வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ராஜுவின் கதை

சிறு வயது முதலே வாத்தியார் இல்லாமலேயே தனது சொந்த முயற்ச்சியில் பலவித கைவினை பொருட்களை செய்யும் ஆர்வம் மிகுந்து இருந்தது ராஜுவிற்கு, பத்து வயது சிறுவனால் இத்தனை அழகான கைவினை பொருட்களை உருவாக்க இயலுமா என்று வியக்கும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக கைதேர்ந்த கைவினை பொருள் உருவாக்கும் கலைஞரின் கைவண்ணம் போலிருக்கும் ராசுவினால் உருவாக்கப்பட்ட பொருட்கள். இயற்கையாகவே தாய் வழி சொத்தாக கிடைத்த பாடும் குரலும் திறமையும், இருபது வயது மதிக்கத்தக்க வாலிபப்பருவம் அடையும்போது கவிதை கதைகள் எழுதுவதிலும் அந்த திறமை வளர்ந்தது , வசதியான பெற்றோர்களை கொண்ட குடும்பச் சூழல் அடுத்த வேளைச் சோற்றிற்கு சம்பாதிக்க வேண்டுமென்கின்ற கட்டாயத்தை மறக்கச் செய்தது, கலையார்வம் துரத்தியது,

அடுத்தடுத்த தெருக்களில் வசித்து வந்த பிரபலங்கள் ராஜுவின் கலையார்வத்திற்க்கு மிகவும் உருதுணையானார்கள், அதில் ஒரு திரைப்பட பிரபலத்திடம் தினமும் சென்று தனது கலையார்வத்திற்க்கு தீனி போடும் வாய்ப்பும் கிடைத்தது, அங்கு வந்த பல பிரபலங்களின் அறிமுகமும் கிடைத்தது, ராஜுவிற்கு பணத்தின் அருமை தெரியாமல் வளர்ந்ததன் விளைவு, பிரபலங்களின் அறிமுகத்தை கொண்டு தன் கலை வாழ்க்கை உயர்வதற்கு பயன்படுத்திக்கொள்ளத் தெரியாமல் போனது, அன்றைய கால கட்டத்தில் அரசு வேலை வாய்ப்பாக இருந்தாலும் தனியார் வேலை வாய்ப்பாக இருந்தாலும் தற்காலத்தில் இருப்பது போன்று கடினமாக இருக்கவில்லை என்பதும் மற்றொரு காரணம், ராஜுவின் தாய் மருத்துவர், பிரபல மருத்துவர் ரங்காச்சாரியின் மாணவிகளில் ஒருவர், அவரது அப்பா தென்னக ரயில்வேயின் ஆங்கிலேய மூத்த அதிகாரி, அவரது மூத்தமகள் ராஜுவின் தாய், முதல் பெண்மருத்துவர் முத்துலெட்சுமியாம்மாவிடம் நெருங்கிய தொடர்புடையவர் என்று அடுக்கடுக்காய் பல விதங்களில் செழுமை மிக்கதொரு குடும்ப அடிப்படையின் காரணம், கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

ராஜுவின் சகோதரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அரசுபணியில் பணியாற்றத் தொடங்கிவிட்டனர், ராஜுவிற்கு நண்பர் கூட்டம் அதிகம், ஒவ்வொருவராக வேலைக்குச் செல்ல ஆரம்பித்த போது ராஜுவின் தாயாரும் ராசுவை வேலைக்கு போகச் சொன்னபோது அப்போதைய அரசு தொலைபேசியில் வேலையில் சேர்ந்து ஒழுங்காக வேலைச் செய்ய ஆரம்பித்தார் ராசு. திரைப்படங்களில் அப்போதைய பிரபல வசன கர்த்தாவும் பாடல் ஆசிரியரும் நடிகருமான ராஜப்பா என்பவர் ராஜுவின் கலை ஆசான், அடுத்த தெருவில் வசித்த பிரபலங்களில் ஒருவர், அவரிடம் திரையுலக சம்பந்தமான பலரும் வந்து செல்வது வழக்கம், அதில் ஒருவர் இயக்குநர் கிருஷ்ணன் (பஞ்சு). ராஜப்பாவின் நண்பர், ராசப்பாவின் வீட்டில் முதன் முதலில் ராஜுவிற்கு பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படத் துவங்கியது, அதற்க்கு முன்பே திரு கிருஷ்ணன் அவர்களை சிறுவயது முதலே பார்த்து பழக்கம் இருப்பினும் அதுவரையில் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படாமலிருந்தது, திரு கிருஷ்ணன் அவர்களும் சிறுவயது முதலே அடுத்த தெருவில் வசித்து வந்தவர்.

அந்த கால கட்டத்தில் புரசைவாக்கம் பல பிரமுகர்கள் வாழுகின்ற இடமாக இருந்தது, அங்கேதான் திரு ராஜுவும் ராஜுவின் சகோதரர்களும் பிறந்து படித்து வளர்ந்தது, ராஜப்பாவின் சொந்த ஊர் தஞ்சை, ஐயங்கார் வகுப்பை சார்ந்தவர், திரையுலகில் பணிபுரிவதற்காக சேலம் கோவை போன்ற நகரங்களில் இருந்த பட்சிராஜா பிலிம்ஸ் பணி புரியத் துவங்கிய போது அறிமுகமானவர்களில் திரு கிருஷ்ணனும் ராஜப்பாவும் இன்னும் பல அன்றைய திரையுலக ஜாம்பவான்களும் உண்டு பிறகு சென்னைக்கு திரைப்பட நிறுவனங்கள் ஸ்தாபிக்கபட்ட போது ராஜப்பா புரசைவாக்கத்தில் வந்து குடியேறியதாக கூறப்பட்டது.

திரு சிவாஜிகணேசன் நடித்த பராசக்திக்கு முன்னர் பல திரைப்படங்களை திரு .வி.எம். தயாரித்தபோது அங்கே எடிட்டராக பணிபுரிந்து கொண்டிருந்த திரு பஞ்சு அவர்களின் நட்பு திரு. கிருஷ்ணன் அவர்களுக்கு சிகரெட் மூலம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது, இருவரும் ஒரே brand என்பதால் கிருஷ்ணன் அவர்களுக்கு சிகரெட் தீர்ந்து போனபோது அருகில் சிகரெட் வாங்குவதற்கு வேலையை விட்டு விட்டு பாதியில் வெளியே சென்று வாங்க இயலாமல் போனதால் அதே brand சிகரெட் திரு பஞ்சு அவர்களும் பிடிக்கும் வழக்கம் இருந்ததாகவும் சிகரெட் கொடுத்ததிலிருந்து நட்பும் தொடர்ந்தது அந்நட்பு தொழிலிலும் தொடர்ந்து பின்னர் இருவரும் உறவினர்களாகியும் விட்டனர். திரு கிருஷ்ணனிடம் நண்பராகவும் தொழிலில் உதவியாகவும் திரு ராசு இணைத்துக் கொள்ளபட்டார். இதனால் அரசு வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு ஆத்திலே ஒரு கால் சேத்திலே ஒரு கால் என்பது போல காலம் கடந்தது, ராஜுவின் பெற்றோரின் வசதி காரணமாக துவக்க காலங்களில் வாயிற்று பிழைப்பை பற்றிய அக்கறை இருக்கவில்லை ராஜுவின் தாய் அவரது ஐம்பத்து இரண்டாவது வயதிலேயே மரணமடையும் சூழல் உருவானது அதற்க்குக் காரணம் ராஜுவின் மூத்த சகோதரர் இளம் வயதிலேயே திடீரென்று டைபாய்டு (அப்போதெல்லாம் டைபாய்டு நோய்க்கு சரியான மருந்துகள் கிடையாது) ஜுரத்தால் பாதிக்கப்பட்டு இருபது நாட்களிலேயே காலமானதால் அந்த துயரை தாங்கிக்கொள்ள இயலாமல் ராஜுவின் அம்மா குறைந்த வயதிலேயே இறந்து போக நேரிட்டதால் குடும்பத்தில் இருந்த மற்ற அனைவரின் வாழ்க்கையும் கேள்விக் குறியானது. சொத்துக்களை ஏமாற்றி பலர் எடுத்துகொண்டனர், ராஜுவின் அப்பா 'அவளே போய்ட்டா இனிமேல் எனக்கு சொத்து எதுக்குன்னு' சொல்லி உயிருடன் இருந்த மற்ற பிள்ளைகளைப் பற்றி யோசிக்காமலேயே குடும்பம் நசிந்துபோனது.



தொடரும்....

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

காதலென்பது எதுவரை

காதலின் அனுபவங்களைப் யோசித்துப் பார்த்தால் பயித்தியக்காரத்தனமாகவே தோன்றுகிறது, காதல் என்கின்ற பேய் மனதினுள் ஏற்ப்படுத்துகின்ற சலனங்களை நினைக்கையில் நிச்சயமாக உடலினுள் இன்னொரு சக்தி புகுந்து கொண்டு ஆட்டுவிக்கின்றதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. சாலையில் நடந்து போகின்ற போது முன்னே அல்லது வீதியின் எதிர் புறத்தில் பார்க்கும் நபரெல்லாம் காதலிக்கும் நபராகவே தெரிவது என்ன விந்தை. உறங்கும்போதும் உணவருந்தும் போதும் பாடங்களை படித்துக்கொண்டிருக்கும் போதும் காதலித்தவர் உடன் உரையாடிய உரையாடல்களெல்லாம் கண் முன் தோன்றி சிரிக்கவும் அழவும் வைத்து இருக்கின்ற சூழலை மறக்கச் செய்யும் மந்திரம் புதுமையன்றோ.

அடுத்தவரிடம் ஒரு வார்த்தை கூட பேச பிடிக்காமல் போகும் அந்த மாயாஜாலம் காதலினால் ஏற்ப்படும் மாயம் தானே. நீயின்றி நானேது என்று நம்மை நம்மிடமிருந்து பிரித்து வைக்கும் வித்தை அந்த காதலின் மாய வித்தையல்லவா. அதுவரை கண்டிராத வார்த்தைகள் அதுவரை கற்றிராத கவிதைகள் தானாகவே அருவி போல கொட்டி தீர்க்கும் காதல் கவிஞனாய் மாற்றும் புரியாத புதிரல்லவா காதல். காதல் தரும் போதையில் மயங்கி கிடக்கும் அந்த காலங்கள் பிறகு அவற்றை இழந்த போது மதுவினாலும் கிடைக்காத அரும் போதையல்லவா. பெற்றவரை மறந்து உற்றவரை துறந்து வாழ்நாளெல்லாம் காதல் மட்டுமே போதும் என்று மதியிழக்கச் செய்யும் செப்புடு வித்தையல்லவா அந்த மர்மக்காதல்.

காதல் நோய்க்கு மருந்து கண்டவர் இதுவரை இல்லை என்பார், ஆனால் காதல் தோல்விதான் அதற்க்கு சரியானதொரு மருந்தென்பேன் நான் நிச்சயமாய், காதலனின் வார்த்தைகளில் ஏற்ப்படும் நயவஞ்சகமும் சந்தேகமும் காதல் முறிக்கும் சரியான மருந்தென்பேன். காதல் என்பதெல்லாம் பொய், காதல் உணர்வுகளெல்லாம் உடற்கூறுகளி
ல் ஏற்ப்படும் மாற்றங்கள் தாம் என்று உணர்வடையச் செய்யும் காலம் வரும்போது காதலித்த காலங்களை எண்ணி பார்த்தால் அவை நிச்சயம் சித்தம் கலைந்தவனது செயலாகத் தோன்றுதலும் இயற்கையன்றோ. அதுவரை காதல் படுத்தும் பாடுகள் தான் என்ன, அதன் பிரிவுகூட மரணத்தை விடக் கொடியதாகி நம்மை கொல்லும் வலிமை என்ன. எந்த இருமனிதனும் தொடர்ந்து இரண்டு வருட காலத்திற்கு மேல் கருத்தொருமித்து வாழ இயலாது என்கிறது மனிதவியல்.

இதற்க்கு எதிராக செயல்படுதல் அரிது, சூழ்நிலை, காலத்தின் கட்டாயம் என்று எத்தனையோ சமூக காரணங்களை உள்ளடக்கியது தான் சம்சாரம், அதிலும் இந்திய, குறிப்பாக தமிழகக் கலாச்சாரமென்பது ஒருவனுக்கு ஒருத்தி என்று இயல்புக்கு மாறாக பெரிய தடை என்கின்ற விதியை நியமித்து வைத்ததினால் பல குடும்பங்களில் கணவன் மனைவியின் உறவு கூட கடமையாகி போனது. இயல்புகளை, இயற்கையின் விதிகளை மீறி மனிதன் செயல்பட நினைக்கும் போது சமுதாயத்தில் ரகசிய அத்து மீறல்கள் அதிகரிப்பதை தவிர்க்க இயலுமா. கடமைக்காக குழந்தைகளை பெற்றெடுக்கும் நிர்பந்தங்களை தவிர்க்கத்தான் இயலுமா. இன்றைய இளைய சமுதாயம் இவற்றிற்கு விதிவிலக்கு. காதல் என்பதும் கணவன் மனைவி உறவென்பதும் கடவுளுக்கு சமமல்ல அல்லது ஒன்றுடன் நிறுத்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தங்கள் இல்லை என்கின்ற
நிலையில் செயல்படுகிறது.

காதலுக்காக எதையும் இழக்க வேண்டிய அவசியம் இல்லை, காதலென்பது அவரவர் சுதந்திரம், வரம்பு மீறிய உறவுகள் தேவையற்றவை, ஆனால் காதலுக்காக கண்களை இழக்க வேண்டிய கட்டாயமில்லை என்பதை இளைஞர்கள் நன்றாகவே புரிந்து வருகின்றனர், அங்கொன்றும் இங்கொன்றுமாக காதலும் கல்யாணமும் மிகவும் புனிதமானது என்கின்ற பழைய சித்தாந்தம் இருந்து கொண்டு தான் இருக்கிறது, காலப்போக்கில் அவை இல்லாமல் போகும் என்பதும் உண்மை.

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

புதிய பாதுகாப்பு வசதிகள் உருவாக்கப்படவேண்டும்

சமீப காலமாக நாட்டில் நடக்கும் கொலை கொள்ளை, வீட்டில் தனியே இருப்பவர்களை கொன்றுவிட்டு பணம் நகை முதலியவற்றை அள்ளிக்கொண்டு ஓடும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதை பார்க்கும்போது மேலைநாடுகளைப்போல பாதுகாப்பிற்காக துப்பாக்கியை உபயோகிக்க அரசு லைசென்ஸ் கொடுத்தால் உதவியாக இருக்குமென்று தோன்றுகிறது அல்லது அங்குள்ளது போல A-Z பாதுகாப்புகளை அறிமுகப்படுத்தினாலும் சிறப்பாக இருக்கும், ஆனால் அந்தவகையான பாதுகாப்பிற்கு பரித்துரைக்கும் பாதுகாவலர்களிலேயே சில புல்லுருவிகளும் அல்லது கொலை மற்றும் கொள்ளையர்கள் நுழையவிடாமல் இருக்கவேண்டுமென்பதும் நமது நாட்டிற்கு மிகவும் முக்கியம்.

எதிர்கட்சியினர் ஆட்ச்சியை பிடித்து விட வேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காக அடுத்த கட்ச்சியினரை கொலை செய்வதும், அடுத்த கட்சியின் ஆதரவாளர்களை விரோதிகளாக எண்ணி வீடுகளையும் மனிதர்களையும் அவர்களின் உடமைகளையும் பல விதங்களில் சூறையாடி வருவதும் சர்வ சாதாரணமாக நடக்கும் சம்பவங்களாகி வருகின்ற நமது நாட்டில், வேலியே பயிரை மேய்ந்த கதைகள் டெல்லி போன்ற நகரங்களில் நடந்து வருவதை பார்க்கும் போது A-Z பாதுகாப்பிலும் அத்தகைய ஏமாற்றுக்காரர்கள் நுழைந்துவிடாமல் கவனத்துடன் இருக்க வேண்டியது இருக்கும்.

தனி மனித பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்ற இந்த காலத்தில் நிச்சயமாக வங்கிகள், ஷாப்பிங் மால்ஸ், ATM, வேலை பார்க்குமிடங்கள், அதிக ஆள் நடமாட்டமில்லாத இடங்கள், வீடுகள் பள்ளிகள், நிறுவனங்கள் என்று எல்லா இடங்களிலும் பாதுகாப்பு குறைந்து வருவதை தினந்தோறும் செய்திகள் நமக்கு எடுத்துக் காண்பிக்கிறது. இதற்க்கான பாதுகாப்பிற்கு முதிய முறைகளை மேலைநாடுகளைப் போல அறிமுகப்படுத்த வேண்டும், பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, எத்தகைய மோசடிகள் கொள்ளைச் சம்பவங்கள், திருட்டுகள் நடந்து வருகிறது என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்த ஊடகங்கள் வாயிலாகவும் செய்திகள் வாயிலாகவும் மற்றும் பாமர மக்களிடம் சென்றடையும் வகைகளில் பிரபலப்படுத்தப் பட வேண்டும்.

அத்துடன் அவசர உதவிக்கான மையங்களை உருவாக்கி சேவை மையங்களின் தொலைபேசி அல்லது கைபேசி எண்களை பொதுமக்கள் கூடும் கடை வீதிகள் தெருக்களில் விளம்பரப் படுத்த வேண்டும். அத்தகைய எண்களுக்கு கட்டணம் வசூலிக்ககூடாது. தொடர் வண்டிகளில் உள்ள அபாயச் சங்கிலியைப் போல வீடுகளில் அபாய மணிகள் அமைக்கப்பட்டு அவை காவல் நிலையங்கள் அல்லது அவசர உதவி மையங்களை இணைக்கச் செய்ய வேண்டும். அப்படி ஒவ்வொரு வீட்டிலும் அலுவலகங்களிலும், ATM, வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், ஹாஸ்டல்கள் , மற்றும் தெருக்கள் மக்களால் சுலபமாக தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டால், பிரச்சினை ஏற்ப்படும் நபர் உடனே தொடர்பு கொள்ளும் வாய்ப்பை பெறுவார்.

தனி மனித பாதுகாப்பு என்பதை முக்கியமான பிரச்சினையாக எடுத்துக்கொண்டு அவற்றை தடுக்க புதிய முறைகளை உருவாக்கி செயல் படுத்தவேண்டும்.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

நினைவுகளில் சில....

முதல் முறையாக வீட்டை விட்டு வெளியூரில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வருகின்ற வாய்ப்பு திருமணத்திற்குப் பின்னர் கிடைத்த சந்தோஷத்தில் இரவுநேர பதிவு செய்யப்படாத தொடர்வண்டியில், மிகக் குறுகிய காலத்தில் என்னுடன் பழகிய பெண்ணும் அவளது அண்ணன் அண்ணியுடன் பயணித்த போது வித்தியாசமான புதுமையான அனுபவமாக இருந்தது, என்னுடன் பயணித்தவர்களிடம்; அடுத்தநாள் குறிப்பிட்ட ஊரில் இறங்கிய பின்னர் அங்கு வெளியூர் பயணிகள் தங்குவதற்கான அறைகள் கிடைக்குமா என்று கேட்டேன், அவர்களது நண்பர் வீடு இருப்பதால் அங்கே சென்று குளித்து உடமைகளை அங்கேயே வைத்துவிட்டு நாம் எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்றனர்.

ரயில்
நிலயத்திலிருந்து சிறிது தூரம் செல்லவேண்டியிருந்ததால் குதிரை வண்டியில் ஏறி குறிப்பிட்ட வீட்டை சென்றடைந்தோம், அந்த இடம் ஒரு அக்ரகாரம், காலை நேரம் குளிர்காலம் என்பதால் வெந்நீர் குளிப்பதற்கு தயாராக இருப்பதாக சொன்னார் ஒரு நடுத்தர வயது பெண். பழைய காலத்து நாட்டு ஓடுகள் வேய்ந்த நாலு கட்டு வீடு, பின்புறம் தோட்டத்திலிருந்த கழிவறைக்குச் சென்று குளித்து முடித்து வந்த போது சாப்பாடு தயாராக இருப்பதாக சொன்னார்கள், சமையல் செய்வதெல்லாம் குமுட்டி அடுப்பில், அதிகாலை எழுந்து குளித்துவிட்டு சமையலை தொடங்கி இருந்தால் கூட குமுட்டி அடுப்பில் அத்தனை சீக்கிரம் சமையலை முடித்திருக்க முடியுமா என்று ஆச்சரியப்பட வைத்தது. முன்பின் தெரியாதவர்களின் வீட்டில் தங்குவதோ உணவருந்துவதோ எனக்கு பிடிக்காத, பழக்கமில்லாத செயல்.

வெளியே சென்று உணவகத்தில் ஏதேனும் சாப்பிட்டுக் கொள்வேன் என்று சொன்னபோது அந்த பகுதி கிராமமாக இருந்ததால் உணவகம் அதிகாலையில் தயாராக இருக்குமா என்பது சந்தேகம் என்றனர், ஆனால் குதிரை வண்டிச் சவாரி செய்கையில் சில கதைகளில் படித்த தென்னிந்திய பழமை வாய்ந்த கிராமத்தின் சாயலை நேரில் காண முடிந்தது, கடை வீதியில் கடைகள் சில பூட்டியும் சில திறந்தும் இருந்ததை கவனித்தேன், என்னுடன் பயணித்தவர்கள் பிராமண வகுப்பை சார்ந்திருந்ததால் அவர்களது நண்பரும் அவரது வகுப்பினராகவே இருப்பார் என்று நான் நினைத்திருக்கவில்லை எனக்கு தர்மசங்கடமாகிப் போனது, உடன் வந்த பெண்களிடம் நான் எப்படி இவர்கள் வீட்டில் உணவருந்துவது என்றேன், ஒன்றும் காட்டிக் கொள்ள வேண்டாம் உங்களைப் பார்த்தால் வேற்று ஜாதி பெண்ணாகவே தெரியவில்லை, நெற்றியில் மட்டும் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள் எந்த சந்தேகமும் வராது என்றனர்.

குங்குமம் வைத்துக் கொள்வதா இதென்ன புது ஒப்பனை என்று மனதினுள் நினைத்தபடி குங்குமத்தை வாங்கி நெற்றியில் சிறிதாக வைத்துக் கொண்ட போது சிறிது குங்குமத்தை வகிடு எடுக்குமிடத்திலும் வைத்துக் கொள்ளுங்கள் என்றார். குங்குமத்தை வேடமிடுவதற்க்காக வைப்பது அது முதல் முறையல்ல, என் அம்மாவின் குடும்பத்தாரைக் காண அவர்களது சொந்த ஊருக்கு போகும் போது என் அம்மாவின் பெரியம்மா சின்னம்மா மற்ற சொந்த பந்தங்களை பார்ப்பதற்கு முன்னர் குளித்து முடித்து நெற்றியில் பொட்டு வைத்து தலையில் சிறிது பூ வைத்த பின்னர் தான் அவர்களை நேரில் சென்று பார்ப்பது வழக்கம், அது என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தது, தப்பித் தவறி பொட்டும் பூவும் வைக்காமல் மறந்து சென்று விட்டால் அவர்களிடமிருந்து திட்டு கிடைக்கும், நெற்றியில் மாட்டு சாணத்தை எடுத்து பூசிவிடுங்கள் என்று அங்குள்ள வேலையாட்களிடம் என் அம்மாவின் பெரியம்மாவும் சின்னம்மாவும் சினத்தில் கூறுவதுண்டு.

காலையில் அருகிலிருந்த சிவன் கோவிலுக்கு உடன் வரும்படி அழைத்தனர், நான் கோவிலுக்குள் வரவில்லை வெளியிலேயே நின்று காத்திருக்கிறேன் என்று கூறி தப்பித்துகொள்ள முயன்றேன் ஆனால் எங்களுடன் அந்த வீட்டின் நடுத்தர வயதுடைய பெண்ணும் நண்பரின் நண்பரும் உடன் வந்தனர். மிகவும் நெருக்கடியான நிலை, நிலைமையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கோவிலுக்குள் அவர்களுடன் செல்வது போல பாவனை செய்துவிட்டு அவர்கள் உள்ளே சென்றதும் நான் வெளியே வந்து விட்டேன், அவர்கள் எல்லோரும் வெளியே வந்தபோது அவர்கள் கையிலிருந்த குங்குமம் விபூதியை கொடுத்து என் நெற்றியில் வைத்துக்கொள்ளச் சொன்னார்கள், என்னிடம் இருக்கிறது நான் பிறகு வைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி தப்பித்துவிட்டேன்.

எங்கள் ஊருக்கு என் அம்மாவுடன் செல்லும்போது தினமும் மாலையில் எனது அம்மாவின் தங்கையின் மகள்களுடன் கோவிலுக்கு செல்லவேண்டும், கோவிலில் உள்ள சிலைகளை அவர்கள் சுற்றி வரும்போது நானும் சுற்றி வரவேண்டும், அப்போது எனக்கு வயது பனிரெண்டு, அதன் பிறகு ஊருக்குச் சென்றபோது என்னை அவர்கள் எந்த கட்டாயமும் செய்வது கிடையாது, வருடங்கள் கடந்த போது ஊரிலிருந்த பெரியவர்கள் இறந்து போகவே பொட்டிடுவதும் கோவிலுக்குச் செல்வதும் கட்டாயமாக இருக்கவில்லை.

நாங்கள் அந்த கிராமத்திற்குச் சென்ற வேலை முடிவதற்கு இரண்டு நாட்கள் அந்த ஊரில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, வேலை முடிந்த பின்னர், அன்று மதியமே கிளம்பி ரயிலேறி சென்னை வந்து சேர்ந்தேன்,
அங்கிருக்கும் சிவன் கோவிலில் ஏதோ விசேஷம், அன்று மாலை சாமி ஊர்வலம் அக்ரஹாரத்திர்க்கு வரும், சுவாமி தரிசனம் பண்ணாமல் சென்னைக்கு கிளம்ப இயலாது என்று என்னுடன் வந்த மூவரும் அங்கேயே தங்கி இருந்தனர். எனது பெற்றோர் என்னை சென்னைக்குள்ளேயே இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் ஒருநாள் தங்கிவிட்டு வருவதற்கு கூட அனுமதி அளிக்காமல் இருந்ததால் முதல் முதலாக நான் தனியே சென்று இரண்டு தினங்கள் தங்கிவிட்டு தனியே திரும்பி வந்ததைப் பற்றி அவர்களால் ஒன்றும் சொல்ல இயலாமல் போனதற்கு முக்கிய காரணம் என் கணவர் எனக்கு அனுமதி கொடுத்திருந்ததனால் தான். அதன் பிறகு பல முறை தனியே செல்வதற்கான தேவைகள் ஏற்பட்டன,

அப்படி எங்கேயும் தனியே போக அனுமதி வழங்காதது என் வளர்ச்சிக்கு பின்னடைவுகளை ஏற்ப்படுத்தியது, இந்த சம்பவத்தில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆறேழு மாதங்களுக்கு பின்னர் நான் என் கணவருடன் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுவிட்டேன், என்னுடன் பயணம் செய்த பிராமணப் பெண் எங்கள் வீட்டின் விலாசத்தை தேடிக் கண்டு பிடித்து வந்து என் பெற்றோரிடம் என்னை பார்க்க வேண்டும் என்று விசாரித்தபோது என் பெற்றோரும் கணவனுடன் சென்ற விவரம் தெரிவித்தனர், அவளது அண்ணனுக்கு மத்தியக் கிழக்கு நாடுகளில் வேலை வாங்கித்தர உதவி கேட்டு தேடி வந்ததாக தெரிந்தது, முன்பின் பழக்கப்படிராதவர்களுக்கு செய்யும் உதவிக்கு உள்நோக்கம் இருக்குமா.

நீர் ஆதாரங்களை மழை நீர் சேமிக்க தயாரக்கவேண்டும்

ஆகஸ்டு மாதம் துவங்கி பாதி மாதம் கடந்த பின்னும் வெயலின் உக்கிரம் குறைந்ததாக இல்லை, ஆடி மாதமென்றால் அம்மியும் பறக்குமென்பார்கள், வீடுகளில் அம்மி இல்லாமல் போனதால் ஆடி மாதக்காற்றுக் கூட வீசியடிக்காமல் மௌனமாகிப் போயிற்றோ, மழை மேகங்கள் திரண்டு வந்தால் மழைப் பொழியும் என்று அர்த்தம், இப்போதெல்லாம் மேகக் கூட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை சுற்றிப் பார்க்க வந்து வந்து நோட்டம் விட்டு போகிறதே தவிர மழை பொழிவதாக இல்லை, அக்கிரமம் அநியாயம் அதிகரித்து மனித நேயம் குறைந்து போன காரணமோ என்னவோ ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் மேகமெல்லாம் ஒன்று திரண்டு 'பொத்துகிட்டு ஊத்துதடி வானம்' என்ற பாடலைப்போல மேகம் உடைத்துக் கொண்டு மழை கொட்டி தீர்த்து மக்களை அள்ளிக்கொண்டு சென்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்கு மழை வருவதற்கு முன்பு ஆறுகள் குளங்கள் ஏரிகள் என்று தண்ணீர் நிற்கும் இடங்களையெல்லாம் தூர் வாரி ஆழப்படுத்தினால் பொழிகின்ற மழை வெள்ளத்தோடு வீணாக கடல் நீரில் கலந்துவிடாமல் நாட்டிற்குள்ளே தங்கி நிற்க்கச் செய்யலாம், இதனால் சுற்றுப்புறத்திலிருக்கும் கிணறுகளில் குடிதண்ணீர் உற்றுகள் பெருகும், மக்களின் குடிநீர் பிரச்சினை ஓரளவாவது குறையும். இருந்த ஏரி குளங்கலெல்லாம் மூடப்பட்டு அதன் மீது குடிசை மற்றும் கட்டிடங்கள் பெருகி மழை பொழியும் போது நீர் நிலைகளில் நீர் தேங்கி நிற்ப்பதற்கு இடமில்லாமல் பொழியும் மழை எல்லாம் வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்துக்கொண்டு கடலினுள் சென்று கலந்து விடுவதால் மழை பொழிந்தும் கூட நீர் ஆதாரங்களில் ஊற்றுகள் தோன்றாமல் காய்ந்து கிடக்கும் நிலை ஏற்ப்படுகிறது,

மழை பெய்தும் மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்ப்படுவதை தவிர்க்க இயலாமல் அரசும் பொதுமக்களும் அவதியுறுகின்ற நிலை ஏற்ப்படுகிறது, மழை வருகின்ற காலத்திற்கு முன்னதாகவே நீர் தேங்கும் இடங்களில் கட்டப்பட்டிருக்கும் குடிசைகளை குடிசை மாற்றுவாரியமும் அரசும் அகற்றும் பணியினை மேற்கொள்ளுதல், அந்த இடங்களில் போதிய நீர் தேங்கி நிற்கும் அளவிற்கு தேவையற்ற மண்ணை அகற்றும் பணிகளை வேலையில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பாகவும் அதே சமயத்தில் நீர் ஆதாரங்களை மழைக்கு தயார் படுத்தும் பணியாகவும் முனைப்புடன் செயல்பட்டால் ஓரளவு நீர் ஆதாரங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக்கலாம். அதிக மழைப்பொழிந்தாலும் தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்டிருக்கும் அங்கீகாரமற்ற குடிசைகளும் கட்டிடங்களும் அதில் வசிக்கின்ற மக்களும் பெரும் சேதத்திலிருந்து காக்கப்படுவதும் உறுதி என்பதால் இத்தகைய பணிகளை மழைக்காலம் ஆரம்பமாவதற்கு முன்பாகவே அரசு கவனம் செலுத்தி முயற்ச்சிகள் செய்யுமானால் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கிணறுகளில் நீர் ஊற்றுக்கண் திறக்கும் வாய்புகள் உண்டாகும், இதனால் பலரும் பயனடைவர்.

மரம் செடிக் கொடிகளை வெட்டி அங்காங்கே வீடு கட்டும் நிலமாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கம் மட்டுமே மேலோங்கி இருப்பதால் மரக்கன்றுகள் நட்டு நீர் ஊற்றி வளர்ப்பதற்கும் அவற்றை பாதுகாப்பதற்கும் ஆட்களை பணிக்கு அமர்த்தும் திட்டத்தை சரியாக செய்யவேண்டும் இதனால் மழை உருவாகவும் கடுமையான வறட்சி மற்றும் வெப்பத்தை தவிர்க்கவும் முடியும். இவ்வாறானப் பணிகளை மழைக்கு முன்னதாக செய்யும் பட்சத்தில் பெய்யும் மழை குறைவான அளவாக இருந்தாலும் அதிகமான அளவில் இருந்தாலும் மழை நீரால் பயன் பெறுவது உறுதி, மழை நீரை சேமிக்கவும் அதிக மழையால் குடிசைகள் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகாமல் தடுக்கவும் முடியும்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

டாஸ்மார்க் போனால் கள்ளச்சாராயம்

டாஸ்மார்க் கடைகளை அரசு மூடிவிட்டால் டாஸ்மார்க் கடைகளுக்குச் சென்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளை துன்புறுத்தும் கணவன்களின் தொல்லைகள் நிறுத்தப்பட்டு வீடுகள் தோறும் அமைதி நிலவும் என்பது நிச்சயமானால் டாஸ்மார்க் கடைகளை மூடுவதில் நியாயமிருக்கிறது, சிலகாலமாக சாராயம் காய்ச்சி விற்கும் தொழில் செய்ய இயலாமல் திருட்டு கொள்ளை வழிப்பறிகளில் தங்களது வரும்படியை தேடிக்கொண்டு போனவர்கள் மறுபடியும் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்கும் தொழில் ஆரம்பித்து விடுவார்களே தவிர குடிகாரர்கள் ஒருநாளும் குடிக்காமல் இருக்கப்போவது கிடையாது.

டாஸ்மார்க் கடைகளினால் மற்றுமொரு சமுதாய சீர்திருத்தம் குடித்துவிட்டு வீதிகளில் மயங்கி கிடப்பவர்களால் 'வம்ச விருத்தி செய்வது' என்பது கணிசமாகவே குறைந்திருக்கும், இல்லையென்றால் பொழுது போகாமல் மனைவியுடன் சரசமாடி வயிற்றில் பிள்ளையை கொடுத்துவிட்டு, அடுக்கடுக்காய்
பிள்ளைகளை பெற்றுத் தள்ளிவிட்டு எல்லாம் 'கடவுள் கொடுத்தது' என்று பெருமைபட்டுக் கொள்வதுடன் நிறுத்திக்கொண்டு ஒருநாளைக்கு ஒரு வேளைச் சோறு போடக் கூட பொருளாதார வசதியின்றி நாட்டின் ஜனத்தொகையை அதிகரிக்கச் செய்து, வீதியில் பிள்ளைகள் பிச்சையெடுக்கவும் திருடித் தின்னவும் பழகிக் கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்ப்படுவது மட்டுமே இருக்கும்.

தற்போது வேலையிலிருந்து நேரே டாஸ்மார்க் கடைக்குச் சென்று சரக்கை வாங்கி ஊற்றிக்கொண்டு தெருவிலோ சாக்கடையிலோ புரண்டுகொண்டு, இரவை அங்கேயே கழித்து விடுவதால் குறைந்த பட்சம் நாட்டின் ஜனத்தொகையாவது கட்டுக்குள் இருக்கும், அல்லது ஏயட்ஸ் வியாதிக்கு ஆளாகாமல் டாஸ்மார்க் போதை மண்டைக்குள் சென்று நடு வீதியில் ஆளைக் கிடத்திவிடும். டாஸ்மார்க் கடைகளை அரசு மூடிவிட்டாலும் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சாராயமும் வேறு மதுபானங்களும் கிடைக்காமல் போகாது. முன்பெல்லாம் அரசிடமிருந்து பெர்மிட் பெற்றிருப்பவர்களுக்கு குறிப்பிட்ட அளவு மதுபானங்களை வாங்கும் உரிமம் கொடுக்கபட்டிருந்தது, அதே போன்ற முறை திரும்பவும் கொண்டுவரப்பட்டாலும் குறிப்பிட்ட சாரர் மட்டுமே அதில் மதுபானம் வாங்க இயலும் என்பதால் ஏழை எளிய, குறைந்த வருமானம் உள்ளவர்களால் பெர்மிட் பெற இயலாது, இந்நிலையில் திருட்டு சாராயம் அதிகமாகி விஷச் சாராயமும் அதனால் மரணங்களும் தவிர்க்க இயலாத நிலை ஏற்ப்படும்,

அடுத்துள்ள மாநிலங்களில் இருந்து கடத்தி கொண்டு வரப்படும் மதுபானங்களின் விற்பனை அதிகரிக்கும், இதனால் சம்பந்தமே இல்லாத கும்பல்கள் லாபம் பெறுவார், சமுதாய விரோதிகளும் லாபமடைவார்கள். ஆங்காங்கே சாராயம் காய்ச்சும் சர்வாதிகாரிகளும் தோன்றுவார்கள். இவையெல்லாம் ஏற்க்கனவே நடந்த கதைகள்தான், பின்னர் அரசு டாஸ்மார்க் கடைகளின் வரவால் இல்லாமல் போனதும் யாவரும் அறிந்ததே, டாஸ்மார்க் கடைகளை அரசு மூடுவதால் 'பழைய குருடி கண்ணை திறடி' என்பது போல அதே கதைகள் மறுபடியும் நாட்டில் திரும்பவும் நடக்கும்.

திறமைக்கு வாய்ப்பு கொடுங்கள்

என்னைப்பொருத்தவரையில் நான் மிகச் சிறந்த ரசிகை மட்டுமே, எனக்கு ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களானாலும் சரி கமலஹாசன் நடித்த திரைப்படங்களானாலும் சரி, கரகாட்டக்காரன் திரைப்படமானாலும் எந்திரன் திரைப்படமானாலும் நான் ஒரு ரசிகையாக மட்டுமே விமர்சனம் செய்வேன், ரஜினிகாந்தை பொறுத்தவரையில் அவருக்கிருக்கும் ரசிகர்களின் பலமும் பணபலமும் வைத்துக் கொண்டு தமிழகத்தின் முதல்வராக எப்போதோ ஆட்ச்சியை கைப்பற்றி இருக்க முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று, அவர் அரசியலில் தலையிடாமல் ஒதுங்கி இருந்தாலும் அவருக்கு இருக்கும் ஏராளமான ரசிகர்களின் ஆதரவு என்றுமே குறையாத ஒன்று. எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளரை பற்றி சொல்லவேண்டிய அவசியமே இல்லை, அவர் மிகச்சிறந்த வியாபாரி, எந்திரன் திரைப்படம் அவருக்கு முதல் திரைப்படமும் அல்ல, ஒரு வியாபாரி தனது தொழில் உக்தியை எவ்வாறு கையாள்கிறாரோ அதில்தான் அவரது லாபமும் அடங்கியுள்ளது. இதற்க்கு சிறந்த உதாரணம் திரு.கலாநிதிமாறன்.

நான் கூறுவதெல்லாம், ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய், ரகுமான் இவர்களிடம் மட்டுமே திறமைகள் குவிந்து கிடைக்கவில்லை, ஏறக்குறைய 35 வருடங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் என்கின்ற ஒரு சாதாரண மனிதருக்கு இயக்குநர் திரு.பாலச்சந்தர் அவர்கள் நடிக்கும் வாய்ப்பை கொடுக்காமல் தட்டிக் கழித்து விட்டு அன்றைய தினத்தில் முன்னணியில் இருந்த நடிகர்களையே மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்து கொண்டிருந்திருந்தால் இன்றைக்கு ஒரு ரஜினிகாந்த் என்கின்ற நல்ல மனிதரை திரை உலகம் அடையாளம் கண்டிருக்க முடியாது, அதைப் போலவே புதியவர்கள் திறமை மிக்கவர்கள் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே தங்கள் வாழ்க்கையில் இலட்சியமாக கனவாக கொண்டு அன்றைய சிவாஜிராவ் என்கின்ற ஒரு சாதாரண மனிதனைப் போல வாய்ப்புகளைத் தேடி ஒவ்வொரு திரைப்பட நிறுவனமாக ஏறி இறங்கி வாழ்க்கையில் நம்பிக்கையின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஏராளமானோர் காத்திருக்கின்றார்களே அவர்களில் நிச்சயம் பல ரஜினிகாந்துகளும் கமலஹாசன்களும் இல்லாமல் இருக்க முடியாது என்பதுதான் என்னுடைய ஆதங்கம். அவர்களை யார் எப்போது வாய்ப்பு கொடுத்து ஆதரிப்பது? ரஜினிகாந்த் ரகுமான் ஷங்கர் போன்றோருக்கு இந்த கடமைகள் கிடையாதா?

திறமையான இயக்குநர் ஷங்கர், இவர் முதல்வன் திரைப்படத்தின் மூலம் நமக்கு கிடைத்தவர் இவருக்கு முதன் முதலில் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை ஒரு தயாரிப்பாளர் நம்பிக்கையோடு கொடுத்ததினால்தானே இன்றைக்கு அவர் இத்தனை திறைமைகளை வெளி உலகிற்கு வெளிபடுத்த முடிகிறது, வாய்புகள் கொடுக்கப்படாமல் அல்லது கிடைக்காமல் எத்தனையோ ஷங்கர்களும் பாரதிராஜாக்களும் மணிரத்தினங்களும் இருக்கின்றார்களே என்பதுதான் எனது ஆதங்கம். அவர்களுக்கெல்லாம் யார் எப்போது வாய்ப்பு வழங்கி வெளியுலகிற்கு கொண்டு வர போகின்றார்கள். ஏற்கனவே முன்னேறி பலத் திரைப்படங்களில் தங்களை முன்னேற்றிக் கொண்டுள்ளவர்களால் தானே வாய்ப்புகளை கொடுக்கமுடியும் என்பதுதான் எனது கேள்வி. அது எப்போது நடப்பது, யார் செய்வது, ரஜினிகாந்தைப் போன்றவர்களும் ஷங்கரைப் போன்றவர்களும் ரகுமானைப் போன்றவர்களும் அந்த வாய்ப்புகளை கொடுக்க முடிகின்ற ஸ்தானத்தில் இருக்கும்போது ஏன் அவற்றை செய்யாமல் தங்களுக்கே வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளுகிறார்கள் என்பதுதான் எனது கேள்வி.

ஐஸ்வர்யாராய்க்கு நடிப்பென்பது பொழுது போக்காக மட்டுமே இருக்க முடியும், எத்தனையோ இளம் நடிகைகள் அழகும் திறமையும் வைத்துக்கொண்டு நடிப்பு மட்டுமே தொழிலாக வாய்ப்பிற்காக காத்து கிடக்கும்போது ரஜினிகாந்த் ஷங்கர் போன்றவர்கள் ஏன் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்பதுதான் என் கேள்வி. ரஜினி ரகுமான் ஷங்கர் இவர்களது திரைப்படங்களை பெரிதும் விரும்பி பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருத்தி, ஆனால் அதையே தங்களது பிழைப்பாக ஏற்றுக்கொண்டு வாய்ப்புகளுக்காக காத்துக் கிடபோரில்; ஏன் பழைய நடிகர் ராமஜாஜனையும் மோகனையும் சேர்த்துக்கொண்டு அவர்களை வைத்தா திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று கேட்கின்றீர்கள், இங்கு முன் வைக்கப்படும் கருத்துக்கள் நகைச்சுவைக்காக பதிவு செய்யப்படவில்லை பலரது வாழ்க்கையின் ஆதாரத்தைப்பற்றிய அக்கரையில் பதிவு செய்யப்படும் கருத்துக்கள்,

ரஜினி ஷங்கர் மற்றும் ரகுமானை எதிர்த்து கோஷங்களை எழுப்புவதற்காக இங்கு
கருத்துக்கள் பதிவு செய்யவில்லை, எத்தனையோ நல்ல புதிய இளைய தலைமுறையினரின் திறமைகளை வெளிக் கொண்டுவரவும் அவர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்ப்படுத்திக் கொடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தும் கோரிக்கையாகவே இந்த பதிவினை பதிவு செய்கிறேன், இதற்க்கு ரஜினிகாந்த் ஷங்கர் மற்றும் ரகுமான் என்பவர்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம் என்பதையே நான் இங்கு பதிவு செய்கிறேனே தவிர ரசிகர்களின் சந்தோஷத்திற்கு எதிர் கோஷம் போடுவதற்காக அல்ல. இதில் ரசிகர்களின் பங்கும் மிகவும் பெரியது என்பதையும் சுட்டிக் காட்டவே இந்த பதிவு.