அங்கே என்றார்
இங்கே என்றார்
மரத்திலென்றார்
குளத்திலென்றார்
புற்றிலென்றார்
பூவிலென்றார்
ஒளியிலென்றார்
இருட்டிலென்றார்
பசுவிலென்றார்
பாம்பிலென்றார்
புலியிலென்றார்
பிளிரிலென்றார்
குரங்கிலென்றார்
கழுகிலென்றார்
விண்ணிலென்றார்
மண்ணிலென்றார்
மேகமென்றார்
இடியுமென்றார்
மழையிலென்றார்
சூரிய சந்திரருமவன்
தானென்றார்
கல்லிலென்றார்
ஈசனவன் சொல்லிலென்றார்
தலைமீது சடையிலென்றார்
மலைமீது தவத்திலென்றார்
அகத்திலென்றார்
புறத்திலென்றார்
என்னிலென்றார்
உன்னிலென்றார்
இல்லையென்றார்
உண்டென்றார்
தூணிலென்றார்
துரும்பிலென்றார்
எங்கும் நீக்கமற
நிறைந்ததென்றார்
தேடுங்கள் கிடைக்குமென்றார்
தேடியவர் கிடைத்ததென்றார்
திக்கற்றோரின் துணைஎன்றார்
திக்கற்றோர் துணையேதென்றார்
துன்பம் துயர் தீரவில்லை
கொடுமைகள் ஓயவில்லை
பஞ்சம் பசி தீரவில்லை
ஊனங்கள் மறையவில்லை
இறந்தோர் எங்கே சென்றார்
சென்ற இடம் அறிந்தோனில்லை
மரணம் ஒன்றே தீர்வு என்றார்
இருக்குமது இல்லை போல
தோன்றும் என்றார்
காணக் கிடைக்காது என்றார்
இல்லை போலே உண்டென்றார்
சூத்திரமறிய வேண்டுமென்றார்
சாத்திரம் கற்க வேண்டுமென்றார்
யாதுமாகி நின்றாய்யென்றார்
பசிவந்ததும் பத்தும்
பறந்ததென்றார்
அச்சடித்த நோட்டுக்கட்டை
இரும்புபெட்டிக்குள்ளே
அடுக்கடுக்காய்
பூட்டி வைத்தார்
பஞ்சபூதம் அவனென்றார்
பஞ்சமா பாதகம்
செயேனேன்றார்
இருட்டறையில் பொன்னை
பதுக்கி வைத்தார்
கல்வி தந்த அம்மையென்றார்
சத்தியம் அதன் மீதும்
செய்து வைத்தார்
'உண்டென்'பதை தேடிடு
'உள்ள'ளவும் தேடிடு
'இல்லை'என்பதை அறிந்திடு
ஊனுயிர் துறந்தே தேடிடு
உள்ளளவும் தேடிடு
'கிடைக்கு'மென்று தேடிடு
தடை துயர் பசி
எதுவந்த போதும்
மூச்சடங்கும் நேரம் வரை
முழுமனதாய் தேடிடு
மூச்சு நின்ற பின்னும்
கிடைக்குமென்றே
நம்பித் தேடிடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக