வியாழன், 14 பிப்ரவரி, 2013

அசிங்கம் .....அசிங்கம் !!


இளம் பெண்களைப்பற்றிய தொடர் துயரச் சம்பவங்கள் ஒரு புறம், நீரின்றி காய்ந்து நிற்கும் நெற்பயிர்கள் மற்றொரு புறம், இவைகளுக்கிடையே பல கொலை கொள்ளைகள் தினந்தோறும் சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்கள், அத்தியாவசிய பால் மற்றும் பொருள்களின் விலையேற்றம், மின்சாரம் பற்றாக்குறையால் சிறுதொழில் உட்பட தொழில்கள் பாதிப்பு என்று தினமும் வாழ்க்கை துயரமும் வேதனையும் நெஞ்சை வேதனைக்குள்ளாக்கி கொண்டிருக்கும் இச்சமயத்தில் காதல் என்பது கொண்டாடப்பட வேண்டியதா வேண்டாததா என்று பட்டிமன்றம் நடத்தினால் கூட கொண்டாடப்பட வேண்டியது என்றுதான் முடிவுரை வழங்கப்படும். ஏனென்றால் காதல் ஜாதி மத அந்தஸ்த்து பேதங்களை ஒழிக்க வழி வகுக்கும் என்கின்ற நோக்கத்தில். ஆனால் இன்றைய காதல் என்பது சிலருக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைப்போல இருக்கிறது, சிலருக்கு அழகு அந்தஸ்த்து அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது, இன்னும் சிலருக்கு சூழ்நிலையால் உண்டாக்கப்படுகிறது. "முதல் காதலா அப்படி என்றால் என்ன" என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களும் நிறைய பேர் உண்டு. "எதன் அடிப்படையிலும் வருவது காதலில்லை" என்று காதலுக்கு இலக்கணம் கூறும் இலக்கியவாதிகளும் உண்டு. அப்படியானால் 'என்னத்ததான் காதல்ன்னு சொல்லப்போற, புதுசா எதையோ கண்டுபுடிச்ச மாதிரி'ன்னு நீங்கள் முனகுவதும் எனக்கு கேட்கிறது.

காதல் என்கின்ற உணர்வைப்பற்றி பேசுகின்ற சமயத்தில் இன்றைய நடப்பில் இரு இளைஞர்களிடையே ஏற்படுகின்ற காதலைப் பற்றி மட்டுமே குறிப்பிடப்படுகிறது. மேலைநாடுகளில் இன்றைய சூழலில் காதல் என்பது திருமணம் என்கின்ற குடும்ப வாழ்க்கையின் அடிப்படையாக பெரும்பாலும் இருப்பதில்லை, காதலித்து திருமணம் செய்துகொண்டு குழந்தைகளோடு 5 ஆண்டு ஒருமித்து வாழ்ந்தாலே அதிகபட்சமாக கருதப்படுகிறது, அதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் ஏற்ப்படுகின்ற வெவ்வேறு 'உறவுகளும்' தவிர்க்க இயலாததாக உள்ளது. இன்னும் கொஞ்சம் மேலே சென்று இரண்டு ஆண்களுக்கிடையே காதல் இரண்டு பெண்களுக்கிடையே காதல் என்று காலப்போக்கில் எதேனும் விலங்கு ஒன்றுடன் பெண்ணோ ஆணோ காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்தாலும் அதை பார்த்து அதிசயிக்க வேண்டியது இருக்காது.

ஆனால் இந்திய நாட்டைப் பொருத்தமட்டில் காதல் என்பது திருமணத்தில் முடியவேண்டும் அதற்க்கு பின்னர் அவ்விருவரும் குழந்தைகளுடன் குடும்பமாக ஒருமித்து வாழ்க்கை நடத்த வேண்டும். திருமணத்திற்கு முன்பு வேறு ஒருவருடன் உறவு இருந்ததாக அறிந்தால் பெண் அல்லது ஆணின் திருமணம் நிறுத்தப்படுகிறது அல்லது அப்படிப்பட்ட பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்து கொள்வதை தவிர்ப்பது போன்ற முறைகளையே நமது சமூகம் கடைப்பிடித்து வருகிறது. "மானம்" "அவமானம்" என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூக அமைப்பு. திருமணத்திற்கு அடிப்படையாக ஜாதி மதம் மொழி ஜாதகம் அந்தஸ்த்து என்று வரிசையாக எத்தனையோ தகுதிகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்று அதிகபட்ச மக்கள் உறுதியுடன் இருக்கின்ற சமுதாயத்தில் காதல் என்பது அங்கீகாரமற்ற 'அசிங்கமான' சொல்லாக இருந்த காலம்மாறி காதலைப்பற்றி பேசுவதும் சில காதல் திருமணங்கள் ஆங்காங்கே நடை பெறுவதை சீர்திருத்தம் என்று சொல்வதா சீரழிவு என்று சொல்லுவதா என்பது தெரியவில்லை. ஏனென்றால் காதலித்த இருவரை கொலை கொள்ளை குற்றவாளிகளை விட மிக மோசமாக தாக்கப்பட்டு கொன்ற, கொல்லுகின்ற பெற்றோர்களை கொண்ட  சமுதாயத்தை உள்ளடக்கிய நாடாக இருக்கின்ற இந்திய 'திரு'நாட்டில் காதலர் தினத்தை கொண்டாட அவசியமில்லைதான். காதலிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு ஆணும் பெண்ணும் சுய ஒழுக்கத்தை, கட்டுப்பாடுகளை மீறுகின்ற செயல்களில் ஈடுபடுவதை எப்படி காதலர் தின கொண்டாட்டம் என்று சொல்ல முடியும்.

பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியாமல் ரகசிய சந்திப்பு என்கின்ற பெயரில் பூங்கா, கடற்கரை, தேநீர்விடுதி என்று தனிமையை தேடிச்செல்லும் 'காதலை' கொண்டாடச் சொல்ல முடியுமா. காதல் என்றாலே பிரச்சினை ஏற்படுத்துகின்ற ஒன்றாகிப் போன நமது சமுதாயத்தில் எதற்காக கொண்டாட்டங்கள். இன்றைய சூழலில் ஆண்களும் பெண்களும் இணைந்து பழகும், பேசும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதே இதற்க்கு காரணம் என்றால்  தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை, அங்கீகாரத்தை, முன்னேற்றத்தை காதலுக்காக தவறாக உபயோகிக்க முற்படுவதுதான் 'காதலர் தின' கொண்டாட்டம் என்றால் அதை ஒருபோதும் ஏற்றுகொள்ள இயலாது. காதல் என்பது தனிநபரின் முன்னேற்றத்தை சிதைக்கும் என்றால், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையூறாக மாற்றுகின்ற ஒன்றாகி அதனால் ஏற்ப்படுகின்ற உயிர் சேதங்கள் நமக்கு சொல்லுகின்ற செய்திகள் என்ன, காதலை ஏற்றுக்கொள்வது  சரியான முடிவா அல்லது அதை எதிர்த்து நின்று போர்க்களம் உருவாக்க முயல்வதா.

காதலில் தொடங்கி திருமணம் குடும்பம் குழந்தைகளோடு பெற்றோர் என்ற வட்டத்தை சிதைக்காமல், இழக்காமல் தொடரும் என்றால் காதலர் தினம் கொண்டாடப்படுவதில் எதிர்ப்பு இருக்காது என்றே நான் கருதுகிறேன். அதை போன்ற காலம் ஒன்று நமது இந்திய தேசத்தை வந்தடையும் என்றால் காதலர்களின் சுதந்திரத்தை யாராலும் தடுக்க முடியாமல் போகலாம். கடற்கரை, பூங்கா, தேநீர் விடுதிகளில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து தங்களை சுற்றி யாருமே இல்லாமல் தாங்கள் இருவர் மட்டுமே இருப்பது போல நினைத்து கொண்டு செயல்படுவதை 'சுதந்திரம்' என்று சொல்லி 'வேண்டுமென்றால் அவர்கள் கண்களை மூடி கொள்ளட்டும் அல்லது எங்களை பார்கின்ற தவறான கண்ணோட்டத்தை தவிர்த்து கொள்ளட்டும்" என்று பொறுப்பற்று பேசும் காதலர்களை நிச்சயம் எதிர்க்க வேண்டும். காதல் என்ற பெயரில் உடல் சுகம் காண்பதும், வாழ்க்கையை பற்றிய பயமின்றி "இலவசத்திலேயே" வாழ்வதை காதல் என்று சொல்லிகொள்பவர்களை நிச்சயம் எதிர்க்கவேண்டும். காதல் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு விருந்துக்கு ஜோடியாக சென்று கும்மாளம் அடிப்பதை எதிர்க்கவேண்டும். இன்னும் எத்தனையோ சொல்ல முடியாத அவலங்களை காதல் என்று சொல்லி கொள்ளும் பேர்வழிகளை ஒழித்து கட்டவேண்டும்.


செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

மழைக்காக கூட்டு பிரார்த்தனை



முன்மாரி பின்மாரி மழை பொய்த்து விட்டது, நிலத்தில் பயிரிட்ட பயிர்கள் நாசமாகிவிட்டது, வாங்கிய கடனை திருப்பி கொடுக்க இயலாமல் 'இனி உயிர் வாழ்வது எப்படி' என்ற திகைப்பில் சில விவசாயிகள் உயிரை விட நேர்ந்தது, அடுத்து வர போகின்ற கோடைகாலத்தில் குடிநீர் தேவை எப்படி சமாளிக்கப்பட போகிறது, அரிசி விலை அதிகமாகுமா என்பதை குறித்த கேள்வி, மத்திய அரசு குழு பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு சென்றுள்ளது. விவசாயிகளுக்கு நட்ட ஈடு கொடுத்துவிட்டால் அத்துடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடுமா, குடிநீர் தேவை, மின்சாரத் தேவை எவ்வாறு சமாளிக்கப்போகிறோம் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

அறிவியலில் மழை குறைவாக பெய்வதற்கு நிறைய காரணங்கள் கூறப்பட்டாலும், மழையை உண்டாக்குவதற்க்கோ குடிநீரை உண்டாக்கவோ வழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக இதுவரையில் தகவல் இல்லை, அரிசி கோதுமை பருப்பு காய்கறி பழங்களை விளைவித்து கொடுப்பதற்கு கூட அறிவியலில் எந்தவித கண்டுபிடிப்பும் இல்லை. நமது முன்னோர்கள் கடை பிடித்த பல வழிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க தவறிவிட்டதன் விளைவு இன்று விவசாயிகள் செய்வதறியாது உயிரை மாய்த்துகொள்ள காரணம் என்று நான் நம்புகிறேன். அது என்ன முன்னோர்களின் வழி: விதைப்புக்கு முன்னர் விளைந்த பின்னர் இறைவனிடம் கள்ளமில்லா நெஞ்சத்தோடு வேண்டுதல் செய்துவிட்டு விவசாயம் செய்தனர். முப்போகம் விளைந்தது.

நேர்மை நாணயம் உபசரிப்பு போன்ற திருவள்ளுவர் கூறும் அத்தனை நன்நெறிகளையும் தங்கள் வாழ்க்கையில் திருக்குறளை படிக்காமலேயே கடைப்பிடித்து வந்தனர், ஆண்களும் பெண்களும் கற்ப்பு தவறாதிருந்தனர், அப்படிபட்ட மக்களுக்கு இயற்க்கை தனது செல்வங்களை வாரி வழங்கி அவர்களை நிறைவுற செய்தது. வீணாக ஒருவனின் உயிரை எடுப்பதற்கு அஞ்சினர், மறுத்தனர் அவ்வாறு செய்தவர் பாவத்தால் அல்லலுறுவர் என்ற பயம் அவர்களை நிறைத்திருந்தது. கள்ளர் இனத்தை சேர்ந்தவர் மட்டுமே திருடி அதை கொண்டு ஜீவனம் செய்தனர், திருடியவற்றைக் கொண்டு கள் குடித்து நடனமாடி தங்களது இன்பத்தை கூட்டமாக ரசித்தனர் என்று வரலாறு கூறுகிறது.

இன்றைய நிலை என்ன? விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு தங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை வைப்பது மின்சாரம் கேட்டு கோரிக்கை வைப்பது போல எல்லோரும் ஒன்று திரண்டு கடவுளிடமும் மழை வேண்டி கோரிக்கை வையுங்கள், அதற்க்கு கூட்டு பிரார்த்தனை என்று சொல்லுகிறார்கள். அவ்வாறு ஒன்று திரளும்போது எப்படி கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கிறதோ அதுபோல மழை வருவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். குடிநீருக்காக மழை வேண்டியும் கூட்டு பிரார்த்தனைகள் நடத்துங்கள் நிச்சயம் தீர்வு கிடைக்கும். நம் முன்னோர்களும் இவ்வாறு செய்தனர் இவற்றையெல்லாம் நாம் பின்பற்ற மறந்து விட்டோம் என்பதை சுட்டி காண்பிப்பதே இப்பதிவின் நோக்கம்.

என்னதான் அறிவியல் முன்னேற்றங்கள் வந்தாலும் மழையை உண்டாக்குவதற்க்கோ தானியங்களை உற்பத்தி செய்வதற்கோ அவர்களால் [Scientist] என்றுமே இயலாது என்பது உறுதி. விவசாயம் இல்லாத நாட்டில் அறிவியல் முன்னேற்றம் மட்டும் ஏற்பட்டுவிட முடியுமா. விவசாயிகள் இல்லாத ஊரும் நாடும் அழிந்துபோகும். விவசாயிக்கு மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும் நீர் வசதி இல்லை என்றால் அது பாலைவனமாகத்தான் மாறும். அரபு நாடுகளுக்கு சென்றவர்களுக்கு இதைப்பற்றி நன்கு தெரியும், அவர்களிடம் பூமிக்கு அடியில் நீருக்கு பதிலாக பெட்ரோல் கிடைக்கிறது  அதை ஏனைய நாடுகளுக்கு விற்று அதன் மூலம் கிடைக்கின்ற வருவாயை கொண்டு குடிநீர் உணவு தானியம் என்று எல்லா பொருட்களையும் மற்ற நாடுகளிலிருந்து விலைக்கு வாங்குவதால் அந்நாடுகளில் பொருட்களின் விலை அதிகம். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு குளிர்சாதன பெட்டி  இல்லாமல் வாழவே இயலாது அதனால் மின்சாரம் பொன்னை போன்று விலையேறபெற்ற ஒன்று.

நமது நாட்டில் கிடைக்கும் கனிமங்களும் நமது பூமி விளைவிக்கும் அனைத்தும் நமக்கு கிடைத்த மகா பெரிய பொக்கிஷம். அதை பயன்படுத்த முடியாமல் அல்லது சிலரின் சுயநலத்திற்கு சூரையாடப்படும்போது "கிடைத்ததை சுருட்டிகொள்ளும்" நிலையை புறக்கணித்து நாட்டில் உள்ள வளம் முழுமையாக எல்லோராலும் அனுபவிக்க கூடிய வகையில் நியாயம் நேர்மையுடன் ஒத்துழைக்க வேண்டும். மழைக்காக கூட்டு பிரார்த்தனை செய்வோம் [நேர்மையாக]. வரும் கோடையில் மக்கள் குடிநீருக்காக போராடாமல் சுபீட்சம் பெற மழைக்காக வேண்டுதல் செய்வோம், நாடும் வீடும் வளம் பெற ஒன்று சேர்ந்து முயற்ச்சிப்போம்.


ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

"பாதுகாப்பு" என்பதன் அவசியம்

சில மாதங்களாக பாதுகாப்பு பற்றிய எனது கருத்தை இங்கே பதிவு செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன், பாதுகாப்பு என்பது எங்கே எப்போது யாருக்கு தேவைப்படுகிறது என்ற கேள்வி எழுவது இயல்பு, அடுத்ததாக எந்தவிதமான பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பது பற்றிய கேள்வி, பாதுகாக்கப்பட வேண்டியது எது, யார் என்று வரிசையாக எழும் கேள்விகளுக்கு பதில்கள் மட்டுமின்றி தீர்வு பற்றியும் எனக்குள் தோன்றிய பல கேள்விகளுள் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன். இன்றைய சூழலில் இந்திய நாட்டிற்கு பகைவரிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயம் [அவசியமாக] உள்ளது. ஒரு புறம் பாக்கிஸ்தானின் ஊடுருவலிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் மற்றொருபுறம் சீன இந்திய எல்லை பகுதியை பாதுகாக்க வேண்டும், இந்திய தேசத்துடன் நல்லுறவு கொள்வது போன்ற பாவனையில் இலங்கை அரசு பேசினாலும் அதன் போக்கு மிகவும் மோசமானது என்பதற்கு 'எல்லை பாதுகாப்பு' என்ற பெயரில் அப்பாவி மீனவர்களை வாழ விடாமல் அட்டுழியம் நடத்தி வருகின்ற செய்தி தினமும் தொடர்ந்து கொண்டே இருப்பது.

இந்தியநாட்டை சுற்றியுள்ள நாடுகளிடமிருந்து இந்தியாவை பாதுகாப்பது என்பதை பெரும் சவால்களுக்கிடையே சமாளித்து வருகின்ற இந்திய அரசின் நிலைமையை நிச்சயம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். பிரதமமந்திரி உள்பட ஏனைய மந்திரிகள் மற்றுமுள்ள உயர்பதவி வகிக்கும் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலைமை. சுற்றியிருக்கும் நாடுகளிலிருந்து வருகின்ற எதிரிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுப்பது என்பது மன்னர் ஆட்சிகாலத்தில் இருந்தே காணப்படும் பாதுகாப்பின் அவசியத்தை போன்றதே என்றாலும் உள்நாட்டில் உள்ள எதிரிகளிடமிருந்தும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய அவசியமும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

தனிநபரின் பாதுகாப்பு பற்றிய அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோசடி மன்னர்களின் வித விதமான மோசடி திட்டங்களில் சிக்கிக் கொண்டு தங்களின் வாழ்வாதாரங்களை பரிகொடுத்து தவிப்பவர்களின் பாதுகாப்பு, வீடு புகுந்து கொள்ளை அடித்து செல்லும் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பு, வீதியில் செல்லும் நபரிடமிருந்து வழிப்பறி நடத்தும் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பு, வங்கியில் இருந்து பணம் நகை கொள்ளையிடும் கொள்ளையிலிருந்து பாதுகாப்பு, வக்கிரம் மிகுந்த மனிதன் என்ற பெயரில் நடமாடும் மிருகங்களிடமிருந்து பெண்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு, குழந்தைகளை திருடிச்செல்லும் கயவர்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாத்தல், குடிசை வீடுகளை தீயிட்டு கொளுத்தி நாசப்படுத்தும் நயவஞ்சகர்களிடமிருந்து பாதுகாப்பு, என்று பாதுகாப்பு தேவைப்படுபவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

நாடு, நாட்டின் முக்கிய நபர்கள், பணம், நகை, நிலம், மீனவர்கள், பெண்கள், குழந்தைகள் என்ற இந்த பட்டியலில் ATM மற்றும் இரண்டு, நான்குசக்கர வாகனங்களும் சேர்ந்து கொண்டுள்ளது. பல இடங்களில் உயர் ரக நாய்கள் கூட பாதுகாக்கப்பட வேண்டியவைகளுள் முக்கிய இடத்தில் இருக்கிறது. இவை அனைத்தையும் பாதுகாக்க வேண்டிய மிகவும் முக்கிய பொறுப்பில் மனிதர்கள் இருப்பது புதிதல்ல, ஆனால் 1.22 பில்லியன் ஜனத்தொகைக்கு போதுமான அளவிற்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு ஆட்கள் பணியில் அமர்த்தபட்டு உள்ளனரா என்பதும் அவர்களுக்கு  நவீன கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளதா, நவீன கருவிகளை உபயோகிக்கும் பயிற்சி பெற்றவர்கள் எத்தனைபேர், அவ்வாறு நவீன கருவிகளை யார் மீது எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற புதிய சட்டம் உள்ளதா. பாதுகாக்கும் படையை சேர்ந்தவர்கள் அவர்கள் எடுத்துக்கொண்ட "உறுதிமொழி"க்கு ஏற்றவாறு தங்களை பாதுகாக்கும் பணியில் முழுமையாக அர்ப்பணித்து கொண்டுள்ளனரா, அவ்வாறு தாங்கள் ஏற்றுகொண்ட பணியில் முழுமையாக அர்ப்பணித்து கொள்ளாமல் எதிரிகளுக்கு உடந்தையாக அல்லது பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தில் தண்டனை அதற்க்கு ஏற்றதாக உள்ளதா,

இது போன்ற கேள்விகளுக்கு நமது நாட்டில் இன்றுவரையில் சரியான பதில் இல்லை, அவ்வாறு பதில் இல்லாமல் இருக்கின்ற பட்சத்தில் பாதுகாப்பு என்பதும் கேள்விகுரியானதுதான். பாதுகாப்பு என்று சொல்லுகின்ற சமயத்தில் வீதியில் குடித்துவிட்டு ஒரு பெண்ணை கேலி செய்தால் அவர் குடித்ததினால் சுயநினைவில்லாமல் அவ்வாறு செய்கிறார் என்று கூறி விட்டுவிடுவதும் குடித்துவிட்டு மனைவி குழந்தைகளை துன்புறுத்துவதும் தினம்தோறும் பல வீடுகளில் வேதனையை தரும் நிகழ்வாகிவிட்டது, குடித்துவிட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் சம்பவங்கள் பெருகி விட்டது. குடித்து அதனால் உடல்நிலை மோசமாகி இறந்து போகிறவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குடியிலிருந்து இவர்களை பாதுகாக்கப் போகிறவர்கள் யார்.

"பாதுகாப்பு" என்பது ஏழை முதல் பணக்காரன் வரை அதிகரித்து வரும் தேவைகளில் மிகவும் முக்கியமான ஒன்று. அதற்க்கான புதிய திட்டங்களோ சட்டங்களோ இதுவரையில் இல்லை, குறைந்தபட்ச  பாதுகாப்பு என்பது கூட கேள்விக்குறியாக உள்ளது. அதனால் அவரவர் பாதுகாப்பிற்கு அவரவர் முழு பொறுப்பு ஏற்றுகொள்வது கட்டாயம். தினச்செய்திகளை கட்டாயம் பார்ப்பது அவசியம், பல வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி இருந்தாலும் அதை பொழுபோக்கிற்கு மட்டுமே உபயோகிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர், தினம் காண்பிக்கப்படுகின்ற தொடர்கதைகளையே பொதுவாக விரும்பி பார்கின்றனர், மனிதர்களுக்கு பொழுதுபோக்கு தேவை என்றாலும், மிகவும் அவசியமானது என்று கூற இயலாது. தொலைகாட்சியை ஒருநாள் முழுவதும் பொழுதுபோக்கிற்கு மட்டுமே பயன்படுத்துவதால் நாட்டில் அன்றாடம்  நடக்கும் உண்மை சம்பவங்களை அறிந்து கொள்ள இயலாமல் போகிறது.

தொலைகாட்சியில் தினமும் கொள்ளை கொலை போன்றவற்றை செய்திகளில் பார்க்க முடிகிறது, செய்திகளை தினமும் தவறாமல் பார்ப்பதால் எத்தகைய சூழலில் அந்த கொள்ளை கொலை சம்பவங்கள் நடந்திருக்கின்றது என்பதை நம்மால் ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது, அதை போன்ற சந்தர்ப்பங்களை நாம் தவிர்த்து கொள்வதாலும் அல்லது அதை நமக்கு தெரிந்தவர்களிடம் எடுத்து சொல்வதாலும் இத்தகைய அசம்பாவிதங்களை ஓரளவிற்கு நாம் தவிர்க்க முடியும், அதே போல பலவித பண மோசடிகளை பற்றி செய்திகளை பார்க்கும் நமக்கு யாரையெல்லாம் நம்பி பணம் கொடுக்க கூடாது என்பதை அறிந்து செயல்பட முடியும். டெல்லியில் நடந்த இளம் பெண் கொலை சம்பவத்தின் செய்தியை பார்க்கும்போது எப்படிப்பட்ட அசந்தர்ப்பங்களை நம்மால் தவிர்க்க முடியும் என்று நாம் தெரிந்துகொள்ள முடிந்தது.

முற்றிலும் தெரியாத நபர்களிடம் பேசுவது பழகுவது என்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது என்பதை கூட செய்திகளில் வருகின்ற பல சம்பவங்கள் நமக்கு எடுத்து காட்டுகிறது. விபத்து ஆபத்து இரண்டையுமே தவிர்க்க நாமே எல்லா சந்தர்ப்பங்களிலும் தயாராக இருப்பதற்கு தவறாமல் செய்திகள் பார்ப்பதை பழக்கப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். தெரியாத நபர்களிடம் இருந்து மட்டுமே எப்போதும் ஆபத்து வருவது இல்லை நமக்கு மிகவும் பழக்கப்பட்ட நபர்கள் வழியாக கூட ஆபத்து நமக்கு உண்டு என்பதை பல செய்திகளின் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடியும். தொலைகாட்சிபெட்டி இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இன்றைய சூழல் இருந்தும், வீட்டிற்குள்ளேயே அதற்கான தீர்வுகளை வைத்து கொண்டு அதை அலட்சியப்படுத்தும் நபர்களை தேடித்தான் இத்தகைய ஆபத்துக்களும் விபத்துக்களும் விரைந்து செல்கிறதோ என்று எண்ண  வைக்கிறது.

நம்மை நாமே பாதுகாத்து கொள்வது இன்றைய கட்டாயம், வேறு ஒருவரின் உதவியால் மட்டுமே நமக்கு பாதுகாப்பு கிடைத்துவிடும் என்று நம்பியிருப்பது நமக்கு நாமே வைத்துகொள்ளும் "ஆப்பு" என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்வது இன்றைய அவசியம்.



வியாழன், 31 ஜனவரி, 2013

யார்தான் நடிக்கவில்லை


"முட்டை இடுகிற கோழிக்குதான் வலி தெரியும்" என்று சொல்வார்கள், கமல்ஹாசன் தனக்கிருக்கின்ற சொத்துக்கள் எல்லாவற்றையும் "விஸ்வரூபம்" திரைப்படம் எடுப்பதற்கு தேவைப்பட்ட பணத்திற்காக எழுதி கொடுத்து விட்டதாக நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசினார், அவரது திரைப்படம் வெளியாகி இருந்தால் அதில் கிடைக்கும் பணத்தை கடன் வாங்கியவர்களுக்கு திரும்ப கொடுத்திருக்க முடியும், தடைக்கு மேல் தடை என்று திரைப்படம் வெளியாகும் நாள் கேள்வி குறியானதால் எழுதி கொடுத்த சொத்துக்களை பணம் கொடுத்தவர் எடுத்துக்கொள்ளும் நிலைமை அவருக்கு ஏற்பட்டது என்பதுதானே அதற்க்கு அர்த்தம்?, அதுதானே சரியான பதில், திரைப்படம் தமிழகத்தில் மட்டும்  திரையிடுவதற்கு தடை விதித்துவிட்டு அவரது நஷ்டத்திற்கு பொறுப்பு தாங்கள் அல்ல என்று சொன்னால், அதற்க்கு அர்த்தம் வேண்டுமென்றே அவர் அந்த கஷ்டம் அல்லது ந(ஷ்)ட்டம் அடைய வேண்டும் என்று நினைத்து இருப்பின்; அவர் தனது சிக்கல்களை  பகிரங்கமாக தெரிவித்து இருப்பது எவ்விதத்திலும் தவறாகாது [அல்லவா], கமலஹாசனின் பக்கம் நியாயம் இருக்கிறதா என்று மட்டும் யோசிக்கவே இவ்வாறு நான் எழுதுகிறேன் என்று அர்த்தமில்லை, எனக்கு யார் மீதும் தீவிர பற்றோ தீவிர வெறுப்போ எப்போதுமே கிடையாது, நடுநிலையாளர்களின் பக்கம் தான் என்னுடையது.

http://rathnapeters.blogspot.in/2010/02/blog-post_5054.html


இஸ்லாமியர்களின் உணர்வை நான் மதிக்கிறேன், ஏற்கனவே மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தைப் பற்றி குறிப்பிடும்போது அயோத்தி என்ற நகரத்தையே கண்டுபிடிக்க இயலவில்லை என்று தெரிந்த பின்னர் இடித்துவிட்ட இஸ்லாமியர்களின் பழமையான மசூதியை திரும்ப கொடுக்க முடியுமா என்பதே எனது கேள்வியாக இருந்தது. மதம் சாதி என்ற பெயரில் மனித நேயம் கேடுற ஒருநாளும் மக்கள் இடம் தரக்கூடாது என்ற எனது கருத்தை என்னால் அடிக்கடி சமயத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள இயலாது..அவரவர் கருத்தை பதிவு செய்வது என்பது குடியரசு நாடுகளில் மனிதர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்ற நோக்கில் இங்கே பதிவு செய்கிறேன்.

அரபு மொழியில் பின்புலத்தில் குரானின் வாசகங்கள் இருப்பதுதான் அப்படத்தை தடை செய்யக்காரணம் என்றால், அத்திரைப்படம்  வெளியாகும் நாள் வரை பொறுத்திருக்க வேண்டிய அவசியம் என்ன, அதற்க்கு முன்பதாகவே கமல்ஹாசனின் கருத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இத்தனை இடர்கள் ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாமே, அல்லது அக்காட்சிகளை நீக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கலாமே, அவ்வாறான கோரிக்கையை கமல்ஹாசன் ஏற்றுகொள்ளாத பட்சத்தில் அப்படம் திரையிட தடை கோரபட்டிருந்தால் அது சரியான முறை, அதை விடுத்து வெளியாகும் நாள்வரை காத்திருந்து தடை செய்வது என்பது உள்நோக்கம் கொண்டிருப்பதை உணர்த்தவில்லையா.

எந்த மதத்தையும் ஆதரிப்பதும் நிராகரிப்பதும் ஒரு உண்மையான கலைஞன் செய்யக்கூடாத காரியம் அவ்வாறு செய்தால் மக்கள் அவரை கலைஞன் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஒரு கலைஞனின் சொந்த கருத்தை திரையில் அல்லது எழுத்தில் வெளிப்படுத்தினால் மக்கள் ஆதரவு இல்லாமல் போகும்,  'எம்மதமும் சம்மதம்' என்று கூறும் இந்தியாவில் அத்தகைய மதம் சார்ந்த, சாதி சார்ந்த கொள்கை எடுபடாது என்பதை கமலஹாசன் அறியமாட்டாரா  என்ன. உண்மையான புறக்கணிப்பை உணர்ந்த பின்னர் எந்த மாநிலத்தில் ஒருமைப்பாடு உள்ளதோ, எங்கே ஒருவரின் கருத்துரிமைக்கு எதிர்ப்பு இல்லையோ அங்கே தான் செல்ல நினைப்பதாக அவர் கூறியதை கூட சில விஷமிகள் "மிகவும் நன்றாக நடிக்கிறார்" என்று கூறினார்கள். அதற்கும் இன்னும் கொஞ்சம் மேலே சென்று "நன்றாக விளம்பரம் செய்யப்பட்டுவிட்டது" என்றும் கூறினார்கள். என்ன மனிதர்கள்!!.

நடிகன் அல்லது நடிகை என்றால் அவர் எப்போதுமே நடிப்பார் என்பது போல் பேசப்பட்டது ஒருபுறம், நடிக நடிகையரைத் தவிர வேறு யாருமே நடிப்பது இல்லையா, அவர்களைவிட அதிகமாக அன்றாட வாழ்க்கையில் தினமும் நடிப்பவர்கள் தான் அதிகம், அதனால்தான் கொலை கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, என்றெல்லாம் நடந்தேறி வருகிறது. அவ்வாறு குற்றங்களை செய்யும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டுபிடிக்க இயலாமல் தானே குற்றவாளிகள் எங்கும் மலிந்து கிடக்கின்றனர்?

தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் பார்க்கின்ற ஒவ்வொருவரும் அரபு மொழியை நன்கு படித்து அதன் அர்த்தம் அறிந்து கொள்பவர்களா என்ன, அத்திரைப்படத்தில் சில நிமிடங்களில் வந்து போகின்ற காட்சியை பார்க்காமல் அதன் பின்புலத்தில் அரபுமொழியில் இருக்கின்ற வாசகங்களை படித்துவிட்டு குரானையும் இஸ்லாமியர்களையும் இழிவாக பேசுவார்களா அல்லது நினைத்து விடுவார்களா, புரியவில்லை. விவாதம் என்கின்ற நோக்கில் பார்த்தால் கூட இதில் எங்கேயும் நியாயம் தெரியவில்லை. வீணான எதிர்ப்பு, இதில் காயம் அடைந்தவர் கமல்ஹாசன் மட்டுமே என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.



சனி, 26 ஜனவரி, 2013

முன்னேற்றம்



மன சாட்சிக்கு பயந்த காலம் இப்போது இல்லை, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் அதில் தவறு ஒன்றும் இல்லை என்று வாழும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது, தெய்வம் என்பதை வியாபாரமாக்கி தெய்வ பயமில்லாமல் தெய்வத்தின் பெயரை சொல்லி பணம் சம்பாதிக்கும் இழிநிலை பெருகிபோனது, உடல் இன்பம் காணுதல் என்பதில் கேவலமான முன்னேற்றங்கள், அறிவியலையும் மின்னணு கருவிகளை பயன்படுத்தி மோசம் செய்வதை ஒரு தொழிலாகவே நடத்தும் கூட்டத்தின் பெருக்கம், மனிதனையும் தெய்வத்தையும் விட பணம், தங்கம், வீடு, நிலம் போன்றவற்றின் மதிப்பு பன்மடங்கு அதிகரித்து கொண்டிருக்கும் நிலை. கிடைத்ததை சுருட்டிக் கொள்ளும் மனப்பான்மை. போட்டி பொறாமை விரோதம் கொலைவெறி அடுத்தவரை கெடுக்க அழிக்க சதி திட்டமிட்டு தாக்குவது, அதற்காக மாந்த்ரீகம் செய்வது, பூஜை செய்வது, தாயத்து அணிவது என்று சமூகம் அவலநிலையை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

பாவம், புண்ணியம் என்ற வார்த்தைகளை அகராதியில் கூட இனி அச்சடிக்காமல் விட்டுவிடுகின்ற அளவிற்கு அதன் உபயோகம் காணாமல் போகிறது. மனிதர்கள் தெய்வத்தை உண்மை என்று நம்பியதற்கு பதிலாக அறிவியலை மட்டுமே தெய்வம் என்று நம்புகின்ற காலம் இது, உறவுகளின் அவசியம் தேவையில்லை என்று வீசிவிடுகின்ற காலம், இயற்கையை நேசித்த நாட்களை இனி வரலாறுகள் மட்டும் தான் சொல்லி கொண்டிருக்கும், மழை என்பதை கூட கணினியில் கிராபிக் படத்தில் மட்டுமே சிறுவர்கள் காண வேண்டியிருக்கும், மழையின்றி விளைச்சலின்றி போனால் மனிதன் தங்கத்தையும் வெள்ளியையும் உருக்கி தின்பானா அல்லது ரூபாய் நோட்டுக்களை மென்று தின்பானா, அல்லது அறிவியலில் உணவு உருவாக்க ஏதேனும் முயற்சி செய்வார்களோ.

மனிதனின் அறிவியல் வளர்ச்சி மானுடத்தையே அழிக்கவா அல்லது காப்பதற்க்கா, அணுகுண்டு சோதனை எதற்கு (எதிரியை) மனிதனை அழிக்கத்தானே, தினம் தினம் புதிய கண்டுபிடிப்புகள் எதற்காக மானுடம் தழைக்கத்தானே, ஆனால் அழிக்கும் ஆயுதங்களை எதற்காக சேமிக்க அல்லது கண்டுபிடிக்க வேண்டும், பாதுகாப்பிற்கு என்று சொன்னால் யாரிடமிருந்து யாரை பாது காக்க, மனிதர்களை மிருகங்களிடமிருந்து பாது காப்பதற்கா, அல்லது மனிதர்களிடமிருந்து மனிதர்களை காப்பதற்க்கா, அப்படியானால் மனிதர்கள் தான் மனிதர்களுக்கு விரோதிகளா, விரோதத்தின் நோக்கம் என்ன, மனிதர்களைவிட மண்ணிற்கு முக்கியத்துவம்.


வெள்ளி, 25 ஜனவரி, 2013

விஸ்வரூபம்



எவ்விதத்திலும் வன்முறையை ஆதரிக்க கூடாது என்பதுதான் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் ஒருமித்த கருத்து. வன்முறையை தூண்டும் வகையில் எவ்வித செய்கைகள் ஆதாரபூர்வமாக இருந்தால் அது யுனிவர்சலாக தடைசெய்யப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது, அவ்வாறு மாற்று கருத்து இருப்பின் அவர் தீவிரவாதியாக இருக்கவேண்டும். மிருகத்தை வதைப்பது போல திரைப்பட காட்சி இருக்க கூடாது அவ்வாறு இருந்தால் அதை நீக்க வேண்டும் என்பது மிருகவதை சட்டம் வரையறை உண்டு. கொலையாளி என்று நிருபிக்கப்பட் ட நபரை தூக்கிலிடுவதை தடுக்க கோருவதற்கு மனிதஉரிமை சட்டம் உள்ளது. தீவிரவாத செய்கைகளை ஆதரிப்பவர்களும் குற்றவாளிகள் தான், குற்றம் செய்பவர் எவராக இருப்பினும் அவரை சட்டத்தின் முன் பிடித்து கொடுக்கவேண்டியது ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

சமுதாய விரோத செயல்களில் ஈடுபடுபவர் தனது உடன் பிறந்த சகோதரனாக அல்லது மகனாக இருந்தாலும் அவருக்கு சட்டத்திலிருந்து பாதுகாப்பு கொடுப்பதும் புகலிடம் கொடுப்பதும் தீவிரவாதிக்கு துணை போனதற்கான குற்ற பிரிவுகள் சட்டத்தில் உண்டு. ஆனால் எத்தனை பேர் அவ்வாறு தங்களை தூய்மையாக வைத்து கொண்டுள்ளனர் என்பது அவரவர்களின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். பெற்றோருக்கு தெரியாமல் சமூக விரோத கும்பல்களுடன் உறவு வைத்துக் கொண்டு அவற்றால் கிடைக்கும் வருமானத்தை செலவிட்டு எத்தனை திருமணம் நடக்கிறதோ, எத்தனை சொந்த வீடுகள் வாங்கப்படுகிறதோ, எத்தனை பேர் படிப்பதற்கு கொடுக்கப்படுகிறதோ, தங்களது சொந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது போன்ற இன்னும் எத்தனையோ காரியங்களை செய்து வருகின்ற இளைஞர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த எத்தனை பேர் முன் வருகிறார்கள். காரணம் சுயநலம்.

சுயநலவாதிகளால் சுருங்கி போன சமுதாயம், வறுமை முற்றிப்போனால் 'களவும் கொலையும் தவறல்ல' என்ற வேதாந்தம் பேசிக்கொண்டு மனம் போன நோக்கில் இன்றைய சமுதாயம் 'தீவிரவாதிகளை' முகமூடிக்குள் மறைத்து கொண்டுதான் செயல்படுகிறது, வங்கியில் கொள்ளை, ஏ டி எம் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி, நகை பணத்துக்காக கழுத்தறுத்து கொலை, பலவித மோசடி கும்பல்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவது, குண்டு வெடிப்பு, என்று தினம் நாளேடுகளை நிரப்பிக்கொண்டிருக்கும் செய்திகள் நமக்கு எதை சொல்கிறது. அவ்வாறு கொள்ளை கொலை குற்றம் செய்த கும்பல் காவல்துறையால் பிடிபட்ட பின்னர் அவரது பெயர் நிழற்ப்படம் போன்றவை செய்திகளில் வெளியாகும்போது கொள்ளையர்களின் சாதி மதங்களை சேர்ந்தவர்கள் குழுவாக திரண்டு கொண்டு எங்களது சாதிக்காரனை அல்லது எங்களது மதத்தை சேர்ந்தவனை அவமானப்படுத்துகிரீர்கள், அவ்வாறு செய்திகளில் வெளியிடுவதை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அதை சட்டம் ஏற்றுக்கொள்ளுமா? இதற்க்கு பெயர்தான்  "சுயநலவாதம்". வேற்று மத (அ ) சாதிக்காரனை இழிவுபடுத்தினால் அதை கண்டு குதூகலிப்பது தனது மத (அ ) சாதிக்காரனைப்பற்றிய இழிவு செய்தியை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிடுவது. இது என்ன வாதம்?

மதவாதம் சாதிவாதம் தீவிரவாதம் இன்னும் என்ன மீதமிருக்கிறது, ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு விரோதிகளாக எத்தனை காலம் நீடிப்பார்கள், எங்கே போகிறது இந்த சமுதாயம். முன்னேற்றம் அல்லது நாகரீகம் என்று நா கிழிய பேசுகின்ற இவர்கள் எதை குறிப்பிடுகிறார்கள். நாகரீகம் என்று இவர்கள் கூறுவது கிராப்பு தலையுடன் பான்ட்டும் அல்லது ஜீன்ஸ் சொக்காயும் வித விதமான டீ ஷர்ட்டுடன் கால்களில் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கொண்டு விலை உயர்ந்த சொகுசு காரில் [இரட்டை அல்லது நான்கு சக்கர வண்டிகளில்] வலம் வருவதா? அல்லது பளிங்கு பதித்த பங்களாவில்   அலங்கார விளக்குகளின் நடுவே மதுவுடனும் மங்கைகளுடன் சுகபோகம் அனுபவித்து கொண்டு உலாவும் வாழ்க்கையா? அல்லது முன்னேற்றம் என்று சொல்வதெல்லாம் ஆங்கிலத்தில் படித்து பட்டம் வாங்குவதா?

இவர்கள் குறிப்பிடும் முன்னேற்றத்தின் அளவுகோல் செய்வதொன்று சொல்வது வேறு, படிப்பது ஒன்று இடிப்பது வேறு, எல்லோரும் மிக அழகாகவே "தினமும் நடித்து" தாங்கள் மிகவும் முன்னேறியவர்கள் என்பதை பல வகைகளிலும் வெளிகாண்பித்து கொண்டிருக்கின்றார்கள். 

செய்திகளில் வருகின்றவற்றை கருவாக வைத்து எடுக்கப்படுகின்ற திரைப்படங்கள் ஏராளம். இதுவரை வெளிவந்த திரைப்படங்கள் அத்தனையும் தணிக்கை அதிகாரிகளால் தணிக்கை செய்த பின்னரே திரைக்கு வருகிறது. தற்போது விஸ்வரூபம், இத்தனை தடையை கண்டிருப்பது விசித்திரமாக உள்ளது. அதிலும் கமல்ஹாசன் திரையுலகிற்கு புதியவர் இல்லை, அவருக்கு வன்முறையை கிளப்புவதில் ஆர்வம் இருக்க முடியுமா என்பதை பற்றி சாதாரண மனிதனுக்கே தெரிந்த விஷயம் தான், இதில் "வி(ஷம்)மம்" செய்பவர்கள்  அவரை கேவலப்படுத்த செய்யப்படுகிறதா அல்லது வேறு உள்நோக்கம் கொண்டதா என்று சிந்திக்க வைக்கிறது.




வெள்ளி, 18 ஜனவரி, 2013

இந்திய பிரச்சினை

வணக்கம் 

பல மாதங்களுக்குப்பின்னர் இன்றைக்கு இங்கே வர தோன்றியதற்கு காரணம் ஏதும் இல்லை, எதையாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்ப்படுவதே இல்லாமல் போனதன் காரணம் அறிந்து கொள்வதற்கு கடல் அளவு விஷயங்கள் காத்திருக்க எதையாவது எழுதி அதற்க்கு கருத்துக்களை எதிர்பார்த்து வரவேற்ப்பு கிடைத்தால் நிம்மதி அடைவதோடு நிற்காமல் என்றாவது, வாழ்நாளில் ஒரு முறையாவது ஒரு புத்தகமாவது அச்சிட்டு வெளியிட வேண்டும் என்கின்ற ஆவல் எழ அந்த புத்தகம் சிலருடைய கையிலாவது சென்று சேர்ந்திட வேண்டும் என்கின்ற கனவோடு மிகவும் வருந்தி எழுதி ஒன்றோ இரண்டோ அதிகம் போனால் பத்து புத்தகங்களை நாமே நமது நண்பர்களுக்கு இலவசமாக வழங்கி (ஒரு புத்தகம் கூட விற்காமல்) அவர்கள் அவற்றை படித்துவிட்டு சொல்லப்போகும் கருத்துகளுக்கு காத்து கிடக்கும் தவிப்பும் எதிர்பார்ப்பும் எழுதுகோல் பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்ப்படுவது இயல்புதான்.

அந்த நப்பாசையெல்லாம் நமக்கு வேண்டாம், "பழம் புளிக்கிறது" என்று நரியைப்போல் ஒதுங்கிவிடுவதும் இயல்புதான். இவற்றிற்கு மேலே ஒருபடி சென்று, சில நயவஞ்சக கூட்டத்தின் ஒட்டுமொத்த வடிவமாக யார் எழுதுவார் என்று காத்திருந்து அதை அப்படியே தான் எழுதியதை போல "திருடி"ச்செல்லும் "மானம் கெட்ட" அயோக்கியர்களின் சூறையாடலை சமாளிக்க இயலாமல் ஒதுங்கி சென்றுவிடுவதும் இங்கே இயல்புதான். இவற்றை எல்லாம் மொத்தமாக ஒதுக்கி விட்டு அல்லது மறந்துவிட்டு எதையாவது எழுதி கொண்டே இருப்பதும் இயல்புதான்.

எழுதுவதற்கு நாட்டில் என்ன செய்தியா இல்லை, ஒவ்வொரு நாளும் செய்திகள் ஊடகங்களையும் செய்தி தாள்களை நிரப்பி விடுகிறதே. நல்ல செய்தியை லாட்டரி சீட்டு எண்ணை தேடி கண்டுபிடிப்பதை போல கண்டுபிடிக்க வேண்டியதாக உள்ளது. இன்றைய தினத்தில் செய்திகளில் முதலிடத்தை பிடித்துக்கொள்வது பெரும்பாலும் "கெட்ட" செய்திகளாக இருப்பதில் இருந்தே எதை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. எது எப்படி போனால் நமக்கு என்ன என்று நாட்டில் பலர் உண்டு, 'யார் எக்கேடு கேட்டால் உனக்கென்ன, நாம உழைச்சாத்தான் கஞ்சி' என்று இருப்பவர்கள் எண்ணிக்கையில் அதிகம்.

ஒரு கூட்டம் சேர்த்துக்கொண்டு 'ஒழிக' என்று கோஷங்களை எழுப்பி அதிக பட்ச்சமாக தேசிய கோடி அல்லது கட்சி கோடி அல்லது சம்பந்தப்பட்டவரின் உருவம் என்று சொல்லி பொம்மை செய்து அதை செருப்பால் அடித்து தீவைத்து நாசப்படுத்தும்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு இன்னும் கொஞ்சம் அதிகமாக ஒருநாள் திருமணமண்டபத்தில் வைத்துவிட்டு வெளியேற்றுவது வரை தங்களது எதிர்ப்பை காண்பித்து அதை சில ஊடகங்கள் தங்கள் செய்திகளில் காண்பித்து அவர்களுக்கும் 'வேலை' கொடுத்து இவ்வாறாக இந்தியாவில் பிரச்சினைகளும் அதை எதிர்ப்பவர்களும் சாதாரண செய்திகளாகி, எந்த பிரச்சினைகளும் எவ்வித தீர்வையும் காணாமலேயே கோப்புகளுக்குள் பூச்சிகளுக்கு உணவாகும், காலம் கடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் முடிவற்றதாய் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும், கிடப்பில் கிடக்கும் எத்தனையோ பிரச்சினைகளுடன் புதியதும் பழமையாகி விடும் இவைதான் இந்திய பிரச்சினை.

என்னை இவற்றில் எவற்றுடனும் இணைத்துக் கொள்ள விருப்பம் இன்றி எழுதுவதை மட்டும் 'காதலிப்பதால்' மீண்டும் எழுத வந்துவிட்டேன்.