செவ்வாய், 6 ஜூலை, 2010

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

[கற்பனைக் கதை சிரிப்பதற்காக]

நடை பயிற்சி போகச் சொன்னார் மருத்துவர், முடிந்தபோதெல்லாம் நடைப்பயிற்சி சென்று வந்தேன், வீடு திரும்பும் வழியில் தினம்தோறும் தவறாமல் நம் எதிரில் நம்மை தாண்டிக் கொண்டு சிலர் செல்வது வழக்கமாகும், அப்படி ஒருவர் இரண்டு நாளாய் தவறாமல் என் எதிரில் வந்தார், [அவர் சொல்வார் அவர் எதிரில் இரண்டு நாளாய் நான் வந்தேன் என்பார்]. மூன்றாவதுநாள் என்னைப் பார்த்து, அதிக நாட்கள் என்னிடம் பழகியவரைப் போல சிரித்துவைத்தார். எனக்கு அறிமுகமில்லாத நபரை கண்டு சிரிப்பதற்கு சற்று யோசிப்பேன் என்பதால் எனக்கு அவரது செய்கை சங்கடமாகி போனது,

மறுநாள் அவரும் நானும் எதிரெதிரே வந்த போது அவர் நடை லேசாகி என்னெதிரில் நின்றார், நானும் தயங்கியவாறே நின்றேன், என்னிடம் 'உங்கள் அப்பா நெட்டையா ஒல்லியா சிவப்பா இருப்பாரே அவர்தானே' என்றார். நான் இல்லையே என் அப்பா நெட்டையாய் குண்டாக கருப்பாக இருப்பார்' என்றேன். சரி சரி என்று சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

அடுத்தநாள் மீண்டும் என்னை கடந்து போகும் போது தயங்கி நின்றார், 'போஸ்டாபீசில் வேலை பார்க்கிறாரே அவர் தானே உங்கப்பா' என்றார். நானோ இல்லையே அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டாரே' என்றேன். ' சரிசரி' என்று சொல்லிக்கொண்டே கடந்து போனார். இவர் மறுநாள் இப்படி கேட்பதற்கு முன்பே இவருக்கு யாரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை கேட்டு விட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

மீண்டும் அடுத்தநாள் எதிரே என்னை கடந்த அவர் நின்று என்னிடம் கேட்பதற்கு ஆரம்பிக்கும்போதே நான் 'என்னை யாரென்று நினைத்துக் கொண்டோ என்னிடத்தில் விசாரிக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன், அல்லது நான் யாரென்று அறிய வேண்டுமா' என்று கேட்டேன், அதற்க்கு அவர் 'அதைத்தான் கேட்கலாம் என்று நினைத்தேன் நீங்களே கேட்டுட்டீங்க, உங்க பெயர் வசந்தாதானே உங்கம்மா கூட டீச்சரா வேலை பாக்கறாங்க இல்ல' என்றார். [எனக்கு கடுப்பாகிப் போனது வர வர மக்கள் சன் டிவி வர்ற அசத்தப் போவது யாரு, வடிவேலு காமெடியெல்லாம் பார்த்துட்டு லைவ் காமெடி வசனம் பேசறாங்களோன்னு சந்தேகம் வர ஆரம்பிச்சுது].

நீங்க யாரு உங்க அப்பா அம்மா யாரு என்ன பண்றாங்கன்னு நேரடியாக் கேட்டுத் தெரிஞ்சிக்க இப்படியெல்லாம் போட்டு வாங்கறது போலன்னு நான் நெனைச்சிட்டு இருக்கும்போதே அவர் தன் நடையை தெடர்ந்துவிட்டார். பார்ட்டி ரொம்ப கடுப்பாயிருச்சின்னு கண்டுகிட்டார் போல, எஸ்கேப்பு ஆகிட்டாரு. இனிமேல ஒண்ணும் கேட்க்க மாட்டாருன்னு மனசுக்குள்ள சந்தோஷப்பட்டேன்.

ஆனால் அவர் விடவில்லை மீண்டும் அடுத்தநாள் அதே போன்று நேருக்கு நேர் சந்தித்த போது நானே அவர் அருகில் சென்று 'என் பெயர் தேவகி, என் அப்பா பேரு ஆறுமுகம், குண்டா கருப்பா உயரமா இருப்பாரு, அம்மாப் பேரு பார்வதி, வேலைக்கு போகல வீட்டிலத்தான் இருக்காங்க', என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே 'அதெல்லாம் எனக்கு எதுக்கும்மா சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன்' என்றாரே பாருங்க,

இப்படித்தான் மனுஷங்க கிளருவதையும் கிளறி விட்டுட்டு நம்ம பதில் சொல்லப்போனா நம்மையே திருப்புறாங்க. இதுக்கு பேர்தான்
கலிகாலமுன்னு [இல்ல இல்ல 'காலி'காலம்முன்னு] சொல்வாங்க. ஊரு ரொம்ப கெட்டு கிடக்குது யாரு எப்போ நட்டு கழண்ட மாதிரி பேசுவாங்கன்னே சொல்ல முடியல, கடைசில ஏமாந்தா நம்மள நட்டு கழண்டவன்னு சொல்லிட்டு போயிட போறாங்க. வடிவேலு படத்து காமெடி மாதிரி 'என்னை வச்சு காமெடி கீமடி ஒண்ணும் பண்ணலையே',

அதுக்கப்புறம் நான் அவரைப்பார்த்து சிரிக்க ஆரம்பிச்சேன், ஆனா மனுஷன் என்னை கண்டுக்கறதே இல்ல.
'எல்லாரும் ஒரு டைப்பாவே திரியராங்கப்பா'.

இருட்டு

இருட்டறைக்குள் என்ன
இருக்குதென்று தேடித்தான்
கண்டாரே முன்னவர்கள்
பொன்னும் வைரமும்
இன்னும் பல அரிதெல்லாம்
கிடக்குதென்றார்

இருட்டு குகைக்குள்ளே

சென்றமர்ந்து
யுகங்கள் பல
கடந்த பின்னே
ஈசனை யாம்
கண்டேனேன்றார்
வியக்கவைக்கும்
விந்தை பல
கற்று வந்தார்

சமுத்திரத்தின்
அடி இருட்டில்
முத்தைவிட
இன்னும்
பல அதிசயங்கள்
கொட்டிக்கிடக்குதென்றார்

ராக்கெட்டில்
மேல்
பறந்தே
ஒளி வருடம்
பல கடந்து
காணாத அதிசயங்கள்
கோடி கொட்டி
கிடக்குதென்றார்

கருவறையும் பிணவறையும்
மண்டையோடும்
நெஞ்சுக்கூடும்
இன்னும் பல உறுப்புகளும்
இருட்டறைக்குள் இருப்பதனாலேதான்
அவற்றினுள்ளே
ரகசியங்கள்
பல உண்டோ

நிலவறையும் பணவறையும்
மணவறையும்
இருட்டறையாய் இருப்பதற்கும்
ரகசியங்கள் தான் காரணமோ
இருளில் பல ரகசியங்கள்
ஒளிந்துதான் கிடக்கிறதோ

திங்கள், 5 ஜூலை, 2010

எரிக்காதே


மேற் படிப்பு
படிக்க வேண்டும்
பொருள் நிறைய
ஈட்ட வேண்டும்
பார் புகழ
பெருமையெல்லாம்
ஒருசேர பெற
வேண்டும் என
சொன்னான்
என் தம்பி

அவன்
சிந்தை
நானறிந்து
ஆனந்த எல்லை
தொட்டேன்

பகலிரவு கண்விழித்து
படிக்கலானான் அவன்
நினைத்தது போல்
படிப்படியாய் வெற்றிகளை
அடுக்கி வந்தான்

இவன் போல
மகவு வேண்டும்
என்று கூறி
ஊர் புகழ
உயர்ந்து நின்றான்

தற்ச்செயலாய்
அவனறையை கடக்கையிலே
புகை மூட்டம் நிறைந்திருக்க
நான் கண்டேன்
சன்னலதை திறந்து
வைத்தேன்

வெளியேற வழி
அறியாப் புகையெல்லாம்
ஒன்றுகூடி
சன்னல் வழி
வெளியேறி
அறைதனையே
விட்டகன்றதுவே
புகைக்கு ஆசை
சுதந்திரமாய் பறந்து ஓட


நுரையீரலுக்குள்
சென்ற புகை
வெளியேற
வழியறியா
அடைத்து
வைத்து
காப்பாற்ற
நெஞ்சுக் கூடென்ன
புகைப் பெட்டகமா

கைவிரலின்
இடுக்கத்தில்
மீந்திருந்த சிகரெட்
துண்டு ஒன்று அவன்
விரல் பொசுக்க
புகைந்துக்கொண்டே
விரல் நோக்கி
விரைந்தெரிய

இதையறியா என் தம்பி
உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்
பகலெல்லாம்
உழைத்த
சோர்வு அவன்
கண்ணயர காரணமோ
என்றே
நான் நினைத்தபடி
நெருப்புத்துண்டை எடுத்தணைத்து
சன்னல்வழி வீசிவிட்டேன்

சிறிது நேரம்
சென்றவுடன்
சன்னல் வழி
புகை லேசாய்
காற்றுடன் அறைக்குள்ளே
புகுந்து வர
அறை முழுதும்
காகித புகை நாற்றம்

நெருப்பை நான்
அணைத்தபோது
என்
கவனமெல்லாம்
தம்பியையே
நான்
நினைத்து
இருந்ததனால்
நெருப்பை நான்
அணைக்காமல் அரைகுறையாய்
எறிந்ததுதான் காரணமோ

தன்னை அடுத்திருக்கும்
பொருளனைத்தும்
பொசுக்கிவிடும்
நற்பண்போ

நான் காண என் தம்பி
ஒரு நாளும்
புகை
பிடித்ததில்லை
உலை வைக்க
அடுப்படிக்கு
சென்றாலோ
தீ கண்டபோதென்னை

குலை
நடுங்க
வைத்ததுவே

தம்பிக்கு கைச்
சுடகூடாதென
நான் அணைத்த
நெருப்பை அவன்
நெஞ்சு கூடு வேகாமல்
அணைப்பதற்கு
வழியுண்டா
என
எண்ணி
திகைத்திருந்தேன்

புகை பிடித்தல்
பெரியோர் முன்
தவறென்று யார்
சொன்னார்

புகைபிடித்துப்
புண்ணாகும்
உன் நெஞ்சு அதனாலே
வருத்தம் தான்
அடைவாரே பெரியோரும்
காண்கையிலே

மனிதனவன் செத்த பின்னே
உயிர் மூச்சு
நின்ற பின்னே
வெற்றுடலாய் கிடக்கையிலே
புழு பூச்சு
தின்னும்
முன்னே
துர் நாற்றமது
வீசும்முன்னே
உடலுக்கு வைப்பாரே தீ
நீயோ
தன் கையால் தன்னுடலை
எரிப்பதற்கு
எங்கிருந்து கற்றாயோ

இக்கொடுமை பிறர்
கண்டால்
இவன்
எனக்குத்தான்
கொள்ளிவைப்பான்
என்றிருந்தேன்

தனக்குத்
தான்
கொள்ளி வைக்க
யாரிடத்தில் கற்றானோ
என எண்ணி
மாள்வாறே அல்லாமல்
வேறென்ன செய்திடுவார்.

சனி, 3 ஜூலை, 2010

உடலுழைப்பு குறைஞ்சு போச்சு

பகலெல்லாம் அயராமல் உழைத்து உண்டு பசி தீர்த்தால் போதும் உறக்கம் கண்களை தானே இழுத்து சென்றிடும், பொழுதுபோக்கு வேறேதும் இல்லாமல் இப்படி உழைப்பை மட்டும் நம்பி வாழ்த்த மனித இனம் அறிவியலால் வளர்ச்சியடைந்த காலமிது, எதற்க்கெடுத்தாலும் இயந்திரங்கள், மனிதன் செய்த வேலையெல்லாம் இயந்திரங்கள் செய்துவிடும், வயிறு முட்ட உண்ட பின் உறக்கத்தை மறக்கச் செய்யும் எலக்ட்ரானிக் உலகமிது. கல்லூரி படிக்கும் மாணவியர் கண்ணும் காதும் கையும் வாயும் கைப்பேசியின் ஆக்கிரமிப்பு, வீட்டிலிருக்கும் வயோதிகப் பெண்களுக்கோ பெட்டிக்குள்ளே நடமாடும் ஊர்வம்பு, திண்ணை பேச்சு மாறிப் போச்சு, வாய் பேச மறந்து போச்சு.

மாவரைக்க, சட்டினியரைக்க, துணிதுவைக்
இயந்திரங்கள், போதாக்குறைக்கு காசு கொடுத்தால் போதும் இரும்பு பானைக்குள்ளே வீடு வரும் எரிபொருளும், பட்டன் தட்டி விட்டால் போதும் சுழன்றடிக்கும் குளிர்க் காற்று, காலுக்கும் கையுக்கும் உடலுக்கும் உழைப்பு ரொம்ப குறைஞ்சு போச்சு, மிதி வண்டி மாறி இப்போ நாலு சக்கரம் இரண்டு சக்கரம், வானூர்தி, எலிகாப்டர் என்றெல்லாம் இறக்கையின்றி மனிதன் பறக்கின்ற காலமாச்சு, மனித உடலுக்கு வேலை குறைஞ்சு போச்சு மூளைக்கு வேலை அதிகம் ஆகிப் போச்சு. உடலுழைப்பை நம்பிய காலம் போய் இப்போ இயந்திரத்தை நம்பும் காலமாச்சு, மனித மூளையின் வெற்றியெல்லாம் கட்டு கட்டு பண நோட்டாக மாறிப் போச்சு, அதனால் உழைப்பிற்கு கூலி சிருத்துப் போச்சு. இனி மனிதப் பேச்சு கேட்க ஆளில்லை ரோபோ மனிதன் தான் கதி என்று மாறிப்போனாலும் அசந்து போக அவசியமில்லை.

அதனால் தூக்கம் ரொம்ப குறைஞ்சு போச்சு, உணவு முறை கெட்டுப் போச்சு, மனிதர்க்கிங்கே மதிப்பும் போச்சு, மனிதரெல்லாம் இயந்திரமாய் மாறித்தான் போனாரே, பணமீட்டும் இயந்திரமாய் மாறித்தான் போனாரோ. மரம் எதற்கு செடி எதற்கு விலங்கெதற்க்கு என்றெண்ணி அவை கொன்று பணமாய் மாற்றத் துணிந்துத் தான் அழித்தாரே. பணம் படைத்த மனிதரையும்
விட்டு ஒன்றும் வைக்கவில்லை, மனிதனுயிர் கொன்று அவர் உடமைதனை பறித்துத்தான் சென்றாரே. இது கொடுமை என்றவரை சும்மா அவர் விடவில்லை கொன்றேதான் குவித்தாரே. அவர் குழுவிற்கும் புகழுண்டாம், அவர் பின்னே பலருண்டாம், மனிதஉயிரழிக்கும் குழுவிற்கும் பெரிய பெயரிட்டு இறுமாப்பு அடைந்தாரே.


வெள்ளி, 2 ஜூலை, 2010

நானும் ஒரு பூச்சாண்டி

பத்து மாதச் சிறை வாழ்க்கை
பழகியதால் சிறு குழந்தை
ஓயாமல் அழுகிறதோ
வெளிச்சம் காண

சிறையிருப்பின் சுகம் கண்ட
சிசுவைப்போல வேறெதுவு
ம்
அழுவதில்லை பிறக்கும் போது

பிறேப்பென்ற வேலை
இப்போ முடிந்து போச்சே
அடுத்து என்ன

நடக்க போகுதென்று
பயம்தானோ
சிசுவிற்கு
கண்ணீரில்லா அழுகை

பிறந்தவுடன்
அழுதால்
குழந்தைக்கு நலமென்று
சிலர் சொன்னார்
அழாதக் குழந்தைக்கு
ஊசிப்போல் சுரீரென்று
கிள்ளும் தந்தார்

சிசுவிற்க்கோ

மாறாக்கோபம்
கிள்ளிவிட்டு
அழவைத்து
எல்லோரும் இனிப்புத்தின்று
சிரித்து வைத்தார்

பகலெலாம் கண்ணை
கூசுகின்ற சூரியனும்
இரவினிலே மின்சாரச்
சூரியனும்
தெருவெல்லாம் கைத்தடியின்
மேல் சூரியனை நட்டு வைத்து

கண்மூடித் தூங்கச் செல்லும்
அறை தோறும்
பல்வேறு
நிறங்களிலே மின்சார கைவிளக்கு
போதுமிந்த
ஒளிவிளக்கு
வெறுத்துப் போச்சு

பகலெல்லாம் சூரியனின்
அட்டகாசம் இரவினிலோ
மின்சார பரிகாசம்
போதுமிந்த ஒளிவிளக்கு
வெறுத்துப்போனான்
கைப்பிள்ளை

தாய் தந்த பால்சோறும்
பருப்புணவும் உண்ண
மறுத்தான் கைப்பிள்ளை
கருவறையில் கண்ட சுகம்
மறவாப் பிள்ளையவன்
பிடிவாதம் தொடர்ந்திட்டான்

ஒருகையில் கிண்ணச்சோறும்
மறுகை
அவனை
இடுப்பில் தாங்கிச்
சோறூட்ட
சுமந்தே
திரிந்தாள் பெற்ற அன்னை

இருட்டைக்காட்டி
பூச்சாண்டி பாரு அங்கே
என்று சொல்லி சோற்றுக்
கவளம் வாயுள் திணித்தாள்

கைபிள்ளை நடக்கலானான்
சோறுண்ண மறுத்த அவனை
பூச்சாண்டிக் கதைகள் சொல்லி
கவளச் சோற்றை
வாயுள் அடைப்பாள்

அடம் பிடிக்கும் சிறுவனுக்கு
பூச்சாண்டிக் கதை சொன்னால்
மெய் மறந்து அவன் உண்டான்
கிண்ணச் சோற்றை
அதையறிந்த அவன் தாய்
நாள்தோறும் தொடரலானாள்
பூச்சாண்டிக்கதையதனை

சிறுவனவன் பூச்சாண்டி
யார் என்றான்
இருட்டைக் காட்டி
பூச்சாண்டி திருடனவன்
இருட்டில்தான் இருப்பானென்றா
ள்

இருட்டை கண்ட சிறுவன்
சொன்னான் நானும்
ஓரு பூச்சாண்டி.











வியாழன், 1 ஜூலை, 2010

மனித உடல்


பொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரும் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சிலருக்கு ஜுரம் கூட வந்துவிடும், இது ஏன் என்றால், வெயல் காலத்தில் நம் உடலில் இருக்கும் தோலின் மீது காணப்படும் கண்ணுக்குத் தெரியாத சிறிய ரோமங்களுடன் காணப்படும் துவாரங்களின் கீழே சிறிய கொழுப்புத் திவலைகள் உண்டு இவை கடும் வெயல் மற்றும் குளிர் மழை போன்ற சீதோஷ்ண மாற்றங்களிலிருந்து நமது உடலின் வெப்பத்தை சீராகுவதற்க்கும் வியர்வையை வெளியேற்றவும் பயன்படுகின்றது, வெயலின் சூட்டில் அந்த கொழுப்புத் திவலைகள் உருகுவதால் சிறிய துவாரங்கள் முழுவதுமாக திறந்து கொண்டு வியர்வை தூசு போன்றவை அதன் வழியே உடலின் உள்ளே சென்று விடுகின்றது, திலிருக்கும் கிருமிகள் வியர்வையுடன் சேர்ந்து அரிப்பை உண்டாக்குவதுடன் ஜுரம் ஜலதோஷம் போன்ற உடற் உபாதைகளையும் ஏற்ப்படுத்துகின்றது.

சிலர் வெயலின் சூட்டிலிருந்து உடல் குளிர்ச்சியடைவதற்க்காக சுத்திகரிக்கப்படாத ஐஸ் தண்ணீர் ஐஸ் மோர், மற்றும் குளிர் பானங்களை கடைகளிலிருந்தும் ரேப்பிட்ஜி
ரேடோரிலிருந்தும் எடுத்து அடிக்கடி குடிப்பார்கள் அப்படி செய்வதால் அந்த பானங்களில் காணப்படும் வைரஸ் மற்றும் அமீபியாக் கிருமிகள் உடலினுள் சென்று வயிற்றுவலி, ஜுரம் போன்ற உடற் பாதிப்புகளை ஏற்ப்படுத்தும்.

கடும் மழையில் நனைவதாலோ கடும் குளிரில் நடப்பதாலோ பொதுவாக பலருக்கும் ஜுரம் மற்றும் ஜலதோஷம் போன்ற உடற்உபாதைகள் ஏற்ப்படுவது கிடையாது, இதற்க்குக் காரணம் உடலின் தோல்பாகத்தில் காணப்படும் சிறிய ரோமத் துவாரங்களின் அடிப்புறத்தில் காணப்படும் கொழுப்புத் திவலைகள் இறுகி துவாரங்களை அடைத்துக் கொண்டிருப்பதனால் அதன் வழியே குளிர்ச்சியோ மழை நீரோ உட்புகுந்து உடலில் எந்தவித பாதிப்பையும் ஏற்ப்படுத்தாமல் தவிர்க்கின்றது. இதனால் அதிக மழையில் நனைந்தாலும் கூட மழைக் காலங்களில் பலருக்கு ஜுரமோ ஜலதோஷமோ பிடிப்பதில்லை.

குளிர் பிரதேசங்களில் ஜாகிங் செய்வதனால் உடலிலிருந்து வெளியேற்றப்படும் உஷ்ணம் மற்றும் கழிவுகள் வியர்வையின் மூலம் ரோமத்துவாரங்களின் வழியே வெளியேற வழியில்லாமல் தடைப்படுவதாலும் ரத்த அழுத்தம் அதிகரித்து இருதயத்தின் செயல்பாடு
பாதிப்படைந்து மரணம் நேருவதையும் நாம் கேள்விபட்டிருப்போம், இதற்கும் இந்த ரோமத் துவாரங்களும் காரணம். ரோமத்துவாரங்களின் வழியே வெளியேறும் வியர்வை போன்றே ரத்தத்திலுள்ள கழிவுகளை சிறுநீரகம் சிறுநீராக ரத்தத்திலிருந்து பிரித்தெடுத்து தோலின் அடிப்புறத்திலிருக்கும் சிறிய துவாரங்களின் வழியே வெளியேற்றுகிறது, உடலின் மிகப்பெரிய உறுப்பாக தோல் நம்முடலில் இருப்பதால் அதன் உபயோகமும் அதிகம். கோடைக்காலத்தில் சிறுநீரகத்தின் வேலைக் குறைந்து அதே பணியை தோல் செய்ய ஆரம்பிக்கிறது, இதனால் கோடையில் சிறுநீர் வெளியேற்றம் குறைவாகக் காணப்படுகிறது. தோலைப் மற்ற உடலுறுப்புகளைப் போல மிகவும் கவனத்துடன் பராமரித்தால் உடலில் பல சுகவீனங்கள் வருவதை தவிர்க்கமுடியும்.
நிறைய நீர் பருகுவதால் ரத்தம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தோலும் சிறுநீர் உறுப்புகளும் சுத்திகரிக்கப்படுவதுடன் சரிவர இயங்க முடியும் பலவித உடல் உபாதைகள் வருவதை தவிர்க்க முடியும். அதிக குடிநீர் பருகியும் வியர்வையும் வராமல் சிறுநீரும் குறிப்பிடும்படியாக மிகக் குறைவாக வெளியேறும் போது மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது. அதிகமாக காப்பி குடிப்பதனால் காப்பியில் உள்ள கபைன் சிறுநீரகத்தை சீரழியச் செய்யும் சக்த்தியுடையது என்று ஆய்வுகள் தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாக்குமூலங்களையும் நாம் காணலாம், இந்த மூன்று உடலுறுப்புகளும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்பு உடையதாக இருப்பதால் உடல் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறது. சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகி பாதி கட்டத்திலோ கடைசி கட்டத்திலோ இருக்குவரையில் பலருக்கு அதற்கான மாற்றங்களை உடல் வெளிப்படுத்தாமல் இருந்துவிடும் மருத்துவ வரலாறுகளும் உண்டென்கிறது மருத்துவம். காப்பி குடித்தாலே இந்த நிலையென்றால் மது வகைகளும் லாகிரி வஸ்த்துக்களும் உடலை எந்த அளவிற்கு நாசமாக்கும் என்பதை சொல்லவே வேண்டாம்.

மரணம் என்பது யாருக்கு எப்படி எந்த வகையில் வரும் என்பதை யாரும் முன்பே அறிய முடியாது என்றாலும் அறிந்தே உடலை பாதிப்பிற்க்குள்ளாக்குவதை
தவிர்க்கலாமே இதனால் நாமும் நம்மை சுற்றி இருக்கும் நமது குடும்பத்தாரும் அல்லலுற வேண்டாமே.





மாவோயிஸ்டுகளும் நக்சல்களும் எலும்புருக்கிகள்

பொது மக்களுக்கு நன்மை செய்கிறோம் என்று கூறிக்கொண்டு மாவோயிஸ்ச்ட்டுகள் நடத்தும் தாக்குதல்களுக்கு பலியாகும் மக்கள் உயிர் ஒவ்வொரு மனிதனையும் இழக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடுகள் கொடுத்தாலும் போன உயிர்கள் திரும்ப கிடைக்குமா, ஐந்து மாநிலங்களில் முழு அடைப்பு நடத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர் குலைக்கும் (நக்சல்களும்) மாவோக்கள் நல்லது செய்வது யாருக்கு என்பதை பொது மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர், போராட்டங்கள் மக்களின் நலனுக்கு என்று கூறிக்கொண்டு நாட்டையும் மக்களையும் சேதப்படுத்திவரும் நய வஞ்சகக் கூட்டம் அடியோடு அழிக்கப்படவும் ஒழிக்கப்படவும் வேண்டும்.

இத்தகைய செயல்களுக்கு மத்திய மாநில அரசுகள் தகுந்த பதிலடி கொடுத்து ஒடுக்கினால் ஒழிய இவர்களின் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளுக்கு முடிவு ஏற்ப்பட வாய்ப்பில்லை. ஊரெங்கும் கொலைக் கொள்ளையில் ஈடுபடுவதும் இது போன்ற நாச கும்பல்களின் ஒரு பிரிவினராக இருக்க கூடும், வேறு பணிகளுக்கு போகாமல் கொலை கொள்ளைகளின் மூலம் வருமானம் ஈட்டி தங்களுக்கும் தங்களை வளர்க்கும் போராட்டக் குழுக்களுக்கும் தீனி போடத்தான் கொலைக் கொள்ளை திருடு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும் காரணமாக இருக்கக் கூடும்.

திருடிய கொள்ளையடிக்கப்பட்ட பணம் எதுவரையில் போதுமானதாக இருந்துவிடப் போகிறது, வேறு வழிகளிலும் இவர்களுக்கு பண உதவி கிடைத்துக் கொண்டிருக்கும், அப்படி இவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு இந்திய நாட்டை ஆளும் அரசின் மீதும் பொது மக்களின் மீதும் தீராப் பகைமை இருக்கவேண்டும் அல்லாமல் யார் இவர்களை ஆதரிக்கக் கூடும். எந்த வகையிலும் நாட்டையும் மக்களையும் அழிக்கும் சக்திகளை ஒருபோதும் வளரவிடவோ படர விடவோ கூடாது. இவர்கள் நாட்டை பிடித்திருக்கும் எலும்புருக்கி வியாதி. விரைவில் ஒழிக்கவில்லைஎன்றால் புற்றுநோயாக மாறிவிடக் கூடும்.