வியாழன், 28 அக்டோபர், 2010

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

"ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்"

சிக்கனம் என்பதைப் பற்றி எழுதத் துவங்கிய நேரமோ என்னவோ தெரியவில்லை தொடர்ந்து எழுத இயலாமல் போனது, சிக்கனத்திற்க்கும் சேமிப்பிற்கும் நிறையவே சம்பந்தம் உண்டு, சில கருமிகள் எச்சில் கையினால் காகத்தை கூட துரத்த பயப்படும் நபர்களுக்கு பணம் சேருவதும் உண்டும், ஒரு பழைய மொழி உண்டு 'இறைக்கின்ற கிணறுதான் சுரக்கும்' என்பார்கள், ஆனால் இறைத்துக்கொண்டே இருந்தால் காய்ந்து போகும் நிலைதான் தற்காலத்தில் காணப்படும் நிலையாக உள்ளது, சிலர் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று முயற்சிகளை மிகவும் கஷ்டப்பட்டு செய்து பார்க்கும் போதுதான் என்றைக்கும் இல்லாத அதிக செலவினங்கள் ஏற்பட்டு கையில் ஒரு பைசா கூட இல்லாமல் போவதும் உண்டு, இதற்க்கெல்லாம் நாம் காரணமில்லை,

சிக்கனக்காரர்களிடம் பணம் தங்குவதை நம்மால் காண முடிகிறது, சிக்கனத்திற்க்கும் கருமிக்கும் என்ன வித்தியாசம், ஒன்றையும் சாப்பிடாமல் எங்கேயாவது ஓசி சாப்பாடு கிடைக்குமா என்று அலைந்து கொண்டு தன் கையிலிருக்கும் பணத்தை தனது பசிக்காக செலவழிக்க தயங்குபவன் கருமி, சிக்கனம் என்பது, கையிலிருக்கும் இருப்பிற்க்கேர்ப்ப செலவு செய்து அன்றைய பசியை ஆற்றி அடுத்த நாளைக்கும் மீதம் எடுத்து வைப்பவர் சிக்கனக்காரர். இதில் ஒரு விஷயம் என்னை சிந்திக்க வைப்பதுண்டு, தன் கை காசை செலவழித்து வயிற்று பசியை தீர்க்காத தனது பணம் வேறு எதற்கு என்பதும், அவ்வாறு கருமித்தனம் செய்தே கோடிகளை சேமித்து வைக்கும் பணக்காரர்களும் நிறையவே உண்டு என்பதும் உண்மை.

பணமும் காசும் சிக்கனக்காரர்களிடமும் கருமிகளிடமும் மட்டுமே தங்கும் இயல்பை கொண்டதாக காணப்படுவது ஏன், சில பணக்கார வீடுகளில் வேலைக்காரர்களுக்கு குடிப்பதற்கு காப்பி அல்லது தேநீர் கொடுப்பதாக வாக்குக்கொடுத்திருந்தால் வெல்லம் போட்ட தேநீரையே பருக கொடுப்பது, நியாய விலைக்கடையில் வாங்கிய அரிசியில் சமைத்த சோற்றை உண்ண கொடுக்கும் கொடூரங்களும் உண்டு. இப்படிப்பட்டவர்களை கருமியில் சேர்த்துக்கொள்ளலாம், இவர்களிடம்தான் பணம், பொருள், நகை, நிலம், வீடு என்று ஐஸ்வரியங்கள் எல்லாமே வந்து குவிந்து கிடப்பதைக் காணுகின்ற போது என் கற்பனையில் தோன்றுவது, கையெல்லாம் குஷ்டரோகத்தினால் பழுத்துக் துர்நாற்றம் வீசுகின்ற ஒருவர் மிகவும் சுவையான பிரியாணி அல்லது வேறு சுவையான உணவை பரிமாறுவது போன்றது,

காசும் பணமும் கருமியிடம் சேர்வதின் பொருளென்ன, நீர் பள்ளத்தில் சேரும் ஆனால் அந்த நீர் பூமியையும் அதன் அருகில் உள்ள தாவரங்களுக்கும் மிருகங்களுக்கும் ஏன் மனிதர்களுக்கும் கூட பெரும் உதவியாக இருப்பதுண்டு, ஆனால் கருமியின் பொருள் வேறு ஒரு சோம்பேறியிடம் சென்றடைவது வழக்கம், இந்த சோம்பேறிகள் யார் என்பதை கவனித்தால், கருமிகளால் உருவாக்கப்பட்ட அவர்களது வாரிசுகள், அல்லது வாரிசுகளே இல்லாத கோவில் சொத்தாக மாறுகின்ற வாய்ப்பை பெறுகின்ற ஐஸ்வரியங்கள், ஐஸ்வரியத்தை அடைவதற்காகவே காத்திருந்த உறவினர்கள் என்று கருமி அடைகாத்த பொருள் அத்தனையும் சென்றடையும் இடம் மிகவும் மோசமானதாகவே காணப்படுகிறது.

சிக்கனம் செய்து சேமித்த பணம் பொருள் நகை வீடு நிலம் எதுவாக இருப்பினும் பல சந்தர்ப்பங்களில் சேமித்தவரின் உடல் நலன் மற்றும் பலவித தேவைகளுக்கு பயன்படுவதை யாராலும் மறுக்க இயலாது. சிக்கனம் கருமித்தனம் இவற்றைத்தவிர வேறு ஒன்று உண்டு அது இவற்றிக்கு முற்றும் எதிரான ஆடம்பரம், சிலர் வரும்படிக்கு அதிகமாக செலவழித்து தங்களது அந்தஸ்த்தை உயர்த்தி காண்பிக்க பெரும்பாடுபடுவார்கள், சிலர் அடுத்தவருக்கு காண்பிப்பதற்காக இல்லையென்றாலும் வரவை விட அதிகம் செலவழித்தே கடன்காரனாகி அவதியுறும் நபர்களும் உண்டு, இவர்களை திருத்துவது இயலாத காரியம், இவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தின் கதி அதோ கதிதான், இந்த கெட்ட பழக்கம் வாலிபபருவத்திலேயே இவர்களிடம் தேடிவந்து ஒட்டிக்கொள்ளும், இன்னும் சிலர் சிறு வயது முதலே வீட்டில் திருடி அக்கம்பக்கத்தில் கிடைத்த பொருட்களை எடுத்துச் சென்று விற்று ஆடம்பரத்தை அல்லது தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டு தீய பழக்கத்திற்கு அடிமைகளாகி விடுகின்றனர்.

பெற்றோர்கள் குழந்தைப் பருவம் முதலே இத்தகை செயல்களை கண்டு பிடித்து திருத்தாவிடில் இவர்களது நிலைமை சமூக விரோதிகளை உருவாக்கும். சிக்கனம் சேமிப்பு, ஆடம்பரம், தேவைக்கு ஏற்ப செலவழித்தல், கருமித்தனம் இவை எல்லாமே பொருளாதாரத்தை சார்ந்து இருப்பதால் அடிப்படை காரணம் தனிப்பட்ட நபரின் சிறு வயது முதலே கற்றுக்கொடுக்கப்பட வேண்டிய நல் ஒழுக்கங்களில் இவைகளும் மிகவும் முக்கிய பங்கு வகிப்பவை என்பதை பெற்றோர் நன்கு உணர வேண்டும், பிறவியிலேயே கருமியாகவும் ஆடம்பரமாகவும் பிறக்கும் நபர்களும் உண்டு எவ்வாறிருந்தாலும் ஒருவரின் வளர்ப்பு முறை என்பது எந்த பழக்க வழக்கத்திற்கும் மிகவும் அடிப்படையான சிறந்த காலம் என்பது உறுதி.

சிறந்த மனிதர்களை உருவாக்குகின்ற முக்கிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு தன் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றினால் சிறந்த எதிர்கால தலை முறைகள் உருவாகும் வாய்ப்பு உண்டு.

<><><><><><><><><><><>

வெள்ளி, 15 அக்டோபர், 2010

சிக்கனம்

சிக்கனம் என்பதற்கு முழுமையான விளக்கமளித்து வாழ்ந்துகாட்டுவதில் முதலிடம் வகிப்பவர்கள் பெரும்பாலும் பெண்கள். ஆண்களில் சிக்கனக்காரர்களே இல்லை என்று சொன்னால் அது என் அறியாமையை காண்பிக்கும், ஆண்களிலும் சிக்கனக்காரர்கள் உண்டு, ஆனால் ஆண்களில் சிக்கனக்காரர்கள் தங்களது சொந்த தேவைகளுக்கும் அனாவசியத்திற்க்கும் கணக்கு வழக்கின்றி தாங்களே செலவழித்து விட்டு வீட்டில் உள்ள பெண்களிடம் சிக்கனமாக இருக்கத் தெரியவில்லை என்ற புகாரை கூறி அடிக்கடி குடும்பத்தில் சண்டையிடும் சிக்கனக்காரர்கள் உண்டு. சிக்கனம் என்றாலே நமது கண் முன் தெரிவது பொருளாதாரம் மட்டுமே. ஆனால் சிக்கனம் என்பது மனிதனுக்கு எல்லா விதத்திலும் அத்தியாவசியமானது என்பதை பலரும் அறிவது இல்லை.

பூமியில் சீதோஷ்ண நிலையில் ஏற்ப்பட்டிருக்கும் அதிக வெப்பத்தின் காரணமாக பூமியில் இருக்கும் நீரின் அளவு கணிசமாகவே குறைந்து வருவதை எல்லோரும் அறிந்திருந்தாலும் காவிரி நீர் திறக்கவில்லை என்று கோஷமிடுவதற்க்காக வரிந்து கட்டிக்கொண்டு கிளம்புகின்ற அதே சமயம் இருக்கும் நீரை அல்லது கிடைக்கின்ற நீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை அடியோடு மறந்துவிட்டு செயல்படுகின்ற அடி முட்டாள்கள் நிறைந்திருக்கும் நாடு நமது இந்திய தேசம் என்றால் அது மிகையில்லை.

பொருளாதார சிக்கனத்திற்கு தன்னைத் தவிர வேறு ஒருவர் உதாரணமாக இருக்க இயலாது என மார் தட்டிக்கொள்ளும் பலரும் சமயலறையில் புளி முதல் எரிவாயு வரையில் எல்லாவற்றிலும் சிக்கனத்தை மறவாமல் கடை பிடிக்கும் 'சிக்கனப் புலிகள்' பெரும்பாலும் தங்கள் வார்த்தைகளில் சிக்கனமாக இருப்பதில்லை. அடுத்த நபர் தொடங்கி தனது கணவர் அல்லது மனைவி வரை ஒருவரிடத்திலும் தங்களது 'வார்த்தைகளை' பிரயோகிப்பதில் சிக்கனமாக இருக்க வேண்டுமென்கின்ற வரம்புடையவர்களாக இருப்பதில்லை, நாக்கும் வாயும் நிரம்ப பேசுவதற்குத்தான் படைக்கபட்டிருக்கிறது என்றாலும் அடுத்தவர்களின் மனதை புண்படுத்தி சித்தம் கலங்கச் செய்ய முடியுமோ அத்தனை வேகத்தில் அணுகுண்டையும் மிஞ்சுகின்ற அளவிற்கு வார்த்தை பிரயோகம் செய்வதில் துஷ்டர்களாக, தங்களை மட்டுமே அறிவு ஜீவிகளாக எண்ணி மகிழ்கின்ற 'தாராளம்' நிறைந்தவர்கள் எண்ணிக்கை நிறைய உண்டு.

சிக்கனமாக இருப்பது என்பது சிறந்த குணமாக கருதப்பட்டாலும் எதில் எப்போது எங்கேயெல்லாம் சிக்கனமாக இருக்க வேண்டுமென்பதை அறிந்திருந்தால் மட்டும் போதாது அதன்படி நடக்கவும் வேண்டும். கருமிகளை யாரும் விரும்புவதில்லை, சிக்கனமாக இருப்பவர்களை விட கருமியாக இருப்பவர்களின் தொல்லை இன்னும் மோசமானது, எனக்குத் தெரிந்த ஒரு அம்மாள் கருமி, அவர் தனது வீட்டை சுத்தம் செய்யும்போது வீட்டிலிருக்கும் மிச்சம் மீதியான மருந்து மாத்திரைகளையெல்லாம் சாப்பிட்டு விடுவார், காசு கொடுத்து வாங்கிய பொருள் வீணாவதை அவர் விரும்புவதில்லை என்பார். நான் அவர் வீட்டிற்கு அவரை சந்திக்க சென்ற போது இனிப்பு பலகாரங்களை வாங்கிச் செல்வது வழக்கம், சிறிது கால இடைவெளிக்குப்பிறகு மீண்டும் சென்ற போது வேறு தின் பண்டங்களை வாங்கிச் சென்றேன் எல்லாவற்றையும் எடுத்து உள்ளே வைத்துவிட்டு வந்தவர் கையில் நான் ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பு வாங்கிச் சென்ற இனிப்புகளை எடுத்து வந்து என்னிடம் காட்டி அவரது கடைசி மகள் போபாலிலிருந்து வருவதாக கடிதம் எழுதி இருப்பதால் அவளுக்கு கொடுப்பதற்காக அப்படியே எடுத்து வைத்திருப்பதாக கூறினார்.

அவை எல்லாம் கெட்டுவிடுமே என்றேன் நான், எனக்கு நீரிழிவு வியாதி அதனால் இவைகளை சாப்பிட முடியாது என்றார், என்னிடம் சொல்லியிருந்தால் இனிப்புகள் வாங்கி வருவதை தவிர்த்து வேறு ஏதாவது வாங்கி வந்திருப்பேனே, வீட்டில் உங்களுடன் தங்கியிருக்கும் கடை குட்டி மகனுக்கு இனிப்புகளை கொடுத்து சாப்பிட சொல்லக் கூடாதா என்றேன், அதற்கு அவர் அந்த பையன் வேலையில்லாமல் தண்டச் சோறு சாப்பிடுகிறான் இதில் இனிப்புகளை கொடுத்து சாப்பிட சொன்னால் என் தலை மீது உட்கார்ந்து விடுவான் என்றாரே, இப்படியெல்லாம் கூட மக்கள் இந்த உலகில் வாழுகின்றார்களா என்று எண்ணி எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது தோட்டத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்த போது அங்கே காய்ந்த தென்னை மட்டைகள், தேங்காய் மட்டைகளை குவியலாக சிறு மலை போல குவித்து வைத்திருந்ததை பார்த்து இவைகளை ஏன் இங்கே சேமித்து வைத்திருக்கின்றீர்கள் பாம்பு வந்து புகுந்து கொண்டுவிடுமே என்றேன்,

அதற்க்கு அவர் ஏற்கனவே வாடிக்கையாக ஒரு சர்ப்பம் பல ஆண்டுகளாக வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறது, அதைத்தவிர நிறைய பாம்பு கதைகளும் இங்கு உண்டு, பாம்பு என்னை தீண்டி நான் சாகமாட்டேன் என்பது எனக்குத் தெரியும், இதே போன்ற ஒரு போர் தென்னைமரக் கழிவுகளைக் கொண்டுதான் என் கணவர் இறந்த போது அவரது சடலத்தை மயானத்தில் எரிக்க உபயோகித்தேன், இப்போது நான் சேமித்து வைக்கும் இந்த தென்ன கழிவுகளை நான் இறந்தால் என் சிதைக்கு தீ வைக்கும்படி என் மகனிடம் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கிறேன் என்றார். இப்படியெல்லாம் சிக்கனமாக இருக்கும் கருமிகளை பற்றி இன்னும் வரும் நாட்களில் தொடர்ந்து எழுதுவேன்.

()()()()()()()()()()()()()()()()()()()()()

வியாழன், 14 அக்டோபர், 2010

அன்புள்ள கணினிக்கு


பனிரெண்டு வருடங்களாக உலகை என்னறைக்குள் எடுத்துவந்த எனது முதல் கணிணி கொஞ்சம் கொஞ்சமாக அதன் உழைக்கும் திறனை இழந்து வந்து என்னுடனான உறவை முடித்துக்கொள்ள தயாராகியது. எத்தனைவிதமான மனிதர்களை, உணர்வுகளை, செய்திகளை எனக்கு பகிரங்கமாகவும் ரகசியமாகவும் தெரிவித்து உணர்த்தி என் வாழ்க்கையில் இனி கணினியின்றி இயலாதென என்னுடன் இரண்டற கலந்துவிட்ட உயிரற்ற ஜடப்பொருட்களில் ஒன்றாகி இயங்கி வந்த, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இயந்திரமென்கின்ற கணிணி என்னை விட்டு பிரியா விடை பெற்று பிரிந்தது.

இதற்க்கு முன் சலவை இயந்திரமொன்றும் ஏறக்குறைய பதினைந்து வருடங்களாக என்னுடன் அயராமல் இயங்கி வந்த சடப்பொருள் ஒன்று என்னைவிட்டு பிரிய நேர்ந்த கதையும் உண்டு, மனிதர்களைவிட மிகவும் சரியாக தங்களது பணியை தவறாமல் செய்வதில் இயந்திரத்திற்கு ஈடு இணை கிடையவே கிடையாது. நம்முடன் வெகு காலம் பழகிய, உதவிய மனிதர்களை விட்டு முழுவதுமாக பிரிவதையே பெரிதாக எண்ணாத இயந்திர கதியாய் போன மனிதர்களுக்கிடையே, இயந்திரம் என்கின்ற சாதனம் எத்தனை வருடங்கள் உழைப்பை நமக்கு சிறப்பாய் கொடுத்திருந்தாலும் அதனை பிரிவதில் ஒன்றும் பெரிதாக வருத்தப்பட மனிதர்கள் இல்லை என்பதை காணும் போது இயந்திரத்திற்கும் மனித மனங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது என் பக்கத்தில் உட்காருகின்ற பெண் அடிக்கடி புதிய எழுதுகோல்களை பள்ளிக்கு எடுத்து வருவது வழக்கம் அவ்வாறு ஒரு முறை அழகிய எழுதுகோல் ஒன்றை எடுத்து வந்தாள், அந்த எழுதுகோலை புத்தகங்களை வைக்கும் அறையில் வைத்தவள் திரும்பவும் எடுத்துச் செல்லவில்லை, அந்த பெண்ணிற்கும் எனக்குமான பொதுவான புத்தக அறை என்பதால் அந்த எழுது கோல் அவளுடையது என்று சொல்லி அதனுள்ளிருந்து எடுத்து அவளிடம் கொடுத்த போது அது தன்னுடையது இல்லை என்று சொல்லி திரும்பவும் வாங்க மறுத்தாள், வேறு வழியின்றி அந்த எழுது கோலை நான் எடுத்து உபயோகித்தும் வந்தேன், மிகவும் அருமையாக எழுதிய அந்த எழுதுகோலை பள்ளியிறுதி தேர்வுவரை உபயோகித்து வந்தேன், ஆனால் அந்த பெண்ணுக்கு சித்தத்தில் மாறுதல் ஏற்பட்டதன் விளைவாக ஒன்பதாம் வகுப்பிற்கு பின்னர் பள்ளிக்கு வருவது நின்று போனது. எழுதுகோலையும் அந்த பெண்ணையும் என்னால் இன்றுவரையில் மறக்க இயலவில்லை. அவள் மிகவும் அமைதியான குணம் கொண்ட பெண், ஆனால் ஒன்பதாம் வகுப்பில் படிப்பதற்குரிய வயதைவிட மிகவும் அதிக வயதுடைய பெண்ணாகவும் அதற்குரிய உடற் வளர்ச்சியையும் கொண்டவளாக காணப்படுவாள்.

முதல்
முதலாக புதிய கணிணி வாங்குவதற்கான காரணமாக இருந்தது எனது மூத்த மகள், அவளது பள்ளி தலைமையாசிரியை என்னையும் என் கணவரையும் பள்ளிக்கு அழைத்திருந்தார், அங்கு சென்றபோது பத்தாம் வகுப்பில் பள்ளியில் அதிக மதிப்பெண்களை வாங்கிய மாணவிகளுக்கு அவரவர் விருப்பத்திற்கிணங்க பதினோராம் வகுப்பில் சிறப்பு பாடம் எடுத்து படிப்பதற்கான தகுதி உடையவர்களாக தேர்வு செய்து அந்த மாணவிகளின் பெற்றோர்களிடம் அந்த மாணவிக்கு தேவையான எல்லாவித வசதிகளையும் ஏற்ப்படுத்திக் கொடுத்து ப்ளஸ் டூ என்கின்ற பள்ளியிறுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்கான ஆலோசனை வழங்க பெற்றோர்களை அழைத்திருந்தார்.

கம்ப்யுடர் சயின்ஸ் என்கின்ற பாடத்தை சிறப்புப்பாடமாக எடுத்து படிக்க விருப்பம் தெரிவித்திருப்பதால் கணினியும் அதற்க்கு தேவையான மென்பொருட்களையும் வாங்கி கொடுத்து மாணவி சிறந்த மதிப்பெண் பெற உதவி செய்ய தலைமையாசிரியர் எங்களிடம் சொன்ன காரணத்தால் முதல் கணிணி எங்கள் வீட்டிற்கு உடனே வாங்கப்பட்டது. ஆனால் அந்த கணினியில் பெரும்பாலான சமயங்களில் நான் மட்டுமே நிறைய கற்றுக்கொள்ளுகின்ற வாய்புகள் கிடைத்தது. முதல் கணிணி வாங்குவதற்கு முன்பே கம்ப்யுடர் வகுப்பில் (NIIT) சேர்ந்து கணினியை உபயோகிக்கும் முறைகளைப்பயின்று தேர்ச்சி பெற்றிருந்தேன் ஆனால் அங்கு நான் செய்முறை விளக்கமாக அறிந்தது மிகவும் குறைவே. மகளுக்காக வாங்கிய கணினியில் எனது ப்ராக்டிகல் மிகவும் வெற்றிகரமாகவே நடந்தது. கற்றபோது அறிய இயலாத பலவற்றை ப்ராக்டிகல் சொல்லிக்கொடுத்தது.

அதைத்தவிர இன்டர்நெட் என்கின்ற உலகளாவிய வலையில் எத்தனை விதமான மனிதர்கள். அவர்களின் சிறப்புக்களை அறிவதைவிட ஏமாற்று வேலைகள், பழி தீர்க்கும் மனிதர்கள், அடுத்தவரை கெடுக்க எத்தனை விதமான கபட நாடகங்கள், செக்ஸ் என்கின்ற பெயரில் எத்தனை ஆபாசங்கள், சொல்லி முடியாத மற்றும் சொல்லுக்குள் அடங்காத மனித வக்கிரங்கள் எத்தனை எத்தனை. முகம், விலாசம் தெரியாது என்பதால் மனிதர்களின் எல்லையற்ற வக்கிரங்களின் உச்ச கட்ட செயல்களின் வெளிப்பாடுகள் என வலையுலகம் முழுவதும் நிறைந்து கிடக்கும் மனிதர்களின் பிம்பங்கள். இவையனைத்தையும் எனக்கு இதுநாள் வரையில் எடுத்துக் காட்டி வந்த என் முதல் கணிணி. என்னால் என்றும் மறக்க இயலாத முதல் கணிணி.


++++++++++++++++++++++++

புதன், 6 அக்டோபர், 2010

இந்தியாவிற்கு 11 தங்கப்பதக்கங்கள்


காமன் வெல்த் விளையாட்டுகளில் இன்றைய நிலவரப்படி இந்தியாவிற்கு 11 தங்கப்பதக்கங்கள் கிடைத்திருக்கிறது, தனது தாய்நாடு பெருமையடைகிறது என்றால் அந்நாட்டு குடிமக்கள் எல்லோருக்கும் அந்த செய்தி மகிழ்ச்சியானதுதான், அதில் யாருக்கும் எப்போதும் மாற்று கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஆசிய விளையாட்டுகளிலோ ஏற்கனவே நடந்த காமன்வெல்த் விளையாட்டுகளிலோ இந்திய விளையாட்டு வீரர்கள் இத்தனை பேர் ஒட்டு மொத்தமாக தகுதி பெற்று போட்டிகளில் விளையாட முடிந்ததும் இல்லை, அப்படியே தகுதி பெற்று விளையாடி இருந்தாலும் தங்கப்பதக்கங்களை இந்த அளவிற்கு வாங்கி குவித்ததில்லை என்பதை யாராலும் மறுக்க இயலாது.

விளையாட்டு வீரர்களை தனது சொந்த நாட்டிலேயே விளையாட வாய்ப்பளிக்காமல் விட்டுவிடக் கூடாது என்பது காரணமா, அல்லது போட்டியின் விதிகளை விட்டு விலகி இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தனிப்பட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றனவா என்பது கேள்விக்கு இடமாக உள்ளது. இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது கோச் [coach] என்பவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த வித்தகர்களாக வரவழைக்கப்பட்டு இந்திய வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டனவா என்ற கேள்வி எழுந்தாலும் மல்யுத்தம், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளில் விளையாட்டு வீரர்களுடன் இந்திய பயிர்ச்சியாளர்களையே காண முடிந்தது [ஒரு சில விளையாட்டுகளைத்தவிர].

நம்ம
ஊர் மக்களுக்கு நம்ம ஊர் வீரர்கள் வெற்றியடைய வேண்டும் என்கின்ற ஆதங்கமும் ஆர்வமும் வீரர்களை ஊக்கப்படுத்துகின்ற முயற்ச்சிகளும் தேவைதான், அதற்காக வேற்று அணியினர் சிறப்பாக விளையாடுகின்ற போது விளையாட்டை ரசித்து ஓலம் எழுப்புவதில் என்ன வஞ்சனையோ தெரியவில்லை, மாறாக இந்தி விளையாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடும்போது மட்டுமே கரவொலி எழுப்பி தங்களது ஆதரவை பதிவு செய்யும் விதம் வெட்ககேடாக தெரிகிறது. கிரிகெட்டு விளையாட்டில் கூட இதே விதமான அரசியலை வெகு சகஜமாக காண முடிகிறது.


அயல் நாடுகளில் மக்கள் விளையாட்டுகளின் மீது வெறிகொண்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளுவது என்பது பிரேசில் அர்ஜெண்டினா போன்ற நாடுகளுக்கு இடையேயான கால்பந்தாட்ட மைதானத்தில் காண முடியுமே தவிர உலகில் இந்திய ரசிகர்களைப்போல [வெறியர்களை] வேறெங்கும் காணவே இயலாது. வாழ்க்கையில் எதிலுமே ஒரு வெறியோடு செயல்படுவது இந்திய நாட்டில் அதிகம் என்பதற்கு உதாரணங்கள் நிறைய உண்டு, வரதட்சிணை கொடுமை, நிலத்திற்காக சொத்துக்காக ஒருவரையொருவர் வெட்டி கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போவது என்பன போன்ற மூர்க்கத்த்தனங்கள், ஜாதிக்கொடுமை, மதக்கொடுமை போன்ற வெறித்தனங்கள் நிறைந்து காணப்படும் நாகரீகமற்ற சமுதாய வளர்ச்சியை கொண்டுள்ளது இந்திய தேசம்,

காமன்
வெல்த் விளையாட்டுகளில் சில நாடுகளுக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கின்ற நிகழ்வின் போது அந்நாட்டு தேசிய கீதம் இசைக்கும் சப்தம் கேட்பதே இல்லை, இந்திய வீரர்கள் தங்கப்பதக்கத்தை வென்ற பின்னர் நாட்டு பண் இசைக்கும்போது அதனுடே அந்த பாட்டை பாடுவதற்கு அறிந்திராதவர் போல நிற்ப்பதை காணுகின்ற போது நாட்டுப்பண் அவருக்கு தெரியவில்லையா அல்லது பாட வேண்டிய அவசியம் இல்லை என்பதற்காக வாயடைத்து நிற்கின்றாரா என்பது தெரியவில்லை. தேசிய கீதம், தேசிய கொடி போன்றவற்றிற்கு எத்தகைய மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பது இளைஞர்கள் எத்தனை பேர் அறிந்திருப்பார்களோ தெரியவில்லை, பழைய காலத்தில் திரையரங்குகளில் திரைப்படம் முடிந்தவுடன் தேசியகீதம் இசைக்கப்படும் அப்போது அனைவரும் ஒருமித்து எழுந்து நின்று அதற்கான மரியாதையை அமைதியுடன் செலுத்திய பின்னரே வெளியேறுவார்கள், ஆனால் தற்காலத்தில் திரைப்படங்கள் முடிந்த பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் இல்லை. தேசிய கீதத்தின் அர்த்தம் என்னவென்பது இன்றைய படித்த இளைஞர்கள் அறிவார்களா என்பதும் சந்தேகமே, அந்த பாடலை மனனம் செய்து வைத்திருக்கின்றனரா என்பது யாருக்கு தெரியப்போகிறது, ஏனென்றால் எல்லா இடங்களிலும் இசைத்தட்டிலேயே தேசிய கீதம் இசைக்கப்பட்டு விடுகிறதே. பாடும் வாய்ப்புகளே கிடையாதே.




ஞாயிறு, 3 அக்டோபர், 2010

எங்கே மனிதன்

எனக்கும் என் நண்பனுக்கும் ஒரு சிறு போட்டி, எங்கெல்லாம் மக்கள் வசீகரிக்கப்படுவார்கள் என்பது பற்றி, மூன்று பேர் ஒருவர் ஒரு மூட்டை அரிசி, இன்னொருவர் இலவசமாக திரைப்படம் திரையிடும் கருவிகள், மூன்றாமவர் இலவச அருள் வாக்குகள் கூறி இலவசமாக வியாதிகளை சுகப்படுத்துபவர். மூவரும் வெவ்வேறு கிராமங்களுக்கு ஒவ்வொரு நாள் சென்று எடுத்துச்சென்றவற்றை இலவசமாக கொடுப்பதாக அறிவித்தோம், அதை கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இலவசத்தை பெற்றுச் சென்றனர், அடுத்தமுறை அதே பொருட்களை மிகவும் குறைவான விலையில் கொடுப்பதாகக்கூறினோம், கூட்டம் முதல் முறையைவிட பாதியாக குறைந்தது, அடுத்த முறை சில காரணங்களைக் கூறி உதவித்தொகை அல்லது பொருளுதவி கேட்டுசென்றோம். ஒருவர் கூட கொடுப்பதற்கு முன்வரவில்லை.

இதில் ஒரு விஷயம் நன்கு விளங்கியது, இலவசமாக கிடைக்கும் என்றால் ஏழைகள் மட்டுமில்லாமல் சற்று வசதியுள்ளவர்கள் கூட இலவசப் பொருட்களை பெற்றுச் சென்றனர், உதவி என்று கேட்டு சென்ற போது வசதி படைத்தவர்கள்கூட உதவி செய்வதற்கு முன்வரவில்லை. மக்களின் ஒட்டு மொத்த உணர்வும் இலவசமாக கிடைப்பதை பெறுவதில் எந்தவித தயக்கமும் இன்றி பெற்றுக்கொள்ளச் செய்கிறது, அதே போன்ற உதவியை திருப்பி செய்வதற்கு சுயநலம் இடம் கொடுப்பதில்லை. இன்னொரு சோதனையில் மூவரும் ஜன நடமாட்டம் மிகுந்த கடைவீதியில் கூடி நின்று ஏதோ நடக்கக் கூடாத அசம்பாவிதம் நடந்துவிட்டது போன்ற பரபரப்பை ஏற்ப்படுத்திய போது மக்கள் அந்த சம்பவம் என்ன என்று அறிந்து கொள்வதற்கு வேகமாக கூட்டம் கூடினர்.

ஆடு மாடு யானைகள் போன்ற விலங்கினங்கள் ஒன்று நடந்து போகின்ற பாதையிலேயே மொத்த கூட்டமும் பின்பற்றுவதைப்போல மனிதர்கள் ஒருவர் செய்வதைப்போல அல்லது ஒருவர் போகின்ற போக்கிலேயே மற்றவர்களும் செல்வது கூட பல சமயங்களில் காணப்படுகின்ற செயலாக உள்ளது. சிறுவயதில் படித்த குல்லா வியாபாரியும் குரங்குகளும் என்ற கதை நினைவிற்கு வருகிறது. எங்காவது பணமோ நகையோ வேறு பொருட்களோ கிடைத்துவிட்டால் அதை கையில் எடுத்த பின்னர் 'பாவம் யாருடையதோ, இதை தொலைத்துவிட்டு வருத்தத்தில் என்ன செய்கின்றாரோ' என்று எத்தனை பேரால் நினைக்க முடிகிறது. யாரோ ஒருவரின் உடமையாக இருந்தாலும் தனது கைக்கு வந்து சேர்ந்ததில் மகிழ்வுறும் மனிதர்களை நம்மால் பார்க்க முடிகிறது, கிடைத்த பணத்தையோ நகையையோ மற்ற உடமைகளையோ எடுத்துச் சென்று காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென்று எங்கோ ஒரு சிலர் செய்வதால்தான் அவரை ஊடகங்களில் செய்திகளில் வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றனர், அத்தனை அபூர்வமான செயல்.

பல பொருட்கள் காவல் துறையிடம் ஒப்படைக்கபட்டும் கூட அப்பொருளை இழந்தவரின் கைகளுக்கு சென்று சேருகிறதா என்பதும் சந்தேகம்தான். அடுத்தவருடைய உடமைகள் எதுவாக இருப்பினும் அதை இலவசமாக எடுத்துக் கொள்வதில் மனித மனம் திருப்தியடைவது ஏன், அதே சமயம் தன்னுடைய உடமைகளை இழக்கின்ற சமயத்தில் அல்லது தொலைத்துவிடுகின்ற சமயத்தில் நாம் படுகின்ற துன்பத்திற்கு அளவே இருப்பதில்லை என்பதை நாம் சிந்திக்க மறுப்பது ஏன். இத்தகைய சுயநலம் மனிதர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகிறதா அல்லது அதிகபட்சமாக காணப்படுகிறதா என்பதை நாம் யாவரும் நன்கு அறிவோம், அடுத்தவரின் உடமைகளுக்கு ஆசைப்படாத மனிதர்கள் மிகவும் குறைவா, அல்லது அதிகமா, அதில் நாம் எந்த ரகத்தை சேர்ந்தவர்கள்?

கோவிலின் வாசலில் கழற்றிவிட்டுச் செல்லும் புதிய காலணிகளைக் கூட விடுவதில்லை, அப்படியொரு காலணி திருடித்தான் அணிந்துகொள்ள வேண்டுமென்றால் அதைவிட வெறும் காலிலேயே நடந்து செல்வது மேன்மை என்பதை அறிந்திருக்கவில்லையா, 'எனக்கு வேலை கிடைக்கவில்லை, போதிய வருமானமில்லை, பட்டினி பசி' என்று கூறுகின்ற போது அடுத்தவரின் உடைமைகளின் மீது கவர்ச்சி உண்டாவது தவிர்க்க இயலாததா, அதைவிட இறந்து போதல் உத்தமம் அல்லவா. சொகுசு வாழ்க்கை பழகி போச்சு என்பதால் உடலை விற்கும் வியாபாரம் செய்தாவது அந்த வாழ்க்கையின் வசதிகளை தொடர, அப்படி சொகுசுகளில் வாழ்ந்த உடலில் பெயர் சொல்ல இயலாத வியாதிகள் வந்து மடிவதைவிட அதற்க்கு முன்பே மடிவது மேன்மையல்லவா.

மனிதன் என்றால் என்ன, பகட்டும் வசதிகளும் சுக போகங்களும் நிரம்பியதா, அப்படி இல்லாத மனிதன் பாவப்பட்ட ஜன்மமா, எதையும் எவ்வாறேனும் அடைந்து விடுவது மட்டுமே வாழ்க்கையின் வெற்றியா, வெற்றி தோல்விகள் என்பது பணம் மற்றும் புகழை எவ்வாறேனும் அடைந்து விடுவதில் உள்ளதா. அவ்வாறு அடைய இயலாதவர்கள் மனிதர்கள் இல்லையா, பூமியில் பிறப்பதே சுகமாக
வாழ்க்கையை வாழ்ந்துவிடுவதற்க்காக மட்டும்தானா.


சனி, 2 அக்டோபர், 2010

அமெரிக்க அதிபர் திரு பாரக் ஒபாமா அவர்களுக்கு,


அமெரிக்க அதிபர் திரு பாரக் ஒபாமா அவர்களுக்கு,

இந்திய மக்களின் சார்பில் எனது அன்பும் வணக்கமும் உங்களுக்கும் உங்கள் நாட்டு மக்களுக்கும், உங்களது இரண்டு பெண் குழந்தைகளுக்கு எனதுமுத்தங்களும் உங்கள் மனைவிக்கு எனது அன்பும் இந்த கடிதத்தின் மூலம் தெரிவித்துக்கொள்ளுகிறேன், உங்களுக்கு தமிழ் படிக்க தெரியாவிட்டாலும் தமிழ் நாட்டைச் சேர்ந்த பலரை அமெரிக்காவில் தினம் தினம் பார்க்கவும் பழகவும் கூடும், உலகின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் கூட கணினியும் ஊடக வசதிகளும் பெருகி வருகின்ற காரணத்தால் அமெரிக்க அதிபராகிய உங்களுக்கு கடிதம் எழுதுவதற்கு கூட வாய்புகள் தற்காலத்தில் தொழில் நுட்பத்தின் முன்னேற்றம் நமக்கு வழங்கி இருப்பது மிகவும் சிறப்பானது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கருப்பு இனத்தவர்களை வெள்ளைக்கார மண்ணில் அடிமைகளாய் வேலையாட்களாய் பழக்கபட்டிருந்த காலம் மாறி வெள்ளை மாளிகையில் ஜனநாயக முறையில் தேர்வாகி அதிபர் பதவியை பெற்றிருக்கும் உங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள், அமெரிக்காவின் பொருளாதாரம் சீர் குலைக்கப்பட்ட சதியிலிருக்கும் சமயம் நீங்கள் அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்றது மிகவும் சாலேஞ்சிங்கான வேலை. நாட்டு மக்களுக்கு பொருளாதாரத்தை உயர்த்துவதர்க்கான திட்டங்களை வகுத்து நடைமுறைப் படுத்துவதும் எதிரிகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் இன்னும் பல இழப்புகளிலிருந்து காக்கவும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதோடு அவற்றை நடைமுறை படுத்த போதுமான பணபலத்தை மேம்படுத்துவது என்பது லேசான காரியம் இல்லை.

சமீபத்தில் செய்திகளில் நீங்கள் சொன்ன கருத்து ஒன்றைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகின்றேன், அதாவது தற்போதைய இந்திய நாட்டின் படித்தவர்களது எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்திருப்பதை அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் கல்வியை கற்றவர்களது எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதை சுட்டிக்காட்டி எதிகால அமெரிக்காவில் படித்தோர் அதாவது கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை மிக குறைவடையும் நிலை உருவாகும் என்று கவலை தெரிவித்திருந்தீர்கள், இந்தியாவை பொறுத்த மட்டில் கல்வி க
ற்ப்பது என்பது தனி மனித பொருளாதாரத்தை, அந்தஸ்த்தை, தேவைகளை உயர்த்திக் கொள்வதற்கு மட்டுமே, மிகவும் முக்கியமான முதலீடாக கருதப்படுவதாலேயே, கல்வி கற்ப்பவர்களின் தொகை கணிசமாக உயர்ந்து வருகிறது என்பதையும் உங்கள் நாட்டைப்போல தங்களுக்கு பிடித்த கல்வியை அல்லது தங்களது ஆர்வத்திற்கு ஏற்ற வேலையை தெரிவு செய்து அதை கண்ணும் கருத்துமாக இறுதி வரையில் செய்து முடிப்பவர்கள் எங்கள் நாட்டில் எண்ணிக்கையில் கோடியில் ஒருவராக இருப்பது கூட கடினம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

கல்வி என்பது இங்கே பொருளீட்டும் கருவியாக இருப்பதினாலே எந்த துறையை சார்ந்த படிப்பை படித்தால் அதிக வருமானம் ஈட்ட முடியுமோ அந்த கல்வியை டொனேஷன் என்ற பெயரில் பெரும் தொகையை கல்வி ஸ்தாபனங்கள் வசூலித்தாலும் வங்கியிலோ கந்து வட்டியாகவோ கடனை பெற்றாவது குறிப்பிட்ட கல்வியை படிக்க தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்கும் நிலை வேரூன்றி எங்கும் காணப்பட்டது, சமீப காலமாக அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கும் கல்வி ஸ்தாபனங்களைத் தவிர அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிலையங்களின் மீது மக்கள் கூட்டம் கூடி எதிர்த்து அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கும் புதிய மாற்றம் ஒன்று செய்திகளில் கடந்த சில மாதங்களாக வெளியாகி வருகிறது, இந்த நிலை வேறு என்ன விதமான மாற்றங்களை அடையப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வேலை கிடைக்கும் வரையில் ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கி அந்த நிறுவனங்களில் பணியாற்றுகின்ற துப்புரவு தொழிலாளி தொடங்கி எந்த பணியில் இருப்பவராக இருப்பினும் அவர்களுக்கு மரியாதையோ மரியாதை என்று அள்ளி அள்ளி கொடுப்பவர்கள், லஞ்சம் என்கின்ற அன்பளிப்பை எந்த வகையிலெல்லாம் கொடுக்க முடியுமோ அப்படியெல்லாம் வாரி வழங்கி, காலையில் அலுவலகத்தை திறப்பதற்கு முன்பே அதன் வாசலில் மணிக் கணக்காய் காவல் நின்று வேலைக்கான உத்தரவு கையில் கிடைத்து பணி நிரந்தரம் ஆகும் வரையில் 'இந்த பூனையும் பால் குடிக்குமா' என்பது போல உங்கள் ஊரில் இருக்கும் ஹாலிவுட் நடிகர்களை தோற்கடிக்கும் விதத்தில் நிஜ வாழ்க்கையில் அபாரமாக நடித்து பணி நிரந்தரத்திற்கு பின்னர் நீங்கள் பார்க்க வேண்டுமே, அடடா என்ன இருந்தாலும் இந்தியர்களின் அபார தொழில் டெடிகேஷனை,

நீங்கள் அமெரிக்காவில் பார்க்கும் இந்தியர்களை மனதில் வைத்துக் கொண்டு எல்லாரையும் ஒரே மாதிரி நினைத்துவிடாதீங்க, டாலருக்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் உங்கள் சட்ட திட்டங்களை கை கொண்டு ஒழுங்காக வேலை செய்வார்கள் இல்லையென்றால் சீட்டை கிழித்திடுவாங்களே; ஆனால் தங்கள் சொந்த நாட்டில் ஒவ்வொருவரும் குறுநில மன்னர்கள்தான். எங்கள் நாட்டிற்கு நீங்கள் வருகை தரவிருப்பதாக செய்தி ஒன்றில் படித்த ஞாபகம், அப்படி இங்கே வந்தால், வேண்டுமென்றால் மாறுவேடம் போட்டுக்கொண்டு அரசு அலுவலகங்களை ஒரு பார்வையிடுங்களேன், அப்போது தெரிந்துவிடும் உங்களுக்கு. ஒவ்வொருவருக்கும் எத்தனை தொழில் விசுவாசம் உள்ளது என்பது,
ன்னும் நிறைய எழுத இருந்தாலும் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை என்பதால் இங்கு தற்போது முடித்துக் கொண்டு பிறகு இன்னொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் உங்களுக்கு கடிதம் எழுதுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவரையில் நான் எழுதிய இந்த நீண்ட கடிதத்தை நீங்கள் உங்களது வேலைகளுக்கிடையே பொறுமையுடன் படித்ததற்காக நன்றி, மீண்டும் உங்கள் நாட்டு பிரஜைகளுக்கும், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு எனது அன்பும் வணக்கமும் உங்களுக்கு எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மிக்க நன்றி, வணக்கம்'

இப்படிக்கு,
ரத்னா
இந்திய பிரஜை.

கேள்விக்கு என்ன பதில்

1. அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பு மக்களிடையே விரோத போக்கை அதிகரிக்காமல் ஜனநாயக ரீதியில் மிகவும் நேர்மையானதாகவே இருந்தது

1. மிகவும் சரி

2. மிகவும் தவறு

3. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருப்பதால் தாக்கம் அதிகரிக்கவில்லை

4. சட்டம் ஒழுங்கு சரியான முறையில் அமலில் இருந்ததால் குழப்பங்கள்
ஏற்ப்படுவதை தவிர்க்க முடிந்தது


2. இன்றைய இளைஞர்கள் மதத்தின் மீதும் அவற்றை சார்ந்த கலவரங்களிலும் ஈடுபடுவதில் ஆர்வத்துடன் இல்லை

1. மிகவும் சரி

2. மிகவும் தவறு

3
. சரியான சமயத்தில் கலவரங்களில் கலந்து கொள்வார்கள்

4. கலவரங்கள் வாழ்க்கைக்கு அவசியமற்றது என்பதால்



3. காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுவதில்

1. எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது இதற்க்கு காரணம்

2
.
இந்தியாவை மற்ற நாடுகளுடன் இணைக்க விருப்பமில்லை

3
. வேறு நாடுகளின் வீரர்கள் வெற்றி பெறுவதை பார்க்க பிடிக்கவில்லை

4
. ஆளும் கட்சிக்கு மேலைநாடுகளில் நல்ல பெயர் கிடைப்பது பிடிக்கவில்லை


4. எந்திரன் திரைப்படம் முதல் நாள் பார்ப்பது


1. என் வாழ்க்கையின் குறிக்கோள்

2. ரஜினிகாந்திற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்

3. ஷங்கர் மற்றும் ரகுமானுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்

4. யாருக்காகவும் அல்ல திரைப்படம் முதல் நாள் பார்ப்பது எனக்கு பிடிக்கும்