புதன், 31 மார்ச், 2010

மரணதண்டனை விதியுங்கள் !!


சமீபத்தில் தமிழ்நாட்டை கதிகலங்க வைத்திருக்கும் காலாவதியான மருந்துகளை விற்ற சம்பவத்தில் கைது செய்யபட்டிருக்கும் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சிலருக்கு விசாரணை நடந்து வருவது நாம் அறிந்த ஒன்று என்றாலும் நேற்றைய செய்தியில் குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பில் வழக்கை ஏற்று வாதாட துவங்கியிருக்கும் வழக்கறிஞர் ஒருவர் தனது தரப்பில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளவர் நிரபராதி என்று கூறுவதை கண்ட போது மனதில் 'திக்' என்றிருந்தது.

தன் தரப்பில் உள்ளவர் குற்றமுள்ளவராகவோ குற்றம் சாட்டபட்டவராகவோ இருந்தாலும் கூட அவர் நிரபராதி என்று வாதிட ஒரு வழக்கறிஞர் உதவுகிறார் என்பது நமது நாட்டில் பல சமூக விரோதிகளை மேற்கொண்டு குற்றங்கள் செய்வதற்கு தைரியம் அளிக்க இடம் கொடுக்கும். இன்றைய செய்தியில் மற்றொரு வழக்கறிஞர் கூறிய செய்தி காலாவதியான மருத்துகளை விற்ற வழக்கை குற்றவாளியின் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று பார் கவுன்சிலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார், அப்படி பார்கவுன்சிலில் முடிவு எடுக்கபட்டிருந்தால் நாட்டில் வழக்கரிஞர்களின் மீதும் சட்டம் மற்றும் நீதிமன்றங்களின் மீதும் மக்கள் வைத்திருக்கும் மதிப்பும் நம்பிக்கையும் மென்மேலும் அதிகரிக்கும், சமுதாய விரோதிகளிடமிருந்தும் விமோசனம் கிடைக்கும்.

கைதாகி இருக்கும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் கொடுக்கும் தண்டனையை பொறுத்தே இனி வரும் காலத்தில் எந்த விதத்திலும் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு கிடைக்காது என்பதை அறிந்து அப்படிப்பட்ட குற்றங்கள் நிகழாமல் தடுக்க மக்களிடையே நம்பிக்கையும் சமூகவிரோதிகளுக்கு பயமும் ஏற்ப்படும். அமெரிக்க ஐக்கிய நாட்டில் மருந்துகளை விற்ப்பதற்க்கு கடுமையான சட்டங்கள் இருப்பது போன்று இந்தியாவிலும் அம்மாதிரியான சட்டங்களை கொண்டு வரவேண்டும் இம்மாதிரியான தவறுகள் செய்தவருக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றுவது போன்ற மிககடினமான சட்டங்களை இந்தியாவிலும் கொண்டுவரவேண்டும்.

உயிர்காக்கும் மருந்துகளை போலியாக விற்ப்பது என்பது கொலை குற்றத்திற்கு சமமானது என்பதாலும் மேலும் குற்றவாளிகள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கவும் மரண தண்டனை விதிப்பதில் தவறு இல்லை.

வெள்ளி, 26 மார்ச், 2010

பொழுது போக்கு

பொழுது விடிந்து பொழுது சாயும் அந்தி நேரம் வரை உலகில் உயிர் வாழும் பல உயிரினங்கள் தங்களது அன்றாட வேலைகளை செய்வதற்கு தவறுவது கிடையாது, இவற்றில் எறும்பைப் போன்ற சில பிராணிகள் மட்டும் விதிவிலக்கு. பல உயிரினங்களுக்கு இனச்சேர்க்கை கூட கிடையாது, இப்படி இந்த பிரபஞ்சம் இயங்கி வரும் நிலையில் மிகவும் உயரிய படைப்பான மனிதனுக்கு மட்டும் தனது பொழுதை போக்க வேறு ஏதேனும் தேவைபடுகிறது, திரைப்படம்வானொலி கணினி என்று எதுவுமே இல்லாத காலத்தில் மனிதனுக்கு வேட்டையாடுவது விரோதிகளுடன் சண்டையிடுவது, விரோதிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தேவையான உபகரணங்கள் போன்றவற்றை கண்டு பிடிப்பதில் தங்களது பொழுதை கழித்து வந்தனர்,
தங்களது கை கால்களின் அசைவைக் கொண்டு நடனம் போன்ற அசைவுகளை செய்து கண்டு களித்தனர், பாடுவதற்கு அறியாதிருந்த மனிதன் தன் குரலின் ஒலிகளை ஏற்படுத்தி அதனை ரசித்து பின்னர் தங்களது கூட்டத்தினருக்கு அந்த ஓசைகளை ஏற்ப்படுத்தி காட்டி பொழுதை கழிக்கபழகினர். மீன்பிடித்தல் எதிரிகளிடமிருந்தும் மிருகங்களிடமிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ள மர கிளைகளை வெட்டிகூர்மையான ஈட்டி உருவாக்கினர். இவ்வாறாக மனித இனம் மேம்பட்டு பல ஆயிரம் நூற்றாண்டுகள் கடந்து, இன்று முன்னோர்களின் பல அரிய கண்டுபிடிப்புகளால் தற்போதுள்ள நவீன வசதிகளை அடைந்துள்ளோம். இந்த வசதிகள் அனைத்தும் கண்டு பிடிக்கும்முன்னர் அவற்றை கண்டுபிடித்து உலகிற்கு வழங்கியவர்கள் இதன் மகத்துவங்களை அறியாமலும் அனுபவிக்காமலும் பின் வரும் சந்ததியினருக்கு வழங்கி சென்றுள்ளனர்.

சென்ற நூற்றாண்டின் மகத்தான கண்டு பிடிப்பான கணிணி இந்த நூற்றாண்டி இணையில்லாசேவைகளை வழங்கி உலகத்தின் அனைத்தையும் வீட்டினுள்ளே எடுத்து வரும் ஆற்றலைஅடைந்துள்ளது, இதன் பயனை அனுபவிக்கும் பலருக்கு இதனை கண்டுபிடித்த கால கட்டத்தில்உலகம் என்பது எங்கோ இருந்ததும் அவர்களின் இருண்ட காலத்தைப் பற்றியும் அறிந்திருக்கும்வாய்ப்பு உண்டா என்பது தெரியவில்லை. மரம் வைத்தவனால் அதன் பலனை அனுபவிக்கஇயலாததை வேறு ஒருவன் மட்டுமே அனுபவிக்க முடியும் என்பதையாவது நம் சந்ததியினர்அறிந்துள்ளனரா என்பதும் கேள்விக் குறியே.

பொழுதை போக்கும் சாதனங்களும் சாத்தியங்களும் நிறைந்து கிடக்கும் இன்றைய உலகில்மனிதர்கள் இவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் வேதனையாக உள்ளது.திண்ணை பள்ளிக்கூடங்களின் மண்ணில் விரலால் எழுதி பழகிய காலம் எத்தனையோநூற்றாண்டுகளுக்கு முன்னர் இல்லை, நமது பாட்டி தாத்தாக்கள் காலத்தில் தான் இருந்தது, பின்னர் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளால் மிகச் சிலரே எழுதி வந்த காலம், அதன் பின்னர் இறகில் மை தொட்டு எழுதியகாலம் பின்னர் காகிதம் கண்டு பிடித்து அதில் இறகைக் கொண்டு எழுதிய காலம் இவையெல்லாம் கூட நமது தாத்தா பாட்டிகள் காலத்தில் தான் நடந்திருக்கிறது.

திண்ணைகளில் கூட்டமாக உட்கார்ந்து கதை சொல்லுதல், அதன் பின்னர் தெருகூத்து, நாடகம்,பேசாத திரைப்படம், பல ஆண்டுகள் கழித்து பேசும் திரைப்படம் இன்றைக்கு ஹோம் தியேட்டர்,சிடி, விசிடி, செல்போன், தெருவெல்லாம் பொதுதொலைபேசி வீடுதோறும் தொலைகாட்சிபெட்டி, பொழுதை போக்கும் வசதிகள் அதிகம் பெருகி வரும் நிலையில், பொழுது போக்குவதற்க்கெனதங்களது நேரத்தை ஒதுக்கி பொழுதைபோக்க ஊர் தேடி போவதும் கூட முக்கியமானதாக உள்ளது.
இவற்றில் குறிப்பிடும்படியான ஒரு விஷயம் எத்தனைப் பேர் புதியவற்றை கண்டுபிடிப்பதில்பொழுதை கழிக்கின்றனர், எத்தனைப்பேர் ஏற்கனவே பலரால் கண்டுபிடிக்கபட்டவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வமுடன் உள்ளனர், எத்தனைப் பேர் பிறர் கண்டுபிடித்த சாதனங்களைமுறையோடு பயன்படுத்துகின்றனர், கணிணி, இணையதளம் இவை இரண்டையும் பலர்பயன்படுத்தும் முறை திரைப்படம், சிடி,விசிடி, தொலைபேசி, செல்போன் இருசக்கர வாகனம் கேமரா இன்னும் பல அறிய கண்டு பிடிப்புகளை பயன்படுத்தும் முறை இப்படி ஒவ்வொரு அறியகண்டு பிடிப்புகளை சமூகவிரோதிகளைத் தவிர பலரும் முறை தவறிதான் பயன்படுத்தி பொழுதை கழித்து வருகின்றனர்.
முறைதவறி பயன்படுத்தி அடுத்தவரை அதனால் பெரும் பாதிபிற்க்கு உள்ளாக்கும் நய வஞ்சகச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து சட்டத்திற்கு புறம்பான கொலைகள் கொள்ளைகள் இவைகணக்கில் அடங்குவதில்லை, கட்டுப்பாட்டிற்கும் அடங்குவதில்லை. மனிதனை விட விலங்குகளேபிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஒரே மாதிரியான இயல்புகளுடன் வாழ்ந்து மறைகின்றன.

வியாழன், 25 மார்ச், 2010

அதிசயம் ஆனால் உண்மை !!

கனவுகள் இல்லாத மனிதனே இல்லை. கனவுகளில் பல வகைகள் உண்டு, இயற்கையாக மனிதனுக்கு உறக்கத்தில் ஏற்ப்படுவது, தனது சொந்த மன விருப்பங்கள், இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று விரும்புவது, இதை கனவில் காண இயலவில்லை என்றாலும் செயற்கையாக எண்ணிப் பார்ப்பது, இதையும் கனவென்றே சொல்வதுண்டு. சில கனவுகள் நாம் எதிர்பார்த்திராத சம்பவங்கள் நடப்பது போல் கனவு காண்பது, ஒரு சமயம் அந்த கனவில் கண்ட காட்சிகளும் நிகழ்வுகளும் நிஜ வாழ்க்கையில் நடப்பதற்கு சாத்தியக் கூறுகளே இல்லை என்றாலும் கூட அப்படி ஒருகால் நடக்குமென்றால் தான் பெருத்த அதிர்ஷ்டம் உள்ளவனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்குமளவிற்கு ஏற்பட்ட கனவுகள்.


இன்னொரு வகை கனவுகள் இப்படியெல்லாம் நடந்துவிடக்கூடாது என்று பயத்தை ஏற்ப்படுத்தும் கனவுகள், கனவுகளைப்பற்றிய ஆராய்ச்சிகள் பல மேலை நாடுகளில் நடந்து கொண்டிருந்தாலும் கனவுகள் என்பது இயற்கையில் மனிதனின் பல அதிசய சக்திகளின் வெளிப்பாட்டில் இதுவும் ஒன்றாகவே கருதப்படுகிறது.  மனித உடலின் செயல்பாடுகளும் அதிலுள்ள அங்கங்களும் உலகிலேயே மிக அதிசயமான படைப்பாகவும் கருதப்படுகிறது. மனிதனின் மூளை இதயம் நுரையீரல் கண்கள் மூக்கு காது பற்கள் நாக்கு எலும்புகள் தோல் நகம் முடி நரம்புகள் ரத்தக்குழாய்கள் இன்னும் பல நுண்ணிய செல்கள் ரத்தத்தில் காணப்படும் வெள்ளை மற்றும் சிவப்பணுக்கள் இன்னும் பலவகையான உருப்புக்களைப்பற்றி விவரமாக ஆராய்ந்து கவனித்தால் உலகிலேயே மனிதனின் உடல் அமைப்பும் அதன் அதிசய செயல்பாடுகளின் வடிவமைப்பும் மிகவும் அதிசயிக்க தக்கதொன்று என்பதை அறிந்து கொள்ள முடியும்

மனித மூளையின் முழு செயல்பாட்டையும் இதுவரை முழுமையாக கண்டறிய இயலவில்லை அத்தனை அதிசய உருவும் செயல்பாடுகளும் கொண்டதாக உள்ளது. க்ளோன் என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு மனிதனைப்போல இன்னொரு மனிதனை உருவாக்க முடியும் என்று அறிவியலில் கண்டு பிடித்திருந்தாலும், க்ளோன் மூலம் உருவாக்கிய மனிதன் அதனை உருவாக்க மூலமாக இருந்த மனிதனின் எல்லா குணங்களையும் பெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்பதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளது. ஒரு தாயின் கர்பத்திலிருந்து பிறக்கும் சில இரட்டை குழந்தைகள் மட்டுமே ஒரே மாதிரியான உடல் செயல்பாடுகளை கொண்டதாக உள்ளது என்பதும் இயற்கையின் மற்றொரு அதிசயம்.

மனிதனை இயற்க்கை உருவாக்கியதற்கு நிச்சயம் ஏதேனும் காரணம் இருந்திருக்க வேண்டும் ஆனால் அவற்றை அறியாத மனித வாழ்க்கை வீணாகி விடுகிறதோ என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்று. அறுபது ஆண்டுகள் உயிர் வாழும் ஒரு மனிதன் விழித்திருப்பதும் முழு வளர்ச்சியடைந்து செயல்படுவதும் இருபது ஆண்டுகள் தான். குறுகிய காலமே வாழக்கூடிய மனித உடலும் மூளையும் தான் வாழும் காலத்தில் எதை சிந்தித்தது எதை செயல்படுத்தியது என்பது பின்னர் வருகின்ற சந்ததியினருக்கு உதவிகரமானதாக அமைகிறது.

தற்போது உலகில் பிறந்து வாழ்ந்து வருகின்ற மனிதர்களை விட அதிகமானோர் பிறந்து இறந்துள்ளனர் என்பது நிஜம், ஆனால் இனி பிறக்க போகும் மனிதர்கள் ஏற்கனவே பிறந்து இறந்தவர்களைவிட அதிகமானோராக இருக்க முடியுமா என்பதும் அவர்களது உருவமும் சிந்தனைகளும் செயல்களும் முந்தினவர்களைப்போலவே இருக்குமா என்பதும் சந்தேகத்தை கொடுப்பதாவே உள்ளது. ஏனென்றால் உலகின் சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களால் ஆக்சீஜன் குறைந்து கார்பன் டை ஆக்ஸைட் அதிகரித்து வருவதும் மண்ணின் ஈரத்தன்மை குறைந்து வருவதால் மண்ணின் தன்மை  மாறுபட்டு வருவதையும் நாம் அறிவோம். மண்ணின் தன்மை சுற்றுப்புறச் சூழல் போன்றவை மாறி வருவதால் இனி பிறக்க போகும் மனித இனமும் அதற்கேற்றார் போலத்தான் அமையும்.

அப்போது சிந்தனைகளும் செயல்களும் மாறிப்போகும், அதனால் அவர்களின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் முந்தைய மனிதனிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளது. கனவுகளும் கற்பனைகளும் வரும் சந்ததியினரை மாற்றாது மாறாக வரப்போகின்ற சந்ததியினரின் கனவுகளும் கற்பனைகளும் செயல்படுகின்ற விதமும் முந்தைய மனிதகுலத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது.


செவ்வாய், 23 மார்ச், 2010

சமுதாயப் புரட்சி

செய்திகளில் சூடு பறக்க வைக்கும் சன் செய்திகள் இன்று கல்கி ஆசிரம போதை நிலையை காண்பித்தது, சமுதாயத்தை சுத்தமாக்கும் இந்த முயற்ச்சியில் இந்த வருடத்தில் இரண்டு பிரபல சாமியார்கள் சிக்கினர். போதை நிலையில் இருப்பதும் ஒரு வகையில் ஆன்மிகம் என்பது ஐதீகம்தான். போதையில் தன்னை மறந்த நிலையில் செயற்கை இன்பம் பெரும் நிலையில், பகவானை தரிசிப்பதாக இவர்கள் சொல்லிக்கொள்வதும் ஆன்மிகம்.

போதை தலைக்கேறிய பின்னர் பாலியல் முறைகேடும் இணைந்து விடாமல் கவனத்துடன் இருக்கின்றார்கள் என்றால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சமுதாயத்தில் புரட்சி செய்து கொண்டிருக்கும் சன் செய்திகள், இந்த பணியில் மும்முரமாக ஈடுபடுத்திக் கொள்ளும் செய்தி சேகரிப்பவர்கள் அடுத்து எந்த சாமியாரை வேட்டையாடப்போகிறார்கள் என்று பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

சனி, 20 மார்ச், 2010

IPL- க்ரிகெட்டா, கிறுக்கா

கிரிகெட் என்பது வெறும் விளையாட்டு மட்டும்தானா, அல்லது அத்தியாவசிய தேவையா, கிரிகெட் என்பதை எதில்வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு அதன் புகழ் இந்திய மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று முதலிடம் வகிக்கிறது. பொழுது போக்கு அம்சங்களுக்கு எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் செலவு செய்வதற்கு ரசிகர் கூட்டம் நிரம்பி வழிவதுதான் இதன் மகத்துவத்திற்கு மிகவும் முக்கிய காரணம், கிரிகெட்டை விளையாட்டு என்றும் பொழுது போக்கு என்றும் அர்த்தப்படுத்தி பார்த்த நாட்கள் கடந்துவிட்டது தற்போது கிரிகெட் பலருக்கு முக்கிய வேலையாகவே ஆகிவிட்டது துரதிஷ்டவசமே.

பணமிருப்பவர் கையில் வியாபாரமாகிப்போன கிரிகெட், சூதாட்டக்காரர்களின் கையில் சூதாட்டமாகிப்போன கிரிகெட், ரசிகர்களின் கையிலே பைத்தியமாகிப் போன கிரிகெட், பத்திரிகைகளிலே தலையங்கமாகிப் போன கிரிகெட், பலரை கோடீஸ்வரர்களாக்கி பார்க்கும் கிரிகெட், சிரலரை ஏக்கப்பெருமூச்சு விட செய்யும் கிரிகெட், அரசியலில் கூட மூக்கை நுழைக்க பார்க்கும் கிரிகெட், பலரை பகல்நேர நட்சதிரங்களாக்கிய கிரிகெட், வேண்டாத விரோதங்களை சம்பாதித்த வீரர்களை சுமந்த கிரிகெட், 'லட்சிய' வீரர்களை கோடீஸ்வரர்களாக்கிய கிரிகெட், இப்படி பல உலக அற்புதங்களை உள்ளடக்கியுள்ளது கிரிகெட்.

நாட்டிற்கும் மிக முக்கியமாக இந்தியநாட்டிற்கு மிகவும் அவசியமானதாகி நாளுக்குநாள் தனது அந்தஸ்த்தை உயர்த்திக்கொண்டு வருகிறதை பார்க்கும் போது வருங்காலத்தில் கிரிகெட் அறியாதவரை, ஆர்வமில்லாதவரை இந்திய திருநாட்டில் வாழ தடை செய்தாலும் அதிசயப்படுவதற்க்கில்லை. நமது தேசத்தில் பிழைக்கத் தெரிவதைவிட நடிக்கத் தெரிந்திருப்பதும், கிரிகெட் தெரிந்திருப்பவராக இருப்பதும் கட்டாயமான தகுதிகளாகி அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிரிகெட் ஜுரம் இந்திய மண்ணை இறுக பிடித்திருக்கும் குணமாக்க இயலாத தீரா வியாதி. இந்திய மண்ணில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பினும் அது நாட்டிற்கும் வீட்டிற்கும் பயனளிக்கும் வகையில் உள்ளதா, கேள்வி மட்டுமே மிஞ்சும்.

சிறிய ஜப்பானில் குறைந்த மக்கள் தொகையில் எத்தனை எத்தனை அசர வைக்கும் சாத்தியங்கள் நடந்து வருகிறது என்பதை நமது இளைஞர் பட்டாளம் அறிந்திருக்குமா, அப்படி அறிந்திருந்தால் தன் 'பொக்கிஷ'ப் பொழுதை வீணே கழிக்க மனம் வருமா. யானை தன் பலத்தையும் பலகீனத்தையும் அறிந்து செயல் பட்டால் உலகமும் அதில் உயிர் வாழும் உயிரினங்களும் வாழ இயலாது, அது போல இந்திய நாட்டின் பலம், பலகீனம் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளப்படாதது தான் பலகீனம். எதிர்கால இந்தியாவை செழிக்கச் செய்யும் இன்றைய இந்திய வாலிபர்களின் ஒட்டு மொத்த பொழுது போக்கும் கடமை உணர்வும் வீணடிக்கப்படுவது எவ்விதத்திலும் சரியானது இல்லையே.

இன்றைய கிரிகெட் வீரர் நாளைய பிரதமர், ஜனாதிபதி, முதலமைச்சர், அமைச்சர் ஆவதில் மட்டும் என்ன விதி விலக்கா இருந்துவிடப் போகிறது. ஜனநாயகத்தில், மக்களாட்ச்சியில் எதுவும் நடக்கும் என்று எதிர்பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்பதைப்போல என்று தணியும் இந்த மட்டை பந்து தாகம்.

புகழ் ஒரு விதத்தில் லாகிரி வஸ்த்து

எழுதுவதில் சுகம் உள்ளதா, படிப்பதில் சுகம் உள்ளதா, எழுதுவதில் இன்பம் இருந்தால் எழுதிக்கொண்டே இருக்க இயலுமா, பலவற்றை படித்து நாம் உள் வாங்கியவற்றை நமது பாணியில் எழுத்துக்களில் கொண்டு வருவதும் அதற்காக மட்டுமே படிக்க வேண்டுமா, அறிந்து கொள்ளும் ஆவல் இருக்க வேண்டும் அப்போதுதான் நம்மால் முழு கவனத்துடன் படிப்பதில் உள்ளவற்றை கிரகிக்க இயலும், ஆர்வம் என்பது படிப்பதற்கும் எழுதுவதற்கும் ஏன் ஏற்படுகிறது, அப்படி ஆர்வம் ஏற்படாதவர் எண்ணிக்கை அதிகம்.

எழுதுவதும் படிப்பதும் மனிதனின் இயல்பா, இல்லையே, நாம் பழகிக்கொள்ளும் பல பழக்க வழக்கங்களில் இதுவும் ஒன்று. சில பழக்க வழக்கங்கள் நமக்கு அவசியம் என்று நம்புவதால் அவற்றை மென்மேலும் வளர்த்துக் கொள்ளுகிறோம், இந்நிலையில் நம்மை ஈர்க்கும் பல அறிய கருத்துக்கள் நம்மை அவற்றின் பால் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் துண்டி அவற்றின் மூலம் எழுதுவதற்கும் படிப்பதற்கும் நம்மை துரிதபடுத்துகிறது.

நாம் படித்ததில் நம்மை பாதித்தவற்றை, தன்னால் ரசிக்க முடிந்த பலவற்றை பகிர்ந்து கொள்ளும் ஆவல் நமக்குள் தூண்டப்படுகிறது. இவற்றை சொற்களின் வடிவமாக்கி எழுதி அவற்றை மீட்டு எடுக்கிறோம், நாம் எழுதி முடித்த பின்னர் அதை படிக்கும் போது பல விடுபட்ட கருத்துகளை அதினூடே எழுதி நம் உள் உணர்வை திருப்தி படுத்துகிறோம், அதே திருப்த்தியை படிக்கும் மற்றவரும் அடைந்து விட்டால், அதை அவர் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் போது இன்னும் அதிகமாக எழுத விழைகிறோம்.

எதன் ஆதாரத்தை வைத்து சொற்களை நாம் உருவாக்கினோமோ, அதற்க்கு நாம் பயன்படுத்திய முறை எதுவோ அதை மேலும் முனைந்து துரிதமாக செயல்படுத்த விழைகிறோம். இதில் எப்போது எவ்வாறு தடை ஏற்படுகிறது என்று யோசித்தால், பலருக்கும் படிக்கின்ற வாய்ப்புகள் குறைந்து வருதல், தாம் எழுதியவற்றை பிறர் பாராட்டாமல் விட்டுவிடும் போதுகூட இத்தகைய தடைகள் ஏற்படுகிறது.

ஆனால் ஒருவர் தான் எழுதிய அத்தனையும் மிக சிறப்பாகவே உள்ளது என்பதை மற்றவரது புகழை எதிர்பார்க்காமலேயே அறிந்து கொள்வதும் உண்டு. அப்படி அறிந்து கொண்டாலும் புகழ் என்பதற்கு அடிமையாகாத மனித மனம் கிடையவே கிடையாது. அப்படி அடிமைப்படுவதாலேயே அவரால் சிறந்த மிகச்சிறந்தவற்றை எழுதமுடிகிறது என்றும் கூட நம்பலாம்.

படிக்கும் வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ளும் போது எழுதும் வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்ள இயலுகிறது, இதனூடே எழுத்துக்களைப்பற்றிய சிறந்த விமர்சனங்களை காணும்போது மிகச்சிறப்பாக எழுத்தும் ஆவலும் மேலும் தூண்டப்படுகிறது.

ஞாயிறு, 14 மார்ச், 2010

ஜனநாயகமும் மக்களாட்சியும் !!!

ஒரு ஏழைத் தகப்பன் தன் பிள்ளைகள் சுகமாக வாழ்வதற்காக பாடுபட்டு, ரத்த வியர்வை சிந்தி, தன் வாழ்வில் இனி வேறு துயரே கிடையாது என்கின்ற அளவில் அத்தனை வேதனை துயர் என்று எத்தனையோ கஷ்டப்பட்டு சேர்த்து வைத்து போகும் சொத்துக்களின் மதிப்பை அறிந்துகொள்ளும் உணர்வற்ற அவரது வாரிசுகள், அந்த சொத்துக்களை அவரவர் விருப்பபடி ஆண்டு அழித்து, தன் தகப்பனும் முப்பாட்டனும் சேர்க்க எத்தனை துயரடைந்தனர் என்கின்ற வருத்தம் சிறிதேனும் இன்றி, சீரழிப்பதைப் போன்று ஜனநாயகமும் மக்களாட்சியும் இன்று அல்லலுற்று வருகிறது.

உரிமைகளைப் பற்றியும் சட்டதிட்டங்களைப்பற்றியும் கவலை கொண்டு பிறர் வாழ நன்மை செய்வதே தங்களது குறிக்கோள் என்று முழக்கமிடுவோர் கையில் ஜனநாயகம் என்னும் செத்துப்போன விலங்கை காக்கைகளும் கழுகும் கூட்டம் கூடி கிடைத்தவற்றை பிடுங்கி இழுத்துக் கொண்டு போவது போல உள்ளது தற்போதைய ஜனநாயகம். மகளிர் மசோதாவை குரல் வாக்கெடுப்பின் மூலம் கொண்டுவந்தாலும், குறைகளைக் கூவி பொய்யாக்கி, கண்துடைப்பு, சதி வேலை என்று ஏதோ ஒரு வழியில் தடை செய்துவரும் 'நல்ல' உள்ளங்கள் நிறைந்த ஜனநாயக இந்தியா நம் நாடு. மக்களவையில் சில உறுப்பினர்கள் சபாநாயகரின் மேசை மீதிருக்கும் காகிதங்களை எடுத்து எறிவதும், கூட்டமாக எழுந்து கோஷமிடுவதும் ஜனநாயகத்தின் உச்சகட்ட நடவடிக்கைகள். இவர்களின் இந்த நடவடிக்கைகளை கவனிக்கும் எதிர்கால சந்ததியினருக்கு இவர்கள் காட்டும் வழி மிகவும் 'போற்றத்தகுந்தது'.

எதை நாம் நம் வருங்கால சந்ததியினருக்கு கற்றுத்தரப் போகிறோம்? அரசியலுக்குள் நுழைவதற்குத் தயங்கும் சிறந்த அரசியல்வாதிகளை நம் நாடு நிச்சயம் இழந்துகொண்டு தான் இருக்கிறது. அரசியல் என்றாலே ரவுடிகளும், 'சாக்கடைகளும்' தான் நுழைய முடியும் என்கின்ற எண்ணம் வேரூன்றுவதற்கு காரணம் அரசியலில் அப்படிப்பட்டவர்களால் தான் தாக்கு பிடிக்க இயலும் என்கின்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.

'இனியொரு விதி செய்வோம்' என்று யார் வந்தாலும் அவர்களின் விதி ஏற்கனவே அதில் உள்ளவர்களின் வசமாகிவிடுகிறது. மகாத்மா காந்தி, நேரு, வல்லபாய் படேல் போன்ற அத்தனைப் பேரும் உயிர் பெற்று மீண்டும் இந்தியாவிற்கு வந்தால் ஜனநாயக இந்தியா புத்துயிர் பெரும். ஓட்டுப் போடுவதைக்கூட நாளடைவில் ஜனநாயகத்திலிருந்து எடுத்துவிடும் நிலை ஏற்பட்டாலும் அதிசயிக்க ஒன்றும் இல்லை, ஏனென்றால் ஓவ்வொரு முறையும் ஒட்டு போடும் மொத்த எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்து 65% ஓட்டுக்கள் பதிவானால் அதிகமாக ஒட்டு பதிவானதாக அறிவிக்கப்படுகிறது.

ஜனநாயகம், மக்களாட்சி இவை இரண்டும் படுத்தும் பாடு என்பதை கண்கூடாக காண மகாத்மா காந்தியும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அத்தனை மக்களும் இப்போது வந்து இந்தியாவை பார்க்கவேண்டும், எதற்காக சுதந்திரம் பெற இரத்த வியர்வை சிந்தினோம் என எண்ணி ஆறாத் துயரடைவார்கள். எதிகால இந்தியாவே உன் ஜனநாயகமும் மக்களாட்சியும் எப்படி இருக்கப் போகிறதோ!!!

திங்கள், 8 மார்ச், 2010

பெண்ணின் உண்மை நிலை என்ன?

இன்றைக்கு பெண்கள் மிகுந்த முன்னேற்றம் கண்டிருப்பதாக சிலர் சொல்லி கொள்வது, பெண் தன் உரிமையை தான் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றவர் கொடுப்பதில் இல்லை என்றும் சொல்லி கொள்கின்றனர். பெண்களை சக மனித இனமாக பார்க்கும் பெரிய மனதுடையோர் மட்டுமே இப்படி சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள், இவர்களின் மொத்த விழுக்காடு எவ்வளவு என்று கணக்கெடுப்பு ஒன்றை நடத்திப்பாருங்கள் அப்போது பெண்களின் இன்றைய உண்மை நிலை என்ன என்பது விளங்கும்.

பெண் என்பவளை தெய்வமாக பார்க்கும் தேசத்தில் பெண்ணுக்கெதிரான பல வன்முறைச் செயல்களும், ஈவ் டீசிங், வரதட்சிணைக் கொடுமைகளும் நடந்துக் கொண்டு இருக்கிறது, நதியை பெண் தெய்வமென்போம், தாயை தெய்வமென்போம், தேசத்தை கூட பெண் தெய்வமென்கிறோம், ஆனால் பெண்ணை மட்டும் ஏன் சக மனுஷியாகக் கூட ஏற்க மறுக்கிறோம்?, போகப் பொருளாக்கி மகிழ்வுறுகிறோம், வேசியாக்கி உறவு கொள்கின்றோம், பிள்ளை பேற்றின் கருவியாக்கி பூரித்துப்போகிறோம்.

சம உரிமைகளைப் பற்றி பேச்சு அளவில் மட்டுமே நிற்கின்ற சுதந்திரம், 33% இட ஒதுக்கீடு கொடுக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது கேள்விக்குறியே. ஆணைபோன்று பெண் உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டு தெருவில் நடக்க முடியுமா, பெண்போலீசுக்கு துணைக்கு ஆண் போலீசு தேவைப்படுகிறதே பிறகென்ன சம உரிமை என்று கேட்க்கும் மேதாவிகள் நிறைந்து கிடக்கும் நாட்டில் பெண்ணுரிமையைப் பற்றி பேசுவது அநாகரீகம்.

தற்காப்பு கலைகளை கற்று கொடுத்தால் பெண்ணுக்கு பாதுகாப்பு என்று நம்மை எச்சரிக்கை செய்வது எது?, நகையணிந்து தனியே வீதியில் செல்லாதே, ஆணைப் போன்ற உடை அணியாதே, ஆண்களை கவரும் வண்ணம் உடையணியாதே, இருட்டில் தனியாக வீதியில் நடக்க இயலாத சூழல், குறித்த நேரம் தவறி தாமதித்து வீட்டிற்கு திரும்பாதே. இத்தனை கட்டுபாடுகள் பெண்ணிற்கு உள்ளது எதனாலே?

இன்னும் நாம் ஆதிகால மனிதர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதற்கு இவற்றைவிட என்ன சான்று வேண்டும். நாகரீகம் என்பதின் அர்த்தம் நமது அகராதியில் வேறாக உள்ளதே அதன் காரணம் என்ன?, படித்ததினால் நாம் எவற்றை கற்றுக் கொண்டோம்? எதற்காக படித்தோம், வேலைக்கு சென்று கோடிகளை புழங்குவதற்கு மட்டும் தானா, படிப்பறிவு நம் சமுதாயத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்ப்படுத்தி உள்ளதற்கு சான்றுகள் பங்களா அல்லது வீடு கார் நிலங்கள், வங்கியில் சேர்மானம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுதல் படிப்பினால் ஏற்படுகின்ற சமுதாய மாற்றம் என்று சொல்லிக் கொள்வோமா. சூரிய சந்திர கிரணங்களில் சாப்பிடாதே, குளித்து கோவிலுக்குச் சென்று கும்பிட்ட பிறகு சாப்பிடு, இப்படி பலவற்றை கடை பிடிக்கின்றோம், படித்ததினால் எதை கற்றுக்கொண்டோம்?

கற்றுகொண்டவற்றை ஏற்க மறுக்கின்றோம்? கடைபிடிக்க தவிர்க்க காரணம் என்ன, ஜீன் பான்ட்டும் டி ஷர்ட்டும் காலில் ஸ்போர்ட்ஸ் ஷூவும் அணிந்து கொண்டு அல்லது சூட்டும் கோட்டும் டையும் உடுத்திக்கொண்டு வெள்ளைக்காரனைப்போல ஆங்கிலம் பேசி அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவரை திருமணம் செய்துகொள்வதை நாம் நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில் நிற்பதாக அர்த்தம் கொள்ளலாமா? வேறு எதைத்தான் நாகரீகம் என்று நாம் புரிந்து வைத்திருக்கின்றோம்?

காலப்போக்கில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படலாம் என்று இன்னும் பல நூற்றாண்டுகள் காத்திருங்கள் பெண்களே, சுதந்திரம் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

சனி, 6 மார்ச், 2010

இணையதள கிரிமினல்கள்

திறந்திருக்கும் வீட்டில் நாய் நுழையும் என்பார்கள், திறந்திருக்கும் வீட்டிலும் பூட்டியிருக்கும் வீட்டிலும் திருடர்களும் கொள்ளை, கொலைகாரர்களும்தான் நுழைகிறார்கள்.

வீட்டில் மட்டுமில்லை, அடுத்தவரின் பதிவில் வைரஸ் கிருமிகளை நுழைத்து வேறு வேலைவெட்டி ஏதுமில்லாமல் எப்போது பதிவை திறந்தாலும் அதில் அவர்களின் 'அதிவீர' விளையாட்டுகளை இணைத்து நுழையவிட்டு வேடிக்கை பார்க்கும் வேலையற்ற முடவர்கள்.

இவர்களுக்கு இணையதளத்தையே தாங்கள் கைக்குள், கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கின்றோம் என்கிற பெருமை போலும்!! எந்நேரமும் இணையதளத்தில் ஏடாகூடம் எதையாவது அரங்கேற்றிய வண்ணம் இருப்பது மட்டும் தான் இவர்களின் 'வீர செயல்'.

சோற்றுக்கு பணம் சம்பாதிப்பதும் இணையதளத்திலேயே பல் துலக்ககூட சமயமின்றி மெத்தை போட்டு உறங்குவதும் கூட keyboard மீதுதான். வக்கிர புத்தி மிக்க இந்த கயவர்கள் திருடும் வீடுகளைக்கூட இணையதளம் மூலம் தான் குறி வைக்கின்றார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. இதற்குப் பின்னால் ஒரு பெரிய சதி கும்பல் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்க்கில்லை, தொடரும் இவர்களின் இந்த செயல்கள் மூலம் சந்தேகத்தை உறுதிபடுத்துவதாகவே உள்ளது.

"போயி வேற வேலைய பாருடா.......புத்தி இல்லாத முடவனே" என்று சொல்லத்தூண்டுகிறது இவர்கள் இணையதளத்தில் ஆடுகின்ற கொலைவெறியாட்டம்.

வெள்ளி, 5 மார்ச், 2010

எனது ஹைக்கூ

தலை சுற்றினாலும்
கண்ணொளி மங்கவில்லை
கலங்கரை விளக்கில்.

ஓயாமல் பெருக்கினாலும்
முற்றத்தில் குப்பை
தென்னங்கீற்றின் நிழல்.

தினம் கடலில் மூழ்கி
எழுந்தாலும்
சூரியனில் வெப்பம்.

கருமி வீட்டின்
மர நிழலில்
வழி போக்கன்.

தீயில் காகிதம்
கருகவேயில்லை
ஓவியனின் திறமை.

குப்பை கூளத்தில்
கோழி இரை
தேடியது.

செத்துக் கிடந்தவனின்
மீது எறும்பும் ஈயும்
இரை தேடியது.

பிச்சைக்காரனின்
பந்திக்கு
நாய்களும் விருந்தினர்கள்.

நீண்ட தன் நிழல்
கண்டு குதூகலித்தான்
குள்ளன்.

சுண்டல் விற்கும்
சிறுவன் உண்டு
இரண்டு நாளாம்.

பூ விற்கும்
சிறுமி பெயர்
ரோஜா என்றாள்.

திருடன் வீட்டு
பூட்டிற்கு
சாவி கிடையாதாம்.

பள்ளியறைகுள்ளே
மணமகன்
வாத்தியாராம்.

வீட்டிலிருந்த
காற்றாடி
காற்றடித்தும் ஆடவில்லை.

பிச்சி பூ
வைத்திருந்தாள்
இதழேதும் பிய்யாமல்.

வியாழன், 4 மார்ச், 2010

எனது ஹைக்கூ

அறிவை முதலீடு
செய்தவனுக்கு

அறிவு
பெருகிற்று.

பணத்தை
முதலீடு
செய்தவனுக்கு

பணம்
பெருகிற்று.

அறிவு பணம் முதலீடு
செய்தவனுக்கு

பட்டமும்
பதவியும் கிடைத்தது.

பொய்யை முதலீடு
செய்தவனுக்கு

வெறுமை
கிடைத்தது.

விதை எதுவோ
செடியும்

அதுவே
?

விதை
தீமை
அறுவடை

தீமை.


உயர
உயர பறந்தாலும்
குருவி
தரைக்கு
வந்தே
தீரும்.

உயர
விவேகம்
அதி
விவேகம்
வீழ்ச்சி
.

வெற்றியும்
மகிழ்ச்சியும்

தொடரும்
போது எதிர்பாரா
துயரும்
தோல்வியும் காத்திருக்கும்.

சுகத்தில்
முழ்கி கிடக்கும்
தருணம்
வாயிலில்
காத்திருக்கும்
துயர்.

உயர
உயர ஏறிச்செல்லும்
பாதையின்
மறுபக்கம்
பாதாளமும்
இருக்கும்.

ஒளியின்

மறுபக்கம்
காரிருள்
.

பூமியில்
ஆனந்தம்
நித்தியம்
என்று
யார்
சொன்னார்.

நித்திய
ஆனந்தம்
இறைவனடி

சேர்த்தல்
அன்றோ.


புதன், 3 மார்ச், 2010

சாமியார் வேடத்திலிருந்து விமோசனம் கிடைத்தது


பிரம்மாச்சாரிய வாழ்க்கை என்பது மிகவும் கடினமானது, பல யோகிகளும் முனிவர்களும் தன் மனதை கடவுளின் பால் ஒருமனப்படுத்தி ஞான முக்தி பெற்றனர். அப்படிப்பட்ட வாழ்க்கையை தன் மனதின் முழு விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு அதிலேயே வாழ்வென்பது கயிற்றின் மீது நடப்பதைபோன்றது, இதன் ஒரு பகுதியாக, திருமணமாகாத பாதிரியார்களால் பாலியல் பிரச்சினைகள் ஏற்ப்படுவதை தவிர்க்க மார்டீன் லூத்தர்(1517) போராடவேண்டியிருந்தது, பிராட்டஸ்டன்ட் என்ற பிரிவு கிறிஸ்த்தவர்கள் உருவாக்கப்பட்டனர். அதற்க்கு முன்னதாக ஆலயங்களிலிருந்த பாதிரியார்கள் திருமணமாகாதவர்களும், கன்னியாஸ்த்ரீகளும் திருமணமாகாதவர்களுமாக இருந்தனர். இதனால் நாளடைவில் பாலியல் ரீதியான சர்ச்சைகளுக்கு இலக்காகும் வாய்ப்புகள் மிகுந்திருந்தன, பிராட்டஸ்டன்ட் என்ற பிரிவினர் திருமணம் செய்து கொண்டு இறைவனின் திருப்பணிகளை செய்யலாம் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டது.

சீட்டு கம்பெனி மோசடி, வீடு புகுந்து திருட்டு, பணத்திற்காக ஆள் கடத்தல், கொலை கொள்ளை வழிப்பறிப் போன்று சாமியார் வேடமிடுதல் ஒன்றாகிப்போனது. கைதாகும் அத்தனை சாமியார்களும் போலிகள் என்று அடையாளம் கண்டுபிடிக்காமல் நம்பியது ஏமாந்தவரின் தவறு. லஞ்சம் கொடுத்தவர் வாங்கியவர் இருவரையுமே குற்றவாளிகளாக தீர்ப்பது போல மேற்குறிப்பிட்ட மோசடிகளில் ஈடுபட்டவர்களையும் [சீட்டு கம்பெனியில் சீட்டு கட்டியவர், சாமியாரிடம் ஏமாந்தவர் என இருதரப்பினரும்] குற்றவாளிகளாக குற்றம் சுமத்தப்படும் போது இத்தகைய பிரச்சினைகள் ஓரளவிற்கு கட்டுக்குள் வருமோ?!!

எத்தனை நாளைக்குத்தான் நடித்துகொண்டிருக்க முடியும், நித்தியானந்தாவிற்கு ஒருவழியாக அந்த வேஷத்திலிருந்து நிரந்தர வேடத்திற்கு விமோசனம் கிடைத்துவிட்டது.

தகுதிவேண்டும்















மனிதர்களில்தான்
எத்தனை வகைகள், உழைத்து முன்னேற விரும்பி உழைப்பையே முதலீடாக வைப்பவர்கள், பிறர் உழைப்பிலேயே காலத்தை ஓட்டுபவர்கள், எதற்கெடுத்தாலும் நடித்தே பிழைப்பவர்கள், பிறரை குறை சொல்லி வசைபாடியே பிழைப்பவர்கள், பிறர் வசைபாடி குறை சொல்வதை ஜால்ரா போட்டே பிழைப்பை நடத்துகிறவர்கள், நாட்டில் நடக்கும் எதுவும் அவசியமற்றது என்று ஏதோ ஓர் உலகத்தில் வாழ்பவர்களைப்போல வாழ்பவர்கள், வாழ்க்கையில் முன்னேறியவர்களை பார்த்து பொறாமை பட்டே காலத்தை கழிப்பவர்கள், இன்னும் எத்தனை எத்தனை முகங்கள், மனிதர்கள். உலகில் தன்னை தவிர பரம யோக்கியன் யாருமே இல்லை என்கிற அயோக்கியர்கள்.

நித்தியானந்தாவைப் பற்றிய ஆபாச படங்கள் வெளிவந்ததில் என்ன புதுமை கிடக்கிறது, இயேஸு கிறிஸ்து சொன்னதைப்போல 'உங்களில் யாராவது பாவம் செய்யாதவர்கள் இருந்தால் இந்த பெண்ணின் (வேசி) மீது கல்லெறியுங்கள்' என்றார். அங்கு அவள் மீது வேசி என்ற குற்றம் சுமத்திய அனைவரும் தங்கள் கைகளிலிருந்த கற்களை கீழே போட்டுவிட்டு திரும்பி போனார்கள் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது.

ஒருவரை குற்றவாளி என்று நியாயம் தீர்க்க நாம் குற்றமற்றவர்களாக இருத்தல் மிக அவசியம் என்கிறது பைபிள். கடவுள் ஒருவரே நியாயாதிபதி அவருக்கு மட்டுமே ஒருவனை குற்றவாளி என்றும் நிரபராதி என்றும் நியாயம் சொல்லும் அருகதை உள்ளது. உலக பிரகாரமாக ஒரு குற்றவாளியை தண்டிக்க நீதிமன்றம் உள்ளது, நீதிமன்றத்தில் விசாரணை உள்ளது, அதற்குப் பின்னர் நீதி வழங்கும் உரிமையும் நீதிபதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியே நீதிபதியால் ஒருவன் குற்றவாளி என்று தீர்ப்பு சொல்லபட்டாலும் அதைப் பற்றி விமர்சிக்க தகுந்த உத்தமர் மானிடராய் பிறந்தவரில் ஒருவர் கூட இருக்க முடியாது.

'மற்றவனை நியாயம் தீர்க்கும் முன் உன்னை நீயே நியாயம் தீர்த்துகொள்' என்கிறது பைபிள். D.G.S.தினகரனை பற்றியோ, பால் தினகரனைப் பற்றியோ, மோகன் லாசரசைப் பற்றியோ, கலைஞர் M. கருணாநிதியைப் பற்றியோ, பில் கிளிண்டனைப் பற்றியோ, காஞ்சியைப் பற்றியோ, பிரேமானந்தாவைப் பற்றியோ, நித்தியானந்தாவைப் பற்றியோ, யாரைப்பற்றி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம், வசை பாடலாம், ஆனால் அதற்க்கு முன், அதற்கான தகுதி தனக்கு உள்ளதா என்று 'தன்னைத்தானே நியாயம்' விசாரித்துகொள்வது முதல் வேலை. அதை மறந்துவிட்டு அடுத்தவர் குற்றத்தை பூதகண்ணாடி வைத்து பார்த்து எள்ளி நகைப்பவர்களை மனநோயாளி என்று சொல்வதில் பிழை கிடையாது.


எனது ஹைக்கூ



பகைஞன்
வீட்டு
மரமல்லி வாசம்
மூக்கை துளைத்தது.

பறையை அடித்துக்
கிழித்தான்
செவிடன்.

காற்றில் ஆடிய திரைச்சீலை
உள்ளிருந்த எதையும்
மறைக்கவேயில்லை.

மேகம் வரைந்த
ஓவியங்களை
கலைத்துசென்றது காற்று.

தாய்பசுவும் கன்றுக்குட்டியும்
ஒன்றையொன்று
'அம்மா' என்றது.

சீருடையணிந்தவன்
மாணாக்கன்
சீருடையணியாதவர் வாத்தியார்.

செவ்வாய், 2 மார்ச், 2010

கான்க்ரீட் வீடுகள்


குடிசைகளை மாற்றி கான்க்ரீட் வீடுகள் கட்டித்தருவதற்க்கு தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, சிறப்பான திட்டம், நம் நாட்டிற்குத் தேவையான திட்டம், ஏற்கனவே குடிசைமாற்றுவாரியத்தின் மூலம் பல ஏழைகளுக்கு அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டித்தரப்பட்டுள்ளது, கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பதவியில் இருக்கும்போதே கான்க்ரீட் வீடுகள் கட்ட திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தபடுவதும் மிகவும் அருமையான செய்தி.

பலர் அரசு கட்டி கொடுக்கும் வீடுகளை பெற்றுக்கொண்டு அதை அதிக விலைக்கு விற்று பணமாக மாற்றிக்கொண்டு விடுவதும் குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்பட்ட வீடுகளில் நடந்துள்ளது. தெரு ஓரங்களில், குடிசைகளில் வாழ்வதையே அவர்களது சுதந்திரமாக கருதுகின்றார்களோ என்னவோ தெரியவில்லை. பொது கழிப்பிடங்களைகூட அசுத்தப்படுத்துவதில் நம் நாட்டிற்கு ஈடு இணை வேறு எங்கும் காண இயலாது. ஒரு இடத்தில் கூட பொது கழிப்பிடம் சுத்தமாக பார்க்க முடியாது. கட்டணம் வசூலித்தாவது சுத்தமாக வைத்துகொண்டால் போதும் என்ற நிலைமைதான் எங்கும் காணப்படுகிறது.

குடிசைமாற்று வாரியம் கட்டிய கட்டிடங்கள் இருக்கும் பகுதிக்கு போனால் கழிவுநீர் கால்வாய்களும் அதில் கொசுக்களும் அங்கு நடமாடும் கால்நடைகளும் வியாதிகளின் பிறப்பிடமாக திகழ்வதை காண முடியும். கான்க்ரீட் வீடுகள் கட்டித்தருவதால் மழை காலத்தில் ஏரிகளிலும் குளங்களிலும் மழை வெள்ளம் ஓடும் பகுதிகளிலும் வீடுகளை கட்டிக்கொண்டு வாழும் பலர், மழை வந்தவுடன் வீடு வெள்ளத்தில் மூழ்கிவிட்டது அரசு தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூப்பாடு போடுவது நிறுத்தப்படும்.

பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை பொறுத்த அளவில், கால தாமதமாக இந்த விலையேற்றம் இந்த பட்ஜெட்டில் வந்துள்ளதற்கு நாம் நன்றி சொல்வதுதான் பொருத்தமானது. இன்றைய உலக பொருளாதார நெருக்கடியில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் பீப்பாய் ஒன்றின் கொள்முதல் விலைக்கும் சாதாரண குடிமகனின் கொள் முதல் விலையையும் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த விலையேற்றம் நியாயமானதுதான். எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்தால் அதில் ஏற்படுகின்ற இழப்பை சமாளிக்கும் நிலை தற்போதுள்ள நிலையில் இயலாத ஒன்று.

விலைவாசி ஏற்றமும் இதே காரணங்களால்தான் உயர்த்தப்பட்டுள்ளது, இந்தியநாட்டில் மட்டுமே இந்த விலையேற்றம் இல்லை உலகெங்குமுள்ள நாடுகளில் இதே சூழல்தான் இருந்து வருகிறது, இந்நிலையை அறிந்திருந்தும் கூட அதை எதிர்த்து போராடுவது என்பது வருந்தத்தக்க நடவடிக்கை என்றே நினைக்க முடிகிறது.