கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 ஜனவரி, 2012

ஒருவழிப்பாதை

அழுத்தம் வேண்டாமென
அறைக்கதவை
திறந்து வைத்தேன்
இருட்டு வேண்டாம்
என்று
தீபமொன்றை
ஏற்றி வைத்தேன்

உள்ளே நீ
வருவாய் என்று
நிச்சயமாய்
நான் அறியேன்
கனம் எனக்கு
தாங்காது
உத்தமம் நீ
வெளியேறு

அடுத்தவரின் அறைக்குள்ளே
அனுமதியின்றி
நுழைவதெல்லாம்
மதி கெட்ட
வேலையென்று
சொல்லாமல்
அறியாயோ

வெளியேறும் வழி
அறியேன்
என்று சொல்லி
என்னுள் நீ
காலமெல்லாம்
கனக்கின்றாய்




செவ்வாய், 22 நவம்பர், 2011

அவள் எங்கே போவாள்

இறுதிப்பயண
கூட்டமெல்லாம்
கலைந்து சென்றது
பல தினமாய்
அழு(த்)ததாலே
கண்கள் அயர்ந்து
உறக்கம் கொண்டேன்

அதிகாலை
அடுப்பாங்கரையில்
பாத்திர ஓசையில்லை
இரவு விளக்கு
பொழுது விடிந்தும்
அணைக்கவில்லை
அடிவயிற்றிலிருந்து
எழுந்தவொன்று
தொண்டையடைக்க
கண்களில் நீர்
அருவியானது

பெற்றவள் மீண்டும்
வருவாளா
அவள்மடி உறங்க
தருவாளா
குடிசையில் கூட
ராணி போல
என்னை பேணி
வளர்த்தவள்
இனி வருவாளா

உழைத்து
ஓடாய்போன
அவள் தேகம்
வறுமை தின்ற
அவள் அழகு
இனி நான்
காணமாட்டேனா

வேலைக்காரி
போல் எனக்கு
பணி செய்வாள்
நான்
புடவை அணிய
அவள் கண்களில்
நீர் மல்கும்
என் ரசிகையவள்
நான் பட்டம்
பெற்றேன்
அவள் பூரிப்பிற்கு
எல்லை இல்லை
கற்பனையில்
அவள் பறந்தாள்

பணிக்கு சென்றேன்
பெருமை கொண்டாள்
மாலை நான்
வீடு வர
காத்து
பதைத்திருப்பாள்

பொறுமையின்
சிகரமவள்
அன்பின் பல்
கழகமவள்
அழகில் அவள்
தேவதை

பிரிவொன்று
வருமென்று
மறந்திருந்தோம்
சீமைக்கு செல்வதற்கு
சீக்கிரமாய்
புறப்பட்டேன்
புது பயணம்
புது நாடு
யோசனையில்
என் தாயவள்
மனநிலையை
முழுவதும்
மறந்தே போனேன்

என்னை பிரிந்த
முதல் சமயம்

அவள்

ஆடிப் போனாள்
என்று
பிறகரிந்தேன்
பல மாதம்
கழித்து நான்
திரும்பி வந்தேன்
அப்போதும்
அவள்
நிலை
நான்
அறிந்தேன் இல்லை

இப்பிரிவெல்லாம் பிரிவல்ல
என்றுணர்த்த
தீரா வியாதியொன்று
படுக்கையிலே
ஒரு மாதம்
அவளை
கிடத்திவிட
மருத்துவரும்
கெடு கொடுத்தார்
அவள் உயிர்
பிரிவதற்கு

அவர் கூற்று
நடந்துவிட
என்னை விட்டு
அவள்
நிரந்தரமாய்
பிரிந்தே போனாள்
ஆரா துயர் என்னை
ஆட்கொள்ள
நிரந்தரமாய் அவள்
பிரிவை ஏற்றுக்கொள்ள
இயலாமல் நான்
தவித்தேன்

கனவெல்லாம் அவள்
நிறைந்தாள் என்
நினைவெல்லாம் அவள்
நின்றாள்
அவள் எங்கே
என்னை பிரிந்தாள்
என் உதிரத்தில்
அவள் இருந்தாள்
அவள் சாயல்
எனக்களித்தாள்
அவள் பிரியம்
என்னுள் வைத்தாள்
அவள் மூச்சு
எனக்களித்தாள்
அவள் வேறு
நான் வேறாய்
பிரிந்திருத்தல்
போதுமென்று
எனக்குள்ளே
ஒன்றாகி
கலந்து விட்டாள்.



திங்கள், 21 நவம்பர், 2011

பூஜியத்தினுள்ளே......

ஒன்றில் கண்டேன்
சுகம்
இரண்டில் பசி
மூன்றில் பாசம்
நான்கில் பேச்சு
ஐந்தில் அறிவு

ஆறில் நட்பு
ஏழில் அன்பு [இறைவன்]
எட்டில் வறுமை
ஒன்பதில் முயற்சி
பத்தில் கண்டேன்
உறவுகளை
பதினொன்றில் கண்டேன்
விரோதிகளை
பனிரெண்டில் கண்டேன்
சோகங்களை
பதிமூன்றில் கண்டேன்
உழைப்பை
பதினான்கில் கண்டேன்
உணர்வுகளை
பதினைந்தில் கண்டேன்
கன்று காதலை
பதினாறில் கண்டேன்
படிப்பின் மேன்மையை

வறுமையும் படிப்பும்
இரு கரம் நீட்ட
இளமையில்
காதல் மறந்தே
போனது
காலம் கடந்த
பின்னே
தொடர்ந்த காதல்
இருட்டில் தொலைத்த
பணம்போல
காணாமல் போனது

திருமண தொடர்கதைக்கு
நாயகியாய்
புதிய உறவுகளின்
உரசல்கள் இடையே
நுழைந்த
புது முககுழந்தைகள்
வாழ்க்கை வண்டி
நான்கு சக்கரமாய்
பயணம் தொடர.......


திரும்பி பார்க்கிறேன்
பூஜியத்தினுள்ளே.....
வெறுமையாய்.......
'நான்' என்றோ
தொலைந்துப்போனேன் .....


.............oooOooo................

ஞாயிறு, 20 நவம்பர், 2011

கவிஞர் திரு வைரமுத்து


உள்ளமும் அறிவும்
வெண்மை நிறமென
உணர்த்திய
பட்டை தீட்டாத
'வைர' நிறமொத்த
புதுமை கரு'முத்தே'

மாதும் மதுவும்
இல்லா
புதுமை கவிஞன் நீ
வரவில் செலவை
சரியாய் செய்ய
தான தருமம் என
திட்ட வாழ்வை
கையாளும் மகா
புரட்சிக் கவிஞன் நீ

என்றும் வாடா
கவி மலரால் நீ
தொடுத்த தமிழ் மாலை
ஓயாத நறுமணம்
வீசி
இன்பக் கிளர்ச்சியினை
தெவிட்டாது அளித்திடுதே
அப் பூக்களெல்லாம்
விற்ப்பனைக்கு
விற்றாலும் தவறில்லை

அவற்றை

விற்கும் விலையெல்லாம்
அநியாய விலையல்ல
வாங்கும் விலையெல்லாம்
அநியாய விலைதான்
விலை பேச
இயலாத வகையில்
அற்புதமாய்
தொடுத்த பிரம்மாவும்
நீயன்றோ

தமிழ் இலக்கணமும்
இலக்கியமும்
உன் காதல் என்றால்
அறிவியலின் மீதுனக்கு
மோகம் அதிகமாமே

எத்தனையோ கற்றுணர்ந்து
முத்தமிழ் கவி படைத்தாய்
ஆனால்
மனிதர்களின் திருக்கு
எண்ணம் தனை
படித்தறியா பேதையானாய்

அறிவியலின் அதிசயங்கள்
இயற்கையின் அதிசயங்கள்
இலக்கணத்தின் வரம்புகள்
இலக்கியத்தின் உச்சங்கள்
இவையனைத்துமே
உனக்கு அத்துப்படி

சீற்றம் மிக்க
கடலலையைக்கூட
பதவிசாய் பாங்காய் கூற
ஆற்றல் உமக்கு
அதிகமுண்டு

வில்லங்க மனிதர்களின்
விவேகமற்ற செயல்கள்
மட்டும் என்றும்
உன் கருத்துக்குள்
நுழைந்ததில்லை


உம் புலமை
கண்டு
பொறாமை கொண்ட
தீயர
வர்
பித்தளை கணையாழி
பரிசளித்து
அவர் தரத்தை
காண்பித்தார்

உமக்கு

தமிழ் கொடுத்த
பரிசு போதும் - கவிதை
தமிழ் புலமை கொடுத்த
புதையல் போதும்-ரசிகன்

நான் பிறந்த
நூற்றாண்டின்
என்னுடன்
பிறந்த
அற்புத
கவிஞன் நீ
என்றுணரும்போதெல்லாம்
சொல்லொண்ணா
இன்பமொன்று
வருகுதுவே

சாகா வரம்
பெற்ற உம் கவித்துவம்
என்றும் வாழ்க !!






வெள்ளி, 29 அக்டோபர், 2010

சொல்

சூளையில் சுட்ட மண்
செங்கலானது
புகை நெருப்பில்
வெந்த நெல்
உணவானது

நாவினால் சுட்ட
புண் நெஞ்சில்
ரணமானது
வெஞ்சினமானது
மீளாத் துயரானது

நெடு நாள் ரணமான
சுடு சொற்கள் பின்
மறையா வடுவானது
மாறா நினைவானது

கடற் கரை
ஈரம் காய
அலையனுப்பும்
உப்பு நீருண்டு
மண் உலராமல்
காக்க தவறாத
வான் மழையுண்டு

நெஞ்சுலரா உன்
சொற்கள் மட்டும்
செவி வழியே
உட்சென்று
சுடு சொல்லாய்
கடும் சொல்லாய்
ஈர நெஞ்சை
உலர்த்திவிடும்
கொடுமைதான் ஏன் மனிதா

##########

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

மீண்டும் பிறவா வரம்

முகம் காட்டும்
கண்ணாடி
முன்
முதன் முதலாக
என் முகத்தை
நான் கண்ட போது
எனக்கு சரியாக
வயது பதினெட்டு

அடுத்த வீட்டுப்
சிறுமி
'அழகு' என்று
சொன்னதும் வீதியில்
நடந்த போது
காண்பவரெல்லாம்
வைத்தக்
கண் வாங்காமல்
பார்த்துச் செல்வதும்
இதற்குத்
தானா என்று
அன்றுதான்
அறிந்தேன்

மீண்டும் காலம்
மிக வேகமாய்
ஓடியது
தற்செயலாய்
ஓர் நாள் அவசரமாய்
வெளியே செல்ல
அனைவரும்
விரைவாக கிளம்பினோம்

குறிப்பிட்ட சமயத்தில்
போய்ச் சேருமிடம்
தாமதமாகாமல்
விரைவாக புறப்பட
என்னைத் தவிர
மற்ற யாரும்
தயாரில்லை

என் வீட்டு பிள்ளைகள்
என்னிடம்
சீக்கிரமாய் கிளம்பு
என்றார்,
எப்போதோ
நான்
தயாராகி விட்டேன்
என்றேன்

எல்லோரும் ஏகமாய்
சிரித்து வைத்து
முகம் பார்க்கும் கண்ணாடி
முன் போய்தான் பாரேன்
என்றார், என் முகம் பார்த்து
ஆண்டு பல கடந்ததென்றேன்

எங்களுக்காய் ஒருமுறை
முகம் பார்க்கும் கண்ணாடி
முன்னாடி வாயேன்
என்று என் கையிரண்டை
பிடித்து இழுத்துச் சென்றார்

காதோரத்து நரைமுடிகள்
காட்டியது காலத்தை
பதினெட்டு வயதில்
கண்ட
என் முகத்தை
புதிய நரைமுடியின்
வரவோடு
மீண்டும்
கண்டேன்,
ஒதுக்கி
சீவி
இறுகக்கட்டிய
தலைமுடியும்
சிறிதே அவசரத்தில் கட்டிய
சேலைக் கொசுவம்

ஏற இறங்க தொங்கிய
முந்தானையுமாய்
என் வயதிற்க் கொத்த
அலங்காரம் அதுவே
என்று என்னுள் நான்
திருப்தி கொண்டேன்

பிள்ளைகளுக்கு தன்
அம்மா எப்போதும்
கலியுக யுவதிப் போல
ஒப்பனைகள் செய்யவேண்டும்
என்று ஆசை,
யுவதிப் போல
உடையணிந்த
கிழவிகளை
காணும்போது
அவரை
குறை சொல்லி
புறம் கூறுவது தவறுதான்

அவரவர் விருப்பம்,
மன நிறைவு,
பழக்க வழக்கம் என்று
காரணங்கள் நிறைய
உண்டு
நடையுடை பாவனை
என்பது ஒரு மனிதனை
இன்னொரு மனிதன்
இனம் கண்டு கொள்வதற்கு
மிகப் பெரிய அடையாளம்

நடையுடை பாவனையிலிருந்து
அவர் இன்னார் என்பது
அடுத்தவருக்குத் எளிதில்
புரிந்து கொள்ள இயலும்
தற்காலத்தில் இவை
எல்லாம் இருந்த இடம்
சுவடு இல்லாமல்
பழையன கழிதலும்
புதியனபுகுதலும்
என்று

நடையுடை பாவனை
எதிலும் பொய்மை
நிறைந்து
உபாத்தியார்
வேடத்திலும் கொள்ளை
பாதிரியார் வேடத்திலும்
திருடர்கள் என்று
நடையுடை பாவனையைக்
விட்டு வைக்காமல்
பல வேடங்களில்
திருட்டு கொள்ளை கொலை
என்று மோசம் போக்கும்
மனிதர்களின் மாசுநிறைந்த
வாழ்க்கை எனக்கு துளியேனும்
விருப்பமில்லை
மனிதர்களை எனக்கு
துளியேனும் பிடிக்கவில்லை
அதனால்

மறு பிறப்பில்
நம்பிக்கை எனக்கில்லை
அப்படியொன்று எனக்கிருந்தால்
பசுமை மாறாகக் காடுகளில்
கொஞ்சி பேசும்

வண்ணக் குருவிகளாய்
நான் பிறப்பேன்
எஞ்சியோரின் தாகம்
தீர்க்கும் அருவிகளாய்
நான் பிறப்பேன்

தான் பிறந்த
பயனை
தன் மரணத்திலும்
பிறர்க்கென ஈந்திடும்
ஈகைக்கொண்ட
பச்சை பசேல்
மரமாவேன்

பனித்துளியின்
உறவாவேன்
பசும் புல்லாவேன்
புல்லின் மீதுறங்கும்
மழைத் துளியாவேன்
இயற்கையன்னை
மடியினில்
பூத்துக்
குலுங்கும் பூவாவேன்

கருங்குயிலின் இசையாவேன்
துள்ளித்திரியும் மானாவேன்
தோகை விரிக்கும் மயிலாவேன்
மழைதரும் கார் முகிலாவேன்
சித்தம் தெளியும்
பச்சையிலை மருந்தாவேன்
இனியொரு முறை
மனிதகுலத்தில் மட்டும்
மானுடமாய் பிறக்கமாட்டேன்





திங்கள், 12 ஜூலை, 2010

காகிதமும் புத்தகமும்

புத்தகமாய்
தனிமைக்கு துணை
நெஞ்சத் தவிப்பிற்கு
துணை
அறிவுப்பசிக்குத் தீனி
படிப்போர்க்கு பெருமை

எழுதுகோலுக்கு காதலி
கதைபுத்தகம்
கவிஞர்களின் கனவுக்கன்னி
கவிதை
அறிவியல் மேதைக்கு
களஞ்சியம் புத்தகங்கள்

காதலியின் ஆறுதல்
கடிதம்
பொருளாதாரத்தை
தாங்கி பிடிக்கும்
தர்மச்சக்கரம்
பணம்

வக்கீலின் வாதத்தின்
முதுகெலும்பு சட்டப்புத்தகம்
அறியாமை இருட்டகற்றும்
சூரியன் கல்வி புத்தகம்

ரகசியத்தின் பாதுகாவலன்
கோப்புகளாய்
மரணத்தருவாயில் வலியோர்க்கு
சுமைதாங்கியாம் உயில்

பணகட்டாய் இருட்டினுள்ளே
பாதுகாப்பாய்
கண்ணாடி மூடிக்குப்
பின் அடுக்கடுக்காய்

மெத்தப் பயின்ற
கல்வியினை
ஒற்றைக்காகிதம்
சிலவரிகளேந்தி
சான்றிதழாம்








செவ்வாய், 6 ஜூலை, 2010

இருட்டு

இருட்டறைக்குள் என்ன
இருக்குதென்று தேடித்தான்
கண்டாரே முன்னவர்கள்
பொன்னும் வைரமும்
இன்னும் பல அரிதெல்லாம்
கிடக்குதென்றார்

இருட்டு குகைக்குள்ளே

சென்றமர்ந்து
யுகங்கள் பல
கடந்த பின்னே
ஈசனை யாம்
கண்டேனேன்றார்
வியக்கவைக்கும்
விந்தை பல
கற்று வந்தார்

சமுத்திரத்தின்
அடி இருட்டில்
முத்தைவிட
இன்னும்
பல அதிசயங்கள்
கொட்டிக்கிடக்குதென்றார்

ராக்கெட்டில்
மேல்
பறந்தே
ஒளி வருடம்
பல கடந்து
காணாத அதிசயங்கள்
கோடி கொட்டி
கிடக்குதென்றார்

கருவறையும் பிணவறையும்
மண்டையோடும்
நெஞ்சுக்கூடும்
இன்னும் பல உறுப்புகளும்
இருட்டறைக்குள் இருப்பதனாலேதான்
அவற்றினுள்ளே
ரகசியங்கள்
பல உண்டோ

நிலவறையும் பணவறையும்
மணவறையும்
இருட்டறையாய் இருப்பதற்கும்
ரகசியங்கள் தான் காரணமோ
இருளில் பல ரகசியங்கள்
ஒளிந்துதான் கிடக்கிறதோ

வெள்ளி, 2 ஜூலை, 2010

நானும் ஒரு பூச்சாண்டி

பத்து மாதச் சிறை வாழ்க்கை
பழகியதால் சிறு குழந்தை
ஓயாமல் அழுகிறதோ
வெளிச்சம் காண

சிறையிருப்பின் சுகம் கண்ட
சிசுவைப்போல வேறெதுவு
ம்
அழுவதில்லை பிறக்கும் போது

பிறேப்பென்ற வேலை
இப்போ முடிந்து போச்சே
அடுத்து என்ன

நடக்க போகுதென்று
பயம்தானோ
சிசுவிற்கு
கண்ணீரில்லா அழுகை

பிறந்தவுடன்
அழுதால்
குழந்தைக்கு நலமென்று
சிலர் சொன்னார்
அழாதக் குழந்தைக்கு
ஊசிப்போல் சுரீரென்று
கிள்ளும் தந்தார்

சிசுவிற்க்கோ

மாறாக்கோபம்
கிள்ளிவிட்டு
அழவைத்து
எல்லோரும் இனிப்புத்தின்று
சிரித்து வைத்தார்

பகலெலாம் கண்ணை
கூசுகின்ற சூரியனும்
இரவினிலே மின்சாரச்
சூரியனும்
தெருவெல்லாம் கைத்தடியின்
மேல் சூரியனை நட்டு வைத்து

கண்மூடித் தூங்கச் செல்லும்
அறை தோறும்
பல்வேறு
நிறங்களிலே மின்சார கைவிளக்கு
போதுமிந்த
ஒளிவிளக்கு
வெறுத்துப் போச்சு

பகலெல்லாம் சூரியனின்
அட்டகாசம் இரவினிலோ
மின்சார பரிகாசம்
போதுமிந்த ஒளிவிளக்கு
வெறுத்துப்போனான்
கைப்பிள்ளை

தாய் தந்த பால்சோறும்
பருப்புணவும் உண்ண
மறுத்தான் கைப்பிள்ளை
கருவறையில் கண்ட சுகம்
மறவாப் பிள்ளையவன்
பிடிவாதம் தொடர்ந்திட்டான்

ஒருகையில் கிண்ணச்சோறும்
மறுகை
அவனை
இடுப்பில் தாங்கிச்
சோறூட்ட
சுமந்தே
திரிந்தாள் பெற்ற அன்னை

இருட்டைக்காட்டி
பூச்சாண்டி பாரு அங்கே
என்று சொல்லி சோற்றுக்
கவளம் வாயுள் திணித்தாள்

கைபிள்ளை நடக்கலானான்
சோறுண்ண மறுத்த அவனை
பூச்சாண்டிக் கதைகள் சொல்லி
கவளச் சோற்றை
வாயுள் அடைப்பாள்

அடம் பிடிக்கும் சிறுவனுக்கு
பூச்சாண்டிக் கதை சொன்னால்
மெய் மறந்து அவன் உண்டான்
கிண்ணச் சோற்றை
அதையறிந்த அவன் தாய்
நாள்தோறும் தொடரலானாள்
பூச்சாண்டிக்கதையதனை

சிறுவனவன் பூச்சாண்டி
யார் என்றான்
இருட்டைக் காட்டி
பூச்சாண்டி திருடனவன்
இருட்டில்தான் இருப்பானென்றா
ள்

இருட்டை கண்ட சிறுவன்
சொன்னான் நானும்
ஓரு பூச்சாண்டி.











வெள்ளி, 5 மார்ச், 2010

எனது ஹைக்கூ

தலை சுற்றினாலும்
கண்ணொளி மங்கவில்லை
கலங்கரை விளக்கில்.

ஓயாமல் பெருக்கினாலும்
முற்றத்தில் குப்பை
தென்னங்கீற்றின் நிழல்.

தினம் கடலில் மூழ்கி
எழுந்தாலும்
சூரியனில் வெப்பம்.

கருமி வீட்டின்
மர நிழலில்
வழி போக்கன்.

தீயில் காகிதம்
கருகவேயில்லை
ஓவியனின் திறமை.

குப்பை கூளத்தில்
கோழி இரை
தேடியது.

செத்துக் கிடந்தவனின்
மீது எறும்பும் ஈயும்
இரை தேடியது.

பிச்சைக்காரனின்
பந்திக்கு
நாய்களும் விருந்தினர்கள்.

நீண்ட தன் நிழல்
கண்டு குதூகலித்தான்
குள்ளன்.

சுண்டல் விற்கும்
சிறுவன் உண்டு
இரண்டு நாளாம்.

பூ விற்கும்
சிறுமி பெயர்
ரோஜா என்றாள்.

திருடன் வீட்டு
பூட்டிற்கு
சாவி கிடையாதாம்.

பள்ளியறைகுள்ளே
மணமகன்
வாத்தியாராம்.

வீட்டிலிருந்த
காற்றாடி
காற்றடித்தும் ஆடவில்லை.

பிச்சி பூ
வைத்திருந்தாள்
இதழேதும் பிய்யாமல்.

வியாழன், 4 மார்ச், 2010

எனது ஹைக்கூ

அறிவை முதலீடு
செய்தவனுக்கு

அறிவு
பெருகிற்று.

பணத்தை
முதலீடு
செய்தவனுக்கு

பணம்
பெருகிற்று.

அறிவு பணம் முதலீடு
செய்தவனுக்கு

பட்டமும்
பதவியும் கிடைத்தது.

பொய்யை முதலீடு
செய்தவனுக்கு

வெறுமை
கிடைத்தது.

விதை எதுவோ
செடியும்

அதுவே
?

விதை
தீமை
அறுவடை

தீமை.


உயர
உயர பறந்தாலும்
குருவி
தரைக்கு
வந்தே
தீரும்.

உயர
விவேகம்
அதி
விவேகம்
வீழ்ச்சி
.

வெற்றியும்
மகிழ்ச்சியும்

தொடரும்
போது எதிர்பாரா
துயரும்
தோல்வியும் காத்திருக்கும்.

சுகத்தில்
முழ்கி கிடக்கும்
தருணம்
வாயிலில்
காத்திருக்கும்
துயர்.

உயர
உயர ஏறிச்செல்லும்
பாதையின்
மறுபக்கம்
பாதாளமும்
இருக்கும்.

ஒளியின்

மறுபக்கம்
காரிருள்
.

பூமியில்
ஆனந்தம்
நித்தியம்
என்று
யார்
சொன்னார்.

நித்திய
ஆனந்தம்
இறைவனடி

சேர்த்தல்
அன்றோ.


புதன், 3 மார்ச், 2010

எனது ஹைக்கூ



பகைஞன்
வீட்டு
மரமல்லி வாசம்
மூக்கை துளைத்தது.

பறையை அடித்துக்
கிழித்தான்
செவிடன்.

காற்றில் ஆடிய திரைச்சீலை
உள்ளிருந்த எதையும்
மறைக்கவேயில்லை.

மேகம் வரைந்த
ஓவியங்களை
கலைத்துசென்றது காற்று.

தாய்பசுவும் கன்றுக்குட்டியும்
ஒன்றையொன்று
'அம்மா' என்றது.

சீருடையணிந்தவன்
மாணாக்கன்
சீருடையணியாதவர் வாத்தியார்.

செவ்வாய், 2 மார்ச், 2010

எனது ஹைக்கூ



கடற்கரையோர
பாறைகளை
நகரச்சொல்லி அலைகள்
ஓயாமல் அடித்துகொண்டிருக்கிறது.

கடல் நீரில்
நீதிக்கொண்டிருப்பவனுக்கு
தாகம்.

முத்துக்குளிப்பவனுக்கு
தேவையில்லை
சவுக்காரம்.

பிரிந்து செல்லும்
பாதைகள்

ஒன்று சேர்வதேயில்லை.

ஒற்றையடிப் பாதையில்
கூட்டம் கூட்டமாய்
பாதசாரிகள்.

பழுது பார்க்கும் நிறுவனத்தில்
பழுதில்லா
உபகரணங்கள்
.

பாதையோர
மையில்க
ல்
கடந்த தூரம் காட்டாது.

ஒரே பாறையில்
வெட்டிய இருகல்
ஒன்று வீட்டின் படிக்கல்
மற்றது கோவில் சிலைகல்.

காதுள்ளதெல்லாம்
இசை
கேட்பதில்லை
.

நாக்குள்ளதெல்லாம்
சுவை
அறிவதில்லை
.

பல்லுள்ளதெல்லாம்
கடிப்பது
இல்லை
.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

கட்டுக்கடங்கா மனக்குதிரை


மனக்குதிரை ஒரு மார்கண்டேயன்
எத்தனை ஆண்டு கடந்தாலும்
அதன் ஓட்டத்திலும் ஏற்றத்திலும்
மாற்றம் என்பதே இல்லை

கட்டுக்கடங்கா மனக்குதிரை
ஒரு காட்டுக்குதிரை அதன்
மீதேறி பயணம் சென்றால்
புரட்டித்தள்ளி கீழே வீழ்த்தி
எல்லுடைத்து நோய்வருத்தும்

பண்பறியா முரட்டுக் குதிரை
கடிவாளம் அதன் மூக்கிலிட்டு
காலில் இரும்படித்து பட்டினியாய்
காவலில் போட்டுவைத்தேன்

நாள்தோறும் என்வயப்பட
முயன்றும் வந்தேன்
பசியின் கொடுமை தாங்கா
குதிரை என்வசம் படியலாயிற்று

கொள்ளும் நீரும் பசும்புல்லும்
அள்ளிக் கொடுத்தே உறவை
வளர்த்தேன் மீண்டும் அதன்
மீதேறி வெள்ளோட்டம் போனேன்

குதிரையின் கடிவாளம் என்கையில்
சற்றும் தளராமல் விரட்டிச்சென்றேன்
குதிரை மீண்டும் முருகேறிப்போனது
வழிதடம் மாற்றி என்னை
புரட்டித்தள்ளி காயப்படுத்தித்
தன்னை தேற்றிகொண்டது

இன்றுனக்கு புல்லும் நீரும்
கிடையாதென்றேன் ஏளனமாய்
என்னை பார்த்துக் கனைத்தது குதிரை
இரண்டு நாள் புல்லும் நீரும்
அதன் கண்ணில் காட்டவில்லை

மூன்றாம் நாள் நீரும் புல்லும்
எடுத்துச் சென்றேன் குதிரை
என்னைபார்த்து மீண்டும் கனைத்தது
அதன் அர்த்தம் எனக்கு
அப்போது புரியவில்லை ஆனாலும்
குதிரை நீரும் புல்லும்
தொடவேயில்லை அதன்
மருத்துவரை அழைத்துவந்தேன்

இரண்டுநாளாய் குதிரை தீனி
தின்னவேயில்லை என்றேன்
மருத்துவரும் குதிரையை
சோதித்தார் பின்னர் குதிரைக்குத்
தேவை தீனியல்ல தோழிஎன்றார்

தோழிக்கு நான் எங்கு
போவேன் என்றேன் மருத்துவரோ
இல்லையென்றால் ஒரு ஊசி
போதும் என்றார் போடுங்கள்
ஊசிஎன்றேன் மாதம் ஒரு
ஊசிவீதம் சில மாதம்
போடச்சொன்னார்

சில மாதம் ஊசிப்போட்டேன்
குதிரைக்கு 'தோழி' ஆசை
விட்டொழிந்து போனது

எந்தோழன் ஒரு நாள் வந்து
குதிரைமீதேறி பார்க்க
குதிரையும் ஏற்றிக்கொள்ள
வேகமாய் சீறிப்பாய்ந்த குதிரை
மீதிருந்து வீழ்ந்தான் தோழன்

குதிரையின் முன்னங்கால்
தோழனின் படாத இடத்தில்
பட்டு வலியால் அவன்
துடித்துப்போனான்
பழிக்குப்பழி வாங்கி குதிரை
பாங்காய் ஓடித்திரிந்தது

புதன், 17 பிப்ரவரி, 2010

காமெரெட்

மனமென்னும்
இருட்டறைக்குள்ளே
சிறைபட்டேன் சிலகாலம்
அங்கு உலாவ
நந்தவனம் இல்லை
படுக்க பள்ளியறை இல்லை
உண்ண உணவில்லை
அருந்த நீரில்லை
இருட்டில் குருடனைப்
போல் அரற்றினேன்
இரண்டு முழங்கால்களையும்
இறுக பிடித்துக் கொண்டு
மூச்சு முட்டிக்கொண்டு
சோர்வுற்று வெளியேற
முயன்று தோற்று
இதய சுவற்றை
குத்திக்கிழித்து அதில்
பீய்ச்சியடித்த
ரத்தக் குழம்பில் நனைந்து
வெளியேறி
பிணத்தின் மீது
நடந்து சென்றேன்
உலகம் என்னை பார்த்து
இவன்தான் உண்மையான
கமரெட் என்றது
என்கையில் சிவப்புநிற
கொடி கொடுத்தது அதில்
அருவாளும் சுத்தியலும்
எனக்கோ
வயிற்றுப் பசி தாகம்
நீரும் உணவும் கொடுக்க
யாரும் உண்டா என்று
அங்குமிங்கும் என்கண்கள்
வட்டமிட்டது
பார்க்குமிடமெல்லாம்
மனித உடல்கள்
சிதறி சின்னாபின்னமாகி
காக்கைகூட உடல்களை
தின்னவில்லை
கண்ணுகெட்டியவரை
மனித உடல்கள்
கையிலிருந்த கொடியை
கீழே வீசிவிட்டு
பிணங்களின் மீது
நடந்து சென்றேன்.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

எனக்கு உண்மை பேச ஆசை

எனக்கு உண்மை பேச ஆசை

என் தாயின்
கருவறை இருட்டில் நான்
கிடந்த போது
கண்ணும் காதும் மூக்கும்
சுவையறிய நாக்கும்
சில உணர்வறிய
மூளையும் உருவான போது
யாருடனோ எதற்கோ
என் தாய்
பொய் சொன்னாள்

என் தாயின்
அரவணைப்பில் நான்
கிடந்த போது
என்னைச்சுற்றி பலர்
எதற்கோ பல
பொய் சொன்னார்

என்னை உறங்க
வைக்கும்
தாலாட்டில் கூட
மிகைபடுத்தி
பொய் சொன்னாள்

அவள் இனிய குரலின்
நாதம் என்னை 'மெய்'
மறந்து உறங்கச் செய்யும்

நான் அழுது
அடம் பிடிக்கும்போதும் கூட
பொம்மை இனிப்பு
எல்லாம் வாங்கித்
தருவேன் என்று
நித்தம் ஒரு
பொய் சொன்னாள்
ஊட்டிய சோற்றில் கூட
நிலவை காட்டி
பொய் கலந்தாள்

நிலவு ஓடி வருமோவென்று
யோசிக்க வைத்து என்
வாயில் சோறு திணிப்பாள்
அடுக்கடுக்காய் பொய் சொல்லி
என் 'மெய்' வளர்த்தாள் ஆனால்

எனக்கு உண்மை பேச ஆசை

பருவப் பெண்ணாய்
பள்ளிக்கு படிக்கச்
செல்லும் போது
காதலென்று யாரோ ஒருவன்
பொய் சொல்லிப் போனான்
கல்லூரிக்குச் சென்ற போது
காதல் கவிதையொன்றில்
எண்ண வொண்ணா பொய்கள்
சொன்னான்

பால்காரன் கடைக்காரன்
பூக்காரி வேலைக்காரி
சினிமாக்காரன் அரசியல்வாதி
மருத்துவர் சிகையலங்காரி
இன்னும் எத்தனையோபேர்
பொய்யே சொன்னார்

பெண்ணின் கழுத்தில்
தாலி
கட்டுமுன்னும்
பின்னும் தன்னை
ராமன் என்று பலர்
பொய் சொன்னார்

தொட்டில் தொடங்கி
கட்டில் வரை
பொய்யே சொன்னார் ஆனால்
எனக்கு உண்மை பேச ஆசை

நான் சொல்லுவதெல்லாம்
உண்மையென்றேன்
யாரும் நம்புவதில்லை
உண்மையொன்று
சொன்னால் போதும்
பயித்தியம் என்று பலர்
என்னை பார்த்து
நகைத்துவிட்டு

ஒதுங்கிச்சென்றார் ஆனால்

எனக்கு உண்மை பேச ஆசை

புதன், 3 பிப்ரவரி, 2010

தேடிடு

அங்கே என்றார்
இங்கே என்றார்
மரத்தி
லென்றார்
குளத்திலென்றார்
புற்றிலென்றார்

பூவிலென்றார்


ஒளியிலென்றார்
இருட்டிலென்றார்
பசுவிலென்றார்
பாம்பிலென்றார்

புலியிலென்றார்
பிளிரிலென்றார்
குரங்கிலென்றார்
கழுகிலென்றார்

விண்ணிலென்றார்
மண்ணிலென்றார்
மேகமென்றார்
இடியுமென்றார்
மழையிலென்றார்

சூரிய சந்திரருமவன்
தானென்றார்

கல்லிலென்றார்
ஈசனவன் சொல்லிலென்றார்
தலைமீது சடையிலென்றார்
மலைமீது தவத்திலென்றார்

அகத்திலென்றார்
புறத்திலென்றார்
என்னிலென்றார்
உன்னிலென்றார்
இல்லையென்றார்
உண்டென்றார்

தூணிலென்றார்
துரும்பிலென்றார்
எங்கும் நீக்கமற
நிறைந்ததென்றார்


தேடுங்கள் கிடைக்குமென்றார்
தேடியவர் கிடைத்ததென்றார்
திக்கற்றோரின் துணைஎன்றார்
திக்கற்றோர் துணையே
தென்றார்

துன்பம் துயர் தீரவில்லை
கொடுமைகள் ஓயவில்லை
பஞ்சம் பசி தீரவில்லை
ஊனங்கள் மறையவில்லை
இறந்தோர் எங்கே சென்றார்
சென்ற இடம் அறிந்தோனில்லை
மரணம்
ஒன்றே தீர்வு என்றார்

இருக்குமது இல்லை போல
தோன்றும் என்றார்
காணக் கிடைக்காது என்றார்
இல்லை போலே உண்டென்றார்
சூத்திரமறிய வேண்டுமென்றார்
சாத்திரம் கற்க வேண்டுமென்றார்

யாதுமாகி நின்றாய்யென்றார்

பசிவந்ததும் பத்தும்
பறந்ததென்றார்
அச்சடித்த நோட்டுக்கட்டை
இரும்புபெட்டிக்குள்ளே
அடுக்கடுக்காய்
பூட்டி வைத்தார்

பஞ்சபூதம் அவனென்றார்
பஞ்சமா பாதகம்
செயேனேன்றார்
இருட்டறையில் பொன்னை
பதுக்கி வைத்தார்

கல்வி தந்த அம்மையென்றார்

சத்தியம் அதன் மீதும்
செய்து வைத்தார்

'உண்டென்'பதை தேடிடு
'உள்ள'ளவும் தேடிடு
'
இல்லை'என்பதை அறிந்திடு
ஊனுயிர் துறந்தே தேடிடு
உள்ளளவும் தேடிடு

'
கிடைக்கு'மென்று தேடிடு
தடை
துயர் பசி
எதுவந்த போதும்
மூச்சடங்கும் நேரம்
வரை
முழுமனதாய் தேடிடு

மூச்சு நின்ற பின்னும்
கிடைக்குமென்றே
நம்பித் தேடிடு








திங்கள், 1 பிப்ரவரி, 2010

கற்றபின் நிற்க அதற்கு தக

எதிர் வீட்டு முத்தழகன்
அயல் வீட்டில் புதிதாய்
வந்த மணமகளை
வைத்தகண் வாங்காமல்
பார்த்துவந்தான்

புதியவள் என்றாலே
ஊர் பார்க்கும்
முத்தழகன் மட்டுமென்ன
விதிவிலக்கா என்று
எண்ணி விட்டுவிட்டாள்
அதை கண்ட
ஈரெட்டு பதினாறு
வயதுடைய மங்கையவள்

மாதங்கள் கடந்த பின்னே
மணமகளின் வயிறு புடைக்க
கோடி வீட்டு
கைம்பெண்ணை
வைத்தகண் வாங்காமல்
பார்த்துவந்தான் முத்தழகன்

கைம்பெண்ணை காதல் கொண்டு
கடிதமொன்று கொடுக்கையிலே
வசமாய் அவன்
மாட்டிகொண்டான்
தன்
காதல் உண்மையென்று
கற்பூர சத்தியமும்
செய்து வைத்தான்

புரட்சியாளன் என்றே
நம்பி ஊர் மெச்சி
திருமணமும் முடித்து
வைத்தார்

முத்தழகை அடுத்திருத்த
பாவையவள் பருவம்
வந்து மங்கையானாள்
வாளிப்பான அவளுருவம்
நித்தம் கண்ட முத்தழகன்
அவள் மீதும்
காதல் கொண்டான்

பாங்காய் உணர்த்தியவன்
மங்கையிடம் புணரச்
சொன்னான்
பூப்பெய்த
நாள் முதலாய்
அறியா
உணர்வுகளை
அறிந்திடவே
ஆசைகொண்டாள்

புணர்தலில் சுகமும்
கண்டாள்
எச்சரிக்கை வேண்டுமென்று
முத்தழகன் எடுத்துச் சொன்னன்

காலமது கடந்த பின்னே
சுகம் மட்டும்
புணர்தல் இல்லையென்ற
'தத்துவத்தை'
அவள் பயின்றாள்

முத்தழகனின் பாடம்
கருத்தில் வைத்தே
புணர்தலென்னும்
முழுநேர
பணியேற்று
பாங்காய் மிக பக்குவமாய்
கோடிகளை
சேர்பபதற்கோர் வழியும்
அவள் கண்டறிந்தாள்

புதன், 13 ஜனவரி, 2010

குக்கர் பொங்கல்

தைத்திருநாளாம்
பொங்கல் என்றாலே
புது மண்பானை புது
அரிசி புது மஞ்சள்
உழவர் மக்கள்
பானையிலே பொங்கிவரும்
புத்தரிசி பொங்கலிட்டு
சூரியனை வணங்கி
இயற்க்கைக்கு நன்றி சொல்வர்

அடுக்குமாடி பொங்கல்
என்றால் குக்கரிலே
பச்சரிசி பாசிபருப்பும்
வெந்தெடுத்த பின்னே
நீரோடு வெல்லப்பொடி
சூடேற்றி பின்
முந்திரியும் உலர்பழமும்
நெய்யிட்டு வறுத்தெடுத்து
மூன்றையும் ஒன்று சேர்த்து
சுடச் சுட
பரிமாறி உண்ணும்போது
தொலைகாட்சிப்பெட்டியிலே
பட்டிமன்ற நகைச்சுவை பருகி
பொங்கலோ பொங்கலென்று
பொங்கல் தின சிறப்பு
நிகழ்ச்சி கண்டு குதூகலித்து
இடையிடையே
அடுத்தவேளை உணவுச்
செய்ய சமயலறைக்கும்
தொலைகாட்ச்சிப்பெட்டிக்கும்
ஓடி ஓடி சதமெடுத்து
கிரிகெட் ஆட்டக்காரர்
தோற்றுப் போவார்
இதுதானே எங்கள் பொங்கல்



இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

வேண்டும்

இனியொரு பிறவி
பிறப்பேனோ மாட்டேனோ நானறியேன்
பிறந்திருக்கும் இப்பிறவியிலே
நடக்காது முடியாது என்றெல்லாம்
பல உண்டு
வேண்டுமென்றும் வேண்டாமென்றும்
பல உண்டு

வேண்டுமென்ற காரியங்கள்
ஏராளமாய் கிடக்க
வேண்டாமென்ற நிகழ்வுகள்
எண்ணிக்கையற்றிருக்க
பட்டியலிட்டுத்தான் பார்ப்போமே
என்றெண்ணி இங்கே கிறுக்கி
நான் கிறுக்குகிறேன்

இமையத்தின் மீதேறி
கடும்குளிரில் திங்கள் பல
வாழவேண்டும் அங்கே இரவினிலே
முழு நிலவினிலே ஊஞ்சல்
கட்டி ஆட வேண்டும்

அடர்ந்த காடுகளிலும் இடையே
காணும் மரமடர்ந்த மலைகளினூடே
நீண்ட காலம் தன்னந்தனியே
சுற்றித்திரிய வேண்டும்

அலையோசையில்லா நடு
கடலில் நான் மட்டும்
தனியே முழு நிலவினிலே
படகினிலே யாத்திரை
செல்ல வேண்டும்

ரக்கையின்றி
காற்றினிலே
மேகக்கூட்டத்தின்
இடை
புகுந்து பறந்து
செல்ல வேண்டும்

காற்றோடும் புயலோடும்
ஊர் ஊராய் அடித்துச்
செல்ல வேண்டும் முடிந்தால்
காற்றின் முடிவும் முதலும்
கண்டறிய வேண்டும்

மலையின் மீதிருந்து
பூவைப்போல் கொட்டும் நீரினிலே
மீனாய் தவழ வேண்டும்

இறந்தோரின் மூச்சுக்
காற்றை குப்பியில் பிடித்து
மூடி வைக்க வேண்டும்

மனிதர் யாரும் மரிக்காமல்
முதுமை தவிர்க்க மூலிகை
செய்யவேண்டும்

நோயுற்ற உடலினுள் புகுந்து
தீரா நோயகற்ற வேண்டும்

பிரசவமே இல்லாத பெண்கள்
உருவாக்க வேண்டும்

சமயலில்லா உணவு
முறை உலகு முழுதும்
வேண்டும்

பணம் காசு நகை வீடு செல்வம்
சொத்து சுகம் ஜாதிமதம்
மொழி இனம் நிறம் அரசியல்
ஏற்றத் தாழ்வு இல்லா

உலகு உருவாக்க வேண்டும்

கடவுளைக் கண்டு
கையுடன் இங்கே
அழைத்து வர வேண்டும்

மந்திரத்தால் அல்ல சித்து
வேலையினாலுமல்ல
நானே நானாகி
இன்னும் பல
செய்ய வேண்டும்