எதிர்பாராத ஒரு பயண அனுபவம்.....1
என் கணவருடன் 1983 ஆம் வருடம் டிசெம்பர் மாதம் முதன் முதலில் அரபு நாட்டுக்கு பம்பாயிலிருந்து விமானத்தில் பயணம் செய்தேன், அப்போதெல்லாம் சென்னையிலிருந்து அரபு நாடுகளுக்கு விமான வசதிகள் இல்லை, பம்பாயில் நாங்கள் குறைந்தது ஒன்றரை மாதங்கள் தங்க வேண்டியதாகிவிட்டது, ஏன் என்றால் அப்போதெல்லாம் நிறைய இளம் பெண்களை அரபு நாடுகளுக்கு கூட்டிச்சென்று, வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பலரை விபச்சார தொழில் ஈடுபடுத்தியதால் பல பெண்கள் துர்மரணம் அடைத்தனர், பலர் காணாமல் போனார்கள் என்பதால் நமது இந்திய அரசாங்கம் இருபத்து ஐந்து வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் அரபு நாடுகளுக்கு போக தடை விதித்திருந்ததால், சில
அங்கீகாரங்கள் தலை நகர் டில்லியிலிருந்து கிடைத்த பின்னர் தான் போக முடியும் என்பதால் ஒன்றரை மாதங்கள் நாங்கள் இருவரும் பாம்பேயில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது, அந்த ஒன்றரை மாத காலம் முழுவதும் பம்பாயிலும் பூனாவிலும் உள்ள நண்பர்கள் சொந்தக்காரர்கள் ரோடுகள் ஹோட்டல்கள் என எல்லா இடங்களையும் சுற்றி பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. பூனாவில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் பின்புறம் ' பிலிம் இனிச்டிடுட்' (film Institute) இருந்தது. என் கணவரின் விடுமுறை முடிந்து விட்டதால் என்ன செய்வதென தெரியாமல் இருந்தபோது அவர் வேலை செய்து வந்த அரபு நிறுவனத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்து சொன்னபோது, நிறுவனத்தின் சொந்தக்காரர் (அரபுகாரர்) தற்போது பம்பாயில் 'ஒபேராய்' சூட்டில் மனைவியுடன் தங்கியிருப்பதாக கிடைத்தது செய்தி, உடனே ஹோட்டலுக்கு என் கணவர் போன் செய்தார், ஹோடேலில் வரவேற்ப்பில் எனது கணவரின் சொந்தகார பெண் ஒருவர் வேலை செய்து வந்ததால், அரபு முதலாளியின் அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள எளிதில் முடிந்தது, அரபு முதலாளியின் உதவியாளர் அடுத்தநாள் வந்தால் முதலாளியை நேரில் பார்த்து பேச முடியும் என்று சொல்லி இருந்ததால் நாங்கள் இருவரும் அடுத்தநாள் 'ஒபேராய் சூட்டிற்கு' சென்று என் கணவரின் அரபு முதலாளியையும் அவரது மனைவியையும் நேரில் பார்த்து எங்களது பிரச்சினை பற்றி சொன்ன போது அவர் அதை பற்றி முன்பே நன்கு அறிந்திருக்க கூடும்
என்று நினைக்கிறேன், தில்லியிலிருந்து ஒப்புதல் கிடைத்த பின்னர் வந்து வேலையை தொடர்ந்து செய்யும்படி கூறியதுடன் எங்களை அன்பாகவும் உபசரித்தார், நான் 'ஒபேராய் சூட்டை' பார்த்து மகிழ்ந்தேன், அரபு முதலாளி வெறும் ஒரு கம்பெனிக்கு மட்டும் முதலாளி இல்லை அவர் அவரது நாட்டின் அமைச்சரவையில் பிரதான அமைச்சரும், அந்த வருடத்திய 'அரபு பணக்காரர்களில்' இரண்டாவதாகவும் இருந்தவர், கொஞ்சமும் ஏற்ற தாழ்வின்றி எங்களை அவர் அன்புடன் உபசரித்ததும் எங்கள் பிரச்சினையை புரிந்து கொண்டதும் இன்னும் என் நினைவை விட்டு நீங்கவே இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக