோஷமிடுவதற்க்காக வரிந்து கட்டிக்கொண்டு கிளம்புகின்ற அதே சமயம் இருக்கும் நீரை அல்லது கிடைக்கின்ற நீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை அடியோடு மறந்துவிட்டு செயல்படுகின்ற அடி முட்டாள்கள் நிறைந்திருக்கும் நாடு நமது இந்திய தேசம் என்றால் அது மிகையில்லை.

பொருளாதார சிக்கனத்திற்கு தன்னைத் தவிர வேறு ஒருவர் உதாரணமாக இருக்க இயலாது என மார் தட்டிக்கொள்ளும் பலரும் சமயலறையில் புளி முதல் எரிவாயு வரையில் எல்லாவற்றிலும் சிக்கனத்தை மறவாமல் கடை பிடிக்கும் 'சிக்கனப் புலிகள்' பெரும்பாலும் தங்கள் வார்த்தைகளில் சிக்கனமாக இருப்பதில்லை. அடுத்த நபர் தொடங்கி தனது கணவர் அல்லது மனைவி வரை ஒருவரிடத்திலும் தங்களது 'வார்த்தைகளை' பிரயோகிப்பதில் சிக்கனமாக இருக்க வேண்டுமென்கின்ற வரம்புடையவர்களாக இருப்பதில்லை, நாக்கும் வாயும் நிரம்ப பேசுவதற்குத்தான் படைக்கபட்டிருக்கிறது என்றாலும் அடுத்தவர்களின் மனதை புண்படுத்தி சித்தம் கலங்கச் செய்ய முடியுமோ அத்தனை வேகத்தில் அணுகுண்டையும் மிஞ்சுகின்ற அளவிற்கு வார்த்தை பிரயோகம் செய்வதில் துஷ்டர்களாக, தங்களை மட்டுமே அறிவு ஜீவிகளாக எண்ணி மகிழ்கின்ற 'தாராளம்' நிறைந்தவர்கள் எண்ணிக்கை நிறைய உண்டு.

சிக்கனமாக இருப்பது என்பது சிறந்த குணமாக கருதப்பட்டாலும் எதில் எப்போது எங்கேயெல்லாம் சிக்கனமாக இருக்க வேண்டுமென்பதை அறிந்திருந்தால் மட்டும் போதாது அதன்படி நடக்கவும் வேண்டும். கருமிகளை யாரும் விரும்புவதில்லை, சிக்கனமாக இருப்பவர்களை விட கருமியாக இருப்பவர்களின் தொல்லை இன்னும் மோசமானது, எனக்குத் தெரிந்த ஒரு அம்மாள் கருமி, அவர் தனது வீட்டை சுத்தம் செய்யும்போது வீட்டிலிருக்கும் மிச்சம் மீதியான மருந்து மாத்திரைகளையெல்லாம் சாப்பிட்டு விடுவார், காசு கொடுத்து வாங்கிய பொருள் வீணாவதை அவர் விரும்புவதில்லை என்பார். நான் அவர் வீட்டிற்கு அவரை சந்திக்க சென்ற போது இனிப்பு பலகாரங்களை வாங்கிச் செல்வது வழக்கம், சிறிது கால இடைவெளிக்குப்பிறகு மீண்டும் சென்ற போது வேறு தின் பண்டங்களை வாங்கிச் சென்றேன் எல்லாவற்றையும் எடுத்து உள்ளே வைத்துவிட்டு வந்தவர் கையில் நான் ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பு வாங்கிச் சென்ற இனிப்புகளை எடுத்து வந்து என்னிடம் காட்டி அவரது கடைசி மகள் போபாலிலிருந்து வருவதாக கடிதம் எழுதி இருப்பதால் அவளுக்கு கொடுப்பதற்காக அப்படியே எடுத்து வைத்திருப்பதாக கூறினார்.

அவை எல்லாம் கெட்டுவிடுமே என்றேன் நான், எனக்கு நீரிழிவு வியாதி அதனால் இவைகளை சாப்பிட முடியாது என்றார், என்னிடம் சொல்லியிருந்தால் இனிப்புகள் வாங்கி வருவதை தவிர்த்து வேறு ஏதாவது வாங்கி வந்திருப்பேனே, வீட்டில் உங்களுடன் தங்கியிருக்கும் கடை குட்டி மகனுக்கு இனிப்புகளை கொடுத்து சாப்பிட சொல்லக் கூடாதா என்றேன், அதற்கு அவர் அந்த பையன் வேலையில்லாமல் தண்டச் சோறு சாப்பிடுகிறான் இதில் இனிப்புகளை கொடுத்து சாப்பிட சொன்னால் என் தலை மீது உட்கார்ந்து விடுவான் என்றாரே, இப்படியெல்லாம் கூட மக்கள் இந்த உலகில் வாழுகின்றார்களா என்று எண்ணி எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது தோட்டத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்த போது அங்கே காய்ந்த தென்னை மட்டைகள், தேங்காய் மட்டைகளை குவியலாக சிறு மலை போல குவித்து வைத்திருந்ததை பார்த்து இவைகளை ஏன் இங்கே சேமித்து வைத்திருக்கின்றீர்கள் பாம்பு வந்து புகுந்து கொண்டுவிடுமே என்றேன்,

அதற்க்கு அவர் ஏற்கனவே வாடிக்கையாக ஒரு சர்ப்பம் பல ஆண்டுகளாக வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறது, அதைத்தவிர நிறைய பாம்பு கதைகளும் இங்கு உண்டு, பாம்பு என்னை தீண்டி நான் சாகமாட்டேன் என்பது எனக்குத் தெரியும், இதே போன்ற ஒரு போர் தென்னைமரக் கழிவுகளைக் கொண்டுதான் என் கணவர் இறந்த போது அவரது சடலத்தை மயானத்தில் எரிக்க உபயோகித்தேன், இப்போது நான் சேமித்து வைக்கும் இந்த தென்ன கழிவுகளை நான் இறந்தால் என் சிதைக்கு தீ வைக்கும்படி என் மகனிடம் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கிறேன் என்றார். இப்படியெல்லாம் சிக்கனமாக இருக்கும் கருமிகளை பற்றி இன்னும் வரும் நாட்களில் தொடர்ந்து எழுதுவேன்.

()()()()()()()()()()()()()()()()()()()()()

வியாழன், 14 அக்டோபர், 2010

அன்புள்ள கணினிக்கு


பனிரெண்டு வருடங்களாக உலகை என்னறைக்குள் எடுத்துவந்த எனது முதல் கணிணி கொஞ்சம் கொஞ்சமாக அதன் உழைக்கும் திறனை இழந்து வந்து என்னுடனான உறவை முடித்துக்கொள்ள தயாராகியது. எத்தனைவிதமான மனிதர்களை, உணர்வுகளை, செய்திகளை எனக்கு பகிரங்கமாகவும் ரகசியமாகவும் தெரிவித்து உணர்த்தி என் வாழ்க்கையில் இனி கணினியின்றி இயலாதென என்னுடன் இரண்டற கலந்துவிட்ட உயிரற்ற ஜடப்பொருட்களில் ஒன்றாகி இயங்கி வந்த, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இயந்திரமென்கின்ற கணிணி என்னை விட்டு பிரியா விடை பெற்று பிரிந்தது.

இதற்க்கு முன் சலவை இயந்திரமொன்றும் ஏறக்குறைய பதினைந்து வருடங்களாக என்னுடன் அயராமல் இயங்கி வந்த சடப்பொருள் ஒன்று என்னைவிட்டு பிரிய நேர்ந்த கதையும் உண்டு, மனிதர்களைவிட மிகவும் சரியாக தங்களது பணியை தவறாமல் செய்வதில் இயந்திரத்திற்கு ஈடு இணை கிடையவே கிடையாது. நம்முடன் வெகு காலம் பழகிய, உதவிய மனிதர்களை விட்டு முழுவதுமாக பிரிவதையே பெரிதாக எண்ணாத இயந்திர கதியாய் போன மனிதர்களுக்கிடையே, இயந்திரம் என்கின்ற சாதனம் எத்தனை வருடங்கள் உழைப்பை நமக்கு சிறப்பாய் கொடுத்திருந்தாலும் அதனை பிரிவதில் ஒன்றும் பெரிதாக வருத்தப்பட மனிதர்கள் இல்லை என்பதை காணும் போது இயந்திரத்திற்கும் மனித மனங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது என் பக்கத்தில் உட்காருகின்ற பெண் அடிக்கடி புதிய எழுதுகோல்களை பள்ளிக்கு எடுத்து வருவது வழக்கம் அவ்வாறு ஒரு முறை அழகிய எழுதுகோல் ஒன்றை எடுத்து வந்தாள், அந்த எழுதுகோலை புத்தகங்களை வைக்கும் அறையில் வைத்தவள் திரும்பவும் எடுத்துச் செல்லவில்லை, அந்த பெண்ணிற்கும் எனக்குமான பொதுவான புத்தக அறை என்பதால் அந்த எழுது கோல் அவளுடையது என்று சொல்லி அதனுள்ளிருந்து எடுத்து அவளிடம் கொடுத்த போது அது தன்னுடையது இல்லை என்று சொல்லி திரும்பவும் வாங்க மறுத்தாள், வேறு வழியின்றி அந்த எழுது கோலை நான் எடுத்து உபயோகித்தும் வந்தேன், மிகவும் அருமையாக எழுதிய அந்த எழுதுகோலை பள்ளியிறுதி தேர்வுவரை உபயோகித்து வந்தேன், ஆனால் அந்த பெண்ணுக்கு சித்தத்தில் மாறுதல் ஏற்பட்டதன் விளைவாக ஒன்பதாம் வகுப்பிற்கு பின்னர் பள்ளிக்கு வருவது நின்று போனது. எழுதுகோலையும் அந்த பெண்ணையும் என்னால் இன்றுவரையில் மறக்க இயலவில்லை. அவள் மிகவும் அமைதியான குணம் கொண்ட பெண், ஆனால் ஒன்பதாம் வகுப்பில் படிப்பதற்குரிய வயதைவிட மிகவும் அதிக வயதுடைய பெண்ணாகவும் அதற்குரிய உடற் வளர்ச்சியையும் கொண்டவளாக காணப்படுவாள்.

முதல்
முதலாக புதிய கணிணி வாங்குவதற்கான காரணமாக இருந்தது எனது மூத்த மகள், அவளது பள்ளி தலைமையாசிரியை என்னையும் என் கணவரையும் பள்ளிக்கு அழைத்திருந்தார், அங்கு சென்றபோது பத்தாம் வகுப்பில் பள்ளியில் அதிக மதிப்பெண்களை வாங்கிய மாணவிகளுக்கு அவரவர் விருப்பத்திற்கிணங்க பதினோராம் வகுப்பில் சிறப்பு பாடம் எடுத்து படிப்பதற்கான தகுதி உடையவர்களாக தேர்வு செய்து அந்த மாணவிகளின் பெற்றோர்களிடம் அந்த மாணவிக்கு தேவையான எல்லாவித வசதிகளையும் ஏற்ப்படுத்திக் கொடுத்து ப்ளஸ் டூ என்கின்ற பள்ளியிறுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்கான ஆலோசனை வழங்க பெற்றோர்களை அழைத்திருந்தார்.

கம்ப்யுடர் சயின்ஸ் என்கின்ற பாடத்தை சிறப்புப்பாடமாக எடுத்து படிக்க விருப்பம் தெரிவித்திருப்பதால் கணினியும் அதற்க்கு தேவையான மென்பொருட்களையும் வாங்கி கொடுத்து மாணவி சிறந்த மதிப்பெண் பெற உதவி செய்ய தலைமையாசிரியர் எங்களிடம் சொன்ன காரணத்தால் முதல் கணிணி எங்கள் வீட்டிற்கு உடனே வாங்கப்பட்டது. ஆனால் அந்த கணினியில் பெரும்பாலான சமயங்களில் நான் மட்டுமே நிறைய கற்றுக்கொள்ளுகின்ற வாய்புகள் கிடைத்தது. முதல் கணிணி வாங்குவதற்கு முன்பே கம்ப்யுடர் வகுப்பில் (NIIT) சேர்ந்து கணினியை உபயோகிக்கும் முறைகளைப்பயின்று தேர்ச்சி பெற்றிருந்தேன் ஆனால் அங்கு நான் செய்முறை விளக்கமாக அறிந்தது மிகவும் குறைவே. மகளுக்காக வாங்கிய கணினியில் எனது ப்ராக்டிகல் மிகவும் வெற்றிகரமாகவே நடந்தது. கற்றபோது அறிய இயலாத பலவற்றை ப்ராக்டிகல் சொல்லிக்கொடுத்தது.

அதைத்தவிர இன்டர்நெட் என்கின்ற உலகளாவிய வலையில் எத்தனை விதமான மனிதர்கள். அவர்களின் சிறப்புக்களை அறிவதைவிட ஏமாற்று வேலைகள், பழி தீர்க்கும் மனிதர்கள், அடுத்தவரை கெடுக்க எத்தனை விதமான கபட நாடகங்கள், செக்ஸ் என்கின்ற பெயரில் எத்தனை ஆபாசங்கள், சொல்லி முடியாத மற்றும் சொல்லுக்குள் அடங்காத மனித வக்கிரங்கள் எத்தனை எத்தனை. முகம், விலாசம் தெரியாது என்பதால் மனிதர்களின் எல்லையற்ற வக்கிரங்களின் உச்ச கட்ட செயல்களின் வெளிப்பாடுகள் என வலையுலகம் முழுவதும் நிறைந்து கிடக்கும் மனிதர்களின் பிம்பங்கள். இவையனைத்தையும் எனக்கு இதுநாள் வரையில் எடுத்துக் காட்டி வந்த என் முதல் கணிணி. என்னால் என்றும் மறக்க இயலாத முதல் கணிணி.


++++++++++++++++++++++++

புதன், 22 செப்டம்பர், 2010

சட்டம் தன் கடமையை ஒழுங்காக செய்யும்


"சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு"


பாப்ரி மசூதி - அயோத்தியா வழக்கில் வருகின்ற செப்டெம்பர் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக வெளியாகியுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பும் அதை தொடர்ந்து நடுவன் அரசு அமைச்சர் திரு ப. சிதம்பரம் அவர்கள் இன்று அறிவித்திருக்கின்றபடி அந்தந்த மாநிலங்களில் போதுமான அளவு பாதுகாப்பை பலப்படுத்துவது மேலும் மத்திய அரசின் பாதுகாப்பும் வழங்கப்படும் என்பதும் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற நிகழ்வு. இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதுமே இந்த தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு மனுநீதிச்சோழன் வழங்கிய தீர்ப்பைப்போலிருந்தால் ஜனநாயகத்தின் மிகப்பெரிய அஸ்திவாரத்தின் உறுதி தற்போது இந்தியாவில் எவ்வாறு உள்ளது என்பதற்க்குச் சான்றாக இருக்கும், அதைவிட இன்னும் அதிகமாக சாதாரண மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நீதி கிடைக்கும் என்கின்ற உறுதியும் நம்பிக்கையும் மக்கள் மனதில் மீண்டும் உருவெடுக்கும்.

ஞானத்திற்கு உதாரண புருஷனாக வரலாறு கூறும் ஞானவான் சாலமன் என்கின்ற பேரரசன் கொடுத்த சிக்கலான வழக்குகளின் தீர்ப்பைப்போல் இருக்கும் என்றால் இக்காலத்து மக்கள் அந்த தீர்ப்பை பற்றி என்ன சொன்னாலும் தீர்ப்பு நேர்மையானதாகவே கருதப்படும், இரு மதங்களின் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட வழக்கு என்பதால் இருதரப்பினருக்கும் சாதகமாக இல்லாமல் புதைப்பொருள் ஆராய்ச்சிக்கு உரிய இடமாக அறிவித்து வழக்கை முடித்துவிட்டாலும் சரியான தீர்ப்பாகவே அமையும், அது ஜனநாயக ரீதியில் நியாயமான தீர்ப்பாகிவிடும். இந்த வழக்கின் அடிப்படை கருத்தைப் போலவே வேறு ஒரு சம்பவம் நடந்ததாக என் தாயார் கூற நான் கேட்டதுண்டு.

என் தாயாரின் அப்பாவின் தகப்பனாருக்குச் சொந்தமான நிலத்தை வேறு ஒருவருக்கு தானமாக கொடுத்து பத்திரப்பதிவும் அவர் பெயரிலேயே செய்துவிட்டார், அந்த நிலத்தை வாங்கியவர் வயதாகி இறந்து விட்டார், என் அம்மாவின் தாத்தாவும் இறந்துவிட்டார், அந்த நிலத்தை உபயோகித்த அவரது குடும்பத்தினர் வேலையின் நிமித்தமாக ஒவ்வொருவராக வேறு ஊர்களுக்குச் சென்று அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டனர், பத்திரம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது, என் அம்மாவின் தகப்பனாருக்கு தனது அப்பாவின் நிலம் எது என்று விவரம் அறிந்துகொள்வதற்காக பத்திரங்களை பதிவுசெயுமிடத்திற்க்குச் சென்றபோது அவரது தந்தையார் வேறு ஒருவருக்கு அந்த நிலத்தை கொடுத்திருப்பது பற்றிய பதிவுகள் அங்கு இல்லாமல் இருந்ததால் கைமாறிய நிலம் மறுபடியும் என் தாத்தாவின் நிலத்தோடு சேர்ந்துவிட்டது.

ஆனால் பல வருடங்கள் கழித்து அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் உரிமை கேட்டு வழக்கு தொடர்ந்தார், அவருக்கு இருந்த சான்று அந்த நிலத்தின் கிழக்கு மூலையில் பூமிக்கு அடியில் அவரது தாத்தா சேமித்து வைத்து சென்ற சில மூலிகைகளைப்பற்றிய ஆராய்ச்சிகள், அவை எல்லாமே ஓலைச்சுவடிகள். அவற்றை சிறிய இரும்பு பெட்டியில் வைத்து புதைத்துவிட்டு அதன் மீது அவர்களது குடும்ப தெய்வத்தின் சிலையை வைத்திருந்ததாக கூறினார். அவர் கூறிய இடத்தின் மீது என் அம்மாவின் தங்கை பெரிய பங்களா ஒன்றை கட்டி பல வருடமாகிவிட்டது, அதில் வாழ்ந்தும் வந்தனர். பிறகு அந்த பங்களாவை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டு வேறு மாநிலத்திற்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. அந்த பங்களாவை முழுவதுமாகவோ ஒரு பகுதியையோ இடித்துவிட்டு பூமிக்கடியில் தோண்டி பார்த்தால் அந்த இரும்பு பெட்டி கிடைக்கலாம் என்பது வழக்கு தொடுத்தவறது வாதம்.

அந்த ஓலைச்சுவடியில் அவரது முப்பாட்டன் கண்டுபிடித்த அறிய வகை மருந்துகள் உண்டு என்று அவர் கூறி வந்தார், ஆனால் அங்கு பங்களாவை கட்ட குழிகள் தோண்டிய போது எவ்வித இரும்பு பெட்டியோ சுவாமி சிலையோ ஓலைச்சுவடிகளோ கண்டெடுக்கப்படவில்லை என்று அந்த ஊர் மக்களும் க்கம்பக்கதில் இருந்தவர்களும் கட்டிடத்தை கட்டிய அனைவரும் கூறியும் அவர் அதை ஏற்கவில்லை. அப்போது அங்கே எழுப்படட்ட கேள்வி புதைந்து போன பொருள் என்று கூறப்படும் அந்த சிறிய இரும்பு பெட்டி பூமியின் அடியில் உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்காக அங்கு வசிக்கின்ற வீட்டை இடிப்பதா என்பதுதான்.

இறுதியாக வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டபோது அந்த நிலம் அங்கு பங்களா கட்டி வாழுகின்ற குடும்பத்திற்கு சொந்தமானது அந்த நிலத்தை அந்த நிலத்தின் அப்போதைய சொந்தக்காரர் இன்னொருவருக்கு விலைக்கு விற்கவில்லை அவரது கஷ்ட நிலையை கண்டு மனமிரங்கி உபயோகிப்பதற்காக தானம் கொடுத்திருக்கிறார், எப்படியானாலும் தற்போது அந்த நிலத்தில் யார் வசிக்கின்றாரோ அவருக்குதான் அந்த நிலம் சொந்தமானது என்றும் அதனால் அந்த பங்களாவை இடிப்பதற்கு நீதிமன்றம் தடைவிதித்து வழக்கை ரத்து செய்தது. பெரும் சர்ச்சைக்குள்ளான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்ற இந்த சூழலில் எனக்கு அந்த வழக்குதான் நினைவிற்கு வந்தது.

தீர்ப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் நேர்மையானதாகவும் ஜனநாயக ரீதியில் பொதுமக்களின் நன்மையை கணக்கில் கொண்டு தீர்ப்பளிக்கப்படும் என்பது எனது நம்பிக்கை, எதிர்பார்ப்பு.

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

அந்த சில நிமிடங்கள் - எதிர்பாராதது

எல்லோரது வாழ்க்கையிலும் 'அந்த சில நிமிடங்கள்' என்பது நிச்சயம் ஏதோ ஒரு வகையில் பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தி வாழ்க்கையை அடியோடு மாற்றிவிடுவதுண்டு. ஒரு பெண் தன் வாழ்க்கையை மாற்றிய அந்த சில நிமிடங்களைப் பற்றி என்னிடம் கூறினார், வேலைக்காக எத்தனை பரீட்சைகள் உண்டோ அத்தனையையும் விடாமல் எழுதி வந்தாள். ஒரு வழியாக வங்கியில் வேலை கிடைத்தது, நீலகிரியில் முதல் முறையாக வேலையில் சேருவதற்காக தனது தகப்பனாருடன் கிளம்பி சென்றாள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நெருங்கிய நண்பர்கள் யாருக்குமே தனக்கு வங்கியில் வேலை கிடைத்த செய்தியைப் பற்றி தெரிவிக்கவில்லை, நீலகிரியில் வங்கி இருந்த இடத்தின் சற்று அருகில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர், அடுத்தநாள் வங்கிக்குச் சென்று வேலையில் சேர்ந்தாகிவிட்டது, வங்கியில் பணி செய்துகொண்டிருந்தவர்களில் ஒருவர் செங்கல்பட்டின் அருகிலிருந்த ஒரு சிறிய கிராமத்திலிருந்து சென்று அங்கு பணியாற்றி வந்தார்.

புதிதாக வேலைக்கு சேர்ந்த பெண்ணை தவிர வேறு பெண்கள் அந்த வங்கியில் பணி செய்தனரா என்பதைப்பற்றி அந்த பெண் என்னிடம் தெரிவிக்கவில்லை. செங்கல்பட்டு கிராமத்திலிருந்து அங்கு சென்று வேலை பார்ப்பவர்தான் அங்குள்ள வங்கி ஊழியர்களின் யூனியன் தலைவர், வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் விடுதிகள் அங்கு இல்லாததால் அவருடைய வாடகை வீட்டிலிருந்த உபயோகிக்காத அறையை புதிதாக சேர்ந்த பெண்ணிற்கு கொடுத்து உதவினார். அந்த பெண் அங்கேயே தங்கி அலுவலகம் சென்று வந்தார், நீலகிரியில் அடிக்கடி மழை பெய்வது வழக்கம், வார இறுதியில் கடைக்குச் சென்று சமைப்பதற்காக சில சாமான்களை வாங்கிவருவதற்க்கு அந்த பெண் சென்றிருந்தார், திரும்பி வரும்போது நல்ல மழை, மழை நிற்பதாக தெரியவில்லை அதனால் மழையில் குடையை பிடித்துக்கொண்டு முழுவதும் நனைந்து வீடு வந்து சேர்ந்தார்.

அடுத்தநாள் அந்த பெண்ணிற்கு ஜுரம், உடன் இருந்தவர் பெண்ணிற்கு தேவையான மாத்திரைகள் உதவிகள் காப்பி கஞ்சி ரொட்டி என்று உதவி செய்திருக்கிறார், அந்த பெண் உடல் நலமாகி மீண்டும் அலுவலகம் செல்ல துவங்கினார், வாரக்கடைசியில் விடுமுறை சமயத்தில் அந்த ஆண் நன்றாக குடித்துவிட்டு இந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார், இந்த பெண்ணிற்கு யாரிடம் சென்று இதைப்பற்றி சொல்வது என்று புரியாமல் நாட்களை கடத்தி வந்தார், அந்த பெண் அந்த ஆணை அண்ணன் என்று கூப்பிட்டு வந்தார் [safeஆக] ஆனாலும் அந்த ஆணின் தொடர் பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க வழிதெரியாமல் விழித்து வந்தார். இந்நிலையில் அந்த ஆடவரின் தமக்கைகளிடம் கைபேசியின் மூலம் அடிக்கடி பேசுவதுண்டு, அப்படி பேசும் போது ஒருநாள் வேறு வழியின்றி வர் தன்னிடம் நடந்துகொள்ளும் முறைகளைப் பற்றி சொல்லி இதற்க்கு ஏதாவது தீர்வு சொல்லும்படி அழுதுள்ளார்.

அந்த ஆடவரின் தங்கைக்கு திருமணம் நிச்சயதார்த்ததிற்க்காக அவர் செங்கல்பட்டில் உள்ள கிராமத்திற்கு சென்றிருந்த போது அவரது அக்காவும் தாயாரும் இந்த பெண் சொன்ன புகாரைப்பற்றி அவரிடம் விசாரித்த போது அவர் சற்றும் அவற்றிற்கு அஞ்சவில்லை, பதிலேதும் சொல்லாமல் மவுனமாகவே இருந்த்விட்டார், இதையடுத்து அவரது தாயாரும் தமக்கையும் நீலகிரியில் அவர் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வீட்டிற்கு வந்தனர், அப்போது அந்த பெண்ணிடம் திருமணமாகாத இருவர் ஒரே வீட்டில் தங்கியிருப்பது ஆபத்தானது அல்லவா என்று அந்த பெண்ணிடம் விசாரித்துவிட்டு அந்த ஆடவரிடம் இதற்க்கு என்ன செய்து முடிவு கட்டுவது என்று கேள்வி எழுப்பியுள்ளனர், அவர் வேறு வழியில்லைஎன்றால் அந்த பெண்ணை எனக்கு திருமணம் செய்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள இயலாமல் தங்கள் ஊருக்கு திரும்பிவிட்டனர். இருவரும் வெவ்வேறு மதம் இனம் மொழி என்று எல்லாவிதங்களிலும் வெவேரானவர்கள் என்பதே அதற்க்கு காரணம். பெண்ணின் வீட்டில் இந்த செய்தியை கேட்ட அனைவரும் வாயடைத்து விட்டனர். இருவருக்கும் திருமணம் செய்துவைக்க இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை, அந்த பெண்ணிற்கு அந்த ஆடவரை திருமணம் செய்து கொள்வதற்கு சிறிதும் பிடிக்கவில்லை, அவள் வேறு ஒருவரை காதலித்துவந்தாள். ஆனால் பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷமிருப்பதாக ஜோதிடர்கள் எழுதி கொடுத்திருந்ததால் வேறு திருமணம் செய்வதில் தடை இருந்தது. இந்நிலையில் இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டனர், அதற்க்கு காரணம் அந்த பெண் கர்ப்பமுற்றிருந்தார், அந்த பெண்ணிற்கு பிடிக்காத வாழ்க்கை அமைந்தது என்பதால் கருச் சிதைவிற்கான மாத்திரைகள் சாப்பிட்டும் கர்பத்தை அவளால் கலைக்க முடியவில்லை, மருத்துவரிடம் சென்று கலைத்துவிடுவதற்க்கு அந்த ஆடவர் சம்மதிக்கவில்லை. பிறந்த முதல் ஆண் குழந்தைக்கு பன்னிரண்டு வயதுவரை இரண்டு காதுகளிலும் சீழ் ஒழுகிக்கொண்டே இருந்தது, அடிக்கடி வலிப்பு வந்து எங்கே இருந்தாலும் கீழே விழுந்துவிடுவான், காரணம் அந்த பெண்ணிற்கு பிடிக்காத கர்ப்பம், பிடிக்காத திருமணம்.

அந்த பெண்ணின் வாழ்க்கையை அடியோடு மாற்றிய 'அந்த சில நிமிடங்கள்' அந்த ஆண் குடித்துவிட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 'அந்த சில நிமிடங்கள்' எத்தனை கொடுமையானது. அந்த சில நிமிடங்களால் அந்த பெண்ணின் வாழ்க்கை முற்றிலுமாக மாற்றப்பட்டுவிட்டது. இதைப்போன்று ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்பம், சுகம், துக்கம், விபத்து மரணம், நோய், என்று கணக்கிலடங்கா காரியங்கள் எதிபாராமல் நடந்துவிடும் 'அந்த சில நிமிடங்கள்' என்பதை பற்றி சிந்திக்கும்போது மனிதனின் வாழ்க்கையில் நடப்பது எல்லாமே எதிர்பாராததுதான். 'எந்த சில நிமிடங்கள்' வாழ்க்கையை அடியோடு மாற்றிவிடக்கூடியது என்பதை யாரும் அறிந்திருக்கவே முடியாது.

சனி, 18 செப்டம்பர், 2010

திருமணவாழ்க்கை

பெண்ணுக்கு அறிவு ஆற்றல் அழகு எல்லாம் பெருமை சேர்க்கும் ஆனால் குழந்தை பிறப்பில் பெண்ணிற்கு அதிக பெருமை சேருகிறது. அப்படி குழந்தை பேற்றில் பெருமை சேர்த்த பின்னர் அந்த குழந்தையை எல்லாவிதத்திலும் சீராட்டி மேன்மக்களாய் வளர்க்கும் போது பெண்ணின் பெருமைக்கு எல்லையற்று விடுகிறது. ஒரு ஆண் ஒரு பெண்ணை அழகு அறிவு திறமை என்று எந்த காரணத்திற்கு நேசித்திருந்தாலும் அவளை மனைவியாக்கிக் கொண்ட பின்னர் அவள் பெற்று கொடுக்கும் குழந்தையினால் அந்த பெண்ணை மேலும் நேசிக்கிறார், அதை விட அதிகமாய் அந்த குழந்தையை அந்த பெண் கண்ணும் கருத்துமாய் வளர்த்து ஆளாக்கும் போது அந்த பெண்ணின் மீது எல்லையற்ற மதிப்பும் அன்பும் வழங்குகிறார். இது இயற்கை.

இதை நன்கு உணரத் தவறுகின்ற பெண்டிரை ஆண் அறவே வெறுக்கிறார், அந்த வெறுப்பிற்கு ஆளாகும் பெண்ணின் மீது ஏற்ப்படும் வெறுப்புக்கு அளவே இல்லாமல் போகும் நிலை ஏற்ப்படுகிறது. திருமணத்திற்கு முன்னர் ஆண் பெண்ணின் மீது பொழிகின்ற அன்பிற்கும் திருமண வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்த பின்னர் மாறும் அன்பிற்கும் வித்தியாசம் உண்டு, கணவனது மனநிலையறிந்து வருவாயை அறிந்து உறவினர்களை உபசரித்து குடும்பத்தை அனுசரித்து நடத்தும் குணநலன்களால் அப்பெண்ணின் மீது கணவனின் அன்பு ஆழமானதாக மாற்றப்படுகிறது. ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் அன்பின் அர்த்தங்கள் மாறும் நிலை ஏற்ப்ப்படும்போது மாற்றங்களை இருவரும் புரிந்து கொள்வது அவசியமாகிறது. அப்படி ஒருவரையொருவர் புரிந்து அனுசரிக்காவிடில் குடும்பத்தில் அன்பும் சமாதானமும் நிலைத்திருக்கும் வாய்புகள் இல்லாமல் போகிறது.

திருமணவாழ்க்கை என்பதை மிகவும் சுவாரசியமானதாக்கிக் கொள்வதில் இவருடைய பங்கும் சரி சமமானதுதான், இரட்டை மாட்டு வண்டி போல இரண்டு பேரும் ஒரே விதமாக ஒரே நோக்கில் மனமொத்து வாழாவிடில் [உடலின்பம் அதி விரைவில் வெறுத்து போகும் தன்மையுடையது என்பதால்] சம்சாரத்தில் வெறுப்பு ஏற்ப்படும் சூழல் உருவாகிறது உடலின்பத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டது திருமண வாழ்க்கையல்லவென்பது இருவருக்கும் பந்தத்தில் ஈடுபடும் முன்னதாகவே தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம். திருமண வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவேறான சூழல் உருவாகிறது அவற்றிற்கேற்ப இன்ப துன்பங்களும் மாறுபடுகிறது. உண்மையான அல்லது சரியான திருமண வாழ்க்கை என்பது நுனி கரும்பிலிருந்து அடிக்கரும்பை தின்பதை போன்றது துவக்க காலத்தில் லேசாக இருந்த அன்பும் மரியாதையும் காலம் செல்ல செல்ல அதிகரிக்கும் இயல்புடையது.

விட்டு கொடுப்பதை பற்றி பலரும் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம் ஆனால் எதை எதற்க்காக விட்டு கொடுப்பது என்பதை முடிவு செய்வது அவரவர் கையில் உள்ளது. விட்டு கொடுக்காவிட்டால் இருவர் ஒன்று சேர்ந்து வாழ்வது என்பது அரிது. அதைவிட பெரியது ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கை, அதைவிட மிகவும் பெரிது ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யாமல் வாழ்வது. ஆக திருமண பந்தத்தில் பொறுப்புகள் என்பது ஆண் பெண் இருவருக்கும் சரிசமமானது, கடமைகள் சரிசமமானது, கண்ணியம் என்கின்ற நேர்மை சரிசமமானது, எந்த காரணத்திற்காகவும் ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டியது கிடையாது. திருமண வாழ்க்கை என்பது முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது சரியாக பிடித்து நம்மை நாமே பார்க்கும் வரையில் பொய்யான தோற்றத்தை நமக்கு காண்பிக்காது தவறினால் சுக்கு நூறாகிவிடும் என்பதும் நமக்கு நினைவில் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

நினைவுகளில் சில....

முதல் முறையாக வீட்டை விட்டு வெளியூரில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வருகின்ற வாய்ப்பு திருமணத்திற்குப் பின்னர் கிடைத்த சந்தோஷத்தில் இரவுநேர பதிவு செய்யப்படாத தொடர்வண்டியில், மிகக் குறுகிய காலத்தில் என்னுடன் பழகிய பெண்ணும் அவளது அண்ணன் அண்ணியுடன் பயணித்த போது வித்தியாசமான புதுமையான அனுபவமாக இருந்தது, என்னுடன் பயணித்தவர்களிடம்; அடுத்தநாள் குறிப்பிட்ட ஊரில் இறங்கிய பின்னர் அங்கு வெளியூர் பயணிகள் தங்குவதற்கான அறைகள் கிடைக்குமா என்று கேட்டேன், அவர்களது நண்பர் வீடு இருப்பதால் அங்கே சென்று குளித்து உடமைகளை அங்கேயே வைத்துவிட்டு நாம் எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்றனர்.

ரயில்
நிலயத்திலிருந்து சிறிது தூரம் செல்லவேண்டியிருந்ததால் குதிரை வண்டியில் ஏறி குறிப்பிட்ட வீட்டை சென்றடைந்தோம், அந்த இடம் ஒரு அக்ரகாரம், காலை நேரம் குளிர்காலம் என்பதால் வெந்நீர் குளிப்பதற்கு தயாராக இருப்பதாக சொன்னார் ஒரு நடுத்தர வயது பெண். பழைய காலத்து நாட்டு ஓடுகள் வேய்ந்த நாலு கட்டு வீடு, பின்புறம் தோட்டத்திலிருந்த கழிவறைக்குச் சென்று குளித்து முடித்து வந்த போது சாப்பாடு தயாராக இருப்பதாக சொன்னார்கள், சமையல் செய்வதெல்லாம் குமுட்டி அடுப்பில், அதிகாலை எழுந்து குளித்துவிட்டு சமையலை தொடங்கி இருந்தால் கூட குமுட்டி அடுப்பில் அத்தனை சீக்கிரம் சமையலை முடித்திருக்க முடியுமா என்று ஆச்சரியப்பட வைத்தது. முன்பின் தெரியாதவர்களின் வீட்டில் தங்குவதோ உணவருந்துவதோ எனக்கு பிடிக்காத, பழக்கமில்லாத செயல்.

வெளியே சென்று உணவகத்தில் ஏதேனும் சாப்பிட்டுக் கொள்வேன் என்று சொன்னபோது அந்த பகுதி கிராமமாக இருந்ததால் உணவகம் அதிகாலையில் தயாராக இருக்குமா என்பது சந்தேகம் என்றனர், ஆனால் குதிரை வண்டிச் சவாரி செய்கையில் சில கதைகளில் படித்த தென்னிந்திய பழமை வாய்ந்த கிராமத்தின் சாயலை நேரில் காண முடிந்தது, கடை வீதியில் கடைகள் சில பூட்டியும் சில திறந்தும் இருந்ததை கவனித்தேன், என்னுடன் பயணித்தவர்கள் பிராமண வகுப்பை சார்ந்திருந்ததால் அவர்களது நண்பரும் அவரது வகுப்பினராகவே இருப்பார் என்று நான் நினைத்திருக்கவில்லை எனக்கு தர்மசங்கடமாகிப் போனது, உடன் வந்த பெண்களிடம் நான் எப்படி இவர்கள் வீட்டில் உணவருந்துவது என்றேன், ஒன்றும் காட்டிக் கொள்ள வேண்டாம் உங்களைப் பார்த்தால் வேற்று ஜாதி பெண்ணாகவே தெரியவில்லை, நெற்றியில் மட்டும் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள் எந்த சந்தேகமும் வராது என்றனர்.

குங்குமம் வைத்துக் கொள்வதா இதென்ன புது ஒப்பனை என்று மனதினுள் நினைத்தபடி குங்குமத்தை வாங்கி நெற்றியில் சிறிதாக வைத்துக் கொண்ட போது சிறிது குங்குமத்தை வகிடு எடுக்குமிடத்திலும் வைத்துக் கொள்ளுங்கள் என்றார். குங்குமத்தை வேடமிடுவதற்க்காக வைப்பது அது முதல் முறையல்ல, என் அம்மாவின் குடும்பத்தாரைக் காண அவர்களது சொந்த ஊருக்கு போகும் போது என் அம்மாவின் பெரியம்மா சின்னம்மா மற்ற சொந்த பந்தங்களை பார்ப்பதற்கு முன்னர் குளித்து முடித்து நெற்றியில் பொட்டு வைத்து தலையில் சிறிது பூ வைத்த பின்னர் தான் அவர்களை நேரில் சென்று பார்ப்பது வழக்கம், அது என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தது, தப்பித் தவறி பொட்டும் பூவும் வைக்காமல் மறந்து சென்று விட்டால் அவர்களிடமிருந்து திட்டு கிடைக்கும், நெற்றியில் மாட்டு சாணத்தை எடுத்து பூசிவிடுங்கள் என்று அங்குள்ள வேலையாட்களிடம் என் அம்மாவின் பெரியம்மாவும் சின்னம்மாவும் சினத்தில் கூறுவதுண்டு.

காலையில் அருகிலிருந்த சிவன் கோவிலுக்கு உடன் வரும்படி அழைத்தனர், நான் கோவிலுக்குள் வரவில்லை வெளியிலேயே நின்று காத்திருக்கிறேன் என்று கூறி தப்பித்துகொள்ள முயன்றேன் ஆனால் எங்களுடன் அந்த வீட்டின் நடுத்தர வயதுடைய பெண்ணும் நண்பரின் நண்பரும் உடன் வந்தனர். மிகவும் நெருக்கடியான நிலை, நிலைமையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கோவிலுக்குள் அவர்களுடன் செல்வது போல பாவனை செய்துவிட்டு அவர்கள் உள்ளே சென்றதும் நான் வெளியே வந்து விட்டேன், அவர்கள் எல்லோரும் வெளியே வந்தபோது அவர்கள் கையிலிருந்த குங்குமம் விபூதியை கொடுத்து என் நெற்றியில் வைத்துக்கொள்ளச் சொன்னார்கள், என்னிடம் இருக்கிறது நான் பிறகு வைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி தப்பித்துவிட்டேன்.

எங்கள் ஊருக்கு என் அம்மாவுடன் செல்லும்போது தினமும் மாலையில் எனது அம்மாவின் தங்கையின் மகள்களுடன் கோவிலுக்கு செல்லவேண்டும், கோவிலில் உள்ள சிலைகளை அவர்கள் சுற்றி வரும்போது நானும் சுற்றி வரவேண்டும், அப்போது எனக்கு வயது பனிரெண்டு, அதன் பிறகு ஊருக்குச் சென்றபோது என்னை அவர்கள் எந்த கட்டாயமும் செய்வது கிடையாது, வருடங்கள் கடந்த போது ஊரிலிருந்த பெரியவர்கள் இறந்து போகவே பொட்டிடுவதும் கோவிலுக்குச் செல்வதும் கட்டாயமாக இருக்கவில்லை.

நாங்கள் அந்த கிராமத்திற்குச் சென்ற வேலை முடிவதற்கு இரண்டு நாட்கள் அந்த ஊரில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, வேலை முடிந்த பின்னர், அன்று மதியமே கிளம்பி ரயிலேறி சென்னை வந்து சேர்ந்தேன்,
அங்கிருக்கும் சிவன் கோவிலில் ஏதோ விசேஷம், அன்று மாலை சாமி ஊர்வலம் அக்ரஹாரத்திர்க்கு வரும், சுவாமி தரிசனம் பண்ணாமல் சென்னைக்கு கிளம்ப இயலாது என்று என்னுடன் வந்த மூவரும் அங்கேயே தங்கி இருந்தனர். எனது பெற்றோர் என்னை சென்னைக்குள்ளேயே இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் ஒருநாள் தங்கிவிட்டு வருவதற்கு கூட அனுமதி அளிக்காமல் இருந்ததால் முதல் முதலாக நான் தனியே சென்று இரண்டு தினங்கள் தங்கிவிட்டு தனியே திரும்பி வந்ததைப் பற்றி அவர்களால் ஒன்றும் சொல்ல இயலாமல் போனதற்கு முக்கிய காரணம் என் கணவர் எனக்கு அனுமதி கொடுத்திருந்ததனால் தான். அதன் பிறகு பல முறை தனியே செல்வதற்கான தேவைகள் ஏற்பட்டன,

அப்படி எங்கேயும் தனியே போக அனுமதி வழங்காதது என் வளர்ச்சிக்கு பின்னடைவுகளை ஏற்ப்படுத்தியது, இந்த சம்பவத்தில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆறேழு மாதங்களுக்கு பின்னர் நான் என் கணவருடன் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுவிட்டேன், என்னுடன் பயணம் செய்த பிராமணப் பெண் எங்கள் வீட்டின் விலாசத்தை தேடிக் கண்டு பிடித்து வந்து என் பெற்றோரிடம் என்னை பார்க்க வேண்டும் என்று விசாரித்தபோது என் பெற்றோரும் கணவனுடன் சென்ற விவரம் தெரிவித்தனர், அவளது அண்ணனுக்கு மத்தியக் கிழக்கு நாடுகளில் வேலை வாங்கித்தர உதவி கேட்டு தேடி வந்ததாக தெரிந்தது, முன்பின் பழக்கப்படிராதவர்களுக்கு செய்யும் உதவிக்கு உள்நோக்கம் இருக்குமா.