என் தகப்பனாரிடம் பல அறிய குணங்களை நான் கண்டு கேட்டு இருக்கிறேன், அவற்றில் ஒன்று தவநிலை அல்லது முற்றும் துறந்த துறவறம். துறவறத்தைப் பற்றி என் தகப்பனார் கூறும் இந்த அறிய கருத்து இன்றைக்கும் எண்ணி பார்க்க மிகவும் அதிசயமானதாகவும் அதில் எத்தனை உண்மை உள்ளது என்பதும் எனக்குத் தோன்றுவதுண்டு.
ஒரு மனிதன் துறவியைப் போல வாழ்வதற்கு மனிதர்களே இல்லாத காட்டுக்கோ மலைகள் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கோ சென்று துறவியாக வாழ்வது என்பது மிகவும் சுலபமானது, நெருக்கடியான தொல்லைகளும் ஆசாபாசங்களும் நிறைந்திருக்கும் மக்களுடன் ஒருவனாக வாழும் போதே அவன் மனம் ஒரு துறவியின் நிலையை அடைவது தான் மிகவும் கடினமானது என்று கூறும் அவர் அப்படியே வாழவும் பழகிக்கொண்டார் என்பதை நான் பார்த்து இருக்கிறேன்.
அவரைச் சுற்றி இருந்தவர்களிடம் ஏச்சும் பேச்சும் அவருக்கு கிடைத்தாலும் ஒரு நாளும் தன்னிலைத் தவறாமல் துறவியைப் போல வாழ்ந்தவர் அவர். நம்மைச் சுற்றி உள்ள உலகம் நம்மை என்னவாக நினைக்கிறது என்ன எதிர்பார்க்கிறது என்பதைப் பற்றிய கவலை அவரை ஒருநாளும் பாதிக்கவில்லை. ஒருநாளும் அதற்காக அவர் கவலைபட்டதில்லை. யார் யாரையோ திருப்திபடுத்த அவர் ஒருநாளும் யோசித்து தனது நேரத்தை வீணடித்ததில்லை. மாறாக இறைவனிடம் எப்போதுமே அன்னியோன்னியத்துடன் இருந்து வந்தார்.
ஆனால் தான் இறைவனிடம் மிகவும் அன்னியோன்னியமாக இருந்து வருகிறார் என்பதைப் பற்றி யாரிடமும் சொல்லிக் கொண்டது கிடையாது. அவருக்கும் இறைவனுக்குமான தொடர்பு அத்தனை நெருக்கத்துடன் இருந்தாலும், தனக்கென்றும் வாரிசுகளுக்கென்றும் ஏதும் கேட்டு பெற்றுக்கொள்வது என்கிற வாணிப நோக்கம் போன்ற வழக்கத்தை இறைவனிடம் அவர் ஏற்படுத்திக் கொண்டது இல்லை.
அவர் அடிக்கடி , மனம் தூய்மையான கண்ணாடியைப்போல இருக்க வேண்டும், அப்படிப்பட்ட மனங்களால் மட்டுமே இறைவனிடம் நெருக்கத்தை அடைய முடியும். இறைவனை தரிசிக்கவும் இறைவனுக்கு உகந்தவர்களாகவும் நம்மை நாம் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம் என்று சொல்லுவார்.
பைபிளில் சொல்லியதுப் போல ஒரு குழந்தையின் மனதையும் எண்ணங்களையும் ஒத்தவர்களாக நாம் இருக்கும் போது இறைவனை நன்றாக உணரவும் தரிசிக்கவும் முடியும் என்பார். அவர் தன் வாழ்நாளை அப்படியே வாழ்ந்தும் வந்தார்.
அவரது பேச்சில் கூட தான் ஒரு துறவியைப் போல வாழ்வதாக சொல்லிக் கொண்டது கிடையாது. அவருக்கு பனிரெண்டு வயதிருக்கும் போது பல வயதினரோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக சொல்லுவார் அவர்களில் சில துறவிகளும் உண்டு. துறவிகளுடன் பல நாட்கள் தங்கி விடுவதும் உண்டு என்பார். அவரது பெற்றோர் அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தாலும், மற்ற பிள்ளைகளுக்கும் இவருக்குமான வித்தியாசத்தை இவரது சிறிய வயதிலேயே அவர்கள் நன்கு புரிந்து கொண்டதாக சொல்லுவார். பலவற்றைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் சிறிய வயதிலிருந்தே மிகுந்து காணப்பட்டதாகவும் அவற்றிக்கான விடைகளைத் தேடி புத்தகங்கள் பலவற்றை படித்து புரிந்து கொள்ள இயலாத பலவற்றை பலரிடம் கேட்டு அறிந்து கொண்டதாகவும் சொல்லுவார். இசையைக் கூட இவர் கற்றுக் கொண்ட விதமே தன்னார்வம் மிகுதியினால் என்பார்.
அவரிடம் இறைவனைப் பற்றி பல விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேனே என்று எனக்கு தோன்றுகிறது . அவர் எல்லாரையும் சுத்த மனதோடு உண்மையாய் அன்பு கூறும் குணம் கொண்டவர், அதே போன்று என் தாயாரும் எல்லோரையும் உண்மையாய் நேசிக்கும் குணம் கொண்டவர். விரோதிகள் என்று அவர்களுக்கு யாருமே இருந்ததில்லை, யாரையுமே அவர்கள் வெறுத்ததில்லை. ஒருவரையும் குறை கூறி பேசி பார்த்ததே இல்லை. அப்படிப்பட்ட பெற்றோர் கிடைக்க நான் மிகவும் பாக்கியசாலியாக இருந்தேன் என்பதுகாலம் கடந்து உணர முடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக