ஒரு ஏழைத் தகப்பன் தன் பிள்ளைகள் சுகமாக வாழ்வதற்காக பாடுபட்டு, ரத்த வியர்வை சிந்தி, தன் வாழ்வில் இனி வேறு துயரே கிடையாது என்கின்ற அளவில் அத்தனை வேதனை துயர் என்று எத்தனையோ கஷ்டப்பட்டு சேர்த்து வைத்து போகும் சொத்துக்களின் மதிப்பை அறிந்துகொள்ளும் உணர்வற்ற அவரது வாரிசுகள், அந்த சொத்துக்களை அவரவர் விருப்பபடி ஆண்டு அழித்து, தன் தகப்பனும் முப்பாட்டனும் சேர்க்க எத்தனை துயரடைந்தனர் என்கின்ற வருத்தம் சிறிதேனும் இன்றி, சீரழிப்பதைப் போன்று ஜனநாயகமும் மக்களாட்சியும் இன்று அல்லலுற்று வருகிறது.
உரிமைகளைப் பற்றியும் சட்டதிட்டங்களைப்பற்றியும் கவலை கொண்டு பிறர் வாழ நன்மை செய்வதே தங்களது குறிக்கோள் என்று முழக்கமிடுவோர் கையில் ஜனநாயகம் என்னும் செத்துப்போன விலங்கை காக்கைகளும் கழுகும் கூட்டம் கூடி கிடைத்தவற்றை பிடுங்கி இழுத்துக் கொண்டு போவது போல உள்ளது தற்போதைய ஜனநாயகம். மகளிர் மசோதாவை குரல் வாக்கெடுப்பின் மூலம் கொண்டுவந்தாலும், குறைகளைக் கூவி பொய்யாக்கி, கண்துடைப்பு, சதி வேலை என்று ஏதோ ஒரு வழியில் தடை செய்துவரும் 'நல்ல' உள்ளங்கள் நிறைந்த ஜனநாயக இந்தியா நம் நாடு. மக்களவையில் சில உறுப்பினர்கள் சபாநாயகரின் மேசை மீதிருக்கும் காகிதங்களை எடுத்து எறிவதும், கூட்டமாக எழுந்து கோஷமிடுவதும் ஜனநாயகத்தின் உச்சகட்ட நடவடிக்கைகள். இவர்களின் இந்த நடவடிக்கைகளை கவனிக்கும் எதிர்கால சந்ததியினருக்கு இவர்கள் காட்டும் வழி மிகவும் 'போற்றத்தகுந்தது'.
எதை நாம் நம் வருங்கால சந்ததியினருக்கு கற்றுத்தரப் போகிறோம்? அரசியலுக்குள் நுழைவதற்குத் தயங்கும் சிறந்த அரசியல்வாதிகளை நம் நாடு நிச்சயம் இழந்துகொண்டு தான் இருக்கிறது. அரசியல் என்றாலே ரவுடிகளும், 'சாக்கடைகளும்' தான் நுழைய முடியும் என்கின்ற எண்ணம் வேரூன்றுவதற்கு காரணம் அரசியலில் அப்படிப்பட்டவர்களால் தான் தாக்கு பிடிக்க இயலும் என்கின்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.
'இனியொரு விதி செய்வோம்' என்று யார் வந்தாலும் அவர்களின் விதி ஏற்கனவே அதில் உள்ளவர்களின் வசமாகிவிடுகிறது. மகாத்மா காந்தி, நேரு, வல்லபாய் படேல் போன்ற அத்தனைப் பேரும் உயிர் பெற்று மீண்டும் இந்தியாவிற்கு வந்தால் ஜனநாயக இந்தியா புத்துயிர் பெரும். ஓட்டுப் போடுவதைக்கூட நாளடைவில் ஜனநாயகத்திலிருந்து எடுத்துவிடும் நிலை ஏற்பட்டாலும் அதிசயிக்க ஒன்றும் இல்லை, ஏனென்றால் ஓவ்வொரு முறையும் ஒட்டு போடும் மொத்த எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்து 65% ஓட்டுக்கள் பதிவானால் அதிகமாக ஒட்டு பதிவானதாக அறிவிக்கப்படுகிறது.
ஜனநாயகம், மக்களாட்சி இவை இரண்டும் படுத்தும் பாடு என்பதை கண்கூடாக காண மகாத்மா காந்தியும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அத்தனை மக்களும் இப்போது வந்து இந்தியாவை பார்க்கவேண்டும், எதற்காக சுதந்திரம் பெற இரத்த வியர்வை சிந்தினோம் என எண்ணி ஆறாத் துயரடைவார்கள். எதிகால இந்தியாவே உன் ஜனநாயகமும் மக்களாட்சியும் எப்படி இருக்கப் போகிறதோ!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக