செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 மே, 2013

விளையாட்டு வினையானால் ....



ஒரு பழமொழி உண்டு " விளையாட்டு வினையாகும்", பல சந்தர்ப்பங்களில் பல பேர் விளையாட்டாக துவங்கிய பல விஷயங்கள் வினையாக (பெரும் பிரச்சினையாக) மாறியது உண்டு. "இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை, விளையாட்டாகத்தான் செய்தேன்" என்று சொல்லி வருத்தப்படுபவர்கள் நாளடைவில் அதுவே பழக்கமாகி, பழக்கத்தை விடுவதற்கு இயலாமல் திருட்டுத்தனமாக சில பல காரியங்களை செய்து அவற்றில் சிலவற்றில் மாட்டிக்கொண்டது, தப்பித்தால் போதும் என்றாகி, எதோ ஒரு வழியில் தப்பித்து, மீண்டும் பழக்கதோஷத்தில் சிக்கிக் கொண்டு ..........

இப்படி பலரது வாழ்க்கை திண்டாட்டத்தில் சிக்கி விடுகிறது. விளையாட்டாக துவங்கும் பலவித பழக்கம் நாளடைவில் அடிமையாக்கி விடும் அபாயம் ஏற்ப்படும் என்பதை துவக்கத்திலேயே அறிந்து அதை விட்டு விலகாமல் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அதுவே வினையாகி நமது வாழ்க்கை சீரழியும்.

தவறு செய்பவர்களுக்கு சூழ்நிலை, நண்பர்கள், பணம் மற்றும் பொருளாசை என்று பல காரணங்கள் இருந்தாலும் தான் செல்லும் பாதை தவறானது என்பதை அறிந்தும் தொடர்ந்து செய்து அதற்கான பலன் அல்லது முடிவு வந்து சேருவதை தவிர்க்க இயலாது போகிறது. சூதாட்டம் என்பதை உருவாக்க காரணம் விளையாட்டின் மீது ஏற்ப்படும் மோகமா அல்லது எதையும் பணமாக மாற்றும் கிரிமினல் புத்தியா என்பதை யாவரும் அறிந்திருந்தும், சட்டப்படி குற்றம் என்பது தெரிந்து, அதில் சிக்கி வெளியேறும் வழி தெரியாமல் அல்லது உணராமல் அதிலேயே அழிந்து விடுபவர்கள் ஏராளம். எந்த பழக்கம் மனிதனை நிதாதனத்துடனும் கவுரவத்துடனும் நடத்தி செல்லுகிறதோ அதை மனிதன் விரும்பி ஏற்றுக்கொண்டு வாழ விழைவதில்லை. மனிதனின் மனம் ஒரு குரங்கு என்று சொல்வதற்கு இதுதான் அடிப்படை காரணம் என்று நான் நினைக்கிறேன்.

சிறந்த அல்லது நல்ல பழக்கத்தை விளையாட்டாக கூட செய்வதற்கு மனிதர்கள் மனம் நாட்டம் கொள்வது இல்லை. "நன்மையானது" என்பதை அடையும் வழி மிகவும் குறுகியதாகவும் இடர் நிறைந்ததாகவும் உள்ளதும்  தீமை அல்லது சூது என்பது எங்கும் எதிலும் நிறைந்து எளிதாக அடைந்துவிடகூடிய வசீகரம் வாய்ந்ததாக உள்ளது என்பதால் அதை அடைவதில் ஆர்வம் காட்டும் மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம், நன்மையை தேர்வு செய்ய யோசிக்கும் இன்றைய உலகில் தீமை அல்லது வினை என்பது எங்கும் எதிலும் நிறைந்து கிடப்பதில் ஆச்சர்யம் இல்லை. எதற்காக நீதி, நன்மை வேண்டும், அதை வைத்துக் கொண்டு "நாக்கு வழிப்பதா", அல்லது "வயிற்றில் ஈரதுணியை போட்டு கொண்டு படுத்து கிடப்பதா" என்று நக்கல் நையாண்டி செய்பவர்கள் எண்ணிக்கை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து செல்வதை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

ஊடகங்கள் பெருகியதால் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சிக்கல் இவற்றை இன்னும் தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது, "வேண்டாம்" என்று கண்ணையும் காதையும் மூடிக்கொண்டாலும் வீட்டின் உள்ளே தொலைகாட்சிபெட்டியில் செய்திகள் மூலமாக நம்மை தேடி வந்துவிடுகிறது. "மானம் போன பின் வாழ்ந்து என்ன பயன்" என்று எண்ணிய காலம் மாறி "காசேதான் கடவுள்"  மூச்செல்லாம் பணமாக மாறிவிடக் கூடாதா என்று ஏங்கும் பெருமூச்சு எல்லாம் ஒன்று சேர்ந்து வானில் கூடுகின்ற கொஞ்சம் மழை மேகத்தை கூட துரத்தி சென்று வேறு நாடுகளில் பேய் மழை, சூராவளியாக உருமாறி அவ்வூரில் உள்ள வினை அல்லது சூதுக்கு ஊரை துவம்சம் செய்துவிடுகிறது. [மாமியாரிடம் கோபித்துக்கொண்டு கணவனை வெளுத்து வாங்கும் மனைவிகளைப்போல].

வரதட்சிணை கொடுமை, சாதிக்கொடுமை, கற்பழிப்பு, லஞ்சம், அதிகார துஷ் பிரயோகம், தீவிரவாதம் இன்னும் பல ஒன்று சேர்ந்து செய்திகளை உருவாக்கி அதில் இன்னொன்று தற்போது சூதாட்டம். பூமி தாங்குமா தெரியல.




புதன், 20 பிப்ரவரி, 2013

நிரந்தர கேள்வி மட்டும்

நாங்கள் குடும்பத்துடன் வளைகுடா நாடு ஒன்றில் சில ஆண்டுகள் வசித்து வந்தோம், என் கணவரின் உடன் பணி புரிந்து வந்த சிங்களவர் சிலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது, அப்போது ராஜீவ் காந்தி அவர்கள் கொலை செய்யப்படவில்லை, புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்படவில்லை, அப்படிப்பட்ட காலத்தில் அங்கிருந்த சிங்களர்களுக்கு தமிழர்களாகிய எங்களை சற்றும் பிடிக்காமல் பல முறை பல வஞ்சகமான சதித்திட்டங்களை தீட்டி பணியிலிருந்து துரத்த முயன்று தோல்வியடைந்தனர். அப்போது எங்களுக்கு அவர்களின் வன்மத்திர்க்கும் வஞ்சக செயல்களுக்கும் காரணம் தெரிந்திருக்கவில்லை. இலங்கையில் எப்போதும் சண்டை நடக்கிறது என்பதும் அதனால் பலர் உயிர், மற்றும் உடமைகளை இழந்து அகதிகளாக இந்தியா திரும்புகின்றனர் என்பதை செய்திதாள்களில் படித்திருக்கிறேன். அதன் தீவிரம் என்ன என்பது தெரிந்துகொள்ள தற்போதைய இணையதள வசதிகள் ஊடகங்கள் போன்ற பல்வேறு வசதிகள் அப்போது இல்லை. அக்காலத்தில் பர்மாவிலிருந்து வந்த அகதிகளைப்பற்றிய செய்திகள் சிலவற்றை எங்கள் பெற்றோர் பேசுவதை நான் கவனித்து கேட்டதுண்டு. அதைப்போன்று இலங்கை அகதிகளும் அங்கு வசிக்க இயலாமல் திரும்பியவர்கள் என்ற அளவில் செய்தியை அறிந்து கொள்ள முடிந்திருந்தது.

சிங்களர்களின் மிருக குணத்தை பற்றி வளைகுடாவில் பணி செய்து கொண்டிருந்த சமயம் நேரில் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கை தமிழர்களால் மட்டுமே சிங்களவர்களை எதிர்கொள்ள முடிந்த சில சம்பவங்களையும் நான் பார்த்ததுண்டு. ஏனெனில் இலங்கையில் சிங்களவர்களுடன் ஒருமித்து வாழ்ந்த காரணத்தால் அவர்களை எப்படி சமாளிப்பது என்பது முன்கூட்டியே இலங்கை தமிழர்கள் அறிந்திருந்தது தான் காரணம் என்பது எனக்கு இப்போதுதான் புரிகிறது. நாங்கள் தமிழகத்திலிருந்து வளைகுடாவிற்கு சென்றவர்கள்தான் என்றாலும் எங்களுக்கு எதிராக பயங்கர சதி திட்டம் உருவாக்கி அதை மிகவும் சரியான நேரத்தில் நம் மீது பிரயோகிப்பதை நாங்கள் கண் கூடாக கண்டு அனுபவித்திருக்கின்றோம். வளைகுடா நாடுகளில் சட்டம் மிகவும் கடுமையானது என்பதால் நாம் மிகவும் கவனத்துடன் வாழ்க்கை நடத்தவேண்டியுள்ளது, அதையே சிங்களவர்கள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்வதற்கு இடம் கொடுக்காமல் வாழ்க்கையை கத்தி மீது வெறும் காலில் நடப்பதை போன்று நடத்த வேண்டி இருந்த சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.

அப்படிப்பட்ட கொடுமைக்காரர்கள் சிங்களவ மிருகங்கள் என்பதை மறுபடியும் நினைவு கூற வைத்தது பாலச்சந்திரன் என்கின்ற சிறுவனின் கொடூர மரண செய்தி. புலிகளின் இயக்கத்தை தடை செய்ததின் காரணமாகவும் தமிழகத்தில் அதிகபட்ச மக்களுக்கு இலங்கைப்போர் சம்பவங்களைப் பற்றிய விவரங்கள் அறியப்படாமல் இருப்பதால் அதை குறித்த தீவிர போராட்டங்களும் எதிர்ப்புகளும் மிகவும் தாமதமாக உள்ளதுடன் சிங்களவர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய தீர்ப்பு கிடைக்காமல் இந்தியாவிற்கு ராஜபக்சே வருவதற்கு வாய்ப்புகளும் கொடுக்கப்படுகிறது. ராஜீவ் காந்தியின் கொலையை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளுகின்ற சிங்கள அரசு அதையே பெரும் சாக்குபோக்காக வைத்து இந்திய அரசுடன் நட்பு பாராட்டுவது போன்ற கண்துடைப்பு செய்து கொண்டிருக்கிறது ஆனால் உலக மனித நேய நீதிக்கு முன்னால் இன்னும் சரியான தீர்ப்பு கொடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லை என்கின்ற காரணம் மட்டுமே முன் வைக்கப்படுமானால் நீதி என்பதை எப்படி நிறுத்தி வைக்க முடியும் என்பது கேள்வியாக உள்ளது.

இலங்கை தேசம் சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற கொள்கையை உடைய சிங்கள அரசு அதன் குடியுரிமை பெற்ற தமிழர்களுக்கு சம உரிமை கொடாமல் சர்வாதிகாரம் செய்து வருவதை உலக நாடுகள் இன்னும் கண்டுகொள்ளாமல் மவுனமாக இருப்பது ஏன். இலங்கையில் போர் நடந்த போதும், நடுநிலை வகிக்கும் அமெரிக்கா அதை பற்றி ஐ நாவில் முன்வைத்து நடவடிக்கை எடுக்க தவறியது ஏன். இன்றுவரை இலங்கை தமிழர்கள் இடம்பெயர்ந்து பலநாடுகளில் தஞ்சம் அடைந்து விட்டதால் சிங்கள வெறியர்களுக்கு சொந்தமாகி கொண்டிருக்கும் இலங்கை பிரச்சினை பதிலில்லாத நிரந்தர கேள்வி மட்டும்தானா.


ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

"பாதுகாப்பு" என்பதன் அவசியம்

சில மாதங்களாக பாதுகாப்பு பற்றிய எனது கருத்தை இங்கே பதிவு செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன், பாதுகாப்பு என்பது எங்கே எப்போது யாருக்கு தேவைப்படுகிறது என்ற கேள்வி எழுவது இயல்பு, அடுத்ததாக எந்தவிதமான பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பது பற்றிய கேள்வி, பாதுகாக்கப்பட வேண்டியது எது, யார் என்று வரிசையாக எழும் கேள்விகளுக்கு பதில்கள் மட்டுமின்றி தீர்வு பற்றியும் எனக்குள் தோன்றிய பல கேள்விகளுள் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன். இன்றைய சூழலில் இந்திய நாட்டிற்கு பகைவரிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயம் [அவசியமாக] உள்ளது. ஒரு புறம் பாக்கிஸ்தானின் ஊடுருவலிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் மற்றொருபுறம் சீன இந்திய எல்லை பகுதியை பாதுகாக்க வேண்டும், இந்திய தேசத்துடன் நல்லுறவு கொள்வது போன்ற பாவனையில் இலங்கை அரசு பேசினாலும் அதன் போக்கு மிகவும் மோசமானது என்பதற்கு 'எல்லை பாதுகாப்பு' என்ற பெயரில் அப்பாவி மீனவர்களை வாழ விடாமல் அட்டுழியம் நடத்தி வருகின்ற செய்தி தினமும் தொடர்ந்து கொண்டே இருப்பது.

இந்தியநாட்டை சுற்றியுள்ள நாடுகளிடமிருந்து இந்தியாவை பாதுகாப்பது என்பதை பெரும் சவால்களுக்கிடையே சமாளித்து வருகின்ற இந்திய அரசின் நிலைமையை நிச்சயம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். பிரதமமந்திரி உள்பட ஏனைய மந்திரிகள் மற்றுமுள்ள உயர்பதவி வகிக்கும் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலைமை. சுற்றியிருக்கும் நாடுகளிலிருந்து வருகின்ற எதிரிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுப்பது என்பது மன்னர் ஆட்சிகாலத்தில் இருந்தே காணப்படும் பாதுகாப்பின் அவசியத்தை போன்றதே என்றாலும் உள்நாட்டில் உள்ள எதிரிகளிடமிருந்தும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய அவசியமும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

தனிநபரின் பாதுகாப்பு பற்றிய அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோசடி மன்னர்களின் வித விதமான மோசடி திட்டங்களில் சிக்கிக் கொண்டு தங்களின் வாழ்வாதாரங்களை பரிகொடுத்து தவிப்பவர்களின் பாதுகாப்பு, வீடு புகுந்து கொள்ளை அடித்து செல்லும் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பு, வீதியில் செல்லும் நபரிடமிருந்து வழிப்பறி நடத்தும் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பு, வங்கியில் இருந்து பணம் நகை கொள்ளையிடும் கொள்ளையிலிருந்து பாதுகாப்பு, வக்கிரம் மிகுந்த மனிதன் என்ற பெயரில் நடமாடும் மிருகங்களிடமிருந்து பெண்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு, குழந்தைகளை திருடிச்செல்லும் கயவர்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாத்தல், குடிசை வீடுகளை தீயிட்டு கொளுத்தி நாசப்படுத்தும் நயவஞ்சகர்களிடமிருந்து பாதுகாப்பு, என்று பாதுகாப்பு தேவைப்படுபவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

நாடு, நாட்டின் முக்கிய நபர்கள், பணம், நகை, நிலம், மீனவர்கள், பெண்கள், குழந்தைகள் என்ற இந்த பட்டியலில் ATM மற்றும் இரண்டு, நான்குசக்கர வாகனங்களும் சேர்ந்து கொண்டுள்ளது. பல இடங்களில் உயர் ரக நாய்கள் கூட பாதுகாக்கப்பட வேண்டியவைகளுள் முக்கிய இடத்தில் இருக்கிறது. இவை அனைத்தையும் பாதுகாக்க வேண்டிய மிகவும் முக்கிய பொறுப்பில் மனிதர்கள் இருப்பது புதிதல்ல, ஆனால் 1.22 பில்லியன் ஜனத்தொகைக்கு போதுமான அளவிற்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு ஆட்கள் பணியில் அமர்த்தபட்டு உள்ளனரா என்பதும் அவர்களுக்கு  நவீன கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளதா, நவீன கருவிகளை உபயோகிக்கும் பயிற்சி பெற்றவர்கள் எத்தனைபேர், அவ்வாறு நவீன கருவிகளை யார் மீது எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற புதிய சட்டம் உள்ளதா. பாதுகாக்கும் படையை சேர்ந்தவர்கள் அவர்கள் எடுத்துக்கொண்ட "உறுதிமொழி"க்கு ஏற்றவாறு தங்களை பாதுகாக்கும் பணியில் முழுமையாக அர்ப்பணித்து கொண்டுள்ளனரா, அவ்வாறு தாங்கள் ஏற்றுகொண்ட பணியில் முழுமையாக அர்ப்பணித்து கொள்ளாமல் எதிரிகளுக்கு உடந்தையாக அல்லது பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தில் தண்டனை அதற்க்கு ஏற்றதாக உள்ளதா,

இது போன்ற கேள்விகளுக்கு நமது நாட்டில் இன்றுவரையில் சரியான பதில் இல்லை, அவ்வாறு பதில் இல்லாமல் இருக்கின்ற பட்சத்தில் பாதுகாப்பு என்பதும் கேள்விகுரியானதுதான். பாதுகாப்பு என்று சொல்லுகின்ற சமயத்தில் வீதியில் குடித்துவிட்டு ஒரு பெண்ணை கேலி செய்தால் அவர் குடித்ததினால் சுயநினைவில்லாமல் அவ்வாறு செய்கிறார் என்று கூறி விட்டுவிடுவதும் குடித்துவிட்டு மனைவி குழந்தைகளை துன்புறுத்துவதும் தினம்தோறும் பல வீடுகளில் வேதனையை தரும் நிகழ்வாகிவிட்டது, குடித்துவிட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் சம்பவங்கள் பெருகி விட்டது. குடித்து அதனால் உடல்நிலை மோசமாகி இறந்து போகிறவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குடியிலிருந்து இவர்களை பாதுகாக்கப் போகிறவர்கள் யார்.

"பாதுகாப்பு" என்பது ஏழை முதல் பணக்காரன் வரை அதிகரித்து வரும் தேவைகளில் மிகவும் முக்கியமான ஒன்று. அதற்க்கான புதிய திட்டங்களோ சட்டங்களோ இதுவரையில் இல்லை, குறைந்தபட்ச  பாதுகாப்பு என்பது கூட கேள்விக்குறியாக உள்ளது. அதனால் அவரவர் பாதுகாப்பிற்கு அவரவர் முழு பொறுப்பு ஏற்றுகொள்வது கட்டாயம். தினச்செய்திகளை கட்டாயம் பார்ப்பது அவசியம், பல வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி இருந்தாலும் அதை பொழுபோக்கிற்கு மட்டுமே உபயோகிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர், தினம் காண்பிக்கப்படுகின்ற தொடர்கதைகளையே பொதுவாக விரும்பி பார்கின்றனர், மனிதர்களுக்கு பொழுதுபோக்கு தேவை என்றாலும், மிகவும் அவசியமானது என்று கூற இயலாது. தொலைகாட்சியை ஒருநாள் முழுவதும் பொழுதுபோக்கிற்கு மட்டுமே பயன்படுத்துவதால் நாட்டில் அன்றாடம்  நடக்கும் உண்மை சம்பவங்களை அறிந்து கொள்ள இயலாமல் போகிறது.

தொலைகாட்சியில் தினமும் கொள்ளை கொலை போன்றவற்றை செய்திகளில் பார்க்க முடிகிறது, செய்திகளை தினமும் தவறாமல் பார்ப்பதால் எத்தகைய சூழலில் அந்த கொள்ளை கொலை சம்பவங்கள் நடந்திருக்கின்றது என்பதை நம்மால் ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது, அதை போன்ற சந்தர்ப்பங்களை நாம் தவிர்த்து கொள்வதாலும் அல்லது அதை நமக்கு தெரிந்தவர்களிடம் எடுத்து சொல்வதாலும் இத்தகைய அசம்பாவிதங்களை ஓரளவிற்கு நாம் தவிர்க்க முடியும், அதே போல பலவித பண மோசடிகளை பற்றி செய்திகளை பார்க்கும் நமக்கு யாரையெல்லாம் நம்பி பணம் கொடுக்க கூடாது என்பதை அறிந்து செயல்பட முடியும். டெல்லியில் நடந்த இளம் பெண் கொலை சம்பவத்தின் செய்தியை பார்க்கும்போது எப்படிப்பட்ட அசந்தர்ப்பங்களை நம்மால் தவிர்க்க முடியும் என்று நாம் தெரிந்துகொள்ள முடிந்தது.

முற்றிலும் தெரியாத நபர்களிடம் பேசுவது பழகுவது என்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது என்பதை கூட செய்திகளில் வருகின்ற பல சம்பவங்கள் நமக்கு எடுத்து காட்டுகிறது. விபத்து ஆபத்து இரண்டையுமே தவிர்க்க நாமே எல்லா சந்தர்ப்பங்களிலும் தயாராக இருப்பதற்கு தவறாமல் செய்திகள் பார்ப்பதை பழக்கப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். தெரியாத நபர்களிடம் இருந்து மட்டுமே எப்போதும் ஆபத்து வருவது இல்லை நமக்கு மிகவும் பழக்கப்பட்ட நபர்கள் வழியாக கூட ஆபத்து நமக்கு உண்டு என்பதை பல செய்திகளின் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடியும். தொலைகாட்சிபெட்டி இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இன்றைய சூழல் இருந்தும், வீட்டிற்குள்ளேயே அதற்கான தீர்வுகளை வைத்து கொண்டு அதை அலட்சியப்படுத்தும் நபர்களை தேடித்தான் இத்தகைய ஆபத்துக்களும் விபத்துக்களும் விரைந்து செல்கிறதோ என்று எண்ண  வைக்கிறது.

நம்மை நாமே பாதுகாத்து கொள்வது இன்றைய கட்டாயம், வேறு ஒருவரின் உதவியால் மட்டுமே நமக்கு பாதுகாப்பு கிடைத்துவிடும் என்று நம்பியிருப்பது நமக்கு நாமே வைத்துகொள்ளும் "ஆப்பு" என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்வது இன்றைய அவசியம்.



வெள்ளி, 25 ஜனவரி, 2013

விஸ்வரூபம்



எவ்விதத்திலும் வன்முறையை ஆதரிக்க கூடாது என்பதுதான் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் ஒருமித்த கருத்து. வன்முறையை தூண்டும் வகையில் எவ்வித செய்கைகள் ஆதாரபூர்வமாக இருந்தால் அது யுனிவர்சலாக தடைசெய்யப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது, அவ்வாறு மாற்று கருத்து இருப்பின் அவர் தீவிரவாதியாக இருக்கவேண்டும். மிருகத்தை வதைப்பது போல திரைப்பட காட்சி இருக்க கூடாது அவ்வாறு இருந்தால் அதை நீக்க வேண்டும் என்பது மிருகவதை சட்டம் வரையறை உண்டு. கொலையாளி என்று நிருபிக்கப்பட் ட நபரை தூக்கிலிடுவதை தடுக்க கோருவதற்கு மனிதஉரிமை சட்டம் உள்ளது. தீவிரவாத செய்கைகளை ஆதரிப்பவர்களும் குற்றவாளிகள் தான், குற்றம் செய்பவர் எவராக இருப்பினும் அவரை சட்டத்தின் முன் பிடித்து கொடுக்கவேண்டியது ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

சமுதாய விரோத செயல்களில் ஈடுபடுபவர் தனது உடன் பிறந்த சகோதரனாக அல்லது மகனாக இருந்தாலும் அவருக்கு சட்டத்திலிருந்து பாதுகாப்பு கொடுப்பதும் புகலிடம் கொடுப்பதும் தீவிரவாதிக்கு துணை போனதற்கான குற்ற பிரிவுகள் சட்டத்தில் உண்டு. ஆனால் எத்தனை பேர் அவ்வாறு தங்களை தூய்மையாக வைத்து கொண்டுள்ளனர் என்பது அவரவர்களின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். பெற்றோருக்கு தெரியாமல் சமூக விரோத கும்பல்களுடன் உறவு வைத்துக் கொண்டு அவற்றால் கிடைக்கும் வருமானத்தை செலவிட்டு எத்தனை திருமணம் நடக்கிறதோ, எத்தனை சொந்த வீடுகள் வாங்கப்படுகிறதோ, எத்தனை பேர் படிப்பதற்கு கொடுக்கப்படுகிறதோ, தங்களது சொந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது போன்ற இன்னும் எத்தனையோ காரியங்களை செய்து வருகின்ற இளைஞர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த எத்தனை பேர் முன் வருகிறார்கள். காரணம் சுயநலம்.

சுயநலவாதிகளால் சுருங்கி போன சமுதாயம், வறுமை முற்றிப்போனால் 'களவும் கொலையும் தவறல்ல' என்ற வேதாந்தம் பேசிக்கொண்டு மனம் போன நோக்கில் இன்றைய சமுதாயம் 'தீவிரவாதிகளை' முகமூடிக்குள் மறைத்து கொண்டுதான் செயல்படுகிறது, வங்கியில் கொள்ளை, ஏ டி எம் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி, நகை பணத்துக்காக கழுத்தறுத்து கொலை, பலவித மோசடி கும்பல்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவது, குண்டு வெடிப்பு, என்று தினம் நாளேடுகளை நிரப்பிக்கொண்டிருக்கும் செய்திகள் நமக்கு எதை சொல்கிறது. அவ்வாறு கொள்ளை கொலை குற்றம் செய்த கும்பல் காவல்துறையால் பிடிபட்ட பின்னர் அவரது பெயர் நிழற்ப்படம் போன்றவை செய்திகளில் வெளியாகும்போது கொள்ளையர்களின் சாதி மதங்களை சேர்ந்தவர்கள் குழுவாக திரண்டு கொண்டு எங்களது சாதிக்காரனை அல்லது எங்களது மதத்தை சேர்ந்தவனை அவமானப்படுத்துகிரீர்கள், அவ்வாறு செய்திகளில் வெளியிடுவதை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அதை சட்டம் ஏற்றுக்கொள்ளுமா? இதற்க்கு பெயர்தான்  "சுயநலவாதம்". வேற்று மத (அ ) சாதிக்காரனை இழிவுபடுத்தினால் அதை கண்டு குதூகலிப்பது தனது மத (அ ) சாதிக்காரனைப்பற்றிய இழிவு செய்தியை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிடுவது. இது என்ன வாதம்?

மதவாதம் சாதிவாதம் தீவிரவாதம் இன்னும் என்ன மீதமிருக்கிறது, ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு விரோதிகளாக எத்தனை காலம் நீடிப்பார்கள், எங்கே போகிறது இந்த சமுதாயம். முன்னேற்றம் அல்லது நாகரீகம் என்று நா கிழிய பேசுகின்ற இவர்கள் எதை குறிப்பிடுகிறார்கள். நாகரீகம் என்று இவர்கள் கூறுவது கிராப்பு தலையுடன் பான்ட்டும் அல்லது ஜீன்ஸ் சொக்காயும் வித விதமான டீ ஷர்ட்டுடன் கால்களில் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கொண்டு விலை உயர்ந்த சொகுசு காரில் [இரட்டை அல்லது நான்கு சக்கர வண்டிகளில்] வலம் வருவதா? அல்லது பளிங்கு பதித்த பங்களாவில்   அலங்கார விளக்குகளின் நடுவே மதுவுடனும் மங்கைகளுடன் சுகபோகம் அனுபவித்து கொண்டு உலாவும் வாழ்க்கையா? அல்லது முன்னேற்றம் என்று சொல்வதெல்லாம் ஆங்கிலத்தில் படித்து பட்டம் வாங்குவதா?

இவர்கள் குறிப்பிடும் முன்னேற்றத்தின் அளவுகோல் செய்வதொன்று சொல்வது வேறு, படிப்பது ஒன்று இடிப்பது வேறு, எல்லோரும் மிக அழகாகவே "தினமும் நடித்து" தாங்கள் மிகவும் முன்னேறியவர்கள் என்பதை பல வகைகளிலும் வெளிகாண்பித்து கொண்டிருக்கின்றார்கள். 

செய்திகளில் வருகின்றவற்றை கருவாக வைத்து எடுக்கப்படுகின்ற திரைப்படங்கள் ஏராளம். இதுவரை வெளிவந்த திரைப்படங்கள் அத்தனையும் தணிக்கை அதிகாரிகளால் தணிக்கை செய்த பின்னரே திரைக்கு வருகிறது. தற்போது விஸ்வரூபம், இத்தனை தடையை கண்டிருப்பது விசித்திரமாக உள்ளது. அதிலும் கமல்ஹாசன் திரையுலகிற்கு புதியவர் இல்லை, அவருக்கு வன்முறையை கிளப்புவதில் ஆர்வம் இருக்க முடியுமா என்பதை பற்றி சாதாரண மனிதனுக்கே தெரிந்த விஷயம் தான், இதில் "வி(ஷம்)மம்" செய்பவர்கள்  அவரை கேவலப்படுத்த செய்யப்படுகிறதா அல்லது வேறு உள்நோக்கம் கொண்டதா என்று சிந்திக்க வைக்கிறது.




திங்கள், 13 பிப்ரவரி, 2012

ஆசிரியர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்

எங்கு பார்த்தாலும் திருட்டு, பணம் நகைகளை திருடுவதற்கு கொலைகள், வங்கியில் பட்டப் பகலில் துணிகர கொள்ளை, ஏ.டி.எம். பெட்டியிலிருந்து பணம் திருடும் கொள்ளையர்கள், இதனிடையே மருத்துவர் கொலை, ஆசிரியர் கொலை என்று காவல்துறையை அலைகழிக்கும் குற்றங்கள், ஒருபுறம் மின்சாரம் வேண்டி குரல் கொடுக்கும் கூட்டம், இன்னொரு புறம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி போராட்டம், இதனிடையே செவிலிகளின் போராட்டம், திரும்ப பணியில் அமர்த்த கோரி போராட்டம், மின்சார கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் இவ்வாறான போராட்டங்களை கட்டுப்படுத்த காவல்துறையின் பரபரப்பு. இவற்றில் எதையும் முக்கியமற்றது என கருத இயலாத வண்ணம் ஒவ்வொரு கோரிக்கைக்குப் பின்னாலும் ஒவ்வொரு நியாயம்.

[http://www.thehindu.com/news/cities/chennai/article2773833.ece]

இவற்றின் ஒட்டு மொத்த கட்டுபாடுகளையும் கவனிக்கவேண்டிய பொறுப்பு, அதாவது சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய பொறுப்பை வைத்திருக்கும் காவல்துறைக்குதான் மூச்சு திணறும் தருணம். போராட்டங்களில் பொதுவாக எல்லாவற்றிலுமே மிக முக்கியமான நியாயங்கள் முன் வைக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்படுகின்ற விதத்தில் உள்ளது, இன்னும் சில மாதங்களில் தேர்வுகள் துவங்கவிருக்கின்ற நிலையில், ஏற்கனவே சமசீர் கல்வியால் பள்ளிகளில் பாடங்களை துவங்க இயலாமல் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய நிலையில், ஆசிரியை மாணவனால் கொலை செய்யப்பட்டதால் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்துகொண்டு 'எங்களுக்கு மாணவர்களிடம் பாதுகாப்பு இல்லை, காவல்துறை எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், எல்லா பள்ளிகளும் பாதுகாப்பு எல்லைக்குள் கொண்டு வரவேண்டும்' என்று கோஷமிட்டு பள்ளிகளில் பாடம் நடத்தாமல் வீதிகளில் போராட்டங்கள் செய்வதை தவித்து வரபோகின்ற தேர்வுகளுக்கு மாணவர்களை தாயார் செய்யும் பணியில் முழு கவனத்தை செலுத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்.

http://www.deccanchronicle.com/channels/cities/chennai/protesting-nurses-arrested-tamil-nadu-623

மருத்துவரின் கொலைக்காக பாதுகாப்பு வேண்டும் என்று நோயாளிகளை கவனிக்கின்ற பொறுப்பை துச்சமாக தூக்கியெரிந்துவிட்டு போராட்டம் நடத்திய படித்த பண்புள்ளம் கொண்ட மருத்துவர்களைப் போன்று இல்லாமல், தங்களது சொந்த கோரிக்கைகளுக்காக நோயாளிகளின் சேவைகளை மறந்துவிட்டு போராட்டத்தையே முக்கியமாக கருதிய செவிலிகளை போல்லில்லாமல் ஆசிரியர்கள் தங்களது பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆசிரியையின் கொலையை காரணம் காண்பித்து பாடம் நடத்துவதை புறம்தள்ளிவிட்டு போராட்டம் செய்வதற்கு முன்வராமல் தங்கள் பணியில் முழு கவனம் செலுத்தி வருவது நிச்சயம் வரவேற்க்கத்தக்கது. இவ்வாறு தங்களது பொறுப்புணர்ந்து சேவைகளில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திகொள்வதை முன் உதாரணமாக காண்பித்த தமிழக ஆசிரிய பெருமக்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்ளுகிறேன் . நன்றி.



....

புதன், 7 செப்டம்பர், 2011

மாற்றி யோசி

'அந்த ஏழு நாட்கள்' கே. பாக்கியராஜின் இயக்கத்தில் வெளியான வெற்றிதிரைப்படம், இந்த திரைப்படம் முழுவதுமே ஒவ்வொரு காட்சியும் மிக முக்கியம், இடையிலே வருகின்ற பாடலில் கூட கதையம்சத்தின் தொடர்ச்சி இடைவெளி கொடுக்காமல் காண்போரை இருக்கையிலேயே உட்காரச்செய்த திரைக்கதை. இவரது திரைப்படங்கள் எல்லாமே இதே வகையை சேர்ந்தவைதான். இயக்குநர் தான் இயக்கும் திரைப்படத்தில் ஒரு சிறப்பான கதாபாத்திரமேற்று நடித்து முத்திரை பதிப்பது என்பது இவரது தனி சிறப்பு.

மலயாளீயாக இவர் நடித்திருக்கும் கதாபாத்திரம், தான் காதலிக்கின்ற பெண்ணை வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுக்கவிருக்கின்ற செய்தி அறிந்த போது தன்னுடன் இருக்கின்ற சிறுவன் கேட்பது போன்ற வசனமொன்று அந்த பெண்ணை அவரது வீட்டிற்க்கு தெரியாமல் அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்ளச் சொல்லி யோசனை கூறுவது போலவும் அதற்க்கு பாக்கியராஜ் அவ்வாறு அப்பெண்ணை கூட்டிச்சென்று திருமணம் செய்துகொள்வது தவறு என்று கூறிவிட்டு, ஒரு மலையாளி செய்கின்ற தவறால் எல்லா மலையாளிகளுக்கும் அவப்பெயர் ஏற்ப்படும் அதனால் அவ்வாறு செய்வதற்கு தனக்கு விருப்பமில்லை என்று விளக்குகின்ற காட்சி மிகவும் யதார்த்தமாகவும், நினைவில் நீங்கா இடம் பிடிக்கவும் செய்தது.

இந்த கருத்து மிகவும் யதார்த்தமான கருத்து என்றாலும் அவ்வாறு யாரோ ஒருவர் செய்கின்ற தவறு குறிப்பிட்ட சமுதாயத்தை குற்றப்படுத்தும் என்கின்ற உணர்வை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் பல பிரச்சினைகள் காணாமல் போய்விடும், டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பைப்பற்றிய தகவல்கள் செய்திகளில் வந்தவண்ணம் உள்ளது, குறிப்பிட்ட தீவிரவாத கும்பல் செய்திருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்காவிலும் மும்பையிலும் நடத்தப்பட்ட தீவிரவாத கொடூரங்களையும் டெல்லி உயர்நீதிமன்ற நுழைவு வாயிலில் நடந்த குண்டு வெடிப்புவரை செய்திகளில் இவற்றை காணுகின்ற உலக மக்கள் குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது கோபமும் வெறுப்பும் ஏற்ப்படுத்துவதாக உள்ளது, ஒரு மனிதனை (குற்றவாளியை) மீட்பதற்கு ஏறக்குறைய 11 அப்பாவிகள் பலியாவதும் எண்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வேதனைக்குள்ளாக்குவதும் விவேகமற்ற செயல்.

ஆடு மாடு ஒட்டகங்களை உண்பதற்காக கொல்வது பழகிப்போனதாகவும் பாவமற்ற செயலாகவும் இருக்கலாம். ஆனால் மனித உயிர்களை எடுப்பது அதிலும் அப்பாவிகளின் உயிரை கொல்வது என்பது தீரா பாவம். கோரிக்கைகளை முன் வைப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்க குண்டு வைத்து அப்பாவிகளை கொன்று தான் தங்களது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்பதை யாரும் ஏற்க்க மாட்டார்கள். இறந்தவர்களின் உறவினர்களுக்கு எத்தனை பணம் கொடுத்தாலும் இறந்து போன நபரின் இடத்தை ஈடு செய்ய இயலுமா. தீவிரவாதம் என்பது அப்பாவிகளின் உயிர்களை பலி வாங்குவது என்றால் அதற்க்கு முடிவே இராமல் போகும். அப்பாவிகளின் உயிரை பறிப்பதை கைவிட்டு வேறு நல்ல வழிமுறைகளை கையாள தீவிரவாதிகள் மாற்றி யோசிக்க வேண்டும்.





புதன், 17 ஆகஸ்ட், 2011

சுதந்திரம் - ஜனநாயகம் ?

விடுமுறைக்குப்பின் பள்ளிக்கூடங்கள் திறந்தால் போதும் ஆரம்பமாகிவிடும் 'படி, ஹோம் வொர்க் எழுது' போன்ற அம்மாவிற்கும் பிள்ளைகளுக்குமான ஒரே மாதிரியான உரையாடல்கள், மாலையில் வீடு திரும்பும் பெற்றோர் அல்லது அப்பாக்களிடமிருந்தும் இதே உரையாடல்களைத்தான் கேட்க முடியும். ஆனால் பள்ளிகள் திறந்தும் படிப்பதற்கு புத்தகமில்லாமல் இருக்கும் பிள்ளைகளிடம் பெற்றோர் இந்த உரையாடல்களை நடத்த இயலாமல் போனது அதிஷ்டவசமானதோ துரதிஷ்டவசமானதோ, தவறாமல் தினச்செய்திகளை படிப்பதும் இன்று ஏதாவது செய்தி கிடைக்குமா என்று பெற்றோருடன் சேர்ந்து கொண்டு பிள்ளைகளும் கண்ணும் கருத்துமாக தொலைக்காட்சி செய்திகளை பார்ப்பதும் கடந்த இருமாத காலமாக வீடு தோறும் நடந்து வந்தது.



அவ்வாறு செய்திகளை கவனித்துக்கொண்டிருந்த பையன் ஒருவன் தான் கண்ட செய்திகளின் அர்த்தம் விளங்காமல் தன் பெற்றோரிடம் இப்படி கேட்டான், எங்களுக்கு புத்தகங்கள் கிடைக்கவில்லை என்பதால் பள்ளிக்கூடங்களில் பாடம் சொல்லி கொடுக்க முடியவில்லை என்பதற்காக கைகளில் பதாதைகளை ஏந்திக்கொண்டு பலர் கோஷமிடுகின்றனர், ஆனால் வங்கிகளில் வேலைபார்ப்பவர்களும், அன்னா ஹசாரே என்பவரும் உண்ணாவிரதம் இருப்பதும் கோஷமிடுவதும் கூட இது போன்ற காரணத்திற்காகத் தானா' என்றான். அவனது பெற்றோர் தங்களுக்கு இயன்ற முறையில் விளக்கமளித்தும் சரியான விடை கிடைக்காமல் தனது பள்ளித்தோழனிடம் இதைப் பற்றி கேட்டான், அவனது பெற்றோர் வங்கியில் பணியாற்றி வந்தனர் என்பதால் தனது பெற்றோரிடம் கேட்டு சரியான பதில் சொல்வதாக சொன்னான்.



அவன் தன் பெற்றோரிடம் சென்று அன்னா ஹசாரேயும் அவரது உடன் கோஷமிடுபவர்களும் வங்கியில் பணி செய்பவர்களைபோல பதாதைகளை ஏந்திகொண்டு கோஷமிடும் காரணம் என்ன என்று கேட்டான். அதற்க்கு அவனது பெற்றோர் அவனிடம் 'எல்லோருமே ஏதாவது கோரிக்கைகளை முன் வைத்துதான் கோஷமிடுகின்றனர்' என்றார்கள். அந்த சிறுவனுக்கு முழுவதுமாக விளங்கவில்லை, ஆனால், தனக்குள் 'ஏதாவது வேண்டும் என்றால் நாமும் உண்ணாவிரதமிருந்து கோஷமிட வேண்டும்' என்ற முடிவிற்கு வந்தான்.



சுதந்திரம் நமக்கு கொடுத்திருக்கும் மாபெரும் வரம் பதாதைகளை ஏந்திக்கொண்டு கோஷமிடுவதும் உண்ணாவிரதமிருப்பதும் என்பது மட்டும் தானோ என்கின்ற கேள்வி எழுகிறது. தங்களது கோரிக்கைகள் நிறைவேற அல்லது தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்த மக்களாட்சியில் மக்களுக்கு கிடைத்திருக்கின்ற இந்த சுதந்திரம் உண்மைதான் என்றாலும் வரம்புகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் நாம் கட்டுப்பட்டவர்கள் என்பதையும் அதே ஜனநாயகம் நமக்கு உணர்த்துவதை மறந்துவிடுவது குற்றமாகும், நான் எனது நாட்டில் சுதந்திரமாக வாழவேண்டும் அதே நேரத்தில் ஜனநாயகத்தில் உள்ள அரசியலமைப்பின் சட்டதிட்டங்களையும் கடை பிடித்தாக வேண்டும் அப்படி கடைபிடிக்கத் தவறும்போது குற்றவாளியாக கருதப்படுவதை சுதந்திரத்தால் தடுக்க இயலாது.



எந்த அளவிற்கு சுதந்திரத்தை கொண்டாடுகிறோமோ அதே அளவிற்கு சட்டங்களையும் கடைபிடிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமையாகிறது. சட்டத்தையும் ஜனநாயக அரசியலமைப்பையும் அவமதிப்பது எவ்வாறு சுதந்திரமாக கருதப்படும்.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

வாழும் வரை போராடு

ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது என்பது பழமொழி, அதுபோன்று ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பின்னர் எழுத்துலகம் என்னை திரும்பவும் தன் பால் இழுத்ததில் எனக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை.



தமிழகத்தின் ஆட்சி மாற்றம் ஆட்சிமாறியவுடன் பல காட்சிகள் அவசரகதியில் மாற்றம் அதனால் ஏற்பட்ட ஏகோபித்த மக்கள் ஓலம், என தமிழகம் சந்தித்து வருகின்ற திடுக்கிடும் சம்பவங்கள் போதாது என்று அடுத்த மாநிலத்தில் எடியூரப்பாவின் ஆட்சிக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் அவற்றை அவர் சமாளித்து வந்த விதம், ஆளுநரும் முதலமைச்சரும் எலியும் பூனையுமாகி 'மிக்கியும் டோனல்டையும்' நினைவுப்படுத்தி ஒருவழியாக ஏதோ ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டிருப்பதும், கேரளாவில் தேர்தலுக்குப் பின்னர் அச்சுதானந்தன் கீழிறக்கப்பட்டு ஒம்மன் சாண்டி பொறுப்பேற்றப் சில மாதங்களிலேயே பத்பநாப கோவிலில் கிடைத்த பொக்கிஷங்களும் அதை தொடர்ந்து அதைப்பற்றிய செய்திகளும், வங்கதேசத்தில் கம்யுனிஸ்டுகளின் இருக்கத்திலிருந்து மீண்ட மாநில ஆட்சியை திரினாமுல் காங்கிரஸ் கைப்பற்றி மம்தா ஆட்சி பொறுப்பை ஏற்றது போன்ற மிகவும் சுவாரஸ்மான பல காட்சிகள் அரங்கேறியிருப்பதுடன் இன்னும் பல சுவாரஸ்ய செய்திகளும் எழுத்துக்கும் கருத்துக்கும் காத்துக் கிடந்தாலும் ஏதோ ஒன்று எனது எழுத்தை சற்றே நிறுத்தியிருந்தது.



சமச்சீர் கல்வி பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விட்டதாக நினைத்து சற்றே பெருமூச்சு விட்டால், இல்லை இன்னும் அந்த பிரச்சினையிலிருந்து முழுவதுமாக விடுபட்டபாடில்லை என தெரிவிக்கும் செய்திகள் தொடர்ந்து கொண்டே இருக்க 'பாவம் இந்த வருடத்து மாணவர்களும் ஆசிரியர்களும், அத்துடன் சேர்த்து அவர்களது பெற்றோர்களும்' என ஆதங்கப்பட வைக்கிறது செய்திகள்.



'ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பது பழமொழி, செய்திகளைத்தேடி அலைய வேண்டிய வேலையே இல்லாமல் செய்திகள் மிகவும் சூடாகவும் மேலும் மேலும் வந்து குவிந்த வண்ணம் உள்ளது செய்திகள் சேகரிப்பவர்களுக்கு சுறுசுறுப்பை ஏற்ப்படுத்தும். அன்னா அசாரே என்பவர் சமூகநலத்திற்காக பாடுபடுபவராக இருப்பதில் யாருக்கும் பிரச்சினைகள் இருக்காது, அவரை யார் கருவியாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் இன்றைய பிரச்சினைகளுக்குள்ளே முடங்கி கிடக்கும் புதிர்.



அன்னா அசாரேயைப்போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினையை கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு உண்ணாவிரதம் மேற்கொண்டால் நாட்டின் நிலை என்னாகும், ஊழலை தடுக்க பாடுபடுகிறோம் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு நாட்டில் உள்ள மக்களுக்குள்ளேயும் கட்சிகளுக்குள்ளேயும் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது என்பது எந்த சமூக ஆர்வலர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை. அன்னா அசாரேயை கருவியாக்கும் சிலரால் நாட்டில் குழப்பங்களும் கலவரங்களும் ஏற்படுமேத் தவிர ஊழலை ஒழித்துவிட முடியாது.



திருவனந்தபுரம் பத்மநாபர் கோவில் மட்டுமில்லை ஒவ்வொரு கோவிலையும் அக்காலத்து மன்னர்களும் குறுநில மன்னர்களும் தங்களது அளவிற்கு மீறிய சொத்துக்களையும் பொக்கிஷங்களையும் பாதுகாக்குமிடமாக பயன்படுத்தி வந்ததுடன் அந்த பொக்கிஷங்களை திருடினால் தெய்வ குற்றம் ஏற்ப்படும் என்று மக்களிடம் இல்லாத வதந்திகளை பொக்கிஷங்களை பாதுகாக்கின்ற தந்திரமாக புரளி ஏற்ப்படுத்தி வந்தனர். அக்காலத்தில் வங்கிகளும் பொக்கிஷங்களை பாதுகாக்கும் லாக்கர்களும் இல்லை என்பதே இதற்க்கு முதன்மையான காரணம்.



அளவிற்கு அதிகமான நிலங்களை கோவிலுக்கு எழுதி வைப்பதும் வாரிசு இல்லாத சொத்துக்களை கோவிலுக்கு எழுதுவதும் அக்கால முறைகள். கடவுளுக்கு நகைகளும் பொக்கிஷங்களும் அவசியமில்லை, கடவுள்தான் அவற்றை மக்களுக்கு வாரி வழங்க வேண்டுமேத் தவிர மக்கள் கடவுளுக்கு வாரி வழங்க வேண்டிய கஷ்டத்தில் கடவுள் எப்படி இருக்க முடியும். பொக்கிஷ அறைகளைத் திறக்க அரச குடும்பத்தினர் கூறும் காரணங்கள் பழங்கால கதைகள் இந்த காலத்தில் அவதியுறும் கோடானு கோடி மக்களின் துயர் துடைக்க அந்த பொக்கிஷங்களை அரசு ஏற்று நல திட்டங்களை உருவாக்கி நேர்மையான முறையில் பயன்படுத்த வேண்டும்.



புட்டபர்த்தி சாய்பாபாவின் சொத்துக்களுக்கும் இதே கதி உருவாகியிருப்பது ஏழை எளியோரை கோடிக்கோடியாக தன்னுள்ளே வைத்திருக்கும் நமது இந்திய நாட்டில் பொக்கிஷங்களும் பணமும் சாமி என்ற பெயரில் சில இடங்களில் குவிக்கபட்டிருப்பது வேதனை தருவதாக உள்ளது.





புதன், 17 நவம்பர், 2010

செய்திகள்

முதன்மை செய்திகளில் சில பரபரப்பான தகவல்கள் கடந்த சில நாட்களாக எல்லோரையும் கவர்ந்திருக்கிறது. பொது மக்கள் எப்போதிலிருந்து ஒற்றுமையாக மாறிப்போனார்கள், நல்ல விஷயம்தான், இதே ஒற்றுமை எல்லாவிதங்களிலும் இருந்து விட்டால் இந்திய தேசம் நிச்சயம் சிறப்பான எதிர்காலத்தை கொண்டுள்ளது என்றே சொல்லலாம். என்ன எடுத்த எடுப்பிலேயே தலையும் வாலும் இல்லாமல் எதையோ குறிப்பிடுகிறேன் என்று முனகுவது புரிகிறது, கோவையில் கடத்தி கொலை செய்யப்பட்ட இரு குழந்தைகளுக்காக மக்கள் கொதித்து எழுந்ததும், காவல்துறையின் அபாரமான என்கவுன்டரும் SIMPLY SUPERB !! அட்ரா சக்கை என்று சொல்ல வைத்தது. போலீஸ் இலாகாவின் மீது மக்களுக்கு நிச்சயம் மதிப்பு கூடும் என்பதில் ஐயமில்லை.

சென்னையில் கடத்தப்பட்ட மாணவனை மீட்டு கடத்திய பொறியாளர் இருவரை கைது செய்ததும் 'இதுதாண்ட போலீஸ்' என்று உவகை கொள்ளச்செய்தது. காவல்துறைக்கு நிறைய புதியவர்களை சேர்ப்பதற்கும் புதிய திறமைகளை வெளிக்கொணரவும் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் வேலைவாய்புகள் பெருகவும் காவல்துறையில் இருக்கும் பற்றாக்குறையை ஓரளவாவது நிவிர்த்தி செய்யவும் தமிழக முதலமைச்சர் அறிவிப்பும் செயல்பாடுகளும் நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்து என் கவனத்தை ஈர்த்த செய்தி ஜெயலலிதா அவர்கள் சோனியா காந்தியுடன் அதாவது காங்கிரசுடன் தங்களது கட்சியை இணைக்க வலிய சென்று கேட்டதாகவும் அதற்க்கு காங்கிரஸ் கட்சி ஒத்துக்கொள்ளவில்லை என்பது. திடீரென ஜெயலலிதா எதற்காக காங்கிரசுடன் கூட்டணி சேர எண்ணினார் என்பதும், அதுவும் மத்தியில் உள்ள காங்கிரசுடன் ஏற்கனவே தி. மு. க. கூட்டணியில் இருப்பதை அறிந்திருந்தும் எதற்காக இந்த திடீர் முடிவு என்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய செய்திகளில் மிகவும் முக்கியமானது.

அடுத்து என் கவனத்தை ஈர்த்த செய்தி மத்திய அமைச்சர் திரு ராசாவின் மீது ஏற்கனவே சொல்லபட்டிருந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பதைப் பற்றியது, இந்த ஊழலை முன் வைத்து தி. மு.காவை காங்ரசுடனிருந்து பிரிக்க ஆலோசனையில் துரிதமாக செயல்பட்டு வருகின்ற எதிர்கட்சிகளின் நடவடிக்கை, நாடாளுமன்ற அவைகளை நடத்த விடாமல் புறக்கணித்த செய்தி. அமைச்சரது ராஜினமாவிற்கு பின்னரும் தொடருகின்ற எதிர்கட்சிகளின் புறக்கணிப்பு என்பது ஊழலற்ற ஒழுக்கம் நாட்டில் நிலவ வேண்டும் என்கின்ற நல்ல எண்ணத்துடன் செயல்படுவதாக மக்கள் நினைக்க வேண்டுமா அல்லது கூட்டணியை சிதைக்க கையில் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் திட்டமா என்பது விளங்கவில்லை.

அடுத்த செய்தி கொஞ்சம் பழைய செய்தியாக இருந்தாலும் என் நினைவில் இன்னும் இருந்து கொண்டு இருக்கின்ற செய்தி, அமெரிக்க அதிபர் ஒபாமாவைப்பற்றியது. ஒபாமாவிற்கும் ஒசாமாவிற்க்கும் என்ன வித்தியாசங்கள் என்று என்னிடம் கேட்டால் ஒசாமா மலை காடு என்று ஒளிந்து கொண்டு தங்கள் மதத்திற்கு ஏதோ பெரிய நல்ல காரியம் செய்வதாக நினைத்துக் கொண்டு தீவிரவாதியாக வாழ்கிறான்(?), ஒசாமா தனது பேச்சின் மூலம் அமெரிக்கர்களை மயக்கிவிட்டு பெருவாரியான ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியை ஏற்று வாழ்கிறார் (இவரது பதவிகாலம் முடிவடைவதற்கு முன்பே அமெரிக்க மக்களின் புத்திசாலித்தனம் ஒபாமாவின் புத்திசாலிதனத்தை என்னவென்பதை அறிந்துகொண்டுவிட்டது), மதவாதியான ஒசாமா தீவிரவாதி என்றால், மத கருத்துக்களின் தீவிரத்தை தன் மனதினுள் மறைத்திருக்கும் ஒசாமா அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி.

ஒசாமா ஆயுதங்களை நம்பி காடு மலைகளில் கஷ்டப்படுபவர், ஒபாமா தனது பேச்சுத் திறமையால் வெள்ளைமாளிகையில் சுகவாசத்தை அனுபவிக்கிறார். இருவரில் யார் புத்திசாலி என்பது நான் சொல்லாமலேயே தெரிந்திருக்கும். ஒபாமா பிழைக்கத்தெரிந்தவர், ஒசாமா மதத்தின் பெயரால் தன்னை கடினமான வாழ்க்கைக்கு புகுத்திக்கொண்டவர். ஒபாமாவிற்கு அமெரிக்கா டாலர்களை சம்பளமாக அள்ளிக் கொடுக்கிறது, ஒசாமாவை பிடிக்கவும் அழிக்கவும் அமெரிக்கா டாலர்களை அள்ளிக்கொடுக்கிறது. ஒசாமாவில் 'சா'வும் ஒபாமாவில் 'பா'வும் ஒளிந்துகொண்டுள்ளது.


அடுத்த செய்தி தமிழகத்தின் பள்ளிக்கூடங்களுக்கு என்னதான் ஏற்பட்டதோ தெரியவில்லை, அடிக்கடி செய்திகளில் பள்ளிகூடங்கள் பலவித செய்திகளை கொடுத்து வருகிறது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியரைப்போல வந்து மாணவிகளின் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற ஆசிரியர் வேடத்தில் திருடன். பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வண்டி கவிழ்ந்து குழந்தைகள் பலி. அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம். கோவிந்தராஜன் கமிட்டியின் தலைவர் மாற்றம், பள்ளி மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது. இன்னும் விதவிதமான செய்திகள் தினம் தொகுப்பில் இடம்பெற தவறுவதில்லை.

இதற்கிடையே நெய்வேலியில் வேலை நிறுத்தம் முதல் நாள் இரண்டாம்நாள் மூன்றாம்நாள் என தொடரும் போராட்டத்தினால் மின்சார உற்பத்தி பாதிப்பு. லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம், லாரி ஓட்டுனர் வேலை நிறுத்தம், இதனால் பல கோடி பெறுமான பொருட்கள் தேக்கம், பல கோடி நஷ்டம். ஜல் புயலினால் தமிழகம் முழுவதும் பலத்தமழை, மழை தொடரும் என வானிலை அறிவிப்பு. சென்னையில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பெரும் பாதிப்பிர்க்குள்ளானது. தென் மாநிலங்களில் பலத்தமழை, பயிர்கள் அழுகும் நிலை, வீடுகளில் மழை நீர் புகுந்தது, சுவர்கள் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி.




@@@@@@@@@