
நடிகர்களில் கவர்ச்சி நடிகர் காலம் சென்ற திரு எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள்தான், அவரது அடிதடி சண்டைகளைவிட நான் விரும்பியது அவரது கவர்ச்சியான முக அழகு, அதுதான் அவரது ப்ளஸ், கட்டான உடல் வாகு உள்ளவர் என்றாலும்அழகிய முகமும் அவரது நிறமும் எல்லோரையும் கவரக் கூடியது. அவரது முகத்தில் காணப்படும் குழிகளில் விழாதவர் யாரும் இருக்க முடியுமா.
மிகவும் கஷ்டப பட்டு முன்னணிக்கு வந்த நடிகர்களில் திரு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களும் ஒருவர், ஆனால் தான் கஷ்டப்பட்டதனால் மற்றவர் கஷ்டத்திற்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிலரில் திரு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களை யாராலும் மறக்க முடியாது.
அந்த கால கோடம்பாக்கத்தின் வீதிகளிலும் அவருடைய வீட்டருகிலிருந்த வீதிகளிலும் பண மழை தூவி கொண்டு காரில் போவார் என்று நான் கேள்வி பட்டதுண்டு. ஏழைகளை நேசித்த சிலரில் திரு எம்.ஜி. ராமச்சந்திரனும் ஒருவர்.
தர்மம் தலை காக்கும் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் திரு எம்.ஜி. ராமச்சந்திரன், அவர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் உடலை துளைத்தும் உயிரிழக்காமல் பிழைத்து முதலமைச்சர் ஆனது அவர் செய்த தான தருமங்களாகத்தான் இருக்கும். அவரைத் தேடி போகும் ஒவ்வொருவரையும் வயிறு நிறைய சாப்பிட சொல்லுவார் என்றும் நான் கேள்விபட்டு இருக்கிறேன் அதற்க்கு காரணம் அவர் தன் வாழ்க்கையில் சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டார் என்றும் அதனால் அவர் பசியுடன் யாரும் தன் வீட்டிற்கு வந்து பசியுடன் திரும்பி போககூடாது என்ற எண்ணத்தில் அவ்வாறு செய்ததாக சொல்லுவார்கள்.

நான் எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய ரசிகை இல்லை, ஆனால் தமிழ்நாட்டின் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவர் என்ற முறையில் நான் அவரது திரைப்படங்களில் என்னதான் இருக்கிறது என்று நினைத்து திரையரங்குக்குச்சென்று பார்த்த சில திரைப்படங்களில் 'பெற்றால் தான் பிள்ளையா', 'ஆயிரத்தில்ஒருவன்', 'எங்க வீட்டுப்பிள்ளை', 'எங்கள் தங்கம்', 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'அன்பே வா' இன்னும் பல திரைப்படங்களும் உண்டு. இவர் நடித்த திரைப்படங்களைவிட அந்த திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கும் பாடல் காட்சிகள் பாடலின் எழுத்துகளும் மிகவும் நன்றாக இருப்பதோடு திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்ற உணர்வைத் தூண்டக் கூடியவையாக இருக்கும்.
எம்.ஜி.ஆருடன் பானுமதியம்மா, சரோஜா தேவி, ஜெயலலிதா போன்றவர்கள் ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படங்களை நான் பார்த்து ரசித்ததுண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக